Advertisement

அவள் மனதில் எழுந்த காதலைப் பற்றி அவள் எண்ணிக் கொண்டிருக்க “சரி சரி விடுங்க, முதல் மாச சம்பளத்துல நாங்க எல்லாருக்கும் டிரஸ் வாங்கிட்டு வந்துருக்கோம்”, என்று சொன்ன வினோத் தந்தை மற்றும் தாயிடம் உடையைக் கொடுத்தான். பின் ஒரு கவரை எடுத்துக் கொண்டு அவனது அறையைப் பார்த்து நடந்தான்.

“எனக்கு இல்லையா?”, என்ற ஏக்கத்தோடு அவன் முதுகைப் பார்த்தாள் தாரணி.

அறைக்குள் சென்றவன் “தாரணி இங்க வா”, என்று அழைக்க அவசரமாக அங்கே சென்றாள். அதைக் கண்டு யமுனா மலர்ந்த முகத்துடன் தனது அறைக்குள் சென்றாள்.

அறைக்குள் வந்த தாரணி அமைதியாக நின்றாள். கணவனை எதிர்க் கொள்ள அவளுக்கு சங்கடமாக இருந்தது. எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவனிடம் சாரி கேட்பாளாம்? அவளைக் கண்டு கொள்ளாதது போல வினோத் உடை மாற்றிக் கொண்டிருந்தான். அவன் உடை மாற்றுவதைக் கண்டு தலை குனிந்து சிறிது சங்கடத்துடன் நின்றாள்.

மனைவியின் முகச் சிவப்பு கண்ணில் பட “நாம தான் இவளை இன்னும் புரிஞ்சிக்கலையோ?”, என்று எண்ணிக் கொண்டு அவளைப் பார்த்தான்.

அவள் அமைதியாக இருக்க “தரு இங்க வா”, என்று அழைத்தான்.

திருமணம் முடிந்த புதிதில் அவன் அவளை இப்படி தான் அழைத்தான். இப்போது மீண்டும் அப்படி அழைக்கவும் கலங்கிய கண்களுடன்  அவள் அருகே வந்து தலை குனிந்து நின்றாள். அவள் நாடியில் கை வைத்து தலையை நிமிர்த்தினான். அவள் கண்களில் உருவாகி இருந்த கண்ணீர் அவள் கன்னத்தில் வடிந்தது.

“என்ன இது சின்னப் பிள்ளை மாதிரி?”, என்று கேட்ட படி அவள் கண்ணீரை துடைத்து விட்டான்.

அடுத்த  நொடி “என்னை மன்னிச்சிருங்க”, என்று கதறிய படி அவன் நெஞ்சில் சாய்ந்தாள்.

“நான் செஞ்சது தப்பு தாங்க. பெரிய தப்பு தாங்க. அன்னைக்கு நீங்க அந்த வார்த்தை சொன்னப்ப தான் என் தப்பே எனக்கு உரைச்சது. உங்களை ரொம்பவே காயப் படுத்திட்டேன். வேலை இல்லைன்னு நீங்களே நொடிஞ்சு இருக்குறப்ப நான் தான் உங்களுக்கு ஆதரவா இருந்துருக்கணும். ஆனா நானே…. என்னை மன்னிச்சிருங்க”, என்று அழ அவளை இறுக அணைத்துக் கொண்டவன் “சரி விடு, பழசை எல்லாம் மறந்துறலாம்”, என்றான்.

அவனை விட்டு விலகி அவன் முகம் பார்த்தவள் “நீங்க என்னை மன்னிச்சிட்டீங்களா?”, என்று கேட்டாள்.

“ஆமா டி, என் பொண்டாட்டியை நான் மன்னிக்காம இருப்பேனா?”

“நிஜமா?”

“ம்ம்”, என்ற படி அவன் கைகள் அவளை இறுக்கி அணைக்க அவன் முகம் பார்த்தாள். அவன் கண்களில் தாபம் வழிந்தாலும் அவளை நெருங்க தயங்கினான். அவளுக்காக அவன் தவிப்பது புரிந்தது. ஆனால் அவன் தயக்கம் அவளின் வார்த்தையால் வந்ததாகிற்றே. அதைக் களைய வேண்டியது அவளது பொறுப்பு என்று உணர்ந்தவள் எக்கி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.

அடுத்த நொடி அவனுக்கு எந்த தயக்கமும் இல்லை. அவன் உதடுகள் அவள் முகத்தில் ஊர்வலம் போய் அவள் இதழ்களில் இளைப்பாற அவன் கரங்கள் சிறிது வேகத்துடன் அவள் உடலில் பயணித்தது.

இத்தனை நாள் இருந்த ஆசை எல்லாம் பெருக்கெடுக்க அவன் வேகம் சற்று அதிகமாக தான் இருந்தது. வேகத் தடையாக “தாரணி இங்க வா மா”, என்று காவேரியின் குரல் ஒலித்தது.

