Advertisement

கம்பன் காதல் கொண்டு 1

கந்தன் கோயில் மணியடிக்க, ஒருவனுக்கு பட்டென விழிப்பு வந்தது. கண்ட கனவின் தாக்கம் அவனை பெட்டிலே பிடித்து வைத்தது. கண்ணை திறக்கவும் அவன் விரும்பவில்லை.

திரும்ப அந்த முகத்தை கண் முன்னால் காண வேண்டும். அவனுக்கு அருகில் காண வேண்டும். முடிந்தால் தொட்டு அணைத்து விட வேண்டும். முடியுமா..? அவ்வளவு தவிப்புடன் கண் மூடியே திறக்க, இருள் மட்டுமே. அந்த முகம் மறைந்து காணாமல் போய்விட்டது. கனவு தான் கலைந்துவிட்டதே.

சிவந்துவிட்ட கண்களை திறந்து சுவரை  வெறித்தான். அந்த கனவு திரும்ப வேண்டும். திரும்ப திரும்ப வேண்டும். வந்து கொண்டே இருக்க வேண்டும். அவனை அடித்து கொண்டே இருக்க வேண்டும். இவன் வாங்கி கொண்டே நிற்க வேண்டும்.. வேண்டும்.. விட்டால் கத்திவிடுவான் போல.

உடனே  பெட்டை விட்டு எழ, கால்கள் பிடித்தது. கால்கள் கீழே தொங்க பெட்டில் விழுந்தவன், அப்படியே தூங்கியிருந்தான். அதிகம் கூட இல்லை. அரை மணி நேரம் தான். வெளியே பேச்சு குரல் அதிகம் கேட்டது. எழுந்து குளிக்க சென்றான்.

இரவு ஏழு மணிக்கு பார்ட்டி. இப்போது நேரம் பார்க்க மணி ஐந்தரை. பார்ட்டிக்கான ஏற்பாட்டை முடித்து வந்தவன் அசதியில் விழுந்து அவனே அறியாமல் தூங்கியிருந்தான். குளித்த ஈர துண்டை உதறி போட்டவன், ஜீன்ஸ், வெள்ளை சட்டையை அணிந்து கொண்டான்.

கண்ணாடி முன் ஜெல், பர்பியூம் கேட்பாரின்றி கிடக்க, கையால் தலையை கோதி கொண்டான்.  முரட்டு தாடியை ட்ரிம் செய்திருக்க, தடவி விட்டவன், மொபைல் கையில் எடுத்து கொண்டான். டிராயர் திறந்து லோட் செய்த பிஸ்டலை எடுத்து பேக்கெட்டில் சொருகி கொண்டவன், கதவு திறந்து கீழிறங்கினான்.

அவன் தம்பி சத்தம் இவனை பார்த்ததும் இன்னும் கூடியது. “நாங்க பார்ட்டிக்கு  வர மாட்டோம், என்னை கேட்டா வச்சான், இவன் அதிகாரத்துக்கு ஆட நான் ஆள் கிடையாது, நீங்க வேணும்ன்னா உங்க மகனுக்கு பயபடலாம், எனக்கு பயம் எல்லாம் இல்லை, முடிஞ்சா உங்க பெரிய மகனை நேருக்கு நேர் நின்னு என்கிட்ட பேச சொல்லுங்க..” என்று கத்தி பேச பேச இவன் கார் எடுத்து கிளம்பியிருந்தான்.

நேரே பார்ட்டி ஏற்பாடு செய்திருந்த சென்னையின் பெரிய ஸ்டார் அந்தஸ்து ஹோட்டலுக்குள் காரை நிறுத்தினான். ஹோட்டல் பணியாளர் காரை எடுத்து கொள்ள, பாலா வந்து இவனுடன் இணைந்து கொண்டான். இருவரும் அந்த ஹோட்டல் ஜெனரல் மேனேஜரை சந்திக்க சென்றனர்.

அவரும் இவர்களுக்காக  தயாராக இருக்க, மூவரும் சிசிடிவி அறை சென்றனர். அங்கு ஹோட்டல் பணியாளருடன் இவனின் ஆட்க ஐவரும் யூனிபார்மில் இருந்தனர். அதில் ஒருவன் அவர்களின் செக்கியூரிட்டி அக்சஸ் கார்ட்  இல்லாமல் இருக்க,  “அவுட்..” என,  மறுவார்த்தை இல்லாமல் வெளியே சென்றான்.

சில நொடியில் இன்னொருவன் அங்கு இருந்தான். எல்லா கண் காணிப்பு கேமராவின் பதிவுகளையும் நின்று கூர்மையாக பார்த்தவன்,  “டெக்னீஷியன்ஸ் எல்லாம் எங்க..?” என்றான்.

