Advertisement

அத்தியாயம் 8 

உறைந்து தான் போகிறது

எந்தன் செங்குருதி உந்தன்

விழி தீண்டும் போது!!!

அறைக்குள் வந்த வினோத் எப்போதும் போல சட்டையை கழட்டி போட்டு விட்டு குளிக்கச் சென்றான். அவன் குளித்து முடித்து வந்ததும் அங்கே அமர்ந்த தாரணி “எப்படிங்க வேலை கிடைச்சது? நிஜமாவே சம்பளம் ஒரு லட்சமா?”, என்று வியப்புடன் கேட்டாள்.

அவளுடைய இரண்டாவது கேள்விக்கு மட்டும் ஆமா என்று பதில் சொன்னான்.

“என் கிட்ட பேச மாட்டீங்களா? என் மேல கோபமா?”

“கோபமா? கோபம் எல்லாம் உரிமை உள்ளவங்க மேல தான் பட முடியும்? நீ எனக்கு யாரு உன் மேல கோப பட?”, என்று வெறுப்புடன் வந்தது அவன் குரல்.

“என்னங்க இப்படி கேக்குறீங்க?”

“வேற எப்படி கேக்க சொல்ற? ஆமா இத்தனை நாள் இந்த ரூமுக்குள்ள நாம பேசாம தானே இருந்தோம்? இன்னைக்கு மட்டும் ஏன் பேசுற?”, என்று கேள்வி கேட்டவன் “ஓ எனக்கு வேலை கிடைச்சிருச்சுள்ள? அதனால பேசுறியா?”, என்று கேட்டான்.

அவள் அமைதியாக இருக்க “நீ நினைச்ச மாதிரி என்னால கவர்ன்மெண்ட் வேலைக்கு போக முடியலை. இப்ப பணத்தையும் திருப்பி வாங்கிட்டேன். இப்ப உண்மையிலே உங்க குடும்பத்தையும் உன்னையும் ஏமாத்திட்டேன்,. நான் ஒத்துக்குறேன். நீ என்ன முடிவு பண்ணிருக்க? டைவர்ஸ் பண்ணிட்டு வேற கல்யாணம் பண்ணப் போறியா?”, என்று கேட்டான்.

“என்னங்க, அது… நான்… பிளீஸ் அதை மறந்துருங்க”

“என்ன மறக்கணும்? ஆன் எதை மறக்கணும்? இப்ப வந்து பேசுறியே இந்த வேலை கிடைக்கலைன்னா இன்னமும் அப்படி தானே இருந்துருப்ப? ஆசையா கிட்ட வந்தப்ப வேலை இருந்தா வான்னு சொன்னீயே? பணம் இருந்தா வான்னு சொல்றவளுக்கும் உனக்கும் என்ன வித்தியாசம் தாரணி?”, என்று ஒற்றை வார்த்தை கேட்டு விட்டு அவன் வெளியே செல்ல அப்படியே மடங்கி தரையில் அமர்ந்தாள். அவள் கண்கள் தாரை தாரையாக கண்ணீரை உற்பத்தி செய்தது.

அவள் செய்த தவறு அவன் கேட்ட கேள்விக்கு பிறகு தான் தெளிவாக உரைத்தது. உண்மையிலே அவன் கேட்டது சரி தானே? ஆனால் அவள்… அவள் ஒன்றும் பணத்தை பெரிதாக நினைப்பவள் இல்லையே? உன் புருசனுக்கு வேலை இல்லையா என்று கேட்பவர்கள் முன்னிலையில் கௌரவமாக இருக்க தானே நினைத்தாள்? ஆனாலும் அவள் செய்தது தவறு தான். இதை எப்படி சரி கட்ட என்று தலை வேதனையாக இருந்தது.

