Advertisement

கம்பன் காதல் கொண்டு 13

கம்பனின் ‘காவியத்தை களவாட வந்திருக்கேன்’ பதிலில்,

“இப்படி எல்லாம் சொன்னா நான் பயந்திடுவேனா..?” என்று காவ்யா கை கட்டி கேட்டாள்.

“நீ பயப்பட வேண்டாம்.. முதல்ல உட்காரு..” என்றான் அவன்.

“நீங்க முதல்ல கிளம்புங்க, இந்த நேரத்துக்கு யாராவது வீட்டுக்கே வந்து நிப்பாங்களா..? அப்பா வெளியே வந்து உங்களை பார்த்தா என்ன நினைப்பார்..? நீங்க தான் அவருக்கே பாதுகாப்பு கொடுக்கும் போது.. ஹேய் ஹோல்ட் டவுன்.. நீங்க அப்பாவை பார்க்க வந்திருக்கீங்களா..?” என்று வேகமாக அவன் முன் நின்று கை நீட்டி கேட்டாள்.

‘இவளுக்கு தான் முதுகு வலிக்குது இல்லை உட்காரலாம் இல்லை..’ அவளின் நீட்டிய விரலை பிடித்து அமர வைக்க கம்பன் கை பரபரத்தது. ஆனால்  செய்ய முடியா ஏமாற்றத்தில் ‘ஆம்’ என்று தலையாட்ட, காவ்யாவிடம் ஆசுவாசம். “இதை வந்ததும் சொல்ல மாட்டீங்களா..?” அவனிடம் தொற்றி கொண்ட கோபத்துடன் கேட்டாள்.

‘கொஞ்ச நேரத்துல என்னை டென்ஷன் பண்ணிட்டார்..’ முணுமுணுத்து தண்ணீர் பாட்டில் எடுத்து தண்ணீர் குடிக்க,

“எனக்கும் வேணும்..” என்றான் கம்பன்.

“சாரி.. இதோ..” என்று காவ்யா அவள் குடித்த  பாட்டிலை வைத்து புது பாட்டில் எடுத்து வர, இங்கு கம்பன் அவள் குடித்த பாட்டிலிலே குடித்து கொண்டிருந்தான்.

“என்.. என்ன பண்றீங்க..? உங்களுக்கு தண்ணீர் இங்க..” காவ்யா சொல்ல,  அவளை ஆழ்ந்து பார்த்தவன்,

“தேவைப்படும் வைச்சுக்கோ..” என்றான்.

பின்னால் ஆபிஸ் அறையின் கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் எழுந்து நின்ற  கம்பன் உடல் அட்டென்சனில் விறைத்து திரும்பியது. முதலில் வந்த சஞ்சய் ஹாலில் இருந்த கம்பனை பார்த்ததும், திகைத்து, ஆயாசத்துடன் தலை ஆட்டி கொண்டான்.

“போலாம் போலாம் சஞ்சய்.. சீக்கிரம்..” பின்னால் லேப் பேக்கை சரியாக மாட்டி கொண்டே வந்த வாசுதேவன் நிமிர்ந்து பார்க்க, முன்னால் கம்பன். அப்படி ஒரு அதிர்ச்சி அவரிடம். “நீ.. நீ..” என்று திக்கியவர், மகனை பார்க்க, அவன் தோள் குலுக்கினான். நான் தான் சொன்னேனே.. என்ற பாவனை தான் சஞ்சயிடம்.

“எங்கேயோ கிளம்பிட்டீங்க போலயே வாசுதேவன் சார்..” கம்பன் குரல் அந்த இரவில் கணீரென்று ஒலித்தது.

“நா.. நான் எங்க போனா உங்களுக்கென்ன..?” வாசுதேவன் வேர்த்து விட்டிருந்த மேல் நெற்றியை துடைத்து வேகமாக கேட்டார்.

“காவ்யா.. உங்க அப்பாக்கு அந்த தண்ணீ கொடு..” என்றான் கம்பன்.  காவ்யா நடப்பது புரியாமல் அப்பாவின் அதிர்ச்சியை பார்த்து நின்றிருந்தவள், கையில் இருந்த தண்ணீர் பாட்டிலை அப்பாவிடம்  கொடுத்தாள்.

“எனக்கு வேணாம்..” வாசுதேவன் மறுக்க,

“வாங்கி குடிங்க சார்.. நாம பேசணும்..” என்று  சோபாவில் அமர்ந்த கம்பன், “சஞ்சய் ஜீ..  காபி வேணும்..” என்றான். சஞ்சய் தங்கையை பார்க்க, “உங்க கையால வேணும்..” என்றான் கம்பன்.

“டேய்.. நீ என்னை பொண்ணு பார்க்கவா வந்திருக்க, என் கையில காபி குடிக்க..?” சஞ்சய் இருக்கும் டென்ஷனில்  கடுப்பாகி கேட்டான்.