“நம்ம கண்ட்ரோல் ரூம்ல தான் இருக்காங்க..” பாலா சொல்ல,

“கவனம்..” என்று அவனின் ஆட்களுக்கு எச்சரித்து வெளியே வந்தவன், முழு ஹோட்டலையும் சுற்றி வந்தான். ஜெனரல் மேனேஜரிடம் அவனுக்கான விளக்கங்களை கேட்டு கொண்டான். இருக்கும் லிப்ட்களையும் ஆராய்ந்து அதனில் மொட்டை மாடி முதல் பார்க்கிங் வரை சென்று பார்த்து கொண்டவன், கிட்சனுக்கு சென்றான்.

உணவு தயாரிக்கும் வேலை மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. “முடிஞ்சுதா செஃப்..” தலைமை செஃப்’பிடம் ஜெனரல் மேனேஜர் கேட்டார்.

“ஆல்மோஸ்ட்..” என,

“செக்கிங் ப்ராசஸ் பண்ணிட்டிங்களா..?” பாலா அவர்கள் ஆட்களிடம் கேட்டான். உணவின் பாதுகாப்பு தன்மையை சோதித்து வைத்திருந்தவர்கள், கடைசியாக இறக்கிய உணவில் ஒரு ஸ்பூன் எடுத்து இவன் வாயில் போட்டு கொண்டான்.

“கிட்சன் விட்டு இன்ச் மூவ் பண்ண கூடாது..” எச்சரித்து அவர்கள் முழுமையாக வாடகைக்கு எடுத்திருந்த தளத்திற்கு சென்றான். பார்ட்டி ஹால் கடைசியில் இருக்க, ரூம்கள் முழுதும் இவனின் ஆட்கள் மட்டுமே. அதில் கண்ட்ரோல் அறையாக மாற்றியிருந்த அறைக்கு இவன் செல்ல, ஜெனரல் மேனேஜர் கிளம்பிவிட்டார்.

ஹோட்டலில் வைத்திருந்த சிசிடிவி விட, இவர்கள் அதிகம் வைத்து தனியே கண் காணித்து கொண்டிருந்தனர். ட்ரோன் கேமரா சில ஹோட்டல் சுற்றி பறந்து கொண்டிருந்தது. உடனே தேவைப்படும் டெக்னீஷியன்கள் உள் அறையில் வைக்க பட்டிருந்தனர். அவர்களுக்கு உணவு, டீ, காபி சென்று கொண்டே இருந்தது.

கடைசியாக பார்ட்டி ஹாலுக்கு சென்றவன், எல்லாம் சரி பார்த்து முடிக்க, நேரம் சரியாக ஏழு. இவன் குடும்பம் பார்ட்டி ஹாலுக்குள் நுழைந்தது. அவனின் அம்மா இந்திராணி, தம்பி சூர்யா, தம்பி மனைவி ஆதிரா மூவரும் வந்தனர். அவர்களுக்கு பின் இருபக்க குடும்பங்களின் நெருங்கிய சொந்தபந்தங்கள்.

தம்பிக்கு சென்ற வாரம் தான் திருமணம் முடிந்திருக்க, அதற்கான பார்ட்டி இது. இந்திராணி ஓரிடத்தில் அமர்ந்து கொள்ள, சூர்யா அண்ணனை முறைத்து கோவமாக திமிறி நின்றிருந்தான்.

சொந்தங்களுக்கு அவனின் கார்ட்ஸ் இருக்கை காட்டினர். இவன் மொபைலுக்கு மெசேஜ்கள் வர ஆரம்பித்தது. அதி முக்கியமான விருந்தினர்கள் வரும் நேரத்திற்கான மெசேஜ்.

“ஓகே.. கெட் ரெடி கைஸ்..” இவன் சத்தம் ஓங்கி ஒலிக்க, பார்ட்டி ஹாலில் இருந்த ஆட்கள் இவன் முன் வந்து நின்றனர்.

“KV செக்கியூரிட்டி கார்ட்ஸ்..!” இந்த நேரம் டியூட்டியில் இருப்பவர்கள் தவிர்த்து இவன் முன் நின்றிருந்தவர்கள் எண்ணிக்கை மட்டுமே நூறை நெருங்கும்.  எல்லாம் துடிப்பான,  திடகாத்திரமான  ஆண்கள். காதில் புளூ டூத், கண்களில் கருப்பு கண்ணாடி.

