Advertisement

அது மட்டும் அல்ல, அவன் அருகாமையில் இவ்வளவு நேரம் அவளுக்குள் இருந்த தவிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து அவள் மனது அமைதி அடைந்தது. ஆசைப் பட்டது கிடைத்த சந்தோஷம் அவளுக்குள் வந்தது. இது போதும் இந்த சந்தோஷம் ஒன்றே போதும் என்று அவள் மனம் திருப்தி கொண்டது.

அவனோ அவள் செய்கையில் பேச்சற்று போனான். அவளின் இந்த செய்கையை எந்த லிஸ்டில் சேர்க்க என்று அவனுக்கு புரியவே இல்லை.

அவளை திருப்பி அணைக்க அவனுக்கு கைகள் பரபரத்தது தான். ஆனால் எந்த உரிமையில் அதை அவன் செய்வானாம்? ஆனாலும் உடல் எல்லாம் அவள் வேண்டும் என்ற தாக ஊற்று கிளம்ப தன்னை மீறி அவன் அவளை அணைக்கப் போகும் போது படக்கென்று அவனை விட்டு விலகியவள் “சாரி சார், ஏதோ ஒரு டென்ஷன்ல?”, என்று சொல்லி விட்டு அங்கிருந்து வேகமாக சென்று விட்டாள். அவன் முகத்தைப் பார்க்கும் தைரியமும், இது எதனால் என்று அவன் கேள்வி கேட்டால் அதற்கு பதில் சொல்லும் தைரியமும் அவளுக்கு சுத்தமாக இல்லை.

நடந்தது எல்லாம் அவளை மீறிய செயல். அதுக்கு அவள் என்ன விளக்கம் கொடுப்பாளாம்? வெறும் சாரி என்று சொல்லும் தவறை அவள் செய்ய வில்லையே. வயது வந்த ஒரு பெண் ஆசையாக ஒரு ஆணைக் கட்டிப் பிடிப்பது என்றால் அது அவனுக்குள் எந்த வகையாக கேள்விகளை உருவாக்கும்? கடவுளே அவன் கேள்வி கேட்டால் நான் என்ன சொல்லி சமாளிப்பேன் என்று கவலையுடன் தான் அண்ணன் அருகில் சென்று அமர்ந்தாள்.

அவள் சென்றதும் இப்போது அவளைப் போலவே சுவரில் சாய்ந்து நின்று சற்று முன் நிகழ்ந்தவைகளை அசை போட்டான் பரணி.

“ஏன் என்னைப் பாக்கும் போது அவ பார்வை ஒரு மாதிரி இருந்துச்சு? ஏன் அழுதா? அவ கையைப் பிடிச்சப்ப அவ முகத்துல எதுக்கு அவ்வளவு தவிப்பு? அவ கண்ணீருக்கு என்ன அர்த்தம்? அவ கண்ணுல இருந்த தவிப்புக்கு என்ன அர்த்தம்? இப்ப எதுக்கு என் நெஞ்சில் சாஞ்சா? இதுக்கு என்ன அர்த்தம்? அவ சாஞ்சதும் நான் ஏன் சும்மா நின்னேன்?”, என்று பலவாறு யோசித்தவன் வெகு நேரம் கழித்து தான் நடப்புக்கு வந்தான். தன்னை சமாளித்துக் கொண்டு அங்கிருந்து வந்தவன் அவர்களை நோக்கி நடந்தான். ஆனால் அவன் பார்வை முழுவதும் யமுனா புறமே.

அவ்வளவு நேரம் அவனைக் காணுமே என்று தவிப்புடன் அவனை பார்வையால் தேடிக் கொண்டிருந்தவள் அவன் வருவதை ஒரு நொடி ஆர்வமாக பார்த்து விட்டு பின் ஐஸ்கிரீம் பக்கம் குனிந்து கொண்டாள். ஆனால் இதற்கு முன் இருந்த தவிப்பு இப்போது அவளிடம் இல்லை. அவள் முகம் சிறிது சிவந்திருந்தாலும் தெளிவாக இருந்தது. நினைச்சது கிடைச்ச திருப்தி எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அவள் முகம். அவளை பார்த்த படியே அமர்ந்தான் பரணி. அவன் கண்கள் கூர்மையுடன் அவள் முகத்தில் பதிந்தது. அது உணர்ந்தும் அவள் நிமிரவே இல்லை.

