Advertisement

“ஏன் இவ்வளவு நேரம் காவ்யா..?” சூர்யா கேட்க,

“காபி சொல்லுடா..” என்று ரெஸ்ட் ரூம் சென்று முகம் கழுவி வந்தாள்.

‘இவர் என்கிட்ட காதலை சொல்லியிருந்தா கூட ஒன்னும் தெரிஞ்சிருக்காது போல.. தோத்துட்டேன் சொல்லி என்னை படுத்துறார்..’

சூர்யா காபியை நீட்டினான். காவ்யா குடித்து முடிக்க, இருவரும் வேலை ஆரம்பித்தனர். சூர்யாவிற்கு நேற்றிரவு மனைவி செய்தது, காவ்யா என்ன நினைத்திருப்பாள் என்பது வேறு ஒரு மாதிரி  இருந்தது. சட்டென பேச முடியவில்லை. என்னவென்று கேட்பது..?

அவனின் மொபைலுக்கு கால் வேறு  வந்து கொண்டே இருந்தது. காவ்யா பார்க்க, “அது.. என் மாமனார் தான், எங்கேயோ வர சொல்லி கூப்பிட்டுட்டே இருக்கார்..” என்றான் சூர்யா.

காவ்யாவிற்கு ஏன் என்று தெரியும் என்பதால், “எடுத்து என்ன விஷயம்ன்னு கேட்டு தெரிஞ்சுக்கோ சூர்யா..” என்றாள்.

“இல்லை காவ்யா எடுத்தா உடனே வா’ன்னு நிற்பார்..” சூர்யா சொல்ல,

“அதுக்காக எடுக்காம இருப்பியா..? உனக்கு போகணுமா போக வேண்டாமா’ன்னு சொல்ல கூட இவ்வளவு யோசிச்சா எப்படி சூர்யா..? உன் மாமனார் தானே, எதுக்கு இவ்வளவு தயங்கிற..?” என்றாள்.

“உண்மையை சொல்லணும்ன்ன எனக்கு அவர்கிட்ட, ஆதிராகிட்ட எல்லாம் ஒரு லிமிட்டுக்கு மேல போக பயமா இருக்கு காவ்யா, அவங்க ஏதாவது பேசி, அந்த விஷயம் வெளியே வந்து, அண்ணனுக்கு தெரிஞ்சா..?”

“தெரிஞ்சா என்னடா..? நீ செஞ்சது தானே..? பேஸ் பண்ணு..”

“நான் செஞ்சது தான், ஆனா அண்ணா, அவனுக்கு வந்த அலையன்ஸ்.. நான்.. எனக்கு ரொம்ப அசிங்கமா இருக்கு காவ்யா..  நான் இடையில வராம இருந்திருந்தா.. ஒருவேளை.. ஒருவேளை அண்ணாக்கு ஓகே..”

“வாய்ப்பில்லை..” காவ்யா நிதானமாக சொன்னாள்.

“என்ன வாய்ப்பில்லை..?” சூர்யா புரியாமல் கேட்க,

“அவர் ஓகே சொல்லியிருக்க.. இதுக்குன்னு இல்லை, வேறெதுக்கும் கூட அவர் ஓகே சொல்லியிருக்க மாட்டார்..” என்றாள் உறுதியாக.

கம்பன் வீரய்யனின் காதல் காவ்யா என்று தெரிந்த பின் வந்த உறுதியா இது..?

“என் காதல் என்னை விடாது, உன்னையும் விட ஒத்துக்க மாட்டேங்குது..”

எனக்கு மாப்பிள்ளை பார்க்க போகிறார்கள் என்று தெரிந்து தான் திருமணத்திற்கு கேட்டு நிற்கிறாரா..?

“நீ இப்படி இவ்வளவு உறுதியா சொல்ற..?” சூர்யா கேட்டவன், “நைட் அண்ணா உன்கிட்ட ஏதோ பேசிட்டிருந்தான் இல்லை..” என்று கேட்டான்.