“நீங்க பொண்ணா இருந்தாலும் பார்க்கிற ஐடியா இல்லை, சீக்கிரம் காபி போட்டுட்டு  வாங்க, பேசிட்டு நான் கிளம்பணும்..” என்றான் தோரணையாக.

‘இவனை..’ வேறு வழி இல்லாமல் பல்லை கடித்து கிட்சன் செல்ல போனவன், “காவ்யா வா..” என்றான் தங்கையை. அவன் முன் அவளை விட மாட்டானாம்..

‘இவ்வளவு நேரம் என் முன்னாடி, என் கூட பேசிட்டு தான் இருந்தா..’ சஞ்சயிடம் சொன்னால் எப்படி இருக்கும்..? கம்பன் சிரிப்பை உதட்டுக்குள் அடக்கி கொண்டவன், “வாசுதேவன் சார் வாங்க.. உட்காருங்க..” அவரை அழைத்து முன்னால் அமர வைத்தான்.

காவ்யாவிற்கு அப்பாவின் பதட்டம், அவர் எங்கேயோ கிளம்ப நினைத்தது என்று பல கேள்விகள் இருக்க, அண்ணன் பின்னால் சென்றவள், “என்னடாண்ணா.. எதாவது ப்ராப்ளமா..?” என்று கேட்டாள்.

“ப்ராப்ளம் தான்.. வீரா எப்போ வந்தான், எங்ககிட்ட சொல்ல மாட்டியா..?” என்று கேட்டவன், பால் அடுப்பில் வைத்தான்.

காவ்யாவிற்கு தான் இவன் அபிஷியலா  வந்ததாக ஐடியாவே இல்லை. முன் என்றால் நிச்சயம் உடனே அப்பா, அண்ணனிடம் சொல்லியிருப்பாள், இப்போது ஏன் அப்படி செய்யவில்லை, அவரிடம் போக சொல்லி ஏன் கேட்டுட்டு இருந்தேன்..

தங்கையின் முகம் பார்த்த சஞ்சய், “சரி  நீ டென்ஷன் ஆகிக்காத, இது கொஞ்சம் சிக்கல் தான், நான் அப்பாகிட்ட சொன்னேன், இவங்க விட மாட்டாங்க, அவசரப்படாதீங்க’ன்னு, அவர் நிதானமா யோசிக்கிற நிலையிலே இல்லை, உடனே டிக்கெட் போடு, அதை பாரு, இதை பாரு’ன்னு என்னை வைச்சு செஞ்சுட்டார், நானும் இவரை ஹாண்டில் பண்ண முடியாம, இவர் சொன்னபடி எல்லா அரேஞ்ச்மென்ட் முடிச்சு வெளியே வந்தா இவன் நிக்கிறான், பயமுறுத்தி.. நக்கலா நிக்கிறான். ம்ஹ்ம்.. இனி என்ன பண்ண..? பார்ப்போம் என்ன சொல்றான்னு..” பெருமூச்சுடன் சொன்னவன், இன்ஸ்டன்ட் காபி கலந்தான்.

‘அப்பா இவர்களிடம் சிக்கி கொண்டாரா..? ஏன்..? இவர்களிடம் தானே அவர் வேலை பார்ப்பது..? அதில் ஏதும்..?’ காவ்யா யோசித்து அண்ணன் பின்னால் சென்றாள்.

சஞ்சய் கொடுத்த காபியை எடுத்து டீபாய் மேல் வைத்த கம்பன்,  “உள்ள போய் பேசலாமா..?” என்றான் வாசுதேவனிடம். அவர் தலையாட்டி எழுந்து செல்ல, காவ்யாவிற்கு காபியை கண் காட்டிய கம்பன்,  வேக நடையுடன் ஆபிஸ் அறைக்கு சென்றான்.

“காபி கேட்டுட்டு குடிக்காம போறான் பாரு.. காவ்யா உனக்கு வேலை முடிஞ்சா நீ போய் தூங்கு..” என்ற சஞ்சய்,  ஆபிஸ் அறைக்கு சென்றான்.  கதவு அடைத்தனர். காவ்யாவிற்கு இனி வேலை செய்ய முடியும் என்று தோன்றவில்லை. காபியை கையில் எடுத்து, அங்கேயே அமர்ந்தாள்.

உள்ளே.. ஆபிஸ் அறையில்.. வாசுதேவன் அமைதியாக இருக்க, சஞ்சய் தான் பேசினான். அப்பாவின் பயத்தை சொன்னான். “அவருக்கு இந்த வேலை.. இப்போ போயிட்டிருக்கிற வேலை செட் ஆகலை, கொஞ்சம் பயப்படுறார்..” என்றான்.

“ஏன் இதுல பயப்பட என்ன இருக்கு..?” கம்பன் சாதாரணமாக கேட்டான்.

