Advertisement

கம்பன் காதல் கொண்டு 11

அன்றைய நாள் காலையில் அந்த வீட்டில் எப்போதும் போல பரபரப்பாக கிளம்பி கொண்டிருந்தனர். சஞ்சய்க்கு இன்று முக்கியமான கேஸ். அவனின் ஜுனியர்கள் வீட்டில் உள்ள அலுவலக அறையில் இவனுக்காக காத்திருக்க, சஞ்சய் அவசரமாக கிச்சனில் நின்று டிபனை காலி செய்து கொண்டிருந்தான்.

மகனின்  ஜுனியர்களுக்கு காபி கொடுத்தனுப்பிய சுதா, “காவ்யா.. சீக்கிரம் வா, எனக்கு நேரமாச்சு..” என்று மகளுக்கு குரல் கொடுத்தார். சுதா  ஒரு கவர்மெண்ட் செக்டார் வங்கியின் தலைமை அலுவலகத்தில் வேலை பார்க்கிறார்.

“இதோம்மா.. பைவ் மினிட்ஸ்..” காவ்யா கையில் வாட்ச் கட்டி கொண்டே அம்மாவுக்கு பதில் சொன்னவள், ஈர முடிய கிளிப்பில் அடக்கி, கண்களுக்கு காஜல் இட்டாள். அவளின் அதி முக்கிய அலங்காரம் அந்த காஜல் தான். மிகவும் பிடிக்கும். போடாமல் வெளியே கிளம்ப மாட்டாள்.

“கண்டிப்பா காஜல் தான் போட்டுட்டு இருப்பா, சீக்கிரம் வா காவ்யா..” சுதா உணவை பேக் செய்து கொண்டே மீண்டும் கூப்பிட்டார்.

“வரேன்ம்மா..” காவ்யா அவளின் உடமைகளை எடுத்து கொண்டு டேபிளுக்கு வந்தாள்.

“எவ்வளவு நேரம் காவ்யா, நான் நேத்தே சொன்னேன் இல்லை, எனக்கு இன்னைக்கு மீட்டிங் இருக்குன்னு..” சுதா மகளை கடிந்தபடி டிபன் எடுக்க கிட்சன் செல்ல, சமையல் அம்மா அப்போது தான் தோசை ஊற்றி கொண்டிருந்தார்.

காவ்யாவுக்கென ஊற்றிய தோசை சஞ்சய் தட்டில் இருக்க, “டேய்.. என் தோசையை ஏண்டா எடுத்த..?” காவ்யா அம்மா பின் வந்து பார்த்தவள் அண்ணன் மேல் பாய்ந்தாள்.

“தோசையே தான் வேணுமா, இட்லி இருக்கு பாரு, சாப்பிட்டு ஓடு..” சஞ்சய் சாப்பிட்டபடி சொல்ல,

“தோசை ரெடி காவ்யா.. நீ சாப்பிடு..” சுதா பிளேட்டில் வைக்க, சஞ்சய் அதையும் எடுத்து அவன் தட்டில் போட்டு கொண்டான்.

“ம்மாமாமா..” காவ்யா கடுப்பானாள்.

“சஞ்சய்.. அவளுது ஏண்டா எடுக்கிற..?” சுதா அதட்ட,

“ம்மா.. எனக்கு லேட் ஆச்சு, இன்னைக்கு முக்கியமான ஆர்கியூமென்ட் இருக்கு, நான் கிளம்ப வேணாமா..?” என்றான் மகன்.

“எனக்கு டிபனே வேண்டாம்.. எல்லாம் நீயே  கொட்டிக்கோ, நான் வெளியே பார்த்துகிறேன்.. நீ கிளம்பும்மா..” என்றாள் மகள்.

“நல்லது.. ஓடு..” என்றான் அண்ணன்.

“போறேன்டா.. உன்னை மாதிரி இங்கேயே நின்னு கிட்சனை காலி பண்ண மாட்டேன்..” என்றவள் செல்லுமுன் அண்ணன் தலையில் வலுவாக கொட்டியே சென்றாள்.

