Advertisement

“உங்க தங்கை யமுனாவை தான் சொன்னேன். அவங்க அன்புனால மட்டும் தான் எல்லாமே சரியா நடக்குது. அவங்க உங்க குடும்பத்து மேல வச்சிருக்க பாசம் ரொம்ப பெருசு. எனக்கும் ஒரு தங்கை இருக்கு. அந்த அக்கறைல சொல்றேன். உங்க தங்கையை அவங்க மதிப்பு தெரிஞ்ச ஒருத்தனுக்கு கட்டி வைங்க. கவர்ன்மெண்ட் மாப்பிள்ளைன்னு சொல்லி கேசவன் மாதிரி ஆள் கூட கோர்த்து விட்டுறாதீங்க”, என்று சொன்னான். அவன் மனதிலோ அவள் தனக்கு மட்டுமே வேண்டும் என்ற ஏக்கம் பிறந்தது.

“கண்டிப்பா சார். உண்மையிலே அவ ஒரு தேவதை தான் சார். காயத்ரியாவது கொஞ்சம் சுயநலமா இருப்பா. ஆனா யமுனா எப்பவும் அடுத்தவங்களுக்காக தான் யோசிப்பா. அவ நல்லா இருக்கணும் சார். அவளுக்கு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுப்பேன்”, என்று உள்ளார்த்த அன்புடன் தங்கையைப் பற்றிச் சொன்னவன் “சார், நாம இப்ப எங்க போறோம்?”, என்று கேட்டான்.

“வேலை வாங்கித் தருவான்னு ஒருத்தன் கிட்ட பணம் கொடுத்தீங்கல்ல? அதை திருப்பி வாங்க வேண்டாமா? மூணு லட்சம் ஒண்ணும் சும்மா இல்லையே? கண்டிப்பா அதை உங்க அப்பா தான் கொடுத்திருப்பார். அவர் கிட்ட பணத்தை வாங்கி எவனோ ஒருத்தன் கிட்ட கொடுத்துட்டு நீங்க எப்படி துடிச்சிருப்பீங்க? அந்த பிரச்சனையை சரி பண்ண வேண்டாமா?”,. என்று கேட்கும் போது வினோத்துக்கு அவன் காலிலே விழ வேண்டும் போல இருந்தது.

ஏனோ அவனைக் கட்டி அணைத்து கண்ணீர் வடிக்க வேண்டும் என்ற ஆசை வர அதைச் செய்ய முடியாததால் நெகிழ்ந்து போய் இருந்தான். அவன் உணர்வு புரிந்த பரணியும் அமைதியாக காரை ஓட்டினான்.

கார் ஒரு சட்டமன்ற அலுவலகம் முன்பு போய் நின்றது. அங்கிருந்த பழனிசாமி என்ற எம்.எல்.ஏ தான் அவனை ஏமாற்றி இருந்தார். இவர்கள் கார் நின்றதும் உடனே அங்கே வந்தான் முகுந்தன். அவனுடன் இன்னும் இருவர் இருந்தார்கள்.

“என்ன சொல்றான் முகுந்தன்?”, என்று கேட்டான் பரணி.

“முதல்ல வினோத்துன்னு யாருமே தெரியாதுன்னு சொன்னான். மிரட்டின பிறகு ஒத்துக்கிட்டான். பணத்தைக் கேட்டா ஒரு மந்திரி கிட்ட வேலைக்காக கொடுத்தேன்னு சொன்னான். எந்த மந்திரின்னு கேட்டா நம்ம அப்பா பேரைச் சொன்னான். அதுக்கு மேல நம்ம ஆளுக்கு கை நிக்குமா? எங்க ஐயாவா டா உன் கிட்ட பணம்  வாங்கினார்ன்னு கேட்டு துவைச்சிட்டாங்க. மன்னிப்பு கேட்டுட்டு பணத்தை ரெடியா வச்சிட்டு உக்காந்துருக்கான். உள்ள வாங்க போகலாம்”, என்றான் முகுந்தன்.

“இவர் தான் வினோத். அப்புறம் வினோத், இவன் முகுந்தன். என்னோட ஃபிரண்ட், அப்புறம் நம்ம கம்பெனியோட லீகல் அட்வைசர்”, என்று இருவருக்கும் அறிமுகப் படுத்தினான் பரணி.

வினோத் “வணக்கம் சார்”, என்று கரம் குவிக்க “கமான் வினோத், இந்த சார் மோர் எல்லாம் வேண்டாம்”, என்று சொல்லி அவன் கரம் பற்றி குலுக்கினான் முகுந்தன். அதற்கு பின் அனைவரும் அந்த அலுவலகத்துக்குள் சென்றார்கள்.

