Advertisement

கம்பன் காதல் கொண்டு 10

இருவரின் பேச்சை கவனித்திருந்த சஞ்சய்,”வாய்ப்பா வாழ்க்கையை கேட்பாங்களா..?” என்று காவ்யா கேட்கவும்,

“நான் கேட்கிறேன் தானே.. கொடுங்க காவியம்..” என்றான் கம்பன் வீரய்யன்.

“என் தங்கச்சி வாழ்க்கையை உங்களுக்கு கொடுத்துட்டா அவ என்ன  பண்ணுவா..?” என்று இடையிட்டு கேட்டான் சஞ்சய்.

“நான் தான்  என் வாழ்க்கையை உன் தங்கச்சிகிட்ட கொடுக்கிறேனே, அவ அதை பார்த்துக்கட்டும்..” என்றான் கம்பன்.

காவ்யா, சஞ்சய் இருவர் முகத்திலும் சட்டென ஒரு புன்னகை. “இது நல்லா இருக்கே.. ஏன் அவங்கவங்க வாழ்க்கை அவங்கவங்கிட்டே இருந்தே ஆகாதா..?” என்றான் சஞ்சய்.

“அப்போ நீங்க உங்க வாழ்க்கையை  சாதனாகிட்ட ஷேர் பண்ண மாட்டிங்களா..?” கம்பன் கேட்க,

“ஷேர் பண்ணாம எப்படி..?” என்றான் சஞ்சய்.

“அப்படி தான்.. நாங்க மொத்தமாவே தூக்கி கொடுத்துடுறோம், அவ்வளவு தான்..” என்றான் கம்பன்.

சஞ்சய் திரும்பி தங்கையை பார்த்தவன், “ஏன் காவ்யா நம்ம முன்னாடி இருக்கிறது கம்பன் வீரய்யன் தானே..?” என்றான்.

காவ்யா சிரித்தவள், “நீங்க இப்படின்னு என் அண்ணா கூட நம்ப மாட்டேங்கிறான்..” என்றாள் கம்பனிடம்.

“நீ நம்புற தானே..?” என்றான் அவன்.

“எனக்கு பார்த்திருக்கிற  மாப்பிளையை இங்க  வர விடாம பண்ண  கம்பன் வீரய்யன் நீங்க தான்’னா எனக்கும் நம்ப கஷ்டமா தான் இருக்கு..” என்றாள் காவ்யா.

“என்ன..?” சஞ்சய் அதிர்ந்தான். “நீங்க தானா வீரா..? அப்போ அந்த திடீர் மீட்டிங் உங்களால..? உனக்கு எப்படி தெரியும் காவ்யா..?” இருவரிடமும் கேட்டான்.

“எனக்கு தோணிச்சுண்ணா.. இவர்கிட்ட கன்பார்ம் பண்ணிக்கோங்க..” என்றாள் கம்பனை கை காட்டி.

“காவியத்துக்கு தோணினா கண்டிப்பா சரியா தான் இருக்கும் சஞ்சய்.. நம்புங்க..” என்றான் கம்பன் வீரய்யன்.

“அடப்பாவி.. எவ்வளவு கூலா சொல்றான்..?” சஞ்சய் சொல்ல,

“என் பிரேக் டைம் முடிஞ்சது.. நான் போறேன்..” கம்பன் வாட்சில் லைட் ஒளிர எழுந்தான்.

“இப்போவாவது நாங்க கிளம்பவா..?” சஞ்சய் கேட்க,

“நோ..” என்றான் கம்பன்.

“ஏன்..?” சஞ்சய் புரியாமல்  கேட்க,

“அண்ணனும், தங்கச்சியும் என்னை வச்சுட்டே மாப்பிள்ளை பார்த்தும் இல்லாமல், இங்கேயே வர வைப்பீங்களா..?” கம்பன்  இருவரையும் அழுத்தமாக பார்த்து கேட்டவன் நடந்துவிட்டான்.

“நீ திரும்ப அதே வீரா’ன்னு ப்ரூப் பண்ற..” சஞ்சய் கடுப்பாக சொல்ல,

“டீ வரும் குடிச்சிட்டு தூங்குங்க சஞ்சய்..” என்றான் வீராவும் நடந்தபடி.

“டீ குடிச்சுட்டு தூங்கிறதா..? டேய்..” சஞ்சய் எழுந்து நின்று கத்த, அங்கங்கு நின்றிருந்த கார்ட்ஸ் தலைகள்  மொத்தமாக இவன் பக்கம் திரும்பியது.