“பிசாசு.. ஈவினிங் பார்த்துகிறேன் உன்னை..” சஞ்சய் திட்ட,

“என்ன இங்க சத்தம்..? காலையிலே இப்படி தான் கத்திட்டு இருப்பீங்களா..?” வாசுதேவன் கோவமாக வந்தார். சஞ்சய் வெளியே வந்து அப்பாவை பார்த்தான். காவ்யா, சுதாவும் அவரின் கோவத்தில் மற்றவர் முகம் பார்த்தனர்.

“நீ இன்னும் வீட்ல என்னடா பண்ற..? உன் ஜுனியர்சே வந்துட்டாங்க, நீ கிளம்பாம சண்டை போட்டுட்டு இருக்க..” சஞ்சய் பார்த்து அவர் பேச,

“இதோ கிளம்பிட்டேன்ப்பா..” என்றான் மகன்.

“உங்களுக்கு என்ன வேடிக்கை..? வீடா என்ன..? சத்தம் போட்டுக்கிட்டு இருக்கிறது, கிளம்புங்க, போங்க..” அம்மா, மகளையும் வாசுதேவன் பேசிவிட்டு ரூம் செல்ல, பிள்ளைகள் அம்மா முகம் பார்த்தனர்.

சுதாவிற்கும் கணவனின் கோவம் புரியத்தான் இல்லை. இவர்கள் வீட்டில் இது சகஜம் என்பதால், இன்றைய அவரின் புதிதான கோவம் எதற்கு..?

“வேற ஏதாவது டென்ஷன் இருக்கும்.. நாம கிளம்பலாம்..” என்றவர், பிள்ளைகளுடன்  வெளியே வந்தார்.

சுதா மீட்டிங் நடக்கும் இடம் காவ்யா ஆபிசுக்கு பக்கத்தில் என்பதால், காவ்யா அவளின் ஸ்கூட்டியிலே அம்மாவை அழைத்து கொண்டு கிளம்பினாள். “முதல்ல போய் சாப்பிடு..” சுதா சொல்லி இறங்க, காவ்யா விடைபெற்று ஆபிஸ் சென்றாள்.

ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்தவள், அந்த நாளின் ஷெட்டியூலை பார்த்தாள். புதிதான ப்ராஜெக்டுக்கு ஸ்கெட்ச் செய்ய வேண்டும். தனியே தான் .. சூர்யா ஆபிஸ் வருவான் என்று தோன்றவில்லை. இன்று அவனின்  பிறந்த நாள். காலையிலே அழைத்து விஷ் செய்துவிட்டாள். “அவ்வளவு தானா..?” சூர்யா கேட்க, அவன் எதை கேட்கிறான் என்று காவ்யாவிற்கு புரியத்தான் செய்தது.

எப்போதும் அவன் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நண்பர்களுடன் அவன் வீட்டில் தான். சூர்யா இதை மிகவும் விரும்புகிறான், எதிர்பார்க்கிறான் என்று பதினொன்றாம் வகுப்பு கொண்டாட்டத்தின் போதே நண்பர்களுக்கு புரிந்திருக்க, அப்போது ஆரம்பித்தது சென்ற வருடம் வரை தொடர்ந்தது. வெளியே கூட செல்வதில்லை. சூர்யா வீட்டிலே தான்.

ஸ்வீட், இரவு உணவு, அரட்டை, கலாட்டா என்று இந்திராணி தயாரிப்பில் முடிந்துவிடும். இன்று.. இந்த வருடம் இவை எல்லாம் சாத்தியம் என்று காவ்யாவிற்கு தெரியவில்லை. ஆதிரா குணம் ஓரளவு புரிய, நண்பனிடம் இருந்து தள்ளி இருக்க தான் நினைக்கிறாள். அவனுக்காக வாங்கியுள்ள நண்பர்களின் கிப்ட் மட்டும்  வீட்டுக்கு அனுப்பிவிட வேண்டும் என்று முடிவெடித்தவள், வந்த உணவை சாப்பிட்டாள்.

மற்ற மூன்று நண்பர்கள் நேரே சைட்டிற்கு சென்று அங்கு வேலை முடிந்து தான் ஆபிஸ் வருவர். இவள் உணவு முடித்து, வேலையை ஆரம்பித்தாள். மாலை ஆபிஸ் வந்த நண்பர்கள், “கிளம்பலாமா காவ்யா..?” என்றனர்.

“எங்கடா..?”  காவ்யா ஸ்கெட்ச்சில் கவனத்தை வைத்து கேட்டாள்.

