Advertisement

அவர்களின் அரட்டை  நின்று திரும்ப தொடர்ந்தது. ஆதிரா இவர்களிடம் வந்தவள், ஒற்றை சோபாவில் அமர்ந்தபடி, “இங்க வாங்க..” என்றாள் சூர்யாவிடம். நண்பர்கள் கண்டு கொள்ளாமல் தங்கள் பேச்சை தொடர, இந்திராணி எழுந்து கிட்சன் சென்றார்.

‘ஆரம்பிச்சுட்டா..’ சூர்யா நண்பர்களுடன் இருக்க தான், காலியாக இருந்த அந்த ஒற்றை சோபாவை விட்டு, கைப்பிடியில் அமர்ந்திருந்தான். இப்போது மனைவி கூப்பிடவும், “நா.. நான் டேபிள் செட் பண்ண போறேன், டின்னருக்கு டைம் ஆச்சு..?” என்று எழுந்தான்.

“அதை சாமியண்ணா பார்த்துப்பார், நீங்க உட்காருங்க..” என்றாள் மனைவி.

“ஆமா நீ உட்காருடா, நாங்க பார்த்துகிறோம்..” காவ்யா மற்ற மூவருடன் டேபிள் சென்றுவிட்டாள்.

“ஆதிரா என்ன பண்ணிட்டு இருக்க..?” சூர்யா மனைவியை மெல்ல கண்டித்தான்.

“ஏன்..? என்ன பண்ணிட்டேன்..?” ஆதிரா குரல் உயர்த்த,

“நீ ஒன்னும் பண்ணல, வா நாம சாப்பிட போலாம்..” என்றான் சூர்யா இதை தொடர விரும்பாமல்.

மனைவியோ “எனக்கு இப்போ பசிக்கலை, நாம அப்புறம் சாப்பிடுவோம்.. என்றாள்.

“சரி நீ அப்பறம் சாப்பிடு, நான் அவங்களோட..”

“நீங்களும் என்னோட தான் சாப்பிடணும்..” ஆதிரா இடையிட்டு சொன்னாள்.

“ம்ப்ச்.. ஆதிரா அவங்க எனக்காக வந்திருக்காங்க..”

“அவங்க இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பியும் போயிடுவாங்க, நான் தான் உங்களோட இருப்பேன், எப்போவும்..  கடைசி வரை, எனக்கு அந்த ரெஸ்பெக்ட், இம்பார்ட்டன்ஸ்  கொடுங்க..”

“ஆதிரா.. நீ பேசுறது உனக்கே நியாயமா இருக்கா..? இப்போ இது அவசியமா..?”

“நான் உங்க அத்தியாவசியமா இருக்கணும்ன்னு  நினைக்கிறேன், அதுல என்ன தப்பு..?” ஆதிரா குரல் உயர்த்தி தான் பேசி கொண்டிருந்தாள்.

‘அடக்குமுறை காதல்..!’ காவ்யா மனதில் இது தான் தோன்றியது.

“நீங்க சாப்பிட உட்காருங்க..” இந்திராணி சொல்ல, மறுக்காமல் அமர்ந்துவிட்டனர். சூர்யா பார்த்தவன், மனைவியுடன் பேச்சு வளர்க்காமல் வந்துவிட்டான்.

“நீ அப்பறம் சாப்பிடு சூர்யா..” இந்திராணி மகனை பார்த்து அழுத்தமாக சொல்ல, சூர்யா அளவில்லா சங்கடத்துடன் நின்றான்.

“சூர்யா கிரேவி எடு..” காவ்யா கேட்க, சூர்யா நண்பர்களுக்கு பரிமாற ஆரம்பித்தான். ஆதிரா உர்ரென்று பார்த்து கொண்டிருந்தாள்.

“இது தான்’னு  நீ முன்னாடியே சொல்லியிருக்கலாம்..” தினேஷ் குனிந்து காவ்யா காதை கடித்தான்.

“ஆமா வெளியே நல்லா பிரியாணி சாப்பிட்டு பில்லை சூர்யா பேர்ல எழுதியிருக்கலாம்.. மிஸ் ஆகிடுச்சு..” ராஜ் முனகினான். காவ்யா நண்பர்களை பார்த்து சிரித்தவள், உணவை முடித்து எழுந்தாள். இந்திராணி நால்வருக்கும் ஸ்வீட் பேக் செய்து கொடுத்தார்.