காவ்யாவோ, “அவர் என்கிட்ட பேசினதை விட்டு, உன் பிரச்சனையை பாரு சூர்யா..” என்றாள்.  சூர்யா தோழியை ஆச்சரியமாக பார்த்தான்.

காவ்யாக்கு அவன் பார்வை புரிய, அதை விடுத்து, “போன் எடுத்து முதல்ல பேசு.. உன் அண்ணா.. க்கும் .. உன் அண்ணாக்கு நீ பண்ணது தெரியும்..” என்றாள் ஒவ்வொரு வார்த்தையாக.

சூர்யாவிற்கு புரிய படக்கென்று எழுந்து நின்றுவிட்டவன், “தெரி.. தெரியும்ன்னா..” நொடியில் முகம் வேர்த்து, கலங்கிய குரலில் கேட்டான்.

“ரிலாக்ஸ் சூர்யா.. தண்ணீர் குடி..” காவ்யா பாட்டில் எடுத்து குடிக்க வைத்தவள், சில நிமிடம் அமைதியாக இருந்தாள். சூர்யா டேபிளில் கவிழ்ந்துவிட்டான்.

‘அண்ணனுக்கு தெரிஞ்சா எவ்வளவு அசிங்கம் என்ற பயம் போய், தெரியும் என்ற உண்மை அவனை கடுமையாக சுட்டது. எப்படி இத்தனை நாள் அவன் முகத்தில் விழித்தேன்..? என்னை என்ன நினைச்சிருப்பான்..? ரொம்ப மட்டமா..? வெறுத்து தான் என் முகம் கூட பார்க்கிறதில்லையோ..? கடவுளே..?’

‘இதுல அவன்கிட்ட அவ்வளவு கோவமா பேசி, சண்டை போட்டு.. அவனை பேசுற யோக்கியதை இல்லாம.. இனி எப்படி அவன்  முன்னாடி நிக்க போறேன்..?  இப்படியே எங்கேயாவது ஓடிடலாமா..? ஆனா அம்மா, ஆதிரா..’ கண்ணீர் உடைத்து நிற்காமல் வழிந்தது.

காவ்யா அவர்கள் இருந்த அறை மூடினாள். தவறென்று இவ்வளவு மறுகுபவனிடம் என்ன பேச..? அவன் தானே அமைதியாகும் வரை விட்டாள். அடக்கி வைத்திருந்த பயம் ஆச்சே..? முகம்  துடைத்து நிமிர்ந்தவனை, “போய் ரிப்ரெஷ் ஆயிட்டு வா..” என்றாள்.

காபி எடுத்து கொடுத்தாள். ஒரு சிப் கூட குடிக்க முடியவில்லை அவனால். ஏதோ தொண்டையில் இன்னும் அடைத்தது. ‘அப்பா என்னை மேலிருந்து பார்த்துகிட்டு இருப்பார் இல்லை, அவரோட நம்பிக்கை நான்  தானே..? நானே இப்படி தரம் தாழ்ந்து அண்ணனுக்கு..’  தோன்றிய நொடி, காபியை வைத்துவிட்டான்.

“சூர்யா..” காவ்யா அதட்டவே செய்தாள். “முதல்ல குடிச்சு முடி.. உன்கிட்ட பேசணும்..” என்றாள்.

“ப்ளீஸ் காவ்யா..” கமறிய குரலில் மறுத்தான்.

“அண்.. அவனுக்கு எப்போ..?” சூர்யா கேட்க முடியாமல் திணற,

“முதல் நாள் நீ உன் மாமனார்கிட்ட பேசினப்போவே,  அவரோட வந்த கணேசன் அங்கிள் சொல்லிட்டார்..” என்றாள்.

‘அவர் சொல்லியிருப்பாரே..? நான் பண்ணது அவருக்கு பிடிக்கலை, என் கல்யாணத்துக்கு கூட அவர் வரலையே..? எப்படி அவரை யோசிக்காம போனேன்..?’ திரும்ப கலங்கினான்.