“இப்ப அவளுக்கு என்ன கிடைச்சதுன்னு இப்படி தெளிவா அமைதியா இருக்கா?”, என்று எண்ணியவனுக்கு எதுவோ புரிவது போலவும் இருந்தது புரியாதது போலவும் இருந்தது. அவளுக்கே தெரியாமல் அவளை நோட்டம் விட ஆரம்பித்தான்.

“என்ன சார் சட்டை கசங்கிருக்கு?”, என்று வினோத் கேட்ட பிறகு தான்  அனைவரும் நிமிர்ந்து பார்த்தார்கள். யமுனா அவன் நெஞ்சில் சாயும் போது அவன் சட்டையை இறுக்கமாக பிடித்திருந்ததால் இரண்டு இடத்தில் சுருக்கமாக இருந்தது.

யமுனா பதட்டத்துடன் அவனை நிமிர்ந்து பார்க்க “என்னன்னு தெரியலை வினோத்,  எப்படி கசங்குச்சுன்னு தெரியலை. ஆனா பரவால்ல, வீட்டுக்கு தானே போறோம்?”, என்று புன்னகைக்க அப்பாடி என்று மூச்சு விட்டாள். அதை பார்த்தவனுக்கு அப்படி ஒரு சிரிப்பு வந்தது. ஆனால் அடக்கிக் கொண்டான்.

ஐஸ்கிரீம் உண்டு முடித்ததும் “சரி கிளம்பலாமா?”, என்று கேட்டான் பரணி.

“பில் கட்டனும் சார்”, என்றான்  வினோத்.

“நம்ம ஹோட்டல்ல  நாமளே பில் கட்டனுமா?”

“சார் இது என்னோட டிரீட்?”

“இதுல என்ன இருக்கு வினோத்? வேணும்னா உங்க ஆசைக்காக எனக்கு ஏதாவது வாங்கி தாங்க வாங்கிக்கிறேன்”, என்று சொல்ல வினோத் முகம் மலர்ந்தது. பரணிக்கு அவளுடன் நேரம் செலவழிக்க ஆசை வர அதனால் தான் அப்படி பேசினான்.

“சரி சார், வாங்க கடைக்கு போகலாம்”, என்று சொல்லி வினோத் முன்னே செல்ல நிஷாவும் யமுனாவும் அவன் பின்னால் சென்றார்கள்.

பரணி வருக்கிறானா என்று திரும்பிப் பார்த்த யமுனா அங்கு கண்ட காட்சியில் ஒரு நொடி அதிர்ந்து, பின் படபடத்த மனதுடன் வேகமாக அங்கிருந்து சென்று விட்டாள்.

அடுத்து வந்த நிமிடங்களில் அவள் பரணியை நிமிர்ந்து பார்க்க  வில்லை. ஏதோ போலவே இருந்தாள். அவள் அமைதி வினோத் மற்றும் நிஷாவுக்கு தவறாக பட இருவருமே என்ன ஆச்சு யமுனா என்று கேட்டு விட்டார்கள். ஒண்ணும் இல்லை என்று சமாளித்தாலும் யமுனாவால் பரணி முன்னிலையில் இயல்பாக இருக்க முடிய வில்லை.

அவள் உணர்வுகள் அவனுக்கு புரிந்ததோ என்னவோ? கடையில் இருந்த லிப்ட்டில் இருக்கும் போது அவளுக்கு மட்டும் கேட்கும் வகையில் “ஏன் எதுக்கு அப்படி நடந்ததுன்னு நான் எந்த கேள்வியும் கேக்க மாட்டேன். பிளீஸ் இயல்பா இரு”, என்று அவள் காதில் முணுமுணுத்தான் பரணி.

அவன் சொன்னதே அவளின் முகத்தை சிவக்கச் செய்தது என்றால் அவள் காதில் அவன் உதடுகள் லேசாக உரச மொத்தமாக சிவந்து போனாள். கூடவே அவனின் ஒருமையான அழைப்பும் அவளை பரவசப் படுத்தியது.