இடிந்து போய் அமர்ந்திருந்தான் அந்த பழனிசாமி. வெளியே காயம் தெரிய வில்லை என்றாலும் உள் குத்துக்கள் பல இருக்கும் என்று தோன்றியது.

அவர்கள் சென்றதும் பயந்து வினோத்திடம் மன்னிப்பு கேட்டு பணத்தைக் கொடுத்தான். பரணியைப் பார்த்ததும் இன்னும் நடுங்கினான்.

“என்ன தைரியம் இருந்தா என் அப்பா தான் லஞ்சம் வாங்கியதா சொல்லிருப்ப. இப்ப இப்படிச் சொல்ற நீ இன்னும் அவரைப் பத்தி என்னல்லாம் சொல்லுவ? உன்னை எல்லாம் எங்க பேசனுமோ பேசிக்கிறேன் டா”, என்று சொல்லி விட்டு கிளம்பினான் பரணி.

நிச்சயம் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் வரும் என்று எண்ணிக் கொண்டான் வினோத். கையில் வைத்திருந்த பணத்தைக் கண்டு அவன் கண்கள் கண்ணீரால் நிறைந்தது.  வரும் வழியில் மீண்டும் மீண்டும் நன்றி சொல்லிக் கொண்டே வந்தான் வினோத். அவனை வீட்டில் இறக்கி விட்டான் பரணி.

கார் சத்தம் கேட்டு ஆவலாக ஓடி வந்தாள் யமுனா. அவளைக் கண்டதும் பரணியின் கண்கள் மின்னியது. அதுவும் ஒரு லாங் பாவாடையும், ஒரு டீஷர்ட்டும் அதற்கு மேல் ஒரு ஷாலும் போட்டிருந்தாள்.

கல்லூரி முடிந்து வந்திருந்ததால் தலையெல்லாம் கலைந்து இருந்தாலும் முகம் மட்டும் பளிச்சென்று இருந்தது. அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் பரணி.

ஏற்கனவே காயத்ரி விஷயம் கேட்டு சந்தோஷமாக இருந்தவளின் முகம் இன்னும் அதிகமாகவே மலர்ந்து இருந்தது. “யமுனா, சார்… நம்ம பிரச்சனை எல்லாம் சரி பண்ணிட்டார் மா”, என்று கலங்கிய குரலில் சொன்னான் வினோத்.

நன்றியுடன் அவனை திரும்பி பார்த்தவள் “ரொம்ப நன்றி சார். பிளீஸ் உள்ள வாங்களேன்”, என்றாள்.

அவளுடன் இன்னும் கொஞ்ச நேரம் இருக்க ஆசையாக தான் இருந்தது. ஆனால் அது சரி வராது என்பதால் “இல்லை இன்னொரு நாள் வரேன். வேற ஏதாவது ஹெல்ப் வேணும்னாலும் கேளுங்க”, என்று வினோத்திடம் சொன்னவன் யமுனா புறம் திரும்பி நான் கிளம்புறேன்”, என்றான்.

அவள் சரி என்று தலையசைக்க அவளைப் பார்த்த படி கிளம்பினான். அவனது கார் கிளம்பியதும் அண்ணனும் தங்கையும் வீட்டுக்குள் நுழைந்தார்கள்.

தாமோதரன் மற்றும் காவேரி இருவரும் அமர்ந்திருக்க அனைவருக்கும் டீ போட்டு எடுத்து வந்தாள் தாரணி. அவனைக் கண்டதும் “உங்களுக்கும் கொண்டு வரவா?”, என்று கேட்டாள்.

“எனக்கு வேண்டாம்”, என்று அவள் முகம் பார்க்காமல் சொன்ன வினோத் தாமோதரனிடம் “இந்தாங்க”, என்று கையில் இருந்த பையை நீட்டினான்.

“என்ன வினோத்?”, என்று கேட்ட படி அதை வாங்கினார்.

“எனக்கு கவர்ன்மெண்ட் வேலை கிடைக்கணும்னு நீங்க எனக்காக கட்டிய பணம்”, என்று சொல்ல அனைவரும் திகைத்து தான் போனார்கள்.

“எப்படி அண்ணா கிடைச்சது?”, என்று ஆனந்தமாக கேட்டாள் யமுனா.