“சூர்யா.. முதல்ல கொஞ்சம் நிதானத்துக்கு வா, முடிஞ்சது நினைச்சு இப்போ இருக்கிற லைஃபை காம்ப்ளிகேட் பண்ணிக்காத, உன் அண்ணா உன்கிட்ட சொல்றதும் அது தான், அவரை நினைச்சு நீ பயப்பட்டு சிக்கல்ல மாட்டிக்காத.. அவரே அதை மைண்ட் கூட பண்ணிக்கலை.. புரியுதா..?” என்றாள்.

சூர்யாவிற்கு இப்போது அவள் பேசுவது மனதிலே ஏறவில்லை. காவ்யாவிற்கும் புரிந்தது. மாலை வரை அவனை தொந்தரவு செய்யாமல் விட்டுவிட்டாள். ஆபிசில் இருப்போர் எல்லாம் கிளம்பவும், நண்பர்களும் வந்து சென்ற பின், திரும்ப ஒரு டீயுடன் அவனிடம் பேசினாள்.

“உன் மாமனார் உன்னை கூப்பிடுறது உனக்கு பார்த்திருக்கிற தனி ஆபிஸ் காட்ட தான், நீ உன் அண்ணாவை விட்டு, இதுல கொஞ்சம் கவனம் வை.. அப்படி உனக்கு நம்ம ஆபிஸ் வேண்டாம்ன்னா, ஒன்னும் பிரச்சனையில்லை.. அந்த ஆபிஸ்..”

“காவ்யா ப்ளீஸ்..” என்றான் சூர்யா.  “நான் உங்களை எல்லாம் விட்டு தனி ஆபிஸா..? எப்படி பேச்சுக்குகூட உன்னால என்கிட்ட இதை சொல்ல முடியுது..?” கோவமாகவே கேட்டான்.

நண்பன் கவனம் இதில் திரும்பவும் நிம்மதி பெரு மூச்சு விட்டவள், “சரி.. சாரி.. நீ இதை பேசி  சார்ட் அவுட் பண்ணு..” என்றாள். “அப்புறம் இதனால உனக்கும் ஆதிராக்கும் சிக்கல் வராம பாத்துக்கோ..” என,

“அதெல்லாம் வரும்.. இவங்க என்னை கேட்காம தனி ஆபிஸ் பார்த்ததுக்கு அப்பறமும் நான் பேசாம இருக்க முடியாது, என்னோட நிலைய இவங்க அவங்களுக்கு சாதகமா பயன்படுத்திக்கிறாங்க..” என்றான் பொருமலாக.

“முதல்ல நிதானமா பேசுடா.. புரிஞ்சுப்பாங்க, உன் வைப் பேமிலி, எடுத்ததும் நேருக்கு நேர் நிக்கணும் இல்லை.. உன்னோட ஸ்ட்ரெஸ் எல்லாம் அவங்க மேல காட்டி திரும்ப மறுகிட்டு நிக்கிற  மாதிரி நடந்துக்காத.. உன் தப்புக்கான விலையை மத்தவங்க மேல இறக்காத,  இனியாவது உன் டெவிலை அடக்கி வைக்க கத்துக்கோ, எல்லா நேரமும் செகண்ட் சேன்ஸ் கிடைக்காது.. பார்த்துக்கோ..” என்றாள் அறிவுறுத்தலாக.

சூர்யாவிற்கு தோழி சொல்வது புரிந்தது. தனக்குள் யோசித்தான். மாமனார், மனைவி விஷயத்தில் ஏதோ ஒரு சிறு தெளிவு கிடைத்தது. ஆனால் அதை எல்லாம் கடந்து அண்ணா, அவனின் அண்ணா அவன் முன் பெரிதாக நின்றான். எப்படி அவன் முன் நான்..? பதிலே கிடைக்கா கேள்வி..?