“இதோ வரேன் அத்தை”, என்று குரல் கொடுத்தவள் அவனை பாவமாக பார்க்க அவனோ அவளை விட முடியாமல் தவித்தான்.

“நீ ரூம்ல ரெஸ்ட் மா தாரணி, இங்க வர வேண்டாம். யமுனா வந்துட்டா”, என்று காவேரி மீண்டும் குரல் கொடுக்க இப்போது இருவரின் தவிப்பும் காணாமல் போனது.

இத்தனை நாள் பிரிவை ஈடுகட்டும் வகையில் அவன் அவளுடன் கலக்க அவன் நெஞ்சில் நிம்மதியாக சாய்ந்திருந்தாள் தாரணி.

அவளுக்கு வாங்கிய சேலையைக் கொடுக்க அதை ஆசையாக வாங்கிக் கொண்டாள். மீதிப் பணத்தை அவளிடம் கொடுக்க அவள் மறுத்தாள்.

“நீ என் பொண்டாட்டி டி, நம்ம வீட்டு செலவை அப்பா பாத்துக்கிட்டாலும் நம்ம வரவு செலவை நீ தான் பாக்கணும்”, என்று கொடுத்தான்.

பின் சிறிது தயக்கத்துடன் “உன் கிட்ட ஒண்ணு கேக்கவா தாரணி?”, என்று  கேட்டான்.

“என்னங்க?”

“உங்க வீட்ல எனக்கு வேலை இல்லைன்னு ரொம்ப திட்டினாங்களா?”

“ம்ம், திட்டுறது வேற. ஆனா அவங்க பேச்சு ரொம்ப ஒரு மாதிரி இருந்தது”

“யாரு, அத்தை மாமாவா?”

“என்னோட அம்மா அப்பா ஒண்ணும் சொல்லலைங்க. ஆனா எங்க சித்தி தான் என்னமோ உன் மாப்பிள்ளைக்கு வேலை கிடைச்சிரும்னு சொன்னாங்க. இன்னும் கிடைக்கலையா? அப்ப உங்க செலவை எல்லாம் உன் மாமனார் தான் பாத்துக்கிறாரா? ஏமாத்தி கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டாங்களான்னு கேட்டாங்க. எனக்கு ரொம்ப கோபம் வந்துருச்சு. என் புருசனுக்கு வேலை இல்லாம போனாலும் ஒரு நாளும் உங்க வீட்டுக்கு வந்து சோத்துக்கு நிக்க மாட்டோம் சித்தின்னு திட்டினேன். அப்புறம் எங்க அம்மா அப்பா கிட்ட அவங்க அப்படி பேசுறாங்க, நீங்க வாயை மூடிட்டு இருக்கீங்க, என் புருசனுக்கு வேலை கிடைக்காம இந்த வீட்டுக்கு வர மாட்டேன்னு சொல்லிட்டு வந்துட்டேன். ஆனாலும் நம்ம வீட்டுக்கு வந்தப்புறம் அதே யோசனையா இருந்துச்சு. அவங்க முன்னாடி நல்ல நிலைமைல நிக்கணும்னு வெறி. அப்ப போல நீங்க கிட்ட வந்தது அது டக்குன்னு வெளி வந்துருச்சு. என் புருஷன் வேலைக்கு போய்ட்டானு அவங்க கிட்ட பீத்திக்கணும்னு ஆசை. நான் விலகி இருந்தா நீங்க இன்னும் தீவிரமா வேலைக்கு ஏற்பாடு செய்வீங்கன்னு நினைச்சேன். ஆனா அது வேற மாதிரி ஆகிட்டு. நான் என்ன தான் சமாதானம் சொன்னாலும் அது என் தப்பு தான். ஆனா நிஜமாவே நீங்க பணம் சம்பாதிச்சு என் காலுக்கு கீழே கொட்டணும்னு நான் நினைக்கலைங்க. என்னை நம்புறீங்களா?”

“நம்புறேன் டி. உன் மனசு எனக்கு புரியுது தாரணி. சரி விடு. எல்லாம் நம்ம போறாத காலம்”

“ஹிம், ஆமா. சரி நம்ம வீட்ல என்ன தான் நடக்குது? எப்படி காயத்ரி விஷயம் சரியாச்சு? உங்களுக்கு எப்படி வேலை கிடைச்சது? அன்னைக்கே உங்க கிட்ட அதைக் கேக்க தான் ஆசையா வந்தேன். ஆனா….”

“சாரி மா”, என்று ஆரம்பித்து நடந்ததைச் சொன்னான். “அந்த சார் கிரேட்ல? அதை விட நம்ம யமுனா… அவ ஒரு தேவதைங்க. ஆனா இத்தனை நாளும் நான் அவளுக்கு ரொம்ப இம்பார்டன்ஸ் கொடுத்தது இல்லை. நான் செஞ்சது சரியா தப்பான்னு எனக்குள்ள போராடவே நேரம் சரியா இருந்துச்சு”, என்றாள்.

