Advertisement

அத்தியாயம் 7 

உந்தன் மடியில் தலை

சாயவே விரும்புகிறது

எந்தன் இரும்பு தேகம்!!!

பரணி பேசியது எல்லாம் உண்மையா? முதலில் இப்போது நடந்த சந்திப்பு கூட உண்மையா கனவா? உண்மையிலே தனக்கு வேலை கிடைத்திருக்கிறதா என்று பல குழப்பங்கள் வினோத்துக்கு எழுந்தது.

வீட்டுக்கு சென்றதும் எங்கே போன என்று கேட்ட தாமோதரனிடம் ஏதேதோ சொல்லி சமாளித்தான். பரணி பற்றி ஒன்றும் சொல்ல வில்லை. வேலையில் சேர்ந்த பிறகு சொல்லலாம் என்று எண்ணிக் கொண்டான்.

அடுத்த நாள் காலை ஒன்பது மணிக்கு வினோத்தை அழைத்தான் பரணி. அதை எடுத்து “சார் சொல்லுங்க”, என்றான் வினோத்.

“ஆஃபிஸ்க்கு கிளம்பிட்டீங்களா வினோத்?”

“சார் கிளம்பி உக்காந்துருக்கேன். ஆனா என்னால வேலை கிடைச்சதை நம்பவே முடியலை. அடுத்து என்ன செய்ய எங்க வரன்னு தெரியாம உக்காந்துருக்கேன்”

“ஹா ஹா, என்னைப் பார்த்து பேசினதையே கனவுன்னு நினைச்சிட்டீங்களா என்ன?”

“உண்மையிலே ஆமா தான் சார். எனக்கு அப்படி தான் இருக்கு”

“எல்லாம் உண்மை தான் வினோத். நீங்க இனி நம்ம ஆஃபிஸ்ல தான் வொர்க் பண்ணப் போறீங்க. சரி இப்ப கிளம்பி வறீங்களா?”

“சரி சார், செர்டிபிகேட் எல்லாம் கொண்டு வரணுமா சார்?”

“இன்னைக்கு அதெல்லாம் வேண்டாம் வினோத். நீங்க மட்டும் நம்ம ஹோட்டல்க்கு வாங்க. ரெண்டு மூணு நாள் கழிச்சு உங்க செர்டிபிகேட்ஸ் ஜெராக்ஸை அட்மின்கிட்ட கொடுத்துருங்க. அவங்க எம்ப்ளாயி ஐ. டி கிரியேட் பண்ணித் தருவாங்க. ஜி‌. எம் பதவி ரொம்ப பெருசு. இனி எல்லாம் நீங்க தான் பாத்துக்கணும். என் கிட்ட மன்த்லி ஒன்ஸ் ரிப்போர்ட் மட்டும் பண்ணினா போதும்”

“சரிங்க சார், நான் கால் மணி நேரத்துல அங்க வரேன்”, என்று சொல்லி போனை வைத்தான்.

வினோத் அங்கே சென்றதும் அவனை வரவேற்ற பரணி செக்யூரிட்டியை அழைத்து வினோத்தின் வண்டியை பார்க் செய்யச் சொன்னான். செக்யூரிட்டி வண்டியை எடுத்துச் சென்றதும் “வாங்க”, என்று சொல்லி தன்னுடைய காரை நோக்கிச் சென்றான். பரணி காரைக் கிளப்ப வினோத் அவன் அருகில் ஏறி அமர்ந்தான். எங்கே செல்கிறான் என்று எதுவும் வினோத்துக்கு புரிய வில்லை. ஆனால் வெகு நேரம் கார் சென்று கொண்டிருந்தது. கார் விழுப்புரம் நோக்கிச் சென்றதும் வினோத்துக்கு குழப்பமாக இருந்தது.

“சார் கேசவனைப் பாக்கவா போறோம்? அவன் உங்களை ஏதாவது மரியாதைக் குறைவா பேசிருவான் சார். அங்க வேண்டாமே?”, என்றான் வினோத்.

“அதெல்லாம் பேச மாட்டான் வினோத், நீங்க அமைதியா வாங்க”, என்று சொல்லி கார் ஓட்டுவதில் கவனம் செலுத்தினான். வினோத்தும் என்ன ஆகுமோ என்ற பதட்டத்துடன் அமர்ந்திருந்தான்.

பரணி அவனை அழைத்துச் சென்றது விழுப்புரத்தில் இருந்த ஒரு பெரிய தனியார் மருத்துவமனைக்கு.

“இறங்குங்க வினோத்”, என்று சொன்ன பரணி கீழே இறங்கினான். “இங்க எதுக்கு சார் வந்திருக்கோம்?”, என்று கேட்ட படி வினோத்தும் இறங்கினான்.