மொட்டை மாடியில் நின்றிருந்த வினோத்தின் மனம் வானிலையைப் போலவே புழுக்கமாக இருந்தது. மனைவியை வார்த்தையால் காயப் படுத்தி விட்டான். ஆனால் அதற்கான சந்தோஷம் எதுவும் அவனுக்கு வரவில்லை. ஆனால் மனம் இத்தனை நாள் இருந்த ரணத்தை மறக்க தயாராக இருக்க  வில்லை.

சிறிது நேரம் கழித்து கீழே வந்தான். “தாரணியை கூப்பிடு வினோத், நான் சட்னி வச்சிட்டேன். தோசை மட்டும் ஊத்த சொல்லணும்”, என்றாள் காவேரி.

“இதோ வரச் சொல்றேன் மா”, என்று சொல்லி விட்டு அறைக்குள் வந்தான். அழுத படி மூலையில் அமர்ந்திருந்தாள். “இத்தனை நாள் நமக்குள்ள இருந்த பிரிவு அம்மா அப்பாவுக்கு தெரியாது. இனியும் எதுவும் தெரிய வேண்டாம். அம்மா உன்னைக் கூப்பிடுறாங்க. முகத்தை கழுவிட்டு போ”, என்று சொல்ல அவளும் அவன் சொன்ன படி செய்தாள்.

இரவு உணவு உண்ணும் போது தான் அண்ணனின் இறுகிய முகத்தையும் அண்ணியின் சோர்ந்த முகத்தையும் கவனித்தாள் யமுனா. அவளால் என்ன நடந்திருக்கும் என்று யூகிக்க முடிந்தது. ஆனால் இதை எப்படி சரி செய்ய என்று தெரிய வில்லை. புருஷன் பொண்டாட்டி இடையே சண்டை என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால் அதில் அவள் தலையிட முடியாதே.

அண்ணி செய்தது தவறு தான். கணவனுக்கு வேலை இல்லை என்றாலும் அவனுக்கு மனைவி தான் ஆறுதலாக இருந்திருக்க வேண்டும். அதே நேரம் அவள் ஆசையும் தவறு இல்லை. அவளுடைய வீட்டினரிடம் அவள் அவமானப் பட்டதின் விளைவு தானே இது? அண்ணனிடம் பேச வேண்டும் என்று மனதில் எண்ணிக் கொண்டாள். ஆனால் தாய் தந்தையை தாண்டி அவனிடம் எப்படி பேச என்று தெரிய வில்லை.

அடுத்த நாளே வினோத் வேலையில் சேர்ந்து விட்டான். வேலையை முகுந்தன் மற்றும் பரணி இருவரும் சொல்லிக் கொடுத்தார்கள்.

யமுனா நிஷாவிடம் எல்லாம் பகிர்ந்து கொண்டு அவளிடம் நன்றி உரைத்தாள். இப்படியே ஒரு மாதம் கடந்திருந்தது. முதல் மாதம் சம்பளம் வினோத்தின் அக்கவுண்டில் ஏறி இருக்க அதை எடுத்துக்  கொண்டு வீட்டுக்கு வந்தவன் கட்டிலின் மீது வைத்து “இந்தா இந்த மாசம் சம்பளம். எடுத்துக்கோ”, என்று எங்கோ பார்த்துக் கொண்டு தாரணியிடம் சொன்னான்.

“இதை எதுக்கு என் கிட்ட கொடுக்குறீங்க?”

“ஊரைப் பொறுத்த வரைக்கும், இந்த வீட்டைப் பொறுத்த வரைக்கும் நீ தானே என்னோட பொண்டாட்டி? அது மட்டுமில்லாம நான் வேலைக்கு போகணும்னு சொன்னது நீ தானே? அப்ப உன் கிட்ட தானே கொடுக்க முடியும்?”

“நீங்க வேலைக்கு போகணும்னு தான் சொன்னேன். நிறைய சம்பளம் வாங்கணும்னு சொல்லலை. அந்த சம்பளத்தை என் கைல தரணும்னு நான் சொல்லலை. ஒண்ணு அத்தை மாமா கிட்ட கொடுங்க. இல்லை நீங்களே வச்சிக்கோங்க”, என்று சொல்லி செல்ல போகும் அவளை குழப்பமாக பார்த்தான் வினோத்.