“அவங்க பாஸ்’ஸை டேய் சொல்லிட்டனாம், மொத்த பேரும் அட்டென்சன்ல திரும்புறாங்க, கையில கன் வைச்சிருக்கிற மிதப்பு, நான் கருப்பு கோர்ட் ஹல்க்  பாய்ஸ், என்கிட்ட வைச்சுக்காதீங்க..” சஞ்சய் மிரட்டி அமர்ந்தான்.

கார்ட்ஸ் ஒரு மாதிரி பார்த்து திரும்ப, “ண்ண.. என்ன இது..?” என்றாள்  காவ்யா. சில  நிமிடம் சென்று டீ’யும் வந்தது. கம்பன் நடமாட்டமும் கண்ணில் பட்டு கொண்டே இருந்தது. முகம் பழையபடி இறுகி போய் இருந்தது.

முழு கவனமும் பாதுகாப்பில் இருக்க, கண்கள் நாலாபக்கமும் சுழன்று கொண்டே இருந்தது. இடையிடையே மொபைலிலும் பதிவுகள் பார்த்து கொண்டான். எங்கேயாவது சந்தேகப்படும் படி சிறு அசைவு இருந்தாலும், உடனே கார்ட்ஸ் அனுப்பி பார்த்து கொண்டான்.

தீர்க்கமான பார்வை, விறைத்த தோள்கள், உறுதியாக ஊன்றிய கால்கள், பேக்கெட்டிலே இருந்த இடக்கை என்று ஏதாவது அசம்பாவிதம் என்றால் சட்டென பாய்ந்துவிடும் புலியின் பாய்ச்சலில், முழிப்பில் இருந்தான்.

உள்ளே  மீட்டிங் ஹாலில் இருக்கும் பெரிய தலைகளின் உயிர் சம்மந்தப்பட்ட விஷயம். அந்த பத்து  பேரின் பாதுகாப்பு இவன் பொறுப்பு எனும் போது  அதற்கான பிரஷரும் அதிகம் தான். சிறு கவன பிசகும் பெரிய இழப்பில் கொண்டு சென்று விடும்.

பாதுகாப்பில் இருப்போரை நம்பி தான் உள்ளே அவர்கள். அந்த நம்பிக்கை..! அவர்களுக்கு பெரிதினும் பெரிது உயிர் தான், அதை காப்பாற்ற இவன் உயிரை கூட இவன் பார்க்க கூடாது. ஆனால் இவனுக்கு.. கம்பன் வீரய்யனுக்கு அவன் உயிர் வேண்டும். அவன் சிலது பார்க்க வேண்டும்.  அவன் அப்பாவின் இழப்பிற்கு காரணமவனின் வீழ்ச்சி.

ஆம்.. உள்ளே மீட்டிங்கில் இருப்பவர்கள் செய்வதும் அது தான்..! கம்பன் வீரய்யனுக்கு வேண்டியதும்  அது தான்..!

முன்னர் பெரியவர் இருந்த போது எடுத்த அதே முடிவு தான் இப்போதும். பெரியவர் அவர் நினைத்தபடி அந்த குறிப்பிட்ட கட்சியை ஆட்சிக்கு வர விடாமல் செய்தார். பணத்தை வாரி இறைத்தார். உயிரையும் கொடுத்தார். இப்போது அவர் மகன் ராம்தாஸும் அதுவே செய்கிறார்.

என் அப்பாவை கொன்ற கட்சி.. அந்த கட்சி ஆட்சிக்கு வரவே கூடாது.. அவர் இல்லாது போனாலும் நான் செய்வேன். அடிமட்டம் வரை இறங்கி வேலை பார்க்கிறார் ராம்தாஸ். எதிர் தரப்பு ஆட்களை ஒன்றிணைத்து வேலை நடக்கிறது. செலவு ஆகும் பணம் முழுதும் கூட இவரே கொடுக்க தயாராக இருக்கிறார். அவருக்கான நியாயம், குறிக்கோள் அது.

கம்பன் வீரய்யனுக்கு அந்தளவு பணம், பதவி, அதிகாரம் இல்லை. ஆனால் அதை செய்ய போகிறவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியும்.

முன்பு பெரியவரை, அப்பாவை பறிகொடுத்தது போல் இந்த முறை நடக்க கூடாது. அரசியல் சதுரங்கத்தில் பெரிய தலை உயிர் ஒன்றை எடுத்தால்,  உடன் பத்து சாமானியன் தலைகள் வீழ்கின்றன. அதற்கான நியாயம் எங்கு கிடைக்கிறது..? யார் கொடுப்பார்..? எல்லோருக்கும் அந்த பெரிய தலை உயிர் மட்டுமே முன்னால் நிற்கும். அவருக்காக உயிரை கொடுத்த மற்றவர்களின் நிலை..?

