Advertisement

கம்பன் காதல் கொண்டு 14

காவ்யா வீட்டில் இருந்து கிளம்பிய கம்பன் நேரே ராம்தாஸை பார்க்க அவர் வீட்டுக்கு சென்றான். நடுஇரவு நேரம் என்பதால் கேட் எல்லாம் மூடியிருக்க, இவன் காரை பார்த்ததும் கார்ட்ஸ் உள்ளே அனுமதித்தனர்.

கம்பன் காரை நிறுத்தி  வீட்டை ஒரு முறை ரவுண்ட்ஸ் வந்தவன்,  காபி வரவைத்து குடித்தான். அவன் அசிஸ்டன்ட் பாலாவின் இரவு நேர டியூட்டி எப்போதும் ராம்தாஸ் வீட்டில் என்பதால், அவனிடம் பாதுகாப்பு பற்றி பேசி கொண்டிருக்க, “இப்படியே கிளம்புற ஐடியாவா..?” என்று ராம்தாஸ் வந்தார்.

இவர் வருவார் என்று எதிர்பார்த்திருந்த கம்பன், “காபி சொல்லவா சார்..?” என்று கேட்டு சொன்னவன், “நீங்க தூங்கியிருந்தா டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்ன்னு தான் உங்களை கூப்பிடல..” என்றான்.

“தூங்குற நிலையிலா நான் இருக்கேன், நீ சொல்லு, என்னவாம் வாசுதேவனுக்கு, என்ன சொல்றார்..?” ராம்தாஸ் கேட்டபடி வெளியே தோட்டத்திலே அமர்ந்தார்.

“அவர் பயப்படுறார்..” கம்பன் சொல்ல,

“பயப்படுறாரா..? வேணாம் எதாவது சொல்லிட போறேன்..” ராம்தாஸ்க்கு கோவம் வந்துவிட்டது.

பாலா காபி எடுத்து வந்து கொடுக்க, “டென்ஷன் வேண்டாம்.. நீங்க காபி குடிங்க பேசலாம்..” என்றான் கம்பன்.

“இது ஒன்னு தான் குறைச்சல்..? தூக்கி போடு..” ராம்தாஸ் கோவம் குறைவதாய் இல்லை.

“ப்ளீஸ் கண்ட்ரோல் சார்.. வழி இருக்கு..” கம்பன் சொல்ல, ராம்தாஸ் மூச்சை இழுத்துவிட்டு தன்னை சமன் செய்தவர், காபியை வாங்கி கொண்டார். தீவிர சிந்தனையில் புருவம் சுருங்க காபி குடித்து முடித்தவர்,

“படிச்சவன், அறிவாளின்னு  இவ்வளவு பெரிய டீம்ல சேர்த்தா மனுஷன் கடைசில கை கொடுக்கிறார் இல்லை.. தைரியத்துக்கும், புத்திசாலிதனத்துக்கும் சம்மந்தம் இல்லன்னு எங்க அய்யா சொல்றது சரியா போயிடுச்சு..” ராம்தாஸ் தன் தொடையை தட்டி கொண்டவர், “என்ன வழி சொல்லு வீரா..?” என்று கேட்டார்.

கம்பன் பின் பக்கம் கை கட்டி  நின்றிருந்தவன், “அவர் மகன் சஞ்சய் செய்றேன் சொல்றார்..” என்றான்.

“திரும்ப அவங்ககிட்டேயவா..? வேணாம் வீரா..” உடனே மறுத்தார் ராம்தாஸ்.

“நாம எடுத்திருக்கிற வேலையை விட  நம்மளை நம்பி வந்தவங்களோட பாதுகாப்பு ரொம்ப முக்கியம், நான் அடிக்கடி சொல்றது தான் நமக்கு எதாவது ஆனாலும் பரவாயில்லை, நம்மளை நம்பினவங்க நம்பிக்கை,, அதுக்கு விலை மதிப்பே இல்லை.. இங்கு பணம், சொத்து எல்லாம் பணயம் வைக்கலை வீரா.. உயிர்.. அவங்க எல்லோரோட உயிரை  நம்மகிட்ட கொடுத்திருக்காங்க….”

“வாசுதேவன் போல ஆளுங்களை இனியும் உள்ள வைச்சா நமக்கு நாமே குழி வெட்டிக்கிற கதை தான், இவரை பெருசா எல்லாம் செய்ய வேண்டாம், தலையில கன் வைச்சாலே போதும்.. முடிஞ்சது.. மனுஷன் அறிவை பார்த்த நான் தைரியத்தை பார்க்காம விட்டுட்டேன்.. இந்த வேலை மட்டும் முடியட்டும், வாசுதேவனுக்கு இருக்கு..இவரை நம்பினதுக்கு  நல்ல பாடம் கத்து கொடுத்துட்டார்,  எவ்வளவு தைரியம், என்னை ஏமாத்திட்டு  நாட்டை விட்டு ஓடிட்டா நான் விட்டுடுவேனா, என்னை இன்னும் அவருக்கு தெரியல.. தெரிய வைக்கிறேன்..” ராம்தாஸ் கருவி கொண்டார்.