“டேய் கிப்ட்டே  கொடுக்கலைடா..” ரோஹித் சொல்ல,

“அதான் அவன் பொண்டாட்டி தினமும் கொடுக்கிறாங்களே..?” தினேஷ் சொல்லிவிட்டான்.

“உங்களுக்கு எப்படி தெரியும்ண்ணா..? இவர் சொல்வாரா..? நான் தினமும் கிப்ட் கொடுப்பேன், இன்னைக்கு கூட அவரு ஏஜ் கவுண்டுக்கு கிப்ட் கொடுத்தேன்..” ஆதிரா பெருமையுடன் சொன்னாள்.

“ஆஹ்.. ஆமா.. ஆமா சொல்வான், சொல்வான்..” தினேஷ் எல்லா பக்கமும் தலையாட்ட, மற்றவர்கள் சிரிப்பை வாய்க்குள் அடக்கினர் இந்திராணி உட்பட.

“நாம கிளம்பலாம்..” ரோஹித் சொல்ல, நண்பர்கள் விடைபெற்று வெளியே வந்தனர். “இந்தா உன் கிப்ட்..” ரோஹித் அவன் காரில் இருந்து எடுத்து சூர்யாவிடம் கொடுத்தான்.

“சாரி கைஸ்..” சூர்யா வருத்தத்துடன் சொல்ல,

“ச்சே ச்சே.. நாங்க தான் உனக்கு சாரி சொல்லணும்டா மச்சான்..” என்றான் தினேஷ் அவன் தோள் தட்டி.

“சூர்யாக்குள்ள இம்புட்டு பெரிய வாரியர் இருக்கான்னு இன்னைக்கு தான் எனக்கு தெரிஞ்சது, தினம் தினம் களம் காணும் எங்கள்  சிங்கத்துக்கு வாழ்த்துக்கள் மச்சி..” ராஜ் சொல்ல,

“டேய் அமைதியா இருங்கடா..” ரோஹித் அதட்டியவன், “நாளைக்கு ஆபிஸ்ல பார்ப்போம்..” என்று கார் எடுத்தான். தினேஷ், ராஜும் விடைபெற்று கிளம்பினர்.

இருவர் மட்டும் இருக்க, சூர்யாவிற்கு தோழியின் முகம் பார்க்க முடியவில்லை.

காவ்யா பெருமூச்சுடன் நண்பனை பார்த்தவள், “நான் கிளம்பறேன்.. இன்னைக்கு டிசைன் பண்ண ஸ்கெட்ச் உனக்கு அனுப்பியிருக்கேன், பார்த்துட்டு வா, நாளை டிஸ்கஸ் பண்ணலாம்..” என்று சொல்லி கொண்டிருக்க,

“சூர்யா..” பின்னால் ஆதிரா வாசலில் நின்று அழைத்தாள்.

“நீ போ.. நானும் கிளம்புறேன்..” காவ்யா சொல்ல,

“இல்லை.. நான் உன்னை அனுப்பிட்டு..”

“சூர்யா..” ஆதிரா திரும்ப அழைக்க,

“டேய் போடா..” காவ்யா சலிப்பாக சொன்னாள்.

சூர்யா மனைவியிடம் செல்ல, காவ்யா அவள் ஸ்கூட்டி நிற்கும் இடம் சென்றால் வண்டியை காணவில்லை.

“மேடம்..”  என்று வந்தார் செக்கியூரிட்டி. காவ்யா அவரை கேள்வியாக பார்க்க, “உங்க ஸ்கூட்டி இங்க இல்லை, நம்ம கார்ட்ஸ் வண்டி உங்க ஸ்கூட்டியை தெரியாம இடிச்சிடுச்சு, சரி பண்ண எடுத்துட்டு போயிருக்காங்க..” என்றார் அவர்.

கம்பன் வந்தவன், “நீங்க போங்க..” என்று செக்கியூரிட்டியை அனுப்பி வைத்தவன், அவன் கார் எடுத்து வந்து அவள் முன் நிறுத்தி, “ஏறுங்க காவியமே..”  என்றான்.