ஆனாலும் தன்னை கட்டுப் படுத்திக் கொண்டாள். அண்ணன் ஏதாவது கண்டு கொண்டால் பரணிக்கு கெட்ட பெயர் வந்தாலும் வரும் என்று எண்ணி தன்னை சமாளித்துக் கொண்டாள். ஆனாலும் அவள் மனதில் இனி அவன் வேறு தான் வேறு இல்லை என்ற உணர்வு எழுந்தது.

பரணிக்கும், நிஷாவுக்கும் ஏதாவது வாங்க வேண்டும் என்று கடைக்குள் வந்து விட்டார்கள் தான். ஆனால் என்ன வாங்க வேண்டும் என்று வினோத்க்கு சத்தியமாக தெரிய வில்லை.

அதே போல நிஷாவுக்கு வாங்க வேண்டும் என்று வந்த யமுனாவுக்கும் என்ன வாங்கிக் கொடுக்க என்று தெரிய வில்லை. அண்ணனும் தங்கையும் திருதிருவென்று விழிக்க பரணி மற்றும் நிஷா இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

“என்ன ஆச்சு உங்க ரெண்டு பேருக்கும்?”, என்று கேட்டான் பரணி.,

“உங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது வாங்கிக் கொடுக்கணும்னு ஆசையா இருக்கு சார். ஆனா நீங்க பெரிய லெவல்ல வாங்குவீங்க. எங்க பட்ஜட் கம்மி தான். அதான்….”, என்று இழுத்தான் வினோத்.

“அன்புங்குறது நாம வாங்குற பொருளோட விலையில இல்லை வினோத். இப்ப என்ன எனக்கு ஏதாவது வாங்கித் தரணும்னு நினைக்கிறீங்க அதானே? வாங்க”, என்று அழைத்துச் சென்றவன் “பிளாக் கோர்ட்க்கு உள்ள போட வெள்ளை சட்டை பழசா ஆகிருச்சு. அதை வாங்கிக் தாங்க”, என்று உரிமையாக சொன்னான். அதே போல நிஷாவும் ஒரு புடவை எடுத்தாள்.

பரணி இரண்டாயிரம் மதிப்புள்ள ஒரு சட்டையை செலக்ட் செய்ய வினோத்தோ ஐந்தாயிரம் மதிப்புள்ள சட்டையை எடுத்து பில் போடக் கொடுத்தான். அதைப் போல நிஷாவுக்கும் உடைகளை செலக்ட் செய்து கொடுத்தாள் யமுனா.

“நீயும் எடுத்துக்கோ யமுனா”, என்று தங்கையிடம் சொன்னான் வினோத்..

“சரிண்ணா, அப்படியே அம்மா அப்பா அண்ணிக்கும் எடுக்குறேன்”, என்று யமுனா சொல்ல “அம்மா அப்பாக்கு எடு, உன் அண்ணிக்கு வேண்டாம்”, என்று இறுக்கத்துடன் சொல்லி விட்டு வினோத் அங்கிருந்து செல்ல யமுனா முகம் கூம்பி போனது.

அப்போது நிஷாவுக்கு வீட்டில் இருந்து அழைப்பு வர அவள் பேசச் சென்று விட்டாள்.

பரணியும் யமுனாவும் மட்டும் இருக்க “என்ன ஆச்சு? ஏன் வினோத் அவங்க வைப்க்கு எதுவும் எடுக்க மாட்டேன்னு சொன்னாங்க?’, என்று கேட்டான்.

“அண்ணாக்கு வேலை கிடைச்சா அவன் வாழ்க்கை சரியாகிரும்னு நினைச்சேன். ஆனா இன்னும் மோசமா தான் இருக்கு. அண்ணா அண்ணியை அவாய்ட் பண்ணுறான். அதை அவன் கிட்ட எப்படி பேசன்னு எனக்கு தெரியலை”, என்று கலக்கமாக உரைத்தாள்.

“சரி நீ உங்க வீட்ல எல்லாருக்கும் எடு. நான் வினோத் கிட்ட பேசுறேன்”, என்று சொல்லி சென்றான். “இவங்க எப்படி பேசுவாங்க? என்னாலே அண்ணன் கிட்ட இது பத்தி பேச முடியலை?”, என்று எண்ணியவள் தோளைக் குலுக்கிக் கொண்டு உடையை தேர்ந்தெடுத்தாள். நிஷாவும் வந்ததால் அவர்கள் உடை தேர்வு வேகமாக நடந்தது.

காரிகை வருவாள்…. 

Advertisement