கம்பன் அமைதியாக இருக்க, “என்ன வீரா..? என்ன சொல்லு, அவர் இப்படி பண்ணலாமா..? மீதி இருக்கிறவங்களுக்கு இவர் பேக் அடிக்கிறது தெரிஞ்சா என்ன ஆகும்..? கொஞ்சம் கூட எதையும் யோசிக்காம தன்னை பத்தி மட்டுமே பார்த்து ஓட நினைச்சவர் மகன் செய்றேன் சொன்னா நாம நம்பி உள்ள விட தான் முடியுமா..? அவனும் அவங்க அப்பா மாதிரி இருந்தா..”

“இல்லை.. சஞ்சய்.. அவர் பயப்படுவார்ன்னு எனக்கு தோணலை..” என்றான் கம்பன். ராம்தாஸ் பார்வை அவன் மேல் கூர்மையாக படிந்தது.

கம்பன் வீரய்யன் அவர் பார்வையை நேர்கொண்டு எதிர்கொள்ள, “உனக்கு அந்த வாசுதேவன் பொண்ணு தான் வேணும்ன்னா நான் தூக்கிட்டு வந்து உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன், அதுக்காக இந்த விஷயத்துல அவங்களுக்கு சப்போர்ட் பண்ணாதடா..” என்றார் கோவமாகவே.

கம்பன் சிரித்தான். நன்றாகவே உதடுகள் விரிய சிரித்தான். “என்னடா.. எதுக்கு சிரிக்கிற..? என்னைவிட உனக்கு அந்த வாசுதேவன் முக்கியமா போயிட்டாரா..? சொல்லுடா..” ராம்தாஸ் அதட்டினார்.

“மாமனார்ன்னா முக்கியம் தான் அய்யா..” கம்பன் வீரய்யன் சிரித்தே சொல்ல,

“அய்யா சொல்லி என்னை கவுக்காதடா.. உன் கேடிதனத்தை எல்லாம் ஓரங்கட்டி வை.. என்ன காலேஜ்ல இருந்த ரவுடின்னு நினைப்பா..? என்கிட்ட நேரா நின்னுடுவியா..?” ராம்தாஸ் எழுந்து வந்து அவன் நெஞ்சின் மீது தட்டி கேட்டார்.

கம்பன் சிரித்தபடி அவர் கையை தன் இருகைகளால் பிடித்து கொண்டவன், “இப்போ ஏன் இவ்வளவு கோவம்..? ரிலாக்ஸ் ஆகுங்க..” என்றான்.

“எனக்கு தெரியும்.. நீ என் கையை விடுடா..” கோவமாக இழுத்து கொண்டவர், “என் மகனைவிட உன்னை நான் நம்புறேன், நீ என்னை விட்டு அந்த வாசுதேவனுக்கு பார்ப்பியா..? அவருக்கு சப்போர்ட் பண்ணி என்கிட்ட நிக்கிற இல்லை, அப்போ அவர் எனக்கு பண்ணது, அதுக்கு என்னடா பதில்..” என்றார் ஆவேசமாக.

“நான் அவருக்கு சப்போர்ட் பண்ணலை அய்யா..” கம்பன் சொல்ல,

“என்கிட்ட பொய் கூட சொல்வியாடா, நான் அவரை ஏதாவது பண்ணிடுவேன்னு தானே அவர் மகனை செய்ய வைச்சு என் கோவத்தை குறைக்க பார்க்கிற..? இல்லைன்னு சொல்லிடுவியா நீ..?” ராம்தாஸ் கேட்டார்.

“அய்யா.. இது என் ஐடியாவே  இல்லை. சஞ்சயே என்கிட்ட நான் செய்றேன் கேட்டார், உங்ககிட்ட பேசவும் கேட்டார்..” கம்பன் சொல்ல,

“அப்போ உனக்கு அந்த பையன் செய்யணும் இருக்கு.. அதானே..” ராம்தாஸ் கேட்டார்.

“அவரை நீங்க ஒருமுறை நேர்ல மீட் பண்ணுங்க, கண்டிப்பா நீங்களே ஓகே சொல்லுவீங்க..” கம்பன் பொறுமையுடனே பேசினான்.

“முடியாது.. போ..”  ராம்தாஸ் வீட்டுக்குள் சென்றுவிட்டார்.