நேரம் கடக்க இருவரும் கிளம்பினர். சூர்யா கண்கள் வீட்டுக்குள் செல்லும் போதே அண்ணன் காரைதான் தேடியது. இல்லை எனவும் அப்படி ஒரு ஆசுவாசம், ஆறுதல். அப்படியே தளர்ந்து அமர்ந்தான். இன்று ஒரு நாளோடு எல்லாம் முடிவதில்லை தான், ஆனால் இந்த ஒரு நாள் ஆசுவாசமே அவனுக்கு பெரிதாக தேவைப்பட்டது.

காவ்யா இரவு உணவு முடித்து ஹாலின் ஓரம் இருந்த டிராப்டிங்  டேபிள் முன் நின்றாள். ஆபிசில் சூர்யாவின் ஒத்துழைப்பு இல்லாமல் போக, இவளுக்கும் கம்பன் உள்ளுக்குள் ஆட்டம் காட்ட,  முடிக்க வேண்டிய ஸ்கெட்ச் பாதியிலே நின்றுவிட்டது. இன்னும் இரண்டு நாட்களில் முடித்து கொடுத்தால் தான் கட்டிடம் ஆரம்பிக்க முடியும். ஸ்கெட்ச் வைத்து டிஸ்கஷன் இருக்கும். அதற்கும் ஒரு நாள் வேண்டும்.

இன்றிரவு முடித்துவிட வேண்டும் என்று நின்றுவிட்டாள். சுதா மகளுக்கு பால் பிளாஸ்கில் வைத்து தூங்க செல்ல, அண்ணனும், அப்பாவும் ஆபிஸ் அறையில் இருந்தனர். காவ்யா தன் கவனத்தை வரைபடத்தில் வைக்க முயன்று வெற்றியும் பெற்றாள். நேரம் சென்றதே தெரியவில்லை.

டிராப்டிங் டேபிளில் பேப்பரை விரித்து வைத்து கண்கள் சிமிட்டாமல் பென்சிலை இழுத்து கொண்டிருக்க, அவள் முன் யாரோ நின்றனர்.

சஞ்சய்’யாக தான் இருக்கும்.. “ண்ணா.. காபி வேணும்டா..” காவ்யா சொல்ல,

“நம்ம வீட்டுக்கு வா காபி தரேன்..” கம்பன் சொன்னான். காவ்யா அதிர்ந்து நிமிர்ந்து பார்க்க, அவனே..! நேரமோ இரவு பதினொன்று.

“நீ.. நீங்க எப்படி இங்க..?”

“காவியத்தை தேடி கம்பன் வரது தானே..?” என்றான் அவன்.

“இந்த நேரத்துக்கா.. என்ன பண்றீங்க நீங்க..?”

கம்பன் வீரய்யன் அவள் பதட்டத்தை ரசிக்க செய்ய, காவ்யாவிற்கு கோவம் வந்தது. “என் அப்பா, அண்ணா ஆபிஸ் ரூம்ல தான் இருக்காங்க.. வருவாங்க..” என்றாள்.

“வரட்டும்.. காவியத்தை ஏன் இன்னும்  எனக்கு கொடுக்கலை’ன்னு  கேட்கிறேன்..” என்றான் சிரிப்புடன்.

“அதை கேட்க இந்த நேரம்தான் கிடைச்சுதா உங்களுக்கு..?” காவ்யா முதுகை தடவி விட்டு கேட்க,

“உனக்கு முதுகு வலிக்குது.. சோபாவுல போய் சாய்ஞ்சு  உட்காரு..” என்றான் அவன்.

“அது நான் பார்த்துகிறேன்.. நீங்க முதல்ல கிளம்புங்க..” காவ்யா சொல்ல,

“வந்த வேலை முடியாம கிளம்ப முடியாதே..?” என்றவன், சோபாவிற்கு வர பின்னாலே வந்த காவ்யா,

“என்ன வேலை..?” கண்களை சுருக்கி கேட்க,

புரிந்த கம்பன் சிரிப்பை தாடிக்குள் மறைத்து அமர்ந்தவன், “காவியத்தை களவாண்டுட்டு போற வேலை தான்..” என்றான்.

Advertisement