Advertisement

காவ்யா கண்கள் பாதுகாப்பில் இருந்த கம்பன் மீதே இருக்க, “என்ன நினைக்கிற காவ்யா..?” என்றான் சஞ்சய்.

மூச்சை இழுத்துவிட்ட காவ்யா.  “கிட்டத்தட்ட பத்து வருஷமா எனக்கு இவரை தெரியும்ண்ணா.. நான் லெவன்த் படிக்கும் போது இருந்து இவரை பார்க்கிறேன், ரொம்ப ஒரு ஓர்ஸ்ட் ஸ்டூடண்டா, பேமிலி வேல்யூ’ன்னா என்னன்னே தெரியாத  அப்பா, அம்மா, தம்பிய அந்த பாடு படுத்தின மகன் இன்னைக்கு இப்படி’ன்னா.. எனக்கு ஏத்துக்க முடியலண்ணா..” என்றாள்.

“ஏன் காவ்யா..? அவர் மாறினது நல்ல விஷயம் தானே..?” சஞ்சய் புரியாமல் கேட்டான்.

“நல்ல விஷயம் தான். ஆனா யாருக்குன்னு இருக்கேண்ணா, அந்த டைம்ல இவர் பண்ணின அத்தனை அட்டகாசமும் இன்னைக்கு ஒரேடியா மறைஞ்சு காணாம போகுதுன்னா..? அப்போவும் சரி, இப்போவும் சரி இவர்  அவருக்கு தோணினதை போல லைஃபை லீட் பண்றார், இதுல அவரோட பேமிலி எங்க இருக்காங்கன்னு இருக்கு இல்லை, அங்கிள்.. ஒருவேளை அவர் இன்னைக்கு இருந்து மகனோட இந்த மாற்றத்தை பார்த்து சந்தோஷப்பட்டிருந்தா நானும் இப்படி நினைக்க மாட்டேனோ என்னவோ..?” காவ்யா அவளே யோசனையுடன் சொன்னாள்.

“அவனோட பாஸ்ட் நினைச்சு குழம்புற நினைக்கிறேன்.. ம்ம்.. வீரா செகண்ட் டைம் ப்ரபோசல் வைச்சிருக்கான் காவ்யா, இதை இக்னோர் பண்ணாம யோசிச்சா பெட்டர்..” என்றான் சஞ்சய்.

காவ்யாவிடம் யோசனை தான். தொடர்ந்து சில நிமிட அமைதி. “அவனுக்கு உன்னை பிடிக்கும் போல.. மே பி லவ்..” என்றான் சஞ்சய்.

“ஆஹ்ன்..” காவ்யா அண்ணனை பார்க்க,

“இல்லன்னா அவன் குணத்துக்கு இப்படி உன்கிட்ட வந்து பேசி, அதுவும் இரண்டாவது முறையும் கேட்கிறான்னா.. லவ் இருக்க வாய்ப்பு அதிகம்..” தோள் குலுக்கினான் அண்ணன். காதலிப்பவன் தானே சஞ்சய். கம்பனை உணருகிறான் போல.

காவ்யாவிற்கு முன்னமே சூர்யாக்காக என்றாலும் என்கிட்ட கல்யாணத்துக்கு கேட்கிறாரா..? சூர்யா மேல அவ்வளவு பாசமா என்ற சந்தேகம் இருக்க தான் செய்தது. ஆனால் சஞ்சய் சொல்வது போல காதல் என்று நினைக்க முடியவில்லை. அப்படி ஒரு நேரமும் நினைக்கும்படி கம்பன் இவளிடம் நடந்து கொண்டதில்லை.

ஆனால் ஒரு முறை மட்டும்..? அவர்.. அந்த முகம்..? அது ஏன்..? இந்த கேள்வி இப்போது என்று இல்லை. பல முறை அவளுக்கே தோன்றும்.

ஒருவழியாக  நெடு நேரம் சென்று மீட்டிங்க்கும் முடிவுக்கு வந்தது. ஒவ்வொருவராக வெளியே வந்தனர். அவர்கள் வந்த கார்கள் அனைத்தும் கிளம்பியிருக்க, கம்பன் எல்லோருக்கும் தனியே கார் அரேஞ்ச் செய்திருந்தான். பின் கேட் வழியே சில நிமிட இடைவெளியில் எல்லாம் கிளம்பி செல்ல, ராம்தாஸ், வாசுதேவன் மட்டும் நின்றனர்.

இருவரின் முகமும் சுருங்கியிருந்தது. கம்பன் ராம்தாஸை பார்க்க, அவர் கண் காட்டினார். கம்பன் புருவம் தூக்கி வாசுதேவனை பார்த்தான். கார் வர, வாசுதேவன் மகன், மகளுடன் கிளம்பினார். அவரின் காரை ட்ரைவர் முன்னமே எடுத்து சென்றிருந்தான். காவ்யா காரில் ஏறும் முன் கம்பனை பார்க்க, அவன் வாசுதேவன் மேல் பார்வை வைத்து நின்றிருந்தான். சாதாரணமாக இல்லை அவன் பார்ப்பது.