“எங்கவா..? சூர்யா வீட்டுக்கு தான்..” மூன்றில் ஒரு நண்பன் தினேஷ் சொன்னான்.

“என்ன மறந்துட்டியா..? அப்போ நீ  சூர்யாக்கு விஷ் கூட பண்ணலையா..?” மற்றவன் ராஜ் கேட்டான்.

“அதெல்லாம் காலையிலே பண்ணிட்டேன்..” காவ்யா ஸ்கெட்ச் முடித்து நிமிர்ந்தாள்.

“அப்பறம் என்ன கேள்வி கேட்டுட்டு இருக்க..? என்ன விஷயம் காவ்யா..?” மூன்றாமவன் ரோஹித் கேட்டான்.

“டேய் அவனுக்கு கல்யாணம் ஆகிடுச்சு, வைப் கூட டைம் ஸ்பென்ட் பண்ணுவான், வெளியே கூட போவாங்க, நாம போய் டிஸ்டர்ப் பண்ணவா..?” என்றாள்.

“நான் பேசிட்டேன், நமக்காக தான் அவன் காத்திருக்கான்..” என்றான் ரோஹித்.

“அவன் சொல்லுவான், நாம தான் யோசிக்கணும்.. புது கப்பிள்ஸ்டா அவங்க..” காவ்யா சொல்ல,

“பார்றா திக் ப்ரண்டை.. எப்போவும் நீ தானே முதல் ஆளா கிளம்பி நிப்ப..? இப்போ மட்டும் என்ன..? அதான் சூர்யாவே வர சொல்றான் இல்லை, போலாம்.. ஆன்ட்டி சமையல் எல்லாம் மிஸ் பண்ண முடியாது.. போறோம் அவ்வளவு தான்..” என்றனர் தினேஷும், ராஜும்.

ரோஹித் மட்டும் காவ்யாவின் தயக்கத்தை கேள்வியாக பார்த்தவன், “உனக்கு வேண்டாம்ன்னா விடு காவ்யா, கேன்சல் பண்ணிடலாம்..” என்றான்.

“இல்லை.. போலாம் ரோஹித்..” காவ்யா சொல்லிவிட, நால்வரும் அவரவர் வண்டியில் சூர்யா வீடு சென்றனர்.  சுதாவிற்கு  முன் மாலை போல மீட்டிங் முடிந்திருக்க, கேப் வர வைத்து கிளம்பியிருந்தார்.

காவ்யா அம்மாவிற்கு அழைத்து சொல்ல, ‘அங்கேயா..?’ சுதா தயங்கினார். கம்பன் பெண் கேட்டு, மகள் அங்கு செல்வது..? “என்னம்மா..?” காவ்யா கேட்க,

“சரி பார்த்துக்கோ.. பத்திரம்..” என்று வைத்துவிட்டார். டிராபிக்கில் நீந்தி இவர்கள் சென்று சேரும் நேரம் இருட்ட ஆரம்பித்துவிட்டது.  சூர்யா வாசலுக்கு வந்து இவர்களை வரவேற்றான். மனைவியை சரிக்கட்டி காலையிலே  வெளியே அழைத்து சென்று, நண்பர்கள் வருவதற்குள் வீடு திரும்பிவிட்டான்.

ஆதிரா இவர்கள் நால்வரையும் பார்த்தவள், இதற்கு தானா..? என்று கணவனை ஒரக்கண்ணால் முறைத்துவிட்டு, “வாங்க..” என்று மூன்று நண்பர்களை வரவேற்றவள், காவ்யாவை பார்த்து தலை மட்டும் அசைத்தாள். இந்திராணி ஹாலுக்கு வந்து பேசி சென்றவர்,  ஆதிராவிடம் பலகாரம் கொடுத்தனுப்பினார்.

சூர்யா நண்பர்களுக்கு டீ எடுக்க செல்ல, ஆதிரா மூன்று நண்பர்களுக்கு கையில் பலகார தட்டு கொடுத்தவள், காவ்யாவிற்கு மட்டும் டீபாய் மேல் வைத்துவிட்டாள். ‘இதென்ன அநாகரிகம்..?’ நண்பர்களும் உடனே பலகார தட்டை டீபாயில் வைத்துவிட்டனர். ஆதிரா இதை எதிர்பார்க்கவில்லை.

