Advertisement

அடுத்தது யமுனாவின் படிப்பு, அதை கெடுக்க அவன் விரும்ப வில்லை. காதல் நிச்சயம் அவள் கவனத்தை திசை திருப்பும் என்று நம்பினான், அடுத்தது அவள் குடும்பத்தை எண்ணி கொஞ்சம் தயக்கம். இப்போது போய் அவன் அவளிடம் காதலைச் சொன்னால் அவள் குடும்பத்துக்கு இது வரை செய்த உதவி அனைத்தும் இந்த காதலால் செய்ததாக அவர்கள் வீட்டில் நினைக்க கூடும். அது மட்டுமில்லாமல் முக்கிய காரணமாக அவர்கள் வீட்டில் தன்னை மாப்பிள்ளையாக ஏற்பார்களா என்ற பெரிய கவலையும் அவன் காதலை சொல்லக் கூடாது என்று முடிவு எடுத்ததற்கு காரணமாகும்.

அவள் நினைவில் அன்றைய தூக்கத்தை தொலைத்தான். அவளது விழிகளும் சிவந்த அதரங்களும், பளிங்கு முகமும், அவளுடைய வாசனையும் அவன் நெஞ்சை ஆக்ரமித்திருந்தது. கொடி இடையும் நீண்ட கூந்தலும் கூட அவள் அழகை அதிகரிக்கிறது என்று எண்ணினான். காந்திபாபகா அவள் தனக்கு தான் என்று தெளிந்து அவள் மீது அளவில்லாத நேசத்தை தனக்குள் உருவாக்கிக் கொண்டான்.

அதற்கு பின்னர் நாட்கள் யாருக்கும் நிற்காமல் நகர்ந்தது. ஆனால் பரணி யமுனாவை பின் தொடர்வதை மட்டும் நிறுத்தவே இல்லை. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அவன் தன்னைத் தான் பின் தொடர்கிறான் என்று யமுனாவும் கண்டு கொண்டது தான்.

முதலில் அவன் எதேற்சியாக அவள் முன் தோன்றுகிறான் என்று நம்பி இருந்தாள். ஆனால் அதற்கு பிறகு அவளுக்கு சந்தேகம் வலுத்தது.

நேருக்கு நேர் வந்து நிற்க மாட்டான். ஆனால் அவன் கார் அவள் நிற்கும் இடத்தில் சற்று தள்ளி எங்காவது இருக்கும். கார் இல்லை என்றால் யாருடனோ பேசிய படி வெகு தொலைவில் பரணி இருப்பான். அவன் வேறு யாரிடமோ தீவிரமாக பேசிக் கொண்டிருந்தாலும் யமுனாவுக்கு நிச்சயம் அவன் தன்னை தான் பார்க்க வருகிறான் என்று தெரிந்து போனது.

முதலில் படபடப்பு வந்தாலும் இப்போது அவளுக்கு பழகி விட்டது. அவன் கண்ணில் பட வில்லை என்றாலும் அவனை, அவன் காரை அவள் கண்கள் தேட ஆரம்பித்து விட்டது.

அவன் எப்படி அவளுக்கு தெரியாத மாதிரி அவளை பின் தொடர்கிறானோ அது போல அவளும் அவன் வருவது தனக்காக தான் என்று தெரியாத மாதிரி காட்டிக் கொண்டாள்.

சில முறை நேருக்கு நேர் சந்திக்க முயன்றாலும் மனதையும் அதற்குள் எழும் படபடப்பையும் அடக்கி “என்ன சார் இந்த பக்கம்? எப்படி இருக்கீங்க?”, என்று கேட்டாள். அவள் கொஞ்சம் சறுக்கினாளும் அன்று அவன் மார்பில் சாய்ந்ததற்கு விளக்கம் சொல்ல வேண்டுமே என்ற தவிப்பு அவளிடம்.

அவள் மனதில் அவன் இருக்கிறான் தான். அவனை அவளுக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்பதும் அப்பட்டமான உண்மை. அந்த பதிலை அவளிடம் இருந்து கேட்க தான் அவன் அவளை பின் தொடர்கிறான் என்றும் அவளுக்கு தெரியும். ஆனால் அவளால் அந்த காதலை எப்படி ஒப்புக் கொள்ள முடியும்? அந்த நிலமையிலா அவள் இருக்கிறாள்?

அவன் வந்து காதலைச் சொல்லி அவள் ஆம் என்று சொன்னால் அதற்கு பிறகு அவள் நிலை? யமுனாவின் குடும்பத்தை பொறுத்த வரை பரணி என்பவன் எட்டா உயரத்தில் இருப்பவன். அது கூட பரவாயில்லை. தாமோதரன் மற்றும் காவேரி இருவரும் அரசியல்வாதிகள் என்றாலே தவறானவர்கள் என்று நம்புபவர்கள்,. அவர்கள் எப்படி பரணியை மாப்பிள்ளையாக ஏற்பார்கள்? அதனால் தான் அவனை விட்டு ஒதுங்கியே இருக்க நினைத்தாள்.