“பொறுமையா இருங்க வினோத், எல்லாம் சொல்றேன்”, என்று சொன்ன பரணி கம்பீரமாக மருத்துவமனைக்குள் நடக்க குழப்பத்துடன் அவன் பின்னே சென்றான். ஒரு அறைக்குள் சென்ற வினோத்தின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது.

அங்கே தலை, முகம், கை மற்றும் கால்களில் கட்டுகளுடன் படுத்திருந்தான் கேசவன். அவனைச் சுற்றி அவனது அம்மா, அப்பா மற்றும் அவனுடைய அத்தை பெண் மூவரும் இருந்தார்கள். உள்ளே சென்றதும் தன்னால் எழுந்த பதட்டத்துடன் “என்ன ஆச்சு உங்களுக்கு?”, என்று கேசவனிடம் கேட்டான் வினோத். என்ன தான் கோபம் இருந்தாலும் தங்கையின் கணவராயிற்றே. கேசவனால் எதுவுமே பேச முடியவில்லை.

உடனே வினோத் கேசவனின் பெற்றோரைப் பார்த்தான். அதற்கு அவர்கள் பதில் சொல்லும் முன் அங்கு வருகை புரிந்தார் டாக்டர் ஆப்ரஹாம். அவர் கண்கள் ஒரு நொடி பரணியை நோக்கி பின் வினோத் புறம் திரும்பியது.

“டாக்டர் ஐயா, என் மகனுக்கு பெருசா ஒண்ணும் இல்லையே?”, என்று கேட்டாள் கேசவனின் தாயார்.

“இல்லைன்னு நினைச்சா ஒண்ணும் இல்லை மா. இருக்குனு நினைச்சா பிரச்சனை இருக்க தான் செய்யுது”, என்று குழப்பினார் டாக்டர்.

“டாக்டர் நீங்க என்ன சொல்றீங்க? என்ன பிரச்சனை?”, என்று கேட்டான் வினோத்.

“நீங்க யாரு?”, என்று டாக்டர் கேட்க “இவர் என்னோட தங்கச்சி வீட்டுக்காரர்”, என்று கேசவனைக் காட்டினான் வினோத்.

“ஓ, அப்படின்னா உங்க தங்கச்சி வரலையா? இந்த விஷயத்தை அவங்க கிட்டயும் சொல்லணும்”

“அவ ஒண்ணும் வரணும்னு அவசியம் இல்லை டாக்டர். இனி அவளுக்கு இங்கே என்ன வேலை? இதோ என் அண்ணன் பொண்ணு தான் என் மகனை இனி காலம் முழுக்க பாத்துக்கப் போறா. நீங்க சொல்லுங்க. என் மகன் உயிருக்கு ஒண்ணும் ஆபத்து இல்லையே?”, என்ற கேசவனின் அம்மா தனக்கு அருகே இருந்த ஒரு இளம் பெண்ணைக் காட்டினாள்.

“அது உங்க குடும்ப பிரச்சனை மா. இவர் உயிருக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லை. ஆனா…. இவரால இனி குழந்தை பெத்துக்க முடியாது”, என்று டாக்டர் சொல்ல பரணியைத் தவிர அனைவரும் அதிர்ந்து தான் போனார்கள். பரணி ஒரு ஓரமாக சுவரில் சாய்ந்து நின்று நடப்பதை வேடிக்கை பார்த்தான்.

“என்ன டாக்டர் சொல்றீங்க?”, என்று அதிர்ந்து போய்க் கேட்டார் கேசவனின் தந்தை.

“ஆமா சார், நடந்த ஆக்ஸிடெண்ட்ல இவரோட முதுகுல பயங்கரமா அடி பட்டிருக்கு. அதனால இவரால இனி குடும்ப வாழ்க்கை வாழ முடியாது. ஒரு ரெண்டு நாள் இங்க இருந்துட்டு நீங்க டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம்”, என்று சொல்லி விட்டுச் சென்றார். அனைவரும் இடிந்து போய் அமர்ந்தார்கள்.

“கடவுள் இருக்கார்னு இப்ப நம்புறேன். என்ன எல்லாரும் வாயை மூடிட்டு இருக்கீங்க? இதெல்லாம் உங்களுக்கு தேவை தான். என்னமோ ஆம்பளைத் திமிர்லயும் மாப்பிள்ளை வீட்டுக்காரங்கன்னு திமிர்லயும் அந்த ஆட்டம் ஆடுனீங்க? இப்ப கடவுள் வச்சானா ஆப்பு? நீங்க என்ன என் தங்கச்சியை வேண்டாம்னு சொல்றது? நானே சொல்றேன் என் தங்கச்சிக்கு இவன் வேண்டாம்”, என்றான் வினோத். அவன் பேசியதைக் கேட்டு கேசவன் முகம் கன்றிச் சிவந்தது. அவன் கண்களில் கண்ணீர் வடிந்தது. ஒரு மாதிரி அவமானமாக உணர்ந்தான்.

