Advertisement

எல்லாவற்றையும் கேட்டவன் அவளுடைய மொபைல் நம்பர், வினோத் மற்றும் கேசவனின் மொபைல் நம்பர், கேசவன் வேலைப் பார்க்கும் பேங்க் அட்ரஸ், வினோத் யாரிடம் பணம் கட்டினான், அவர்களின் வீட்டு அட்ரஸ் என எல்லா விவரத்தையும் ஒரு பேப்பரில் தெளிவாக எழுதித் தரச் சொன்னான்.

எல்லாவற்றையும் அவள் எழுதிக் கொடுத்ததும் அதை வாங்கிப் பார்த்தவன் பின் தன்னுடைய சட்டைப் பையில் அதை வைத்து விட்டு “நீ… நீங்க கவலைப் படாம போயிட்டு வாங்க. எல்லாம் நான் பாத்துக்குறேன்”, என்று உறுதி கொடுத்தான். எப்படி பார்ப்பான் என்ன செய்வான் என்று பல கேள்விகள் எழுந்தாலும் ஏனோ அவளுக்குள் சிறு நம்பிக்கை பொறி எழுந்தது.

இவன் அனைத்தையும் பார்த்துக் கொள்வான் என்று நிம்மதியுடன் அவனைப் பார்த்து சிரித்தாள். அவளுடைய சிரிப்பை அவன் ரசித்துப் பார்க்க ஆரம்பிக்க சிறு சலனத்துடன் போய் வருகிறேன் என்னும் விதமாய் தலையசைத்து  விட்டு அங்கிருந்து சென்றாள்.

போகும் அவளையே பார்த்த படி இருந்தவன் அப்போது தான் மணியைப் பார்த்தான். நேரம் ஆறரையை தாண்டி விட்டது. இனி யமுனா பஸ் ஸ்டாண்ட் சென்று பஸ் பிடித்து விட்டு வீட்டுக்கு போக தாமதம் ஆகி விடும் என்று புரிந்தது. கூடவே அவள் வீட்டைப் பார்க்கும் ஆவலும் இருந்தது நிஜம்.

யமுனாவின் வீடு அருகில் தான் என்றாலும் பஸ் கிடைக்க தாமதமாகும் என்று எண்ணி வேகமாக அவளை நெருங்கியவன் அவள் ரோட்டை கிராஸ் பண்ணும் முன் “யமுனா”, என்று அழைத்தான்.

“சார்”, என்ற படி அவனைத் திரும்பிப் பார்த்தாள். “டைம் ஆச்சு. பஸ் கிடைச்சு நீங்க வீட்டுக்கு போக நேரம் ஆகும். வாங்க நான் டிராப் பண்ணுறேன்”, என்றான்.

“பரவால்ல சார், நான் போய்ருவேன். உங்களுக்கு எதுக்கு சிரமம்?”

“இதுல சிரமம் ஒண்ணும் இல்லை. வாங்க”, என்று சொல்லி தன்னுடைய காரை நோக்கி நடக்க அதற்கு மேல் அவளால் மறுக்க முடிய வில்லை. அவன் பின்னே சென்றாள். அவளுக்காக முன் பக்க கதவை அவன் திறந்து வைக்க அதில் ஏறி அமர்ந்தாள். பத்திரமாக அவள் அமர்ந்து விட்டாள் என்று உறுதி செய்து கதவை அடைத்து விட்டு டிரைவர் இருக்கையில் ஏறி காரை கிளப்பினான்.

அடுத்து இருவரும் எதுவும் பேச வில்லை. ஏற்கனவே அவள் வீட்டு அட்ரஸ் சொல்லி இருந்ததால் அவன் பாக்கில் காரை ஒட்டியவன் அவள் வீட்டருகே இருந்த பஸ் ஸ்டாப்பில் காரை நிறுத்தி விட்டு அவளைப் பார்த்தான்.

“இங்க இறங்கிக்கிறீங்களா யமுனா? வீட்ல கொண்டு வந்து விட்டுருவேன். ஆனா தேவையில்லாத கேள்வி வரும், அதான்”, என்று தயக்கத்துடன் சொன்னான்.

“இதுவே அதிகம் சார். ரொம்ப தேங்க்ஸ், நான் வரேன்”, என்று சொல்லி இறங்கிக் கொண்டாள்.

“யமுனா…”

“ஆன்”

“அந்த தெருவுல உங்க வீடு எங்க இருக்கு?”

“அந்த தெருவுலே வீடு முழுக்க முல்லைக் கொடி மறைச்சிருக்குறது எங்க வீடா தான் இருக்கும். பாத்ததும் அடையாளம் தெரிஞ்சிரும் சார்”

“சரி கிளம்புங்க”, என்று அவன் சொன்னதும் அவனைத் திரும்பி திரும்பி பார்த்த படி சென்றாள். அவளுடைய வீடு இருக்கும் தெருவுக்குள் நுழைந்ததும் தான் அவன் காரை எடுத்துக் கொண்டு சென்றான். போகும் போதே தன்னுடைய போனை எடுத்து வினோத்துக்கு அழைத்தான். அப்போது தான் யமுனா வீட்டுக்குள் வந்தாள்.