அவன் தன்னைக் காண தான் வருகிறான் என்று தெரிந்தும் தெரியாதது போல நடித்தாள். அதனால் அவனை கண்ட போது சாதாரணமாக பேசினாள். அவனும் “சும்மா தான், ஒரு ஆளைப் பார்க்க வேண்டியது இருந்தது. அதான் இந்த பக்கம் வந்தேன்”, என்று சலனமே இல்லாமல் காரணம் சொல்லி விட்டு போனான். அவளுடைய படிப்பை தொந்தரவு செய்யக் கூடாது என்று தான் ஒதுங்கிப் போனான்.

ஆனால் நேருக்கு நேர் சந்தித்த அன்றைய இரவில் இருவராலும் நிம்மதியாக உறங்க முடிய வில்லை என்பதே நிஜம். காதலைச் சொல்லாமலே காதலர்களாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களை காலம் சேர்த்து வைக்குமா?

சரியாக ஒரு வருடம் கழித்து…… நிஷா மற்றும் யமுனா இருவரும் கல்லூரி படிப்பை முடித்திருந்தார்கள். நிஷா வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்கள். யமுனாவோ வேலைக்கு போக ஆசைப் பட்டாள். யமுனா லீவில் வீட்டில் இருந்ததால் அவனால் அவளைப் பார்க்க முடிய வில்லை.

அப்போது ஒரு நாள் காலேஜில் இருந்து மார்க்சீட் வாங்கிக்  விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாள் யமுனா. அவளை பஸ் ஸ்டாண்டில் சந்தித்த பரணி நிதானமாக அவள் அருகே சென்றான்.

யாரோ அருகில் வந்து நிற்கவும் திரும்பிப் பார்த்தவள் அங்கு நின்ற பரணியைக் கண்டு திகைத்து “நீங்களா?”, என்று கேட்டாள்.

“ம்ம் எப்படி இருக்க யமுனா?”

“நல்லா இருக்கேன் சார். நீங்க எப்படி இருக்கீங்க?”

“நல்லா இருக்கேன், உங்க அக்கா லைப் எப்படி இருக்கு? நல்லா இருக்காங்களா? வினோத் கிட்ட கேட்டேன், இருந்தாலும்,… ”

“ரொம்ப சந்தோஷமா இருக்கா. போன மாசம் தான் அவளுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு. அத்தானும் அவர் வீட்லயும் எல்லாரும் அக்காவை நல்லா பாத்துக்குறாங்க”

“வினோத் சொன்னார்”

“இது எல்லாம் உங்களால தான். ரொம்ப ரொம்ப தேங்க்ஸ். அது மட்டுமில்லாமா அண்ணா வாழ்க்கையையும் சரி செஞ்சது நீங்க தான். அண்ணி இப்ப மாசமா இருக்காங்க. இன்னும் மூணு மாசத்துல அண்ணாவுக்கு குழந்தை பிறந்துரும், உங்க கிட்ட சொல்லிருப்பானே?”

“ஆம், வளைகாப்புக்கு கூப்பிட்டார். என்னால வர முடியலை”, என்னும் விதமாய் தலையசைத்தான்.

அடுத்து என்ன பேச என்று தெரியாமல் அமைதியில் கழிய “யமுனா நான் உன் கிட்ட கொஞ்சம் பேசனுமே? இப் யு டோன்ட் மைண்ட் ஒரு காபி சாப்பிட வறியா? இதோ இங்க தான்”, என்று எதிரில் இருந்த காபி ஷாப்பைக் காட்டினான்.

இது வரை சாதாரணமாக முகத்தை வைத்திருந்தவளுக்கு இப்போது பதட்டம் தொற்றிக் கொண்டது. அவன் பேச வருவது அவளுக்கு தெரியாதா என்ன? அவளுக்கு தெரியாது என்று அவன் நினைத்திருந்தாலும் அவன் மனதைப் பற்றி அவன் பார்வையைப் பற்றி அவனுடைய எண்ணத்தைப் பற்றி அவளுக்கு நன்கு தெரியுமே? அதுவும் அன்று ஹோட்டலில் அவள் கண்ட அவனுடைய செய்கை அவன் மனதை தெளிவாக புரிய வைத்திருந்தது. அவள் சாப்பிட்டு வைத்த ஐஸ்கிரிமை அவன் சுவைத்ததை தான் அவள் கண்டது. அவள் கண்டதை அவன் அறிய வில்லை.

அது மட்டும் அல்ல, ரோட்டில் போகும் ஒருவன் தன்னை நிமிர்ந்து பார்த்தால் அவன் என்ன நோக்கத்தில் பார்க்கிறான் என்று அறிந்து கொள்ளும் பெண்ணுக்கு கிட்டதட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக பின் தொடரும் அவன் பார்வையை தெரியாதா? அதை விட பயம் அவளுக்கு அவளை நினைத்து தான். மனதில் அவன் மீது ஒரு சின்ன சலனம் வந்த உடனேயே அவன் மார்பில் சாய்ந்தவள் ஆயிற்றே. அப்படி இருக்க இப்போது அவன் வந்து ஏதாவது பேசினால் நிச்சயம் மண்டயை தான் ஆட்டுவாள். ஆனால் அவள் குடும்பம் எப்படி அவனை ஏற்றுக் கொள்ளும். அவன் மிகமிக பெரிய உயரத்தில் இருப்பவன். இருவருக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாதே.

