Advertisement

“உங்களுக்கே தெரியும் இல்லை வீரா லாஸ்ட் டைம்  லோக்கல் ஆளுங்க சும்மா மிரட்ட என் பொண்டாட்டியை ஆக்சிடென்ட் பண்ணதுக்கே எனக்கு உயிர் போயிடுச்சு, இதுல.. இதுல சொல்லவே வேணாம், மிரட்டிட்டு எல்லாம் இருக்க மாட்டாங்க, எப்போ எங்க எப்படின்னு தெரியாம என்னை.. என் பேமிலியை மொத்தமா முடிச்சிடுவாங்க, உங்களுக்கு இது பத்தி நான் சொல்ல வேண்டியதில்லை..”

“அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இதே பிரச்சனையில தான் நீங்க உங்க அப்பாவை இழந்தது. பெரியவர் கூட. பெரியவர்.. அவருக்கே இல்லாத பாதுகாப்பு எனக்கும், என் பேமிலிக்கும் கிடைக்குமா..? யோசிங்க வீரா, நான் சாதாரண மனுஷன், என்கிட்டேயும் பணம், அதிகாரம் இருக்கு தான், ஆனா அவங்க எல்லாம் வேற லெவல். ராம்தாஸ் சார் மாதிரி ஆளுங்க மோதலாம், நான்.. என்னால முடியுமா..? நீங்களே சொல்லுங்க..” வாசுதேவன் மொத்தமாக பேசி முடிக்க,

அவரையே பார்த்திருந்த கம்பன், “சோ.. நீங்க ராம்தாஸ் சார் சொல்ற வேலையை செஞ்சா ஆபத்துன்னு ஓட பார்க்கிறீங்க, ரைட்..?” நன்றாக சாய்ந்தமர்ந்து ஒற்றை வரியில் கேட்டு வைத்தான்.

‘ஓட பார்க்கிறீங்க..’ அவனின் இந்த வார்த்தை அப்பா, மகன் இருவருக்கும் பிடிக்கவில்லை. ஆனால் கசப்பான உண்மை என்பதால் அமைதியாக இருந்தனர்.

“இப்போ நீங்க கிளம்பிட்டா.. உங்க பேமிலி..?” என்றான் கேள்வியாக.

“ராம்தாஸ் சார் என் பேமிலி  மேல கை வைக்க மாட்டார்ன்ற நம்பிக்கை இருக்கு, எதிர்க்கட்சி ஆளுங்களுக்கு நான் இதுல இருக்கிறதே தெரியாதுன்னும் போது அவங்களால பயம் இல்லை..” என்றார் வாசுதேவன்.

கம்பன் கோவமாக ஒரு சிரிப்பு சிரித்தான். “உங்க அப்பாவை  எப்படி ராம்தாஸ் சார் ‘அந்த’ டீம்ல எடுத்தார்..?” என்றும் கேட்டு வைத்தான்.

வாசுதேவன் முகம் கருத்து போனது. சின்ன பையன்.. என்னை.. அவருக்கு தாங்கவே முடியவில்லை. மகனை பார்த்து வாயால் மூச்சு விட்டார். அவனுக்கும் அப்பாவை பேசியது அறவே பிடிக்கவில்லை. கோவம் தான். “இப்போ என்ன சொல்ல வர நீ..?” என்று கம்பனிடம் கேட்டான் சஞ்சய்.

கம்பன் பதில் சொல்லவில்லை. ஏற்கனவே பயத்தில் இருக்கும் மனிதனை மேலும் வருத்தும் எண்ணமில்லை. ஆனால் அவரின் எண்ணம் இரண்டும் தவறு.

முதலில்  ராம்தாஸ்.. எதிரில் நின்றால் தான் சிலரின் குணம் தெரியும். அப்படி ஒருவர் தான் ராம்தாஸ்..

அடுத்து அந்த எதிர்க்கட்சி.. லாஸ்ட் டைம் அவங்க தோத்தத்துக்கு காரணம் பெரியவர், இந்த முறை ராம்தாஸ் சாரை குளோசா கண்காணிக்க மாட்டாங்களா..?

தொடர்ந்த  சில நிமிடங்கள் ஆழ்ந்த அமைதி. கம்பன் அசையாமல் இருப்பதில், ‘இவன் தன்னை கிளம்ப விட மாட்டான்..’ வாசுதேவனுக்கு புரிந்துவிட்டது.

இதில் இருந்து தப்பிக்க வழியே இல்லையா..? மிகவும் சோர்ந்துவிட்டார் மனிதர். டேபிளில் தலை குனிந்து கொண்டார். எவ்வளவு பெரிய ஆபத்தில் வந்து தானும் சிக்கி, தன்னுடையா குடும்பத்தையும் சிக்க வைத்து.. எப்படி மீள போகிறோம்..?

கணவனாக, அப்பாவாக.. என் குடும்பத்தை நானே.. ஐயோ.. மனிதருக்கு தொண்டை அடைத்தது,  நெஞ்சு வலித்தது. இத்தனை வருடம் கௌரவமாக பிழைத்து, என் குடும்பத்தை காப்பாற்றி.. அவர்களுக்காக இரவோடு இரவாக ஓட நினைத்து.. எதுவுமே பலனில்லாமல் போக போகிறது. என்னை பலி கொடுத்து, என் குடும்பத்தையும் பலி கொடுக்க போகிறேன்..