“ஏன் மா லேட்? அம்மா கத்திக்கிட்டு இருக்கு?”, என்றான் வினோத்.

“பஸ் லேட் அண்ணா”, என்ற படி அவள் உள்ளே செல்ல வினோத் போனை காதுக்கு கொடுத்த படி வெளியே வந்தவன் “ஹலோ யாருங்க?”, என்று கேட்டான்.

“ஹலோ வினோத், நான் பரணி பேசுறேன். ஹோட்டல் பரணி இண்டர்நேசனல் தெரியும் தானே? அங்க கொஞ்சம் வறீங்களா? உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்”

“நான் உடனே வரேன் சார். ஆனா என்ன விஷயம்? இவ்வளவு பெரிய ஆள் என்னைக் கூப்பிடுறீங்க?”

“நேர்ல வாங்களேன், பேசலாம்”, என்று சொல்ல சரி என்று சொன்னவன் உள்ளே சென்று சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்பி விட்டான்.

வினோத் ஹோட்டலுக்கு வந்த போது பரணியே வாசலுக்கு வந்து வரவேற்றான். வினோத்துக்கு வியப்பாக இருந்தது.

வந்ததும் அவன் கையைக் குலுக்கி வரவேற்பு கொடுத்தவன் தன்னுடைய தனி அறைக்கு அவனை அழைத்துச் சென்றான். எளிமையாக இருக்கும் பரணியையும் பிரம்மாண்டமாக இருக்கும் அந்த ஹோட்டலையும் பார்த்து மனதில் எழுந்த பிரம்மிப்புடன் அவனுடன் சென்றான் வினோத்.

அறைக்குள் சென்றதும் ஒரு இருக்கையைக் காட்டி “உக்காருங்க வினோத்”, என்று சொன்னதும் தயக்கத்துடன் அமர்ந்த வினோத் குழப்பத்துடன் பரணியைப் பார்த்தான்.

“நான் ஏன் உங்களை வரச் சொன்னேன்னு குழப்பமா இருக்கா?”

“ஆமா சார்”

“இந்த சார் எல்லாம் வேண்டாமே? பரணின்னு கூப்பிடுங்க. உங்களை விட எப்படியும் எனக்கு கம்மி வயசு தான்”

“பரவால்ல சார். நான் சார்ன்னே சொல்றேன். நீங்க என்ன விஷயமா என்னை வரச் சொன்னீங்க? என்னை எப்படி உங்களுக்கு தெரியும்? சொல்லுங்க சார்”

“உங்க தங்கையும் என்னோட தங்கையும் பிரண்ட்ஸ். அதனால யமுனா அவ கிட்ட உங்க ஃபேமிலி பிரச்சனையை சரி பண்ணச் சொல்லி கேட்டுக்கிட்டாங்க. அதான் உங்களை வரச் சொன்னேன். நான் ஹெல்ப் பண்ணலாம் தானே?”, என்று பரணி கேட்டதும் சிறிது திகைப்பு வந்தாலும் யமுனா மீது வினோத்துக்கு கோபம் எல்லாம் வர வில்லை. தனக்கே எல்லா பிரச்சனையயும் யாராவது தீர்த்து வைத்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றும் போது தன்னுடைய தங்கைக்கு இருக்காதா என்று எண்ணினான்.

அதனால் “எதை தின்னா பித்தம் தெளியும் அப்படிங்குற மனநிலைமைல இருக்குறோம் சார். நீங்க ஹெல்ப் பண்ணுவீங்கன்னு நம்பி தான் யமுனா கேட்டுருப்பா. ஏதாவது செஞ்சு என் இன்னொரு தங்கச்சி வாழ்க்கையை காப்பாத்துங்க சார். ஒரு அண்ணனா என்னால எதுவும் செய்ய முடியலை. வேலை இல்லாததுனால எனக்கு மரியாதை இல்லை. மரியாதை இல்லாததுனால என்னால எதுவுமே பண்ண முடியலை சார்”, என்றான் வினோத்.