பெரியவர் உயிர் பிரிந்த நேரம் தான் அவன் அப்பாவின் உயிரும் பிரிந்தது. என்ன ஆகிவிட்டது அதனால்..? விசுவாசமான பாதுகாப்பாளன் பட்டம் அவ்வளவு தான்.

இவன் அவனை நிரூபிக்கமுன்னே அவர் இல்லாமல் போய்விட்டாரே. இருக்கும் போது தந்தையை வதைத்து, இல்லாது போன பின் அவருக்கு மருந்திட முயலும் தோற்று போன  மகனின் வலி, குற்ற உணர்ச்சி எங்கு சென்று மாயும், ஓயும்..!

அவன் கண்ணீரை கரைக்க கங்கையே இல்லாது செய்துவிட்டனரே..?

அவன் அப்பாவின் உயிர்.. அதற்கான விலை.. அவன் காத்திருந்தது இதற்கு தானே..? தம்பியிடம் இருந்து தொழிலை வம்படியாக பிடுங்கியதும் இதற்கு தானே..? ஆட்களை பல மடங்கி பெருக்கி தயார் செய்ததும் இதற்கு தானே..?

அந்த கட்சி.. முக்கியமாக அந்த தலைமை பதவியில் அமர கூடாது.. பெரியவருடன் அவன் அப்பாவையும் கொல்ல சொன்னவன் அவன், எப்படி இருந்தாலும் அவன் அப்பாவே  பெரியவருக்காக போராடி உயிரை விட்டிருப்பார் தான். ஆனால் இவன் சொன்னது.. அதை விடுவதா..?

எப்போதும் கங்காக தகிக்கும் நெருப்பு. இந்த நெருப்புக்காக தான் ராம்தாஸ் குடும்பத்தை விட்டு வெளியே வந்தும், ராம்தாஸின் பெர்சனல் கார்ட்’டாக இவன். ராம்தாஸ் நிச்சயம்  இறங்கி செய்வார். மாற்று கருத்தே இல்லை. இவனுக்கு.. தானும் அதில் இருக்க வேண்டும் என்ற அதி தெளிவு.

முன்பு போல உயிரை கொடுத்து அவர்களை தோற்கடிக்க கூடாது. அவர்கள் தோல்வியை பார்க்க ராம்தாஸ் இருக்க வேண்டும். இவனும் இருக்க வேண்டும். ‘நீங்க செய்ங்க, நான் உங்களை பாதுகாக்கிறேன்..’ என்று எல்லோருக்கும் முன்  நிற்கிறான்.

ராம்தாஸுக்கும் இவனை புரிந்திருக்க வேண்டும். பரசுராமின் மகன் என்று அவன் விலகி சென்ற போது அமைதி காத்தவர், அவன் திரும்ப அவருக்கே பெர்சனல் கார்ட்’டாக வந்து நின்ற போதும் மறுவார்த்தை பேசாமல் சேர்த்து கொண்டார். மற்றவருக்கு தெரியாமல் போகலாம் பரசுராமின் தொழில் அர்ப்பணிப்பு, நேர்மை,  விசுவாசம் ராம்தாஸ்க்கு தெரியாமல் இருக்குமா..? பரசுராம் மகனை ராம்தாஸ் எப்படி விடுவார்..?

ஏன் பெரியவருக்கு கம்பன் வீரய்யனை மனதில் வைத்து பல எண்ணங்கள் இருந்தது. மகனிடம் சொல்லி வைத்திருந்தார். அதை செய்ய, கேட்க இன்னும் நேரம் வரவில்லை. கம்பனும் அவரே எதிர்பாரா வகையில் வளர்ந்து நிற்கிறான். பரசுராம் நொடிக்கு நொடி மகனை நினைத்து பட்ட வருத்தங்கள், கவலைகள் ராம்தாஸுக்கு மறக்குமா..?

பார்க்கும் நேரமெல்லாம் பொறுப்பு என்றால் என்ன விலை, எங்கு கிடைக்கும் என்று சுற்றி திரிந்தவன், இன்று இப்படி..? ராம்தாஸ் மட்டுமில்லை காவ்யாவிடம் இந்த கேள்வி உண்டு.

Advertisement