“ப்பா.. ப்பா..” சஞ்சய் அவர் தோள் தட்டினான். வாசுதேவன் குனிந்தபடி மகன் கையை இறுக்கமாக பிடித்து கொண்டார். அந்த இறுக்கத்தில் அவர் தளர்ந்து விட்டார் என்று  மகனுக்கு புரிந்தது. அந்த நிமிடங்கள் கனக்க ஆரம்பித்தது.

முதலிலே இப்படி என்று அப்பா அவனிடம் சொல்லியிருந்தால் நிச்சயம் இந்த வேலையில் அவர் தலை கொடுக்க மகன் விட்டிருக்க மாட்டான், எல்லாம் தொடங்கி சூர்யா பங்க்ஷன் சென்று வந்த பின்பு தான் ஒரு நாள் சொன்னார். அதுவும் பெரிதாக.. பிரமிப்பாக.. மகனிடம் தனக்கான ஹீரோ இமேஜில் வைத்து சொன்னார். சரி அப்பாவிற்கு பிடித்திருக்கிறது, அவர் தைரியமாக தான் இருக்கிறார் என்று சஞ்சயும் விட்டுவிட்டான்.

ஆனால் சமீபமாக அவர் மாற்றம், கோவம், பேச்சு குறைந்து என்று கடைசியில் இன்று அவனை அழைத்து, “எனக்கு பயமா இருக்கு, நான் போறேன், நீ வீட்டை பாரு, நான் போயிட்டா உங்களை ஒன்னும் செய்யமாட்டாங்க, நான் இருந்தா தான் உங்களுக்கு ஆபத்து, நீ என்னை நினைச்சு கவலைபடாத, அம்மா, காவ்யாவை பாரு, நம்ம சொத்து, பணம் இன்வெஸ்ட்மென்ட் இது இது..” என்று அத்தனையும் மகனுக்கு சொல்லி அவனை தயார்படுத்தி, அவன் மறுப்பை  காதில் போட்டு கொள்ளாமல் கிளம்பி நிற்கும் போது வந்து நிக்கிறான் கம்பன் வீரய்யன்..

சஞ்சய்க்கு அவனை கோவமாக  கூட பார்க்க முடியவில்லை. அவன் வேலை இது..? புரிதல் இல்லாமல் இல்லையே. என் கடமை என் அப்பா.. அவரை நான் பார்க்க வேண்டும்.. தளர்ந்த அப்பாவை தாங்கி நின்றான் சஞ்சய்.

இந்த அப்பா, மகனை அமைதியாக பார்த்திருந்தான் கம்பன் வீரய்யன். இருவரின் கலக்கம் தவிப்பு பயம்..! ‘மகனின் ஆறுதல் தேடும் தந்தை, என் அப்பா நான் இருக்கேன் என்று தூணாக மகன்..’ கல்லாக தன்னை உணர முயன்றான். மனம் ஒத்துழைக்கவில்லை. அவனை எங்கெங்கோ இழுத்து கொண்டு சென்றது. ‘வீரா.. ப்ளீஸ்.. ரிலாக்ஸ்..’ தனக்கு சொல்ல சொல்ல அது இன்னும் வேகமாக ஓடியது. எதிரில் இருப்பவர்கள் மறைந்து, அங்கு அவனும், அவன் அப்பாவும்  தெரிந்தனர்.

நான், என் அப்பா.. அவரின் கடைசி நாளில்.. நொடிகளில்  இப்படி தான் அவர் கை பிடித்து நின்றிருந்தேன். அவர் பிடி.. என்னை பார்த்த பார்வை.. அவர் உயிர் மூச்சு நின்ற  நொடி.. அந்த கண்களில் ஜீவன் அற்று.. முகம் திருப்பினான். நினைக்காத.. நினைக்காதடா.. சட்டென எழுந்து வேகமாக கதவை திறந்து வெளியே வந்தான்.

காவ்யா இவனை பார்க்கவும் எழுந்து நின்றாள். கம்பன் அவள் பக்கமே திரும்பாமல் வெளியே சென்றான். அவர்கள் வீட்டு வாசலில் நின்றான், நடந்தான். அவன் கண்கள் சிவந்து, அவன் தவிக்கும் தவிப்பு.. அடக்கும் உள்ளங்கைகள்.. என, புரியாமல் பார்த்தாள் பெண்.

இங்கு திறந்திருந்த கதவின் வழி அப்பா, அண்ணா தெரிய வேகமாக அங்கு சென்றாள். சஞ்சய் தங்கையிடம்  தண்ணீர் எடுத்து தர சொல்லி வாசுதேவனை குடிக்க வைத்தான். “நான் இருக்கேன்ப்பா.. பார்த்துக்கலாம்.. நீங்க நிதானமா இருங்க..” என்று சொல்லி கொண்டே அவரை தெளிய வைக்க முயன்றான்.

