Advertisement

அன்று மாலை வரை பரணி யமுனாவுக்கு தகவல் அனுப்ப வில்லை. அவளோ தவித்துக் கொண்டிருந்தாள். கல்லூரி முடிந்ததும் யமுனா மற்றும் நிஷா இருவரும் பரணி ஹோட்டலுக்கு கிளம்பினார்கள். இது வரை மெஸ்ஸேஜ் வர வில்லை என்றதும் பரணி வர மாட்டான் என்று எண்ணி சோர்ந்து போய் இருந்தாள் யமுனா. இவர்கள் ஹோட்டலுக்கு போன போது பார்க்கிங்கில் நின்றிருந்த வினோத் மற்றும் பரணியைக் கண்டு யமுனா முகம் மலர்ந்தது.

அவள் மலர்ந்த முகத்தை ரசித்துப் பார்த்தான் பரணி. ஆனால் அந்த சந்தோஷம் தன்னைக் கண்டதாலா, இல்லை வினோத்தைக் கண்டதாலா என்று அவனுக்கு புரிய வில்லை. வழக்கமான நலம் விசாரிப்புகளுக்கு பின்னர் சரியாக மாலை ஐந்து மணிக்கு பரணி ஹோட்டலுக்கு நுழைந்தார்கள் நால்வரும்.

பரணியின் தனியறைக்கு தான் சென்றார்கள். அங்கிருந்த டேபிளில் வினோத் அருகில் யமுனா அமர்ந்திருக்க பரணி அருகே நிஷா அமர்ந்திருந்தாள்.

என்ன தான் டிரீட் கொடுக்க என்று வினோத் வந்து விட்டாலும் அவனுக்கு எப்படி உணவு ஆர்டர் செய்ய என்றும் பரணி மற்றும் நிஷா இருவரும் என்ன சாப்பிடுவார்கள் என்றெல்லாம் தெரிய வில்லை. அதனால் அமைதியாக இருந்தான். ஆனால் அதை எல்லாம் கவனிக்காமல் “என்ன சாப்பிடுறீங்க மூணு பேரும்?”, என்று இயல்பாக கேட்ட பரணி அவர்கள் சொன்னதும் அதை பேரரிடம் சொல்லி வர வைத்தான்.

அனைவரும் பேசிய படியே சாப்பிட்டார்கள். அவ்வப்போது யமுனாவின் பார்வை பரணி பக்கம் சென்றது. அவள் பார்க்கும் போதெல்லாம் அவனும் புண் சிரிப்புடன் அவளை பார்த்தான். அப்போது தான் பரணியின் பார்வையில் இருந்த வித்தியாசத்தை உணர்ந்தாள் யமுனா.

அவன் இயல்பாக இருந்தான் தான். அதிகப் படியாக எதுவும் செய்ய வில்லை தான். அதே நேரம் ஏதோ ஒரு குறுகுறுப்பு போல அவன் பார்வை அவளை வருடியது. அதில் தவறாக எதுவும் தெரிய வில்லை. அவன் தன்னைப் பார்க்கிறான் என்று வெளிப்படையாகவும் தெரிய வில்லை. ஆனால் அவன் பார்வையில் ஏதோ இருக்கிறது என்று மட்டும் அவள் மனதில் பட்டது.

ஏதோ ஒரு சலனம் அவளுக்குள் எழுந்து அவளை இம்சித்தது. சட்டென்று மனம் அலைபாய அவன் பார்வையை ஆராயவே அவனை அடிக்கடி பார்த்தாள். அப்படி பார்க்கும் போது அவனது உடை, அவன் கழுத்தில் இருந்த செயின், அதில் இருந்த டாலர், அவன் கையில் இருந்த வாட்ச், மோதிரம், மோதிரத்தில் இருந்த டிசைன், அவன் கையில் அணிந்திருந்த காப்பு வரைக்கும் அவள் மனதில் பதிந்தது.