அந்த பணத்தை எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளிய  வந்தவன் அப்பாவிடம் கொடுத்தான். அதில் இருந்து பாதியை எடுத்துக் கொண்ட தாமோதரன் “இது கூட உன் தங்கச்சி கல்யாணத்துக்கு தான் எடுக்குறேன். மத்ததை நீயே வச்சிக்கோ”, என்று கொடுத்து விட்டார்.

உடனே தங்கையின் அறைக்குச் சென்றவன் “சம்பளம் வாங்கிருக்கேன் டா. உனக்கு என்ன வேணும்?”, என்று கேட்டான்.

“அண்ணிக்கு என்ன வாங்கிக் கொடுத்தேண்ணா?”

“ஒண்ணும் வாங்கலை மா”

“சரி அவங்களுக்கு வாங்கும் போது எனக்கும் வாங்கு. அப்புறம் இன்னொரு விஷயம் செய்றியா?”

“என்ன மா?”

“அண்ணா, நம்ம எல்லாரோட பிரச்சனையும் சரியானது நிஷாவாலயும் பரணி சாராலயும் தானே? அவங்களுக்கு டிரீட் வைக்கிறியா? என் கிட்ட பணம் இல்லை. அதான்”

“இதுல என்ன மா இருக்கு? நியாயமா பாத்தா அவங்களை நம்ம வீட்டுக்கு கூப்பிட்டு தான் விருந்து வச்சிருக்கணும். ஆனா அம்மா அப்பா என்ன சொல்லுவாங்கன்னு தெரியலை. நீ ஒண்ணு பண்ணு, பரணி சாரோட தங்கச்சியை நீ ஏதாவது ஹோட்டலுக்கு கூட்டிட்டு வா. நான் பரணி சாரை கூட்டிட்டு வரேன். ஆனா கூப்பிட்டா வருவாங்களான்னு தெரியலையே”

“நான் நிஷாவைக் கூப்பிடுறேன். நீ சார் கிட்ட கேட்டு பாருண்ணா”

“சரி மா, நான் கூப்பிடுறேன். ஆனா வரலைன்னா போர்ஸ் பண்ணக் கூடாது. சார் வரலைன்னா நான் பணம் தரேன். நீ சாரோட தங்கைக்கு மட்டும் டிரீட் வச்சிரு”

“சரிண்ணா”, என்று சொன்னவளுக்கு அவன் வர வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அந்த ஆசை ஏன் வந்தது என்று அவளே அறியாள்.

வினோத் சொன்னது போலவே வினோத் அழைத்தும் “அதெல்லாம் எதுக்கு வினோத்?”, என்று மறுத்தான் பரணி. வினோத்க்கும் எப்படி அவனை கட்டாயப் படுத்த என்று தெரிய வில்லை.

தங்கைக்கு அழைத்து “அவர் வரலைன்னு சொல்லிட்டார் மா”, என்று மட்டும் தகவல் சொன்னான். யமுனாவுக்கு என்னவோ போல இருந்தது. அவன் வர வேண்டும் போல, அவனைப் பார்க்க வேண்டும் போல ஒரு உணர்வு எழுந்து அவளை ஆட்டிப் படைத்தது.

“என்ன ஆச்சு யமுனா?”, என்று கேட்டாள் நிஷா.

“ஒண்ணும் இல்லை நிஷா”, என்று சொன்ன யமுனா சிறிது நேரம் கழித்து “உங்க அண்ணா ஹோட்டல்க்கு வரலைன்னு சொல்லிட்டாங்களாம் டி”, என்றாள்.

“அதான் சொன்னேனே? அண்ணா ரொம்ப பிசியா இருப்பான் பேபி. அவன் வரது கஷ்டம். நாம மட்டும் போகலாம். எனக்கு ரொம்ப நாளா உன் கூட வெளிய போகணும்னு ஆசை. ஆனா நீ நான் கூப்பிட்டா வர மாட்ட. அதான் நீ கூப்பிட்டதும் நான் உடனே வந்துட்டேன்”, என்று கண்ணடித்தாள்.