“யமுனா ரொம்ப நல்ல பொண்ணு தாரணி. இப்ப கூட அம்மா கிட்ட அண்ணியை எதுக்கு கூப்பிடுற மா, நான் உதவி செய்றேன் அவங்களை வர வேண்டாம்னு சொல்லச் சொல்லிருப்பா”, என்று சொல்ல அவளும் ஆம் என்று தலையசைத்தாள்.

“ஏங்க”

“என்ன மா?”

“நாம சீக்கிரமா குழந்தை பெத்துக்கலாமா?”

“கண்டிப்பா. ஆனா ஏன் திடீர்னு அதைப் பத்தி பேசுற?”

“இல்லை, இத்தனை நாளும் நாம ஒன்னாவே வாழலை. ஆனா அத்தை அது தெரியாம ஆஸ்பத்திரிக்கு போகலாம், வா வான்னு கூப்பிடுறாங்க”

“இன்னும் ரெண்டு மூணு மாசம் எப்படியாவது சாமாளி. அதுக்குள்ள நாம ரெடி பண்ணிறலாம். ஆனா இப்படி பேசிட்டு இருந்தா கஷ்டம்”, என்று சொன்னவனின் விரல்கள் எல்லை மீற அவனுக்குள் அடைக்கலமானாள்.

இரவு உணவு உண்ண இருவரும் வெளியே வரும் போது தாரணி முகத்தில் இருந்த தேஜசும் வினோத் முகத்தில் இருந்த நிறைவும் யமுனாவுக்கு அப்படி ஒரு நிம்மதியைக் கொடுத்தது., அந்த நிம்மதிக்கு காரணமான பரணியின் மேல் நன்றி விசுவாசமும் அன்பும் காதலும் அதிகரித்தது.

இரவு உணவு முடித்து அறைக்கு வந்ததும் “அண்ணா கிட்ட பேசினதுக்கு ரொம்ப தேங்க்ஸ். அண்ணா வாழ்க்கை சரியாகிரும்னு நம்பிக்கை வந்துருக்கு. இது எல்லாம் உங்களால தான். ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்”, என்று மெஸ்ஸேஜ் அனுப்பி வைத்தாள்.

அவனிடம் இருந்து அதே சிரிக்கும் பொம்மை மட்டும் பதிலாக வந்தது. போன முறை இந்த பொம்மை வந்த போது அவளுக்கு ஒன்றும் தோன்ற வில்லை. ஆனால் இந்த முறை பொம்மை வந்ததும் அவ்வளவு தானா? அவனிடம் இருந்து வேறு ஏதாவது தகவல் வராதா என்று எதிர் பார்த்தாள். வரவில்லை என்றதும் ஏமாற்றமாக இருந்தது. கூடவே அன்னை தந்தையின் பேச்சு தன் மனதில் எழுந்த சலனம் எல்லாம் சேர்ந்து அவளைப் படுத்தியது.

அதற்கு மேலும் அவனிடம் பேச ஆசை இருந்தாலும் இன்று அவன் நெஞ்சில் சாய்ந்தது ஒரு மாதிரி சங்கடத்தைக் கொடுக்க மொபைலை கீழே வைத்தாள். அப்போது “வீட்டுக்கு வந்துட்டோம் டி”, என்று மெஸ்ஸேஜ் அனுப்பி வைத்திருந்த நிஷா கூடவே அன்று அவர்கள் எடுத்த போட்டோக்களையும் அவளுக்கு அனுப்பி வைத்தாள்.

எல்லாவற்றையும் ஆர்வமாக பார்த்தாள். அதிலும் அவள் கண்கள் பரணியை கொஞ்சம் அதிகமாக தான் கவனித்தது. அதிலும் ஒரு புகைப்படத்தில் பரணி அவளையே பார்க்க அவன் பார்வைக்கு என்ன அர்த்தம் என்ற யோசித்த படியே இருந்தாள். அதற்கு விடை தான் தெரிய வில்லை.

அதே நேரம் அவனும் அன்று முழுவதும் நடந்ததை தான் நினைத்துக் கொண்டிருந்தான். அதிலும் அவள் கையைப் பற்றியதும் அவள் தன் நெஞ்சில் சாய்ந்ததும் மீண்டும் மீண்டும் நினைவில் வந்து அவனை வெகுவாகவே பாடாய் படுத்தியது.

தான் பயங்கரமாக அவள் மேல் காதலில் விழுந்து விட்டோம் என்று புரிந்து கொண்டான். இப்போதே அவளிடம் காதலைச் சொல்ல ஆசை தான். ஆனால் தயக்கமாக இருந்தது. அவன் தயக்கத்துக்கு பல காரணங்கள் உண்டு. ஒன்று அவன் வயது, இந்த வயதிலே அவன் திருமணத்தை விரும்ப வில்லை.

Advertisement