இடையில் அவனுக்கு ஒரு போன் வர அவள் பார்வை அவனுடைய கையில் இருந்த போனைக் கூட வருடியது. அவனது அடங்க மறுக்கும் சிகை, அடர்த்தியான புருவம், கூர்மையான அழகான கண்கள், நேர் நாசி, சிவந்த இதழ்கள் என பார்வையிட்டவள் அழகு தான் என்று எண்ணிக் கொண்டாள். அதுவும் அவனது குறுஞ்சிரிப்பு அவளை அள்ளிக் கொண்டு போனது.

அப்படியே அவள் பார்வை லேசாக இறங்கி அவன் கழுத்துச் செயினில் பதிய அந்த செயினும் அவன் மேல் பட்டனை கழட்டி விட்டுருந்த படியால் தெரிந்த மார்பின் ரோமங்களும் அவள் கண்ணில் பட படபடவென வந்தது அவளுக்கு. சட்டென்று தலை குனிந்து கொண்டாள்.

கைகால் எல்லாம் நடுங்கியது. ஏதோ தவறு செய்து விட்டவள் போல தடுமாற்றத்துடன் அமர்ந்திருந்தாள். அவனை சைட் அடித்த விஷயம் யாருக்கும் தெரிந்து விடுமோ என்று தடுமாறிப் போனாள்.

அவள் மன நிலை இப்படி என்றால் அவன் மனநிலை வேறு மாதிரி இருந்தது. லேவண்டர் வண்ணச் சுடிதார் அணிந்து கண் முன் அமர்ந்திருப்பவளை விட்டு அவனால் பார்வையை திருப்பவே முடிய வில்லை. வினோத் மற்றும் நிஷா அருகில் இருக்கும் நினைவில் தன்னை அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தான்.

அதுவும் பார்க்கிங்கில் வைத்து அவள் முகம் மலர்ந்த விதம், “வர மாட்டீங்கன்னு நினைச்சேன். வந்ததுக்கு தேங்க்ஸ்”, என்று அவள் சொன்ன விதம், நிஷாவுடன் குறுஞ்சிறுப்புடன் அவள் பேசும் விதம் என அவனை கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளையடித்துக் கொண்டிருந்தாள். அதுவும் அவள் பார்வை நொடிக்கொரு தரம் தன் மீது படிய அவனுக்கு அதற்கான அர்த்தம் புரிய வில்லை.

ஆனாலும் இந்த நிமிடம் நிஷா மற்றும் வினோத் இருவரும் இங்கிருந்து சென்று விட்டால் எப்படி இருக்கும் என்று அவன் மனம் ஆசை கொண்டது.

“யமுனா…”, என்று அழைத்தான் பரணி. அதிர்வுடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள். தான் அவனை ரசித்ததை கண்டு கொண்டானோ என்று பதறிப் போனாள்.

அவனோ “சாப்பிட வேற ஏதாவது வேணுமா?”, என்று கேட்ட படி அவளை ஆராய்ந்தான். வேணாம் என்னும் விதமாக தலையசைத்தவளை வியப்பாக பார்த்தான். ஏனென்றால் யமுனா அவனைப் பார்க்கும் போது நேர் பார்வையாக பார்ப்பாள். இன்றோ அவள் பார்வை அலை பாய்ந்தது. அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் தடுமாறினாள்.

“என்ன ஆச்சு இவளுக்கு? நான் சைட் அடிக்கிறதைக் கண்டு பிடிச்சிருப்பாளோ? ஆனா அதை கண்டு பிடிச்சாலும் கோபமா இருக்குற மாதிரி தெரியலையே?”,  என்று எண்ணி அவளைப் பார்த்தவனின் கண்களில் அவளது வெட்கம் பட அவன் மனம் உல்லாசமானது.

அதை உறுதி படுத்திக் கொள்ள தங்கையிடம் என்ன ஐஸ்கிரீம் வேண்டும் என்று கேட்டவன் “யமுனா”, என்று மீண்டும் அழைத்தான். அவள் தடுமாற்றத்துடன் நிமிர்ந்து அவனைப் பார்க்க அவள் மயக்கத்தை உணர்ந்து கொண்டவன் “என்ன ஐஸ்கிரீம் வேணும்?”, என்று கேட்டான்.