பேங்க் உத்தியோகம், சென்ட்ரல் கவர்ன்மெண்ட் வேலை என தனக்குள் இருந்த ஆணவம் என்ன? இப்போதிருக்கும் நிலை என்ன? இந்த விஷயம் வெளியே தெரிந்தால் இந்த சமூகம் தன்னை மதிக்குமா என்று எண்ணி அழுதான் கேசவன்.

கேசவனின் கண்ணீர் அவனுடைய அன்னையை பாதிக்க “நீ எதுக்கு டா அழுற? இவன் தங்கச்சியை தான் நாம வேண்டாம்னு தலை முழுகிட்டோமே? உனக்குன்னு அகல்யா இருக்கா டா. ஆஸ்பத்திரில இருந்து வீட்டுக்கு போனதும் இவ உன்னைக் கல்யாணம் பண்ணிப்பா. குழந்தை இல்லைன்னா என்ன டா?”, என்று கேட்டாள்.

“அத்தை என்னை மன்னிச்சிருங்க. என்னால அப்படி எல்லாம் என் வாழ்க்கையை தியாகம் செய்ய முடியாது. நான் ஒரு சாதாரண பொண்ணு. எனக்கு என் புருஷன் கூட எப்படி எல்லாம் வாழணும்னு ஒரு கனவு இருக்கு. அந்த கனவுக்கு எல்லாம் பொருத்தமா கேசவன் அத்தான் இருந்ததுனால தான் நான் ரெண்டாம் கல்யாணமா இருந்தாலும் சரின்னு சொன்னேன். ஆனா இப்ப என்னால முடியாது”, என்று அகல்யா தெளிவாக சொல்ல அனைவரும் அதிர்ந்து போனார்கள். கேசவனுக்கோ பூமிக்குள்ளே புதைந்து போய் விட மாட்டோமோ என்று தோன்றியது.

“அடப்பாவி என் மகன் உனக்கும் ஒண்ணும் இல்லாதவனா போய்ட்டானா டி?”, என்று கேட்ட கேசவனின் தாய் அகல்யாவை அடிக்க போக “அந்த பொண்ணை ஏன் அடிக்க போறீங்க? அவ சொல்றதுல என்ன தப்பு இருக்கு? இந்த மாதிரி ஒண்ணுக்கும் உதவாதவன் கூட யார் தான் காலம் முழுக்க வாழ்வா?”, என்று கேட்டான் வினோத்.

அப்போது “என்னங்க, உங்களுக்கு என்ன ஆச்சு?”, என்று கதறிய படி உள்ளே வந்தாள் காயத்ரி. அவளுடன் தாமோதரன் மற்றும் காவேரி இருவரும் உள்ளே நுழைந்தார்கள்.

காயத்ரியின் கண்களோ அங்கிருந்த யாரையுமே பார்க்க வில்லை. கேசவனின் தலை, கை, கால், முகம் என வருடிய படி கண்ணீர் விட்டவள் “எப்படிங்க இப்படி ஆச்சு? ரொம்ப வலிக்குதா? ஆஸ்பத்திரில இருந்து போன் வந்ததும் பயந்துட்டேங்க”, என்று அழுதாள். அவளையே இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தான் கேசவன். பரணி கூர்மையுடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“காயு, நீ முதல்ல இங்க வா. அவன் கிட்ட உனக்கு என்ன பேச்சு? உன்னை விரட்டிட்டு இந்த பொண்ணைக் கட்டணும்னு நினைச்சான்ல? அதான் கடவுள் சரியான பாடம் எடுத்துட்டார்”, என்றான் வினோத்.

“அண்ணா என்ன பேசுற?”, என்று அதிர்ச்சியாக கேட்டாள் காயத்ரி.

“இவனுக்கு இது தேவை தான் மா. ஆமா முதல்ல நீ எதுக்கு இங்க வந்த? அம்மா அப்பா காயு வாங்க வீட்டுக்கு போகலாம். இனி நமக்கு இங்க வேலை இல்லை”

“அண்ணா, அடி பட்டிருக்குறது என் புருஷனுக்கு. நீ யாரோ போல பேசுற? என்னையும் கூப்பிடுற? நான் தானே அவரைப் பாத்துக்கணும்?”

“உன் புருசனா? அவன் உன்னை என்னைக்கு பொண்டாட்டியா மதிச்சான்? அது மட்டுமில்லாம உனக்கு குழந்தை இல்லைன்னு இந்த அம்மா அவ்வளவு பேச்சு பேசுனாங்களே? இப்ப அவங்க மகனுக்கு ஆண்மையே போயிருச்சாம். இனி குழந்தையே பிறக்காதாம்”, என்று வினோத் சொல்ல காயத்ரி மற்றும் அவளின் பெற்றோர் விக்கித்து போனார்கள்.

Advertisement