காவ்யா காரில் ஏறி திரும்ப கம்பனை பார்த்தாள். அப்போதும் அவன் பார்வை அவள் அப்பா மேல் தான். ஏன் இப்படி பார்க்கிறார்..? காரில் வந்த வாசுதேவனும் வீடு வரும் வரை ஏதும் பேசவில்லை. சஞ்சய் மொபைலை பார்த்திருக்க, அவன் கம்பன் பார்வையை கவனிக்கவில்லை என்று புரிந்தது. அப்பாவின் அமைதியையும் தான்.

நாம தான் ரொம்ப யோசிக்கிறமோ..? காவ்யா நினைத்து அதை விட்டுவிட்டாள். அடுத்த நாள் எப்போதும் போல ஆபிஸ் செல்ல, சூர்யா இவளை எதிர்பார்த்து காத்திருந்தவன்,

“என் மாமனார் உன்கிட்ட கன்ஸ்ட்ரக்ஷன் பத்தி பேசுவார், முடியாது சொல்லு..” என்றான் எடுத்ததும்.

“என்ன..? என்னடா சொல்ற..? தெளிவா சொல்லு, என்ன கன்ஸ்ட்ரக்ஷன்..?” காவ்யா கேட்க,

சூர்யா வேகமாக அவர் ஹோட்டல் பற்றி சொன்னவன், “இது தான், இப்போ வருவார், முடியாது சொல்லு..” என்றான்.

“ச்சு.. என்ன பேசுற நீ..? அவரோட மருமகன் நீ, நாம மாட்டோம்ன்னு சொல்ல முடியுமா..? முதல்ல நாம ஏண்டா மாட்டோம் சொல்லணும், இது நமக்கு பெஸ்ட் ஆபர்ச்சுனிட்டி..” என்றாள் காவ்யா.

“ப்ளீஸ் காவ்யா.. உனக்கு இதை விட பெரிய ப்ராஜெக்ட்  நான் புடிச்சுட்டு வந்து கொடுக்கிறேன், இது முடியாது சொல்லு, ப்ளீஸ்.. ப்ளீஸ்..” இவன் கெஞ்சி கொண்டிருக்க, சோமசுந்தரம் வந்துவிட்டார்.

“வாங்க அங்கிள்..” காவ்யா வரவேற்று காபி வர வைத்து கொடுக்க, மற்ற நண்பர்களும் அவரிடம் நலம் விசாரித்தனர்.

“அப்புறம்மா.. நம்ம ஹோட்டல் ஒன்னு கட்டணும், மெயின் பிரான்ச், இடம் தாராளமா இருக்கு, பணம் பத்தி கவலையில்லை, டைம் மட்டும் ஒரு ஆறிலிருந்து, எட்டு மாசத்துக்குள்ள முடிக்கிற மாதிரி, ஹோட்டல் அமைப்பு ரொம்ப புதுவிதமா, நல்லா இருக்கணும், இது முதல் கட்ட பேச்சுவார்த்தை, நல்லா டீட்டையிலா பேச நம்ம மேனேஜர் நாளைக்கு வருவார்.. அவ்வளவு தான் இப்போதைக்கு, உனக்கு வேற எதாவது கேட்கணும்ன்னா கேளும்மா..” என்றார் சோமசுந்தரம்.

காவ்யா திரும்பி சூர்யாவை பார்க்க, அவன் சொல்லு சொல்லு என்று கண் காட்டினான். நல்ல வாய்ப்பை கெடுக்கிறான்.. காவ்யா நொந்தவள்,  “அங்கிள்.. அது.. இப்போதைக்கு நமக்கு ஷெடியூல் கொஞ்சம் டைட்டா இருக்கு, செய்ய முடியுமான்னு தெரியல..” என்றாள் சங்கடத்துடன்.

“மாப்பிள்ளை உன்கிட்ட கேட்க சொன்னார்ம்மா, நீ என்ன இப்படி சொல்ற..? என்ன மாப்பிள்ளை இது..?” சோமசுந்தரம் மருமகனிடம் கேட்க, மற்ற நண்பர்கள் காவ்யாவை முறைத்து ஏன் என்று பார்வையால் கேட்டனர்.

அவள் இருங்கடா.. என்று பார்வையால் சமாதானம் சொல்ல, “மாமா.. காவ்யா தான் ப்ராஜெக்ட்ஸ் எல்லாம் மேனேஜ் பண்றா, அவ தான் முடிவெடுக்கணும். அதான் அவகிட்ட கேட்க சொன்னேன்..” என்றான் சூர்யா.

“அது சரி தான் மாப்பிள்ளை, நமக்குன்னு வரும் போது நேரம் ஒதுக்கி பண்ணனும் இல்லை..” சோமசுந்தரம் காவ்யாவை பார்த்து கேட்டார்.