“சாக்லேட்”, என்று சொல்லி விட்டு பட்டென்று அவள் தலைகுனிய “ஏய் உனக்கு வெண்ணிலா தானே பிடிக்கும்? சாக்லேட்ன்னு சொல்ற?”, என்று கேட்டான் வினோத்.

“ஐயோ சொதப்பிட்டோமே”, என்று நாக்கை கடித்துக் கொண்டு அமைதியாக இருந்தாள். ஒரு மாதிரி படபடப்பாகவும் இருந்தது. அவளுக்கு சாக்லேட் ஐஸ்கிரீம் சுத்தமாக பிடிக்காது. அதையே மறந்து இருக்கும் அவளுடைய நிலை அவளுக்கே திகைப்பாக இருந்தது.

“நான் ஏன் இப்படி என்னையே மறக்குற அளவுக்கு இருக்குறேன்? எதுக்கு இவனைப் பாத்ததும் என் மனசு அலைபாயுது? முதல்ல இவன் இங்க வரணும்னு நான் ஏன் இவ்வளவு ஆசைப் பட்டேன்?”, என்று சுய அலசலில் இறங்கினாள். சுய அலசலுக்கு விடை கிடைக்காமல் அவள் கண்கள் கலங்கியது. அதுவும் பரணியை எதிர்க் கொள்ள அவளால் முடியவே இல்லை. உள்ளுக்குள் மிகவும் மோசமாக உடைந்து போய் இருந்தாள். அதனால் யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் தலை குனிந்து இருந்தாள்.

அவள் அமைதியாக இருக்கவும் “அவ மறந்து போய் சொல்றா சார், இது ஒரு சாக்லேட் பைத்தியம் தான். ஆனா ஐஸ்கிரீம் மட்டும் வெண்ணிலா தான் பிடிக்கும். நீங்க வெண்ணிலா ஆர்டர் பண்ணுங்க. நான் கை கழுவிட்டு வரேன்”, என்று சொல்லிச் சென்றான்.

நிஷாவும் கை கழுவச் செல்ல இந்த தனிமைக்கு கடவுளுக்கு நன்றி சொல்லி விட்டு “என்ன ஆச்சு யமுனா?”, என்று கேட்டான் பரணி.

அவன் கேள்வி காதில் விழுந்தாலும் அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் தன்னுடைய மனதை அடக்க முடியாமல் அமர்ந்திருந்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது.

அவள் கண்ணீரை கண்டவன் பட்டென்று கை நீட்டி டேபிள் மீதிருந்த அவளது இன்னொரு கையில் மீது தன்னுடைய கையை வைத்தான். அவன் தொடுகையில் திகைத்து அவனை நிமிர்ந்து பார்க்க “என்ன ஆச்சு மா?”, என்று கேட்டான். அவன்  வார்த்தைகளும் அவன் குரலில் இருந்த மென்மையும், அவன் கண்களில் வழிந்த நேசமும் அவளை எதுவோ செய்தது. ஆனாலும் இதெல்லாம் மாயையோ என்னும் எண்ணத்தையும் அவளுக்குள் விதைத்தது.

ஆனால் அவன் அப்படிக் கேட்டதும் அடுத்த நொடி அவன் மார்பில் சாய்ந்து தன்னுடைய தவிப்பைச் சொல்ல வேண்டும் என்ற ஆசை வர அது நடக்காததால் அவள் கண்ணீர் இன்னும் அதிகரிக்கத் தான் செய்தது. கலங்கிய கண்களுடன் இதழ்கள் துடிக்க தவிப்புடன் அவனைப் பார்த்தவளைக் கண்டவனுக்கு ஒன்றுமே புரிய வில்லை. இது ஒரு ஆணுக்கான பெண்ணின் தவிப்பு. அவளுடைய வெளியே சொல்ல முடியாத ஏக்கம் தான் கண்ணீராக வெளியே வருகிறது என்பது அவனுக்கு எப்படி தெரியுமாம்?