“பரணி சார் தான் மா வாங்கி கொடுத்தார்”

“இந்த பணத்தை வேற யார் கிட்டயாவது கொடுத்து வேலைக்கு ஏற்பாடு பண்ணுவோமா வினோத்?”, என்று கேட்டார் தாமோதரன்.

“வேண்டாம் பா, இந்த பணத்தைக் கொடுத்துட்டு என்னமோ நீங்க உங்க தயவுல தான் நான் இருக்கேன்னு ரொம்ப பேசிட்டீங்க? என்னை உதவாக்கரைன்னு நிறைய முறை சொல்லிட்டீங்க. இன்னும் அதை நான் வாங்கினா திருப்பியும் அப்படி பேச்சு வாங்க வேண்டியது வரும்”, என்று அவன் சொல்ல அவர் தலை குனிந்தார்.

“அது அப்பா ஏதோ ஒரு ஆதங்கத்துல சொல்லிட்டார் வினோத்”, என்றாள் காவேரி.

“எனக்கு புரியுது மா. ஆனா பணத்தை கட்டிட்டு வேலைக்கு போகாம நான் ரொம்ப அவமானப் பட்டுட்டேன்”, என்ற படி மனைவியை ஒரு பார்வை பார்த்து விட்டு அன்னை புறம் திரும்பியவன் “எனக்கு அப்பா மேல எந்த வருத்தமும் இல்லை. அப்புறம் இன்னொரு விஷயம், எனக்கு வேலை கிடைச்சிருச்சு. பரணி குருப் ஆப் கம்பெனிஸ்ல ஜெனரல் மேனேஜர் போஸ்ட், மாசம் ஒரு லட்சம் சம்பளம். நாளைல இருந்து வேலைக்கு போகணும்”, என்று சொல்ல அனைவருக்கும் ஆனந்த அதிர்ச்சியாக இருந்தது.

தாரணி மலர்ந்த முகத்துடன் அவனைப் பார்க்க அவனோ அவள் புறம் திரும்பவே இல்லை.

“வினோத், நீ சொல்றது எல்லாம் சரி தான். ஆனா அந்த அரசியல்வாதி பையனை எப்படி உனக்கு தெரியும்? நம்ம வீட்டு பிரச்சனை எல்லாம் எப்படி அவனுக்கு தெரிஞ்சது?”, என்று கேட்டாள் காவேரி.

அவள் சாதாரணமாக கேட்கிறாள் என்று எண்ணி “நம்ம யமுனா தான் அவ பிரண்டு கிட்ட பீல் பண்ணிருக்கிறாள் போல மா. அவ பிரண்டோட அண்ணன் தான் பரணி சார்”, என்றான்.

யமுனாவும் நல்லது தானே செய்திருக்கிறோம் என்று எண்ணி அமைதியாக நின்றாள். ஆனால் காவேரியோ அவளை காச்சு காச்சென்று காய்த்து எடுத்து விட்டாள்.

“என்ன பழக்கம் இது குடும்ப விஷயத்தை கண்டவங்க கிட்ட சொல்றது? அதுவும் அரசியல்வாதிங்க கூட எல்லாம் பழக்கம் வைக்கணுமா? இனி அந்த பிள்ளை கூட பேசுறதை நிறுத்திக்கோ”, என்று சொல்ல யமுனாவுக்கு கண்கள் கலங்கி விட்டது.

“அம்மா அவ நல்லது தானே பண்ணிருக்கா. எதுக்கு அவளை திட்டுறீங்க?”, என்று சண்டைக்கு வந்தான் வினோத்.

“நல்லதா? முதல்ல அவ ஒரு பொம்பளை பிள்ளை வினோத். ஒருத்தன் கையில பிடிச்சு கொடுக்குற வரை அமைதியா அடங்கி தான் இருக்கணும். அரசியல்வாதிங்க, கோடீஸ்வரங்க எல்லாம் எப்படி பட்டவங்கன்னு கேள்விப் பட்டுட்டு தானே இருக்கோம்? அவங்க கூட எல்லாம் பழக்கம் வச்சிக்க கூடாது. இனி இப்படி ஒரு விஷயம் நம்ம வீட்ல நடக்க கூடாது. அப்புறம் வினோத், நீயும் அங்க வேலைக்கு போனோமா வந்தோமான்னு இருக்கணும். அந்த பையன் கூட எல்லாம் அதிகம் பேசக் கூடாது”, என்று சொல்ல அரை மனதுடன் தலையசைத்தான்.

தனது அறைக்குச் சென்ற யமுனாவோ “நல்லதா போச்சு இந்த அண்ணன் நான் பார்க்