அப்பா காலத்து சபாரி யூனிபார்மில் இருந்து விடுதலை கொடுத்து முரட்டு ஜீன்ஸ், கருப்பு சட்டை யூனிபார்மை உடையாக்கி இருந்தான்.  பாலா எல்லோருக்கும் படபடவென இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்து முடித்தான். அவ்வளவு மனப்பாடம் சொல்பவனுக்கும், கேட்பவர்களுக்கும். வருடங்களாய் ஒவ்வொரு நாளும் கேட்கின்றனரே. விறைப்பான சல்யூட்டுடன் எல்லாம் கலைந்து அவரவர் இடம் செல்ல, சூர்யா, அவனின் மனைவி அலங்கரிக்கப்பட்ட மேடையில் நின்றனர்.

விருந்தினர்கள் வர ஆரம்பித்தனர். புதுமண தம்பதிகளை வாழ்த்தி முடிக்க உடனே உணவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மெலிதான இசை எங்கோ ஒலித்து கொண்டிருந்தது. கூட்டம் சேர சேர கலைக்கப்பட்டனர். குழந்தைகளுக்கு தனியே பிளே வைத்து பார்த்து கொண்டனர்.

தொழில் முறை நண்பர்கள், உறவுகள், சூர்யா, ஆதிராவின்  நண்பர்களும் வர, இருவரும் முழித்தனர். அவர்கள் தான் யாருக்கும் அழைப்பு கொடுக்கவில்லையே. ‘இவன் வேலை தான்..’ சூர்யா பல்லை கடித்து பொறுத்து கொண்டவன், நண்பர்களை சிரித்த முகமாக வரவேற்றான்.

அப்போது தான் அவர்கள் வந்தனர். நான்கு பேர் கொண்ட கூட்டம். சூர்யாவுடன் ஐவர் படை. அதில் அவளும் ஒருத்தி. ‘காவ்யா’. சூர்யாவின் நெருங்கிய தோழி. பதினொன்றாம் வகுப்பில் சூர்யாவின்  கிளாஸ் மெட்டாக இணைந்தவள்,  கல்லூரி முடித்து வேலைக்கு சென்றும் நட்பு தொடர்கிறது.

‘வாசுதேவன்..’ காவ்யாவின் அப்பா. அவருடன் வந்திருக்க, “வாங்க சார்..” முன் நின்று வரவேற்றான். காவ்யா நண்பனிடம் ஓடிவிட்டாள்.

“நீங்க உட்காருங்க சார்..” இருக்கையில் அமர வைத்து, குடிக்க குளிர்பானம் தருவித்து கொடுத்தான். மேடையில் நண்பர்களின் ஆரவாரம் பெரிதாக கேட்டது. அந்த பக்கம் பார்க்காமல், இந்திராணிக்கு உணவு கொடுக்க சொல்லிவிட்டு சென்றான்.

மற்றொரு பக்கம் கிளம்பிய விருந்தினர்களுக்கு ரிட்டர்ன் கிப்ட் கொடுத்து வழியனுப்பி வைத்தனர். அந்த நண்பர் பட்டாளம் உணவுக்கு  சென்றது. நேரம் பத்தை நெருங்க பார்ட்டி ஹால் ஓரளவிற்கு காலியாகி இருந்தது.

இவன் போன் பேசி வைக்க, காவ்யா அழைப்பு. போனை இறுக பிடித்தான். ‘போயிடு.. கூப்பிடாத..’ திரும்ப அழைத்தாள். அவனுக்கு முன் நின்று தெளிவாக, “கம்பன் சார்..” என்றாள்.

ஏறி இறங்கிய மூச்சினை நொடியில் அடக்கி, “கம்பன் வீரய்யன்.. வீரா கூப்பிடுங்க..” என்றான் அழுத்தமாக.

“எனக்கு கம்பன் தான், உங்களுக்கு எப்பவோ சொல்லிட்டேன்..” என்றாள் அவள் சிரிப்புடன். தொடர்ந்து  “உங்களை அப்பா கூப்பிடுறார்..” என்றாள்.

“போங்க வரேன்..” என. அவள் முன்னால் செல்ல தாமதித்து பின்னால் சென்றான்.

இவன் வரவும் காத்திருந்த வாசுதேவன், “வீரா.. இப்போ தான் போன் வந்தது..” என்று காதில் ஏதோ சொன்னவர், “காவ்யா..?” என்றார் கேள்வியாக.

“அவங்க இங்க நம்ம ரூம்ல இருக்கட்டும்.. இதே புளோர் தான்..” என்றான்.