“உங்க வேலை தானே..?” காவ்யா நின்ற இடத்தில் கை கட்டி கேட்க,

“ஆமா’ன்னு சொல்லனுமா..?” என்று கேட்டான் கம்பன் வீரய்யன்.

“அப்படியென்ன பேசணும் உங்களுக்கு..? நீங்க இப்படி எல்லாம் பண்ண  பண்ண  தான் உங்களை இன்னும் தள்ளி வைக்க தோணுது..” என்றாள் காவ்யா. கம்பன் இறுகி போனான்.

“நான் உங்களோட வரலை, கேப் புக் பண்ணிக்கிறேன்..” காவ்யா மொபைல் எடுக்க,

“நீயும் இப்படி பண்ண பண்ண தான் உன்னை என்கிட்ட இன்னும் இழுத்து பிடிக்க தோணுது..” என்றான் கம்பன் வீரய்யன்.

காவ்யா போன் எடுத்து சஞ்சய்க்கு அழைத்து இங்கு வர சொன்னவள், “என்ன பேசணும் சொல்லுங்க..” என்றாள் கம்பனிடம்.

“அப்போ  என்னோட வர மாட்ட..? ம்ஹ்ம்..” கம்பனும் காரை விட்டிறங்கி அவள் முன் வந்து நின்றவன், “சூர்யா மாமனார்கிட்ட என்ன பேசின நீ..?” என்று கேட்டான்.

“நான் ஒன்னும் பேசல, அவர்  ஹோட்டல் கட்ட கேட்டார், சூர்யா வேண்டாம் சொன்னதை நான் அவர்கிட்ட சொன்னேன் அவ்வளவு தான்..” என்றாள் காவ்யா.

“அதை ஏன் நீ சொன்ன..? உன் ப்ரண்டுக்கு வாய் இல்லையா..?” என்றான் கம்பன்.

“அது.. இப்போ நான் சொன்னா என்ன..?” என்றாள் நண்பனை விட்டு கொடுக்க முடியாமல்.

“உன்னை அவன் இதுல கொண்டு வந்திருக்கவே கூடாது, இது அவன் பிரச்சனை, உன்னை ஏன் உள்ள இழுக்கிறான்..? அறிவுகெட்டவன்..” கம்பன் தம்பியை திட்டினான்.

“அவனுக்கு என்ன பிரச்சனை..? அதெல்லாம் ஒன்னுமில்லை..”  காவ்யா சொல்ல,

“அப்படியா..? சரிதான், அப்போ அவன் மாமனார் உன் ப்ரண்டுக்கு தனி ஆபிஸ் பார்த்து பேசி முடிச்சுட்டார்ன்னு நீயே அவன்கிட்ட சொல்லிடு..” என்றான் கம்பன்.

“தனி ஆபிஸா..? ஏன்..?” காவ்யா அதிர, கம்பன் தோள் குலுக்கினான். “நான் ஹோட்டல் கட்ட முடியாது சொன்னதுக்கா..?” காவ்யா கேட்க,

“நீ சொன்னதுக்குன்னு இல்லை, அவங்க முழுசா சூர்யாவை அவங்க கண்ட்ரோல்ல வைக்க நினைக்கிறாங்க, இவனும் என்னை நினைச்சு பயந்துட்டு, அவங்களை எதிர்க்க மாட்டேங்கிறான், நீ சொல்லு அவன்கிட்ட, இப்படி இருந்தா வேலைக்கு ஆகாதுன்னு சொல்லு, புரிய வை. அவன் அடையாளத்தை காலி பண்ணிடுவாங்க, பேசு..” என்றான் கம்பன்.

“உங்களை நினைச்சுன்னா.. உங்களை நினைச்சு அவன் ஏன் பயப்படணும்..?” காவ்யா  கேட்க,

“ம்ப்ச்.. உனக்கு தெரியும்ன்னு எனக்கு தெரியும், எனக்கு அதுபத்தி பேச வேண்டாம், நீ முதல்ல அவன்கிட்ட பேசு, அவங்க கொஞ்சம் அப்படி தான், முன்ன மாபிள்ளயை டம்மி பண்ணிட்டாங்க, இவனும் எதிர்த்து பேசலைன்னா,  கஷ்டம் தான்..”