கம்பன் திரும்ப ஒரு காபி குடித்து, வீட்டை ரவுண்ட்ஸ் வந்தவன், சிசிடிவி அறைக்கு சென்றான். ராம்தாஸ் இருக்கும் தெருவில் மட்டுமில்லாது, சுற்றியிருக்கும் நான்கு தெருவுக்கும் சிசிடிவி இருக்க, எல்லாம் பார்த்தவன், பாலாவிடம் சொல்லிவிட்டு வீட்டுக்கு கிளம்பிவிட்டான்.

அடுத்தநாள் காலையிலே சஞ்சய் அவனுக்கு அழைத்துவிட்டான். கம்பன் துப்பாக்கி பயிற்சியில் இருந்தவன், எடுக்கவில்லை. தொடர்ந்து எல்லா பயிற்சி முடித்து, குளித்து வந்து தான் சஞ்சய்க்கு போன் செய்தான்.

சஞ்சய்க்கு எப்படியும் அப்பா செய்தது ராம்தாஸ்க்கு தெரிந்திருக்கும், அவர் விபரீதமாய் முடிவெடுக்கும் முன் தான் அவரிடம் பேச வேண்டும் என்பது. ஆட்சி அமைக்கும் அளவு திறன் உள்ள ஒரு பெரும்பான்மையான காட்சியோடு  மோதும் ராம்தாஸின் பலம் அறிந்தவன் சஞ்சய். ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. அம்மா, தங்கை, சாதனாவை தான் அதிகம் நினைத்தான். கம்பன் வீரய்யன்  நிச்சயம் தங்களுக்காக பேசியிருக்க வாய்ப்பு அதிகம் என்பது மட்டுமே சிறு ஆறுதல். அன்றய கோர்ட்டுக்கு கூட செல்லவில்லை அவன்.

கம்பன் திரும்ப கூப்பிட காத்திருந்தான். அவன் அழைக்கவும், “ராம்தாஸ் சாரை மீட் பண்ண வாய்ப்பிருக்கா..?” என்று கேட்டான்.

“நைட் வரைக்கும் பொறுக்கணும்..” என்றான் கம்பன் வீரய்யன். சஞ்சய் சரி என்று வைத்துவிட்டான். நிச்சயம் சஞ்சய் பற்றி முழுதாக ராம்தாஸ் ஆராய்வார். அதற்கான நேரம் தான் இது.

காலை உணவு முடித்து, கார் எடுக்க வந்தவனுக்கு ஏதோ தோன்ற திரும்பி பார்த்தான். சூர்யா வாசலுக்கு வந்து, திரும்ப வேகமாக வீட்டுக்குள் சென்று கொண்டிருந்தான். கம்பன் புருவம் சுருங்கியது. பின் தோள் குலுக்கி கிளம்பிவிட்டான்.

இன்று ராம்தாஸ்க்கு மீட்டிங் உண்டு. அவர் வீடு சென்றவன் வந்திருந்த ஆட்களை பரிசோதித்து உள்ளே விட்டவன், தானும் மீட்டிங் ஹாலில் நின்றான். ராம்தாஸ் வந்தவர், இவனை பார்த்ததும் முகம் திருப்பி சென்றார். கம்பன் இதை எதிர்பார்த்து தான் இருந்தான்.

காலை ஆரம்பித்த மீட்டிங் மதியம்  முடிவுக்கு வர, அங்கேயே உணவு வந்தவர்களுக்கு. எல்லாம் முடிந்து, ராம்தாஸ் அறைக்குள் சென்றுவிட, கம்பன் அவன் செக்கியூரிட்டி ஆபிஸ் கிளம்பிவிட்டான். இந்திராணி ஆபிசில் இருந்தவர் மகனுடன் அந்த மாதத்திற்கான கணக்கு பார்த்தார்.

ஊழியர்களின் அடுத்த இரு மாதத்திற்கான சம்பள பணத்திற்கும் செக் அன்றே கையெழுத்து போட்டு வைத்தான். அவன் வழக்கம் அது. அவன் வேலையால் எப்போது எது வேண்டுமானாலும் நேரும். அப்பாவின் மறைவின் போது கற்ற பாடம்.

வேலை முடிய இந்திராணி காரில் கிளம்பிவிட, கம்பன் மற்ற வேலைகளை பார்த்தான். இரவு உணவு வெளியே வர வைத்து கொண்டான். நேரம் இரவு மணி பத்து ஆக, கம்பனின் போன் ஒலித்தது. ராம்தாஸ் தான். “அந்த பையனை கூட்டிட்டு வா..” என்று வைத்துவிட்டார்.

கம்பன் உடனே கிளம்பியவன், சஞ்சய்க்கு அழைத்து கேட்டுக்கு வர சொன்னான். அவனும் தயாராக இருக்க, இருவரும் ராம்தாஸ் வீடு சென்றனர். மனிதர் தோட்டத்தில் இருந்தார். “பார்த்துக்கோ..” கம்பன் ஒரு வார்த்தை மட்டுமே சொன்னான்.

Advertisement