அவள் முகத்தில் பயம் இருப்பதைக் கண்டவன் “ஒரு அஞ்சு நிமிஷம் தான். கொஞ்சம் பேசணும். அவ்வளவு தான். வேற ஒண்ணும் இல்லை. இன்னைக்கு பேசியே ஆகணும். பிளீஸ் வா”, என்றான்.

பஸ் ஸ்டாண்டுக்கு எதிரே இருந்த பெரிய சுவரில் சரவணப் பெருமாளின் புகைப்படமும் பெயரும் பெரியதாக போட்டிருக்க மற்றொரு பக்கம் விஷ்ணுவின் புகைப்படமும் அவன் பெயரும் போட்டிருந்தது. அந்த போஸ்டரில் பரணியின் புகைப்படம் போட வில்லை என்றாலும் பரணீதரன் என்ற பெயரும் அதில் இருந்தது.

ரோட்டில் ஒட்டியிருக்கும் போஸ்டர்களைப் பார்க்கும் குடும்பம் அவர்களுடையது என்றால் அந்த போஸ்டரில் இருப்பவர்களே அவனின் குடும்பம் ஆயிற்றே. அப்படி இருக்க அவ்வளவு பெரிய ஆள் தன்னிடம் பேச கெஞ்சுகிறானா என்று வியப்பாக இருந்தது.

சுற்றி பார்வையை ஓட்டினாள். ஆங்காங்கே ஆட்கள் நின்று கொண்டிருந்தார்கள். இப்போது யாரும் அவனைப் பார்க்க வில்லை. ஆனால் காபி ஷாப் சென்றால் நிச்சயம் யாராவது அவனைப் பார்ப்பார்கள். சரவணப் பெருமாளின் கட்சியில் இருப்பவர்கள் யாராவது பார்த்தால், இல்லை எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் பார்த்தால் ஏதாவது விபரீதம் நடக்கலாம் என்று புரிந்து “நீங்க காபி ஷாப் போனால் எல்லாரும் உங்களை எல்லாரும் பாப்பாங்க சார்”, என்றாள்.

“தெரியும். என்ன வேணும்னாலும் நடக்கலாம். ஆனா உன் கிட்ட பேசனுமே? எங்க வச்சு பேசன்னு தெரியலை. நம்ம ஹோட்டல் போனா நேரம் ஆகிரும். அங்க போகலாமா?“

“நான் ஒரு மணி நேரத்துல வீட்டுக்கு போகலைன்னா அம்மா தேடுவாங்க சார்”

“ஓ….”, என்று ஏக்கமாக வந்தது அவன் குரல். அவ்வளவு பெரிய மனிதன் பேசுவதற்கு கூட தன்னை கட்டாயப் படுத்தாமல் ஒரு ஏமாற்றத்தோடு நிற்பது புரிந்தது. அவனை ஏமாற்ற அவளுக்கு மனது வருமா என்ன? என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்று முடிவு எடுத்தவள் “வேணும்னா கார்ல உக்காந்து பேசலாமா?”, என்று தயக்கத்துடன் கேட்டாள். கூடவே அவன் தவறாக எண்ணிக் கொள்வானோ என்று பயமாக இருந்தது.

ஆனால் தனக்காக யோசிக்கும் அவளை அவனுக்கு அவ்வளவு பிடித்தது. கல்லூரி படிக்கும் போது தன்னுடன் வெளியே சுற்ற அழைக்கும் பெண்களை நினைத்துப் பார்த்தான். ஏனோ எல்லாவற்றிலும் யமுனா உயர்வாகவே தெரிந்தாள்.

“சரி வா”, என்று சொல்லி அவன் கார் கதவைத் திறக்க அவள் ஏறி அமர்ந்தாள். அவள் அமர்ந்த பிறகு கதவை அடைத்து விட்டு அவன் டிரைவர் சீட்டில் ஏறி அமர்ந்தான். அவளுடைய வீட்டுக்கு செல்லும் வழியில் காரை ஓட்டியவன் சிறிது தூரம் சென்று ஒரு பெரிய மரத்தின் அடியில் காரை நிறுத்தினான்.

அது ஆள் அரவமற்ற தனிமையான பகுதி தான். ஆனால் ரோட்டில் வாகனங்கள் மட்டும் சென்று கொண்டிருந்தது. அவனைத் திரும்பிப் பார்த்தாள். அவனும் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் என்ன சொல்லப் போகிறான் என்று அவளுக்கு தெரியும். ஆனால் அவள் என்ன பதில் சொல்ல போகிறாள் என்று அவளுக்கு குழப்பம் வந்தது.

காரிகை வருவாள்…..

Advertisement