“அப்போ உங்களுக்கு எல்லாம் தெரியும், ஆதிரா முதல் வரன் வரன் யாருன்னு..” காவ்யா நிதானமாக கேட்டாள்.

“சோமசுந்தரத்தோட வந்த கணேசன் அங்கிள் அப்போவே, முதல் நாளே என்கிட்ட சொல்லிட்டார்..” கம்பன் சொன்னான்.

“தெரிஞ்சும் நீங்க ஏன் அவன்கிட்ட கேட்கல..?”

“நான் ஏன் கேட்கணும்..?”

“அவன் பண்ணது தப்பு தான், ரொம்ப பெரிய தப்பு தான், ஆனா அவன் அப்படி பண்ண நீங்க.. நீங்க மட்டும் தான் காரணம், உங்களுக்கு வந்த வரன்கிட்ட பேசி, அவர் அவனை மாப்பிள்ளையாக்கி.. அவனுக்கு நீங்க ஒரு நல்ல அண்ணனா இருந்திருந்தா அவன் இப்படி ஆகியிருக்க மாட்டான்.. உங்களால தான் அவன் மாறி, இன்னைக்கு இப்படி ஆதிரா கூட கஷ்டப்பட்டுட்டு, எல்லாம் உங்களால தான்..”

“அப்புறம்..” கம்பன் கை கட்டி கேட்டான்.

“என்ன அப்பறம்..? ஏன் இது எல்லாம் இல்லைன்னு சொல்வீங்களா..?” காவ்யா ஆதங்கத்துடன் கேட்க,

“கண்டிப்பா சொல்ல மாட்டேன், இப்போ நான் என்ன பண்ணனும் சொல்லு..” என்றான் அவன்.

“அதான் எல்லாம் பண்ணி முடிச்சிட்டீங்களே..? இனி என்ன இருக்கு பண்ண..?” காவ்யா கேட்க,

“ஒன்னு மிச்சம்  இருக்கு..” என்றான் அவன். காவ்யா கேள்வியாக பார்க்க, “இந்த காவியம் கம்பன்கிட்ட வந்து சேர வேண்டியது இன்னும் மிச்சம் இருக்கு..” என்றான்.

“உங்ககிட்ட  சேராதுன்னு  சொன்னா..?” காவ்யா கேட்க, கம்பன் சிரித்தான். திமிராக, வில்லங்கமாக, வில்லனாக, இறுதியாக காதலாக.

பெண்ணின் உள்ளுணர்வு எங்கோ, எதையோ தூண்டியது. “உங்களுக்கு என் மேல லவ் இருக்குன்னு என் அண்ணா சொல்றான்..” காவ்யா கேட்டுவிட்டாள்.

கம்பன் பார்வை அவள் மேல் நங்கூரம் இட்டது.

“என்னை கூனி குறுக வைச்ச பொண்ணு நீ என்னை மறுக்கிறதால எனக்கு பெருசா ஈகோ எல்லாம் பத்திகிட்டு எரியாது. ஆனா.. ம்ம்.. என் காதல் என்னை விடாது, உன்னையும் விட ஒத்துக்க மாட்டேங்குது..”

“அப்போ உங்களுக்கு என்மேல லவ் தான் இல்லை..”

“நான் அதுல தோத்துட்டேன், என் காதலை உன்னால உணர முடியல, உணர வைக்க எனக்கு தெரியல..”

“இப்போ மட்டும் ஏன் திரும்ப.. விட்டுடலாமே..?”

“என் காதல் தோத்து தான் போச்சு, சாகலையே..” கம்பன் சிரித்து சொன்னான். காவ்யா அவனையே பார்த்து நின்றுவிட்டாள்.

சிரித்து தான் சொல்றார், ஆனா அவருக்கு  ஏதோ..  எங்கோ வலிப்பது போல.. ஏன்..? பெண் உணர்ந்தாள். முதன் முதலாக  அவனிடம் இருந்து ஒன்றை உணர்ந்தாள்.

Advertisement