“பயப்பட எதுவும் இல்லையா..? நான் தான் இதுக்கு லீகலா கைட் பண்றேன் தெரிஞ்சா என்னை உயிரோட வைப்பாங்கன்னு நினைச்சியா..? ராம்தாஸ் என்னை அவுட் ஆப் பாக்ஸ் வெளியே வந்து சில விஷயங்களை செய்ய சொல்றார், நான்.. நான் முன்ன நின்னு கேஸ் பைல் பண்ணனும் சொல்றார், நான் ஏன் செய்யணும், அவரோட கம்பெனிஸ்க்கு தான் நான் லீகல் அட்வைசர், இதுக்கு.. இதுல நான் ஏன் செய்யணும்..? என்னை ஏன் செய்ய சொல்றார்..?” வாசுதேவன் படபடப்பாக கேட்டார்.

“விஷயம் தெரியாம கண் கட்டி நீங்க அந்த டீம்ல வந்து சேரலை இல்லை..” என்றான் கம்பன் அழுத்தமாக.

“அது.. அது சொல்லி.. இப்படின்னு சொன்னாங்க தான், ஆனா அப்போ எனக்கு இவ்வளவு.. இப்படி டெப்தா போகணும்ன்னு தெரியல..” வாசுதேவன் சொல்ல, சஞ்சயை பார்த்தான் கம்பன்.

‘பேர் சொல்ல கூடிய லீகல் அட்வைசர்.. சட்டத்தில் நுணுக்கு எல்லாம் தெரிந்த சட்ட மேதாவி..  கடைசி நேரத்தில் எனக்கு இது எல்லாம் தெரியாது என்று பேக் அடித்தால் என்ன ஆகும் என்று உனக்கு புரிகிறதா..?’ என்று கேட்டது கம்பனின் பார்வை. சஞ்சய்க்கு இது புரியாமல் இல்லை.

அப்பா பின் வாங்கினால் நிச்சயம் அவருக்கு தான் பயங்கரமான பின் விளைவுகள் ஏற்படும். இருமுனை கத்திக்கு இடையில் சிக்கி கொண்டிருக்கிறார். இந்த பக்கம் ராம்தாஸ்.. மறுபக்கம் அந்த கட்சி. இதில் எந்த பக்கம் வாசுதேவன்  அசைந்தாலும் குத்தாமல் விடாது.

வாசுதேவனுக்கும் இது புரிய தான் செய்தது, அதனாலே நான் எந்த பக்கமும் இல்லை. இடையில் நழுவி ஓடிவிடுகிறேன் என்று முடிவெடுத்தார். லாஸ்ட் மீட்டிங் சென்று வந்த நாளில் இருந்து இதே யோசனை தான். தான் கிளம்புவதில் இருக்கும் சாதக பாதங்கங்களை ஆராய்ந்து, விசா வரவும், இன்று மகனிடம் பேசி அவனை ஒத்துக்கொள்ள வைத்தவர், உடனே டிக்கெட் போட செய்தார். எல்லாம் தயார். இன்னும் சிறிது நேரத்தில் ஏர்போர்ட்டில் இருக்க வேண்டும்.

‘கம்பனிடம் பேசி ஒத்துக்கொள்ள வைக்கலாம்..’ வாசுதேவனுக்கு இந்த எண்ணம் தோன்ற நன்றாக நிமிர்ந்து அமர்ந்தவர்,

“ராம்தாஸ் சார் கம்பெனிஸ்க்கு மட்டும் நான் லீகல் அட்வைஸரா இருந்துட்டு போயிருக்கணும், அவர் இப்படினு கேட்கவும் எனக்கும் ஒரு ஆர்வம், பிரமிப்பு..  ஜெயிக்க போறவங்கன்னு உறுதியா இருக்குற கட்சி, அதை தோக்க வைக்க போறோம்ன்னு ஒரு திரில்லிங் கூட, இந்த வேலைக்காக எனக்கு ராம்தாஸ் சார் சொன்ன பணம் கூட நான் இப்போவரை வாங்கிக்கலை. அவ்வளவு பணம். என் வாழ்க்கையில.. ஏன் என் பரம்பரையே நினைச்சு கூட பார்க்க முடியா பணம், அது என்னை பயமுறுத்த தான் செஞ்சது, அதனாலே நான் இன்னும் ஒரு ரூபாய் கூட கை நீட்டி வாங்கலை, பணத்துக்காக உள்ள வந்தேன்னு என்னை யாரும் சொல்ல முடியாது..”

“ஒரு குருட்டு தைரியம், ஆர்வத்துல வந்து சிக்கிட்டேன். அவ்வளவு தான், இப்போ ராம்தாஸ் சார் வந்து அந்த கட்சியோட முக்கியமான ஆளுங்க  மேல என்னை வெளிப்படையா கேஸ் பைல் பண்ண சொல்லும் போது தான் பயமே வருது, ஸ்க்ரீனுக்கு பின்னாடி எனக்கு ஒன்னும் தெரியல, வெளியேன்னும் போது, என்னை விட என் பேமிலி..

Advertisement