“ரொம்ப லேட் ஆகும் போல வீரா..” அவர் யோசிக்க,

“நான் வீட்ல விட அரேஞ் பண்ணவா..?” என்றான்.

“அவ அம்மா, அண்ணா வீட்ல இல்லை, தனியா..” யோசித்தவர், “சரி இங்கேயே இருக்கட்டும்..” என்றுவிட்டார்.

ஒரு நேரத்துக்கு மேல், அந்த பார்ட்டி ஹாலில் இவன் குடும்பம், வாசுதேவன், காவ்யா தவிர மற்ற எல்லோரும் கிளம்பியிருந்தனர். செக்கியூரிட்டி கார்ட்ஸ் இப்போது தான் அதிகம் அலர்ட் ஆகினர். பதினொன்றை நெருங்க, வீரா கீழே சென்றான்.

முதலில் ஒரு பென்ஸ் வர, வீரா முன் நின்று வரவேற்று பார்ட்டி ஹால் வரை அழைத்து சென்றான். அடுத்து இன்னொருவர். இப்படியே ஐந்து நிமிடத்திற்கு ஒருவர் வந்து கொண்டே இருந்தனர். வீரா ஒவ்வொருவருக்கும் இறங்கி ஏறினான். கண்கள் மிக மிக கூர்மையாக பாய்ந்து கொண்டிருந்தது. உடல்  அட்டென்சன்லே இருக்க, காவ்யா நண்பனுடன் நின்றபடி பார்த்து கொண்டிருந்தாள்.

ஹோட்டலிலும் அமைதி, பார்ட்டி ஹாலிலும் அமைதி. வாசுதேவன் வந்திருந்தவர்களுடன் பேச ஆரம்பித்துவிட்டார். பேர் சொல்ல கூடிய லீகல் அட்வைசர் அவர். பெரும் புள்ளி பலருக்கு அவர் தான் லீகல் அட்வைஸைர். இப்போது சூர்யா பார்ட்டி வைத்தும்  ஒரு டிஸ்கஷன் தான்.

வெளியே வீரா வீட்டு பார்ட்டி தான். ஆனால் உள்ளுக்குள் இது தான் முக்கியம். மூன்றாம் மனிதர் பார்ட்டியில் தான் இது போல கூட்டங்கள். சிட்டி அடங்கும் நேரத்தில் இவர்கள் விழித்திருப்பர். உலகத்திற்கு தெரியாத கருப்பு உலகம்.

அதற்கென்று அப்படி ஒன்றும் ஆட்கள் குவிந்துவிடவில்லை. மொத்தமே பத்து பேர் தான். ஆனால் அந்த பத்து பேரும் தான் மொத்த அதிகார வர்க்கம். இறுதியாக வந்தார் அவர். “ராம்தாஸ்”. அறுபதை நெருங்கும் மனிதர். பணக்கார பட்டியலில் இடம் பிடிப்பவர். அரசியல் ஆர்வம் அதிகம் கொண்டவர். அவனின் தந்தைக்கு  முதலாளி குடும்பம்.

இவன் அவர்களிடம் இருந்து வெளியே வந்துவிட்டாலும் இன்றும் அவர்கள் மொத்த குடும்பத்துக்கும் இவன் கார்ட் சர்வீஸ் தான். முக்கியமாக ராம்தாஸ்க்கு இவன் தான் பெர்சனல் கார்ட்

இவன் அவரை வரவேற்க, “வீரா..” என்றார். தோளில் தட்டி கொடுத்தார். இவன் உடல் குறுகி நிமிர்ந்தது. அவருடன் பார்ட்டி ஹாலுக்கு சென்றான். முதலில் இந்திராணியை சந்தித்தார் மனிதர். அவருடன் சில நிமிடங்களே பேசினார். அடுத்து சூர்யா, அவன் மனைவிக்கு வாழ்த்து சொல்லி பரிசு கொடுத்தார். அவருக்கு குடிக்க கொடுக்கப்பட்டது.

“பாலா..” என்று வீரா கண்காட்ட, அவன் குடும்பம் கிளம்பினர்.

“காவ்யாக்கு கண்ட்ரோல் ரூம்க்கு பக்கத்து ரூம் கீ  கொடு..” பாலாவிற்கு சொல்லி அனுப்பி வைக்க, ஹாலுக்குள் பத்து பேர் கொண்ட கூட்டம் ஆரம்பித்தது. அரசியல், தொழில், பத்திரிக்கை, சினிமா என்று சென்றது.