அவளது கண்ணீர் அவனை அதிகம் பாதித்தாலும் அவனுக்கு அவள் எதற்கு அழுகிறாள் என்று புரிய வில்லை. இவ்வளவு நேரம் நன்றாக தான் பேசிக் கொண்டிருந்தாள். அதுவும் புன்னகை முகமாக தான் இருந்தாள். நிஷாவும் வினோத்தும் சேர்ந்து யமுனாவைக் கிண்டல் செய்த போது கூட அவள் சிரிப்புடன் பதில் கொடுத்துக் கொண்டு தான் இருந்தாள். அதனால் திடீரென்று நிற்காமல் வழியும் அவள் கண்ணீர் அவனை அதிகம் திகைப்புக்குள்ளாக்கியது.

அவனது கரம் அவள் கரத்தை ஆதரவாக பற்றி இருக்க அழுது கொண்டிருந்தாளே தவிர அவன் கரத்தை விலக்க வில்லை. அவளுடைய கையையும் உருவிக் கொள்ள வில்லை. அவன் எந்த உரிமையில் அவள் கரம் பற்றினான் என்பதும் குழப்பமே. ஒரு அந்நியனின் தொடுகையை அவள் தடுக்காததும் அங்கு வியப்பே. நிஷாவின் கொலுசொலி கேட்கவும் அவள் வருகையை உணர்ந்து தன்னுடைய கரத்தை எடுத்துக் கொண்டான் பரணி. யமுனாவும் தன்னை சமாளித்துக் கொண்டாள். வினோத்தும் வந்து அமர்ந்து விட்டான்.

அவர்கள் முன்னால் எதுவும் காட்ட மனமாற்று “கை கழுவிட்டு வரேன்”, என்று சொல்லி எழுந்து சென்றாள். “ஐஸ் கிரீம் வந்தா வாங்கி வைங்க வினோத், நானும் கை கழுவிட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு பரணியும் சென்றான்.

அவன் போன போது கையை கழுவி விட்டு சுவரில் சாய்ந்து கண்களை மூடி ஒரு வித மோன நிலையில் நின்றிருந்தாள் யமுனா.

அவளது அந்த நிலை அவன் மனதைக் கொள்ளை கொண்டாலும் “யமுனா, என்ன ஆச்சு?”, என்று கேட்ட படி கை கழுவினான்.

படக்கென்று கண் விழித்தவள் அவனைக் கண்டு தலை குனிந்து ஒண்ணும் இல்லை எண்ணும் விதமாய் தலையசைத்தாள்.

அவள் புறம் திரும்பியவன் அவளை நெருங்கி வந்தான். அவள் அப்படியே இருக்க அவள் நாடியில் கை வைத்து அவளை நிமிர்த்தியவன் “என்ன பிரச்சனை மா, சொன்னா தானே தெரியும்? எதுக்கு இவ்வளவு அழுகை? வீட்ல ஏதாவது பிரச்சனையா? நீ சொன்னா நான் கண்டிப்பா அதை சரி பண்ணி வைப்பேன். பிளீஸ் சொல்லு”, என்று சொல்ல அவன் பேச்சில் நெகிழ்ந்தவள் அடுத்த நொடி பட்டென்று அவன் மார்பில் சாய்ந்து விட்டாள். அது மட்டும் இல்லாமல் அவன் நெஞ்சின் ஒரு பக்கமாக இருந்த அவன் சட்டையை அவள் கைகள் இறுக்கிப் பிடித்திருந்தது. இறுக்கம் என்றால் இறுக்கம் அப்படி ஒரு இறுக்கம். அவனுக்குள்ளே சென்று விட வேண்டும் போல இருந்தது அவளுக்கு. அதுவும் அவன் வாசனை அவள் நாசிக்குள் நுழைய தன்னையே மறந்தாள் யமுனா.

Advertisement