“முதல்ல வேலை இல்லை அப்படிங்குற எண்ணத்தை விட்டுருங்க வினோத். இப்ப இந்த நிமிஷம் நீங்க என்னோட ஸ்டாப். ஸ்டாப்னா சாதாரண வேலை இல்லை. பரணி குருப் ஆப் கம்பெனிசில் நீங்களும் ஒரு ஜெனரல் மேனேஜர். உங்களுக்கு கீழே மதுரைல இருக்குற நம்ம ஜூவல்லரி ஷாப், பரணி ஹோட்டல், பரணி மார்பில்ஸ் பேக்டரி, இது மூனும் வருது. இனி இதை நீங்க தான் பொறுப்பா பாத்து ரிப்போர்ட் பண்ணனும். நாளைக்கு காலைல ஆபீஸ் வந்தீங்கன்னா அப்பாயின்மெண்ட் ஆர்டர் தரேன். உங்க சம்பளம் மாசம் ஒரு லட்சம். இப்போதைக்கு பேசிக்கா இதை தான் பண்ண முடியும். கொஞ்ச நாள் கழிச்சு சம்பளமும் கூடும். இல்லை வேற ஏதாவதும் பண்ணலாம். கவர்ன்மெண்ட் ஜாப் ரெடி பண்ணலாம் தான். ஆனா அப்பா இப்ப தான் மினிஸ்ட்டரா ஆகிருக்காங்க. உடனே போய் எதுலயும் தலையிட முடியாது அதான். இது உங்களுக்கு ஓகே வா? கொஞ்ச நாள் எங்க கம்பெனில வொர்க் பண்ணுறீங்களா?”, என்று பரணி கேட்க வினோத்தோ பிரம்மித்துப் போய் அமர்ந்திருந்தான். அவனால் தன்னுடைய காதில் விழுந்ததை நம்பவே முடிய வில்லை.

“ஹலோ வினோத், என்ன எங்க ஆஃபிஸ்ல வொர்க் பண்ணுறீங்களா? இல்லை வேற எங்கயாவது வேலை அரெஞ்ச் பண்ணட்டுமா? ஆனா என் அளவு சம்பளம் வேற இடத்துல தர மாட்டாங்க”

“சார், நீங்க சொன்னதைக் கேட்டு எனக்கு நெஞ்சு வலி வராதது  தான் குறை. குடிசைல இருக்குறவனை தூக்கி கோபுரத்துல வைக்கிற மாதிரி இருக்கு. சம்பளமும் ரொம்ப அதிகம் சார்”

“சம்பளம் அதிகமெல்லாம் இல்லை. அதுக்கேத்த வேலை இருக்கும். அந்த வேலைக்கு அந்த சம்பளம் வொர்த் தான். உங்களுக்கு ஓகே தானே?”

“சம்மதம் சார்,. உங்களுக்கு நன்றி சொல்ல என் கிட்ட வார்த்தையே இல்லை. ரொம்ப சந்தோஷமா இருக்கு சார்”

“குட், நீங்க கொஞ்ச பொறுப்பை பாத்துக்கிட்டா நான் கொஞ்சம் ஸ்ட்ரெஸ் இல்லாம் இருப்பேன். நாளைக்கு வாங்க வேலை பத்தி பேசலாம். இப்ப உங்க சிஸ்டர் விஷயம் பேசுவோம். அந்த கேசவன் ஆள் எப்படி?”

“எப்படின்னா எப்படி சொல்ல? சரியான திமிர் பிடிச்சவன் சார்., எனக்கு வேலை இல்லைன்னு மதிக்க மாட்டான். அது கூட பரவால்ல சார். என் தங்கச்சி மேல அவனுக்கு கொஞ்சம் கூட அன்பே இல்லை சார். அதான் அவ வீட்ல அவளை பாடாய் படுத்தியும் அவன் கேக்க மாட்டிக்கான். அவனுக்கு என் தங்கச்சி பத்தி புரியலை. அவளை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்து வச்சு இன்னொரு மாப்பிள்ளைக்கு கட்டி வைக்கிற அளவுக்கு எங்க வீட்ல புரட்சியாளர்கள் இல்லை சார். என்ன செய்ய? அந்த கேசவன் திருந்தினா காயத்ரி வாழ்க்கை நல்லா இருக்கும். வேற எதுவும் செய்ய முடியாது சார்”

“அப்படின்னா நாம கேசவன் கிட்ட தான் பேசணும் வினோத்”

“நாம பேசினா அவன் கேக்கவே மாட்டான் சார். கேக்க என்ன?  நம்மளை… சாரி சாரி என்னை மனுசனா கூட மதிக்க மாட்டான்”

“அவன் மதிச்சா என்ன மதிக்கலைன்னா நமக்கு என்ன? உங்க சிஸ்டரை அவன் மதிக்கணும் அப்படி தானே?”

“ஆமா சார்”

“சரி எல்லாம் நான் பாத்துக்குறேன். இப்ப ஏதாவது சாப்பிடலாம்”, என்று சொன்னவர் மேனேஜரை அழைத்து உணவு வகைகளை வினோத்திடம் கேட்டு கொண்டு வரச் சொன்னான். இருவரும் பேசிய படியே உண்டார்கள்.

உண்டு முடித்ததும் “வாங்க போகலாம். உங்களை உங்க வீட்ல டிராப் பண்ணுறேன்”, என்றான் பரணி.

“நான் வண்டில தான் சார் வந்தேன். நான் போய்க்கிறேன்”

“சரி வினோத். நாளைக்கு பாக்கலாம்”, என்று பரணி சொன்னதும் வினோத் கிளம்பிச் சென்றான். பார்க்கிங்கில் இருந்து வண்டியை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு சென்ற வினோத் மனதில் பல எண்ணங்கள் சுழன்றது.

காரிகை வருவாள்…..

Advertisement