வீரா எல்லாம் செக் செய்து பார்ட்டி ஹால் வாசலுக்கு வந்துவிட்டான். “சார் வீட்ல கிளம்பிட்டாங்க.. மேடம் ரூம்ல இருக்காங்க..” என்ற பாலா, “மினிஸ்டர் ஆள் தான் ரொம்ப பண்றான் சார், நம்ம பாதுகாப்பு பத்தி கேள்வி கேக்குறான்..” பொருமினான்.

“அவருக்கு நம்மளை மாதிரி ப்ரொபெஷனல் விட அடியாளுங்க தான் வேணும், அவனுங்க தான் அவர் பகைக்கு காட்டுற இடத்துல கத்தியை சொருகுவாங்க, நம்மகிட்ட லைசன்ஸ் கன் இருந்தாலும் நாம வேற, நம்ம வேலை பாதுகாப்பு மட்டும் தான், நீ விட்டு தள்ளு..” என்றான் வீரா.

அப்போது காவ்யா ரூம் கதவு திறக்க, வீரா கேள்வியாக பார்த்தான். “வாட்டர் வேணும்..” என்றாள்.

பாலா செல்ல, காவ்யா இவனிடம் பேச பார்க்க, வீரா உடனே மொபைல் எடுத்து கொண்டான். அவனால் முடியாது. அவள் முன் ஒவ்வொரு நொடியும் குறுகும் உடலை விறைத்து நிற்க வைக்க வேண்டியிருந்தது. அவமானமாக உணர்ந்தான். அவனின் அந்த அவமானம் அவளுக்கே அது தெரியாது. தெரிய கூடாது. தெரியவே கூடாது.

“கம்பன் சார்..” காவ்யா அழைத்தாள். “எப்போ ரெஸ்ட் எடுப்பீங்க..?” அருகில் வந்துவிட்டிருந்தாள்.

‘தயவு செஞ்சு போயிடு..’

“மேம்..” பாலா வந்துவிட்டான்.

“தேங்க்ஸ்..” வாங்கி கொண்டவள், “மீட்டிங் எப்போ முடியும் கம்பன் சார்..?” என்று கேட்டாள்.

அவன் நிமிர கூட செய்யாமல் மொபைலில் இருக்க, பாலா, “அது சொல்ல முடியாது மேம்..” என்றான்.

“எனக்கு தூங்கணும், ஒர்க்ல இருந்து நேரா பார்ட்டிக்கு வந்தேன் கம்பன் சார்..” என்றாள் திரும்ப.

இப்போதும் அவன் நிமிரவில்லை. “நீங்க ரெஸ்ட் எடுங்க மேம்.. நாங்க மீட்டிங் முடியவும் ரூம் சர்வீஸ் லைனுக்கு கால் பண்றோம்..” பாலாவே சொன்னான்.

“சூர்யா மேல உள்ள கோவத்தை என் மேல காட்டுறீங்களா கம்பன் சார்..?” காவ்யா நேரே கேட்டாள். இப்போதும் பதில் சொல்லாமல் இருக்க முடியாது,

“போய் தூங்குங்க..” நிமிர்ந்து சொல்லிவிட்டு குனிந்து கொண்டான்.

“எனக்கு உங்ககிட்ட கொஞ்சம் பெர்சனலா பேசணும்..” காவ்யா சொல்ல,

‘எனக்கு உன்கிட்ட பேசவே வேணாம்..’ மனம் அலற, அழுத்தமான முகத்துடன் அவளை கேள்வியாக பார்த்தான்.

காவ்யா பார்வை பாலாவை தொட, “நான் ரவுண்ட்ஸ் போய்ட்டு வரேன்..” பாலா கிளம்ப பார்த்தான்.

“நோ பாலா.. ஸ்டே ஹியர்.. டியூட்டி நேரத்துல இதென்ன..? உள்ள இருக்கிற ஆளுங்க வேல்யூ மறந்து போச்சா..?” குரலை அடக்கி கண்டித்தான்.

“சாரி சார்..” பாலா நின்றுவிட, காவ்யாவிற்கும் இவ்வளவு பெரிய பொறுப்பு அவன் தலையில் இருக்கும் போது இது பற்றி பேச முடியாது என்று தோன்றியது.

“அர்ஜன்ட் விஷயமா..?” என்றான் காவ்யாவிடம்.

“இல்லை.. ஆனா கண்டிப்பா பேசணும்..” என்றாள்.

“நான் டைம் சொல்றேன், மீட் பண்ணலாம்.. இப்போ தூங்குங்க, மீட்டிங் கண்டிப்பா லேட் ஆகும், நான் இங்கே தான் இருப்பேன்..” என்றான். காவ்யாவும் கதவு லாக் செய்து தூங்க சென்றாள்.

Advertisement