அப்பாவை அப்படி பார்க்கவும் காவ்யாவிற்கும் பயம் வந்தது. “என்ன ஆச்சுப்பா.. உடம்புக்கு முடியலையா..? ஹாஸ்பிடல் போலாமா..” என்று அவர் கை பிடித்து படபடத்தாள் மகள். அதில் இன்னும் தான் வாசுதேவன் ஓய்ந்தார்.

‘மகள்.. வளர்ந்து நிற்கும் குமாரி.. ஏதேதோ தேவையில்லாத எண்ணங்கள்..’ உச்சகட்ட பயத்தில் தான் தேவையில்லா எண்ணங்கள் வந்து மனிதனை சாய்த்து விடும். அப்படி தான் வாசுதேவன் இருந்தார். அவர் நிதானமாக இருந்தால் நிச்சயம் சமாளித்து விடலாம்.. சஞ்சய்க்கு நம்பிக்கை இருந்தது.

“ப்பா.. ப்பா.. ப்ளீஸ்.. ரிலாக்ஸ் ஆகுங்க..” என்று நான்கு அறைக்குள் இருந்து அவரை சமாளித்து வெளியே ஹாலுக்கு அழைத்து வந்தான். தங்கையிடம் அப்பாவை பார்த்து கொள்ள சொன்னவன், கம்பனிடம் தனியே பேச வெளியே வந்தான்.

கம்பன் தன்னை சமாளித்திருக்க, சஞ்சய் அவனிடம்,  “நான் செய்றேன், அப்பா இதுல வேண்டாம்..” என்றான்.

கம்பன் புருவம் தூக்கி பார்க்க, “என்னால செய்ய முடியும், என் அப்பா வேண்டாம், அவரோட கைடன்ஸ்ல நான் செய்றேன், ராம்தாஸ் சார்கிட்ட நான் இது பத்தி பேசணும்..” என்றான்.

கம்பன் வீரய்யன் இறுக்கம் தொலைந்து இளக்கம் கொண்டான். இந்த நொடி சஞ்சய் அவனுக்கு அவ்வளவு பிடித்தது. என் அப்பா எதிர்பார்த்த மகன் யாரோ ஒரு அப்பாவிற்கு கிடைத்திருக்கிறான்.. “நீங்க வேண்டாம்.. நானே ராம்தாஸ் சார்கிட்ட பேசுறேன்..” என்றான்.

சஞ்சய், “அவர் இதுக்கு  அக்சப்ட் பண்ணிப்பாரா..?” என்று கேட்டான்.

கம்பன் அவரை ஒத்துக்கொள்ள வைக்க நினைத்தான். இதுவரை ராம்தாஸ் வேலையில் அவன்  தலையிட்டது இல்லை. முதல் முறை செய்ய போகிறான். நிச்சயம் இவன் மேல் அதிருப்தி உண்டாகும். முன்னரே காவ்யா வைத்து பேசியவர். இப்போது.. உள்ளுக்குள் இவ்வளவு ஓடிய போதும், “அக்சப்ட் பண்ணிப்பார்..” என்றான்.

அதிலே கம்பன் தனக்காக பேச போகிறான் என்று சஞ்சய்க்கு புரிய,  “காவ்யாக்காகவா..?”  என்றான் பிடிக்காமல். தங்கை இன்னும் கம்பனுக்கு சரி சொல்லாத நிலையில் கம்பனின் ஆதரவு அவனுக்கு வேண்டாம்.

கம்பன் நிதானமாக, “எனக்காக.. உங்களுக்காக..”  என்றான். சஞ்சய் இதை எதிர்பார்க்காமல் விழிக்க, கம்பன் வீட்டிற்குள் சென்றான்.

வாசுதேவன் அவனை பார்க்கவும் இயலாமையுடன் கூடிய கோபத்துடன் முகம் திருப்பினார். அவருக்கு பின்னால் நின்றிருந்த அவரின் மகளுக்கும் கம்பன் தான் ஏதோ பேசிவிட்டான் என்று கோவம். அவளும் முகம் திருப்பினாள். பார்றா.. கம்பன் முகத்தில் ஒரு சீண்டலான சிரிப்பு.

“நான் கிளம்புறேன்..”  என்று பொதுவாக சொல்லி, வாசல் வரை சென்றவன்,  “காவ்யா..  என் கார் கீ ப்ளீஸ்..” என்றான்.

அவள் முறைத்து எடுத்து சென்று கொடுத்தவள், “என் அப்பாவை என்ன சொன்னீங்க..?” என்று கேட்டாள்.

“நீ ஏன் என்னை பார்த்ததும் உன் அப்பா, அண்ணாவை கூப்பிடாம, என்னை போக சொல்லி பதறின..?” என்று கேட்டு கிளம்பினான். காவ்யா பதில் இல்லாமல் அவன் சென்ற திசையை பார்த்து நின்றாள்.

பார்த்திருந்த வாசுதேவனுக்கு, ‘இவன் என்னையும் விட மாட்டான்.. என் மகளையும் விட மாட்டான்..’ என்று தான் தோன்றியது.

Advertisement