“அது.. காவ்யா சொன்னா சரியா தான் இருக்கும் மாமா, நாம வேற எங்கேயாவது, என் ப்ரண்ட் ஒருத்தன் பெரிய கம்பெனில ஒர்க் பண்ணிட்டு இருக்கான், அங்க சொல்லி நமக்கு பார்க்கலாம் மாமா..” என்றான் சூர்யா.

“எனக்கு ஆள் இல்லாம நான் இங்க வரல மாப்பிள்ளை.. என் மருமகன், அவரோட ஆபிஸ்ங்கிறதால மட்டும் தான் வந்தேன், இவங்க என்னடான்னா நமக்கு செய்ய மாட்டேன் சொல்றாங்க..” சோமசுந்தரம் காவ்யாவை சற்று கோவமாக பார்த்தவர், “நான் கிளம்புறேன் மாப்பிள்ளை.. நாம வீட்ல பேசலாம்..” என்று கிளம்பியும் விட்டார்.

“என்னடா பண்றீங்க இரண்டு பேரும்..” மற்ற மூன்று நண்பர்கள் கத்த, சூர்யா சமாதானம் சொன்னான். காவ்யா அவள் பங்குக்கு சூர்யாவின் முதுகிலே பைலை வைத்து அடித்துவிட்டு சென்றாள்.

சோமசுந்தரம் முதல் வேலையாக மகளுக்கு போன் செய்து பேசினார்.  “இது எல்லாம் சரி வராது. நம்ம மாப்பிள்ளைகிட்ட சொல்லி தனி ஆபிஸ் பார்க்க சொல்லு ஆதிரா, அந்த பொண்ணு தான் அங்க பாஸ்’ன்னா நம்ம மாப்பிள்ளைக்கு என்ன மதிப்பு மரியாதை இருக்கு..? நீ பேசு, மாப்பிள்ளைகிட்ட பேசிட்டு சொல்லு..” என்று வைத்தார்.

கம்பனின் அடுத்த நாள் ராம்தாஸ் போனில் தான் ஆரம்பித்தது. அவனும் இவர் போனை எதிர்பார்த்து தான் காத்திருந்தான். நிச்சயம் பேசுவார் என்று தெரியும். வீட்டுக்கு வர சொன்னார்.

ராம்தாஸ் தனியே இவனை சந்தித்தவர், “வாசுதேவனை பாலோ பண்ணனும் வீரா..” என்றார். கம்பனுக்கு அவரை சந்தேகம் கொள்ள முடியவில்லை. ஆனால் அதை ராம்தாஸிடம் சொல்ல முடியாது.

“ஆள் போடுறேன் சார்..” என்றான்.

“வீரா..” ராம்தாஸ் அவனை தீர்க்கமாக  பார்த்தார். “வாசுதேவன் பொண்ணு மேல உனக்கு ஏதோ நினைப்பிருக்குன்னு எனக்கு தெரியும். ஆனா இது பல உயிர் சம்மந்தப்பட்ட விஷயம், நீ போடுற ஆளை எனக்கு ரிப்போர்ட் பண்ண சொல்லு..” என்றார்.

“நான் விலகிக்குறேன், நீங்க வேற ஆளை வைச்சு பாருங்க சார்..” என்றான் கம்பன் கோவத்தை அடக்கி.

“கோவம்.. ம்ம்..” அவன் தோளை தட்டியவர், “நாம முன்ன நின்னு செய்ற விஷயத்துல நமக்கு ஏதும்ன்னா கூட பிரச்சனையில்லை, நம்மளை நம்பி வந்தவங்களை பாதுகாக்கிறது தான் முக்கியம், கூட்டத்துல ஒருத்தன் கருப்பு ஆடா இருந்தாலும் மொத்த பேரும் பலிக்கு தான் போகணும்.. புரியுது இல்லை..” என்றார்.

கம்பன் அமைதியாக நிற்க, “சரி நீயே பார்த்துக்கோ.. ஆனா.. உனக்கு சொல்ல வேண்டியதில்லை, பார்த்துக்கோ..” என்று சென்றுவிட்டார். வாசுதேவனுக்கு முதல் வேலையாக தனி ஷேடோ போட்ட கம்பன் வீரய்யன் மூச்சை இழுத்துவிட்டு நின்றான்.

அவளிடம் கேட்கவே முடியாது, கேட்கவே கூடாது என்ற வைராக்கியத்தை, உறுதியை, குறுகலை போராடி ஒதுக்கி தள்ளி, என்னை கட்டிக்கோ என்று ஒன்றுக்கு இரண்டு முறை கேட்டு, பதிலுக்காக காத்திருக்கும் நேரம் இப்படி ஒன்றா..?

காதல் தான் புட்டுக்கிட்டு போச்சுன்னு பார்த்தா, வாழ்க்கையும் அனாமத்தா அந்தரத்துல தொங்கிட்டே இருக்கே..?

Advertisement