“என்ன ஆச்சு சாப்பிடலையா..?” சூர்யா வந்தவன் கேட்க, தினேஷ் பேச வர, ரோஹித்  அவன் கையை பிடித்தவன்,

“வரும் போது தான் ஸ்னேக்ஸ் சாப்பிட்டு வந்தோம்டா..” என்றான்.

“இங்க வரோம் தெரியும் தானேடா, அப்புறம் ஏன் சாப்பிட்டிங்க..? சரி டீ எடுங்க..” என்று நால்வருக்கும் கொடுக்க, அதை குடிக்கவும் பிடிக்கவில்லை. காவ்யா எடுத்து கொண்டவள், நண்பர்களை பார்த்து, விடுங்கடா.. என்று உதட்டை அசைத்து குடிக்க சொன்னாள்.

‘இவளுக்கு மரியாதை சொல்லி கொடுக்கவா நாம வந்திருக்கோம், நமக்கு வேற வேலை இல்லை பாரு, யாரையும் திருத்தவா, பாடம் எடுக்கவா, சண்டை போடவா நான் ஆள் இல்லை..’ காவ்யா எண்ணம் இவ்வளவு தான்.

இந்திராணி வந்தவர்,  காவ்யா பக்கம் அமர்ந்தார். சூர்யா நண்பர்களின் சோபா பிடியில் அமர்ந்து கொள்ள, அரட்டை ஆரம்பித்தது. ஆதிரா ஒரு  நிமிடம் நின்று பார்த்தவள், யாரும் அவளை கண்டு கொள்ளாததில், முறுக்கி கொண்டு ரூம் சென்றுவிட்டாள்.

கம்பன் அவன் அறையில்  முகம் துடைத்தபடி மொபைல் எடுத்தான். லைவ் ஹால் கேமரா ஓபன் செய்ய,  காவ்யா தெரிந்தாள். மேடம் வந்துட்டாங்க.. டிராக் மாற்றியவன், கிச்சனுக்கு அழைத்து ஜுஸ் கேட்டான். கீழே சிரிப்பு சத்தம் அதிகம் கேட்க, கம்பன் இதழ்களும் தானே விரிந்தது.

போன் வர எடுத்து பேசியவன் புருவம் சுருங்கியது. ‘ஏன்..?’ கேள்வி அவனுள். ரூமை விட்டு வெளியே வந்தவன், மேலிருந்தபடி, “காவ்யா..” என்றான். அவன் அழைப்பில் எல்லார் பார்வையும் மேலே சென்றது. “கொஞ்சம் மேல வா..” என்றான் கம்பன்.

‘எதுக்கு என்னை கூப்பிடுறார்..?’ காவ்யா பார்க்க, சூர்யா போகாத என்று கண் காட்டினான். ஆதிராவும் கம்பன் அழைப்பில்  வெளியே வந்துவிட்டவள், முகம் கடுத்தாள்.

‘இந்த வீட்டு மருமக நானே இன்னும் மேல போனதில்லை, இவளை கூப்பிடுறார்..’

சூர்யா, இந்திராணி யாரும் மேல்தளம்  செல்வதில்லை என்பதால் ஆதிராவாலும் மேலே செல்ல முடிவதில்லை. மேல் மாடியில் இரு அறைகள் உண்டு. இரண்டுமே கம்பன் தான் பயன்படுத்தி கொண்டிருக்கிறான். ஆதிராவிற்கு சென்று பார்க்க எண்ணம் இருந்த போதும், கம்பன் அவளிடம் சாதாரணமாக கூட பேசுவதில்லை என்பதால் அந்த தளத்திற்கு செல்லவில்லை. இப்போது காவ்யாவை கம்பனே கூப்பிட,  எரிச்சல் கொண்டாள் மருமகள்.

இந்திராணிக்கு காவ்யாவை அப்படி தனியே அனுப்பிட  மனம்  ஒப்புவில்லை.  இங்க வந்து பேசு வீரா.. மகனிடம் சொல்ல போக,  “நீங்க கீழே வாங்க..” காவ்யா சொல்லியிருந்தாள்.

‘ஓஹ்.. என்கிட்ட தனியா வர மாட்ட..?’ காவ்யாவை பார்த்து புருவம் தூக்கிய கம்பன், ரூமிற்குள் சென்றுவிட்டான்.

Advertisement