அவள் விளையாட்டுப் பேச்சை ரசிக்கும் மன நிலை கூட யமுனாவுக்கு இல்லை. பரணியை நினைக்கும் மனதை அடக்க எவ்வளவோ முயன்றாள். பாடத்தை கவனிக்க முயற்சி செய்தாள். ஆனால் அவள் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் தான் முடிந்தது. அவனைப் பார்த்தால் மட்டுமே அவள் மனது அமைதியாகும் என்று புரிந்தது.

அடுத்த நொடி எதைப் பற்றியும் கவலைப் படாமல் “பிளீஸ் எங்க கூட நீங்களும் வரலாமே? நான் தான் அண்ணனுக்கு இந்த ஐடியா சொன்னேன். நான் கேட்டு தானே எங்க வீட்டுக்கு இவ்வளவு ஹெல்ப் பண்ணுனீங்க? அதுக்கு உங்களுக்கு முறையா ஒரு நன்றி கூட சொல்லலை. பிளீஸ், நானும் நிஷாவும் உங்களுக்காக வெயிட் பண்ணுவோம். நீங்க வரணும்”, என்று பரணிக்கு மெஸ்ஸேஜ் அனுப்பி வைத்தாள்.

எந்த உரிமையில் அவனுக்கு அனுப்புகிறோம்? எதனால் அவன் வர வேண்டும் என்று இந்த அளவுக்கு தவிக்கிறோம் என்றெல்லாம் அவளுக்கு புரிய வில்லை. ஏதோ ஒரு குருட்டு தைரியத்தில் அனுப்பி வைத்து விட்டாள். ஆனால் அனுப்பிய பிறகு படபடப்பாக இருந்தது.

போனுக்கு ஒரு மெஸ்ஸேஜ் வரவும் யாரோ என்று எண்ணி சிறிது நேரம் பார்க்காமல் விட்டவன் சில வேலைகளை முடித்து விட்டு பார்த்த போது ஆனந்தமாக அதிர்ந்து தான் போனான். யமுனாவிடம் இருந்து தகவலா? அதுவும் தன்னை அழைத்திருக்கிறாளா? அப்படி என்றால் வினோத் அழைத்தது கூட இதற்கு தானா?

அவளும் வருகிறாளா என்று உள்ளம் தவிக்க அவசரமாக தன்னுடைய போனை எடுத்து வினோத்தை அழைத்தான்.

“சொல்லுங்க சார்”

“டிரீட் எப்பன்னு சொன்னீங்க?”

“சார் வரீங்களா நீங்க? இன்னைக்கு சாயங்காலம் உங்களுக்கு ஓகே தானே சார்?”

“ஓகே தான், நான் வரேன்”

“நிஜமாவா சார்? அப்படின்னா நான் யமுனா கிட்ட சொல்லிறேன். அவ உங்க தங்கச்சியை கூட்டிட்டு வந்துருவா

“அவங்களும் வராங்களா?”, என்று தெரியாதது போலவே கேட்டான்.

“ஆமா சார், யமுனா தான் உங்களுக்கு டிரீட் கொடுக்கணும்னு சொன்னா”

“ஓகே வினோத், அப்படின்னா நம்ம ஹோட்டல்க்கே போகலாமே?”

“அங்கயா?”

“ஆமா வினோத், கொஞ்சம் பிரைவசி முக்கியம் அதான். அப்புறம் நான் வறேன்னு சொல்ல வேண்டாம். நிஷாவுக்கு சர்பிரைஸ்”

“சரி தான் சார், நான் யமுனா கிட்ட சொல்லலை. ஹோட்டலுக்கு வரச் சொல்லி மட்டும் சொல்லிறேன்”, என்று சொல்லி போனை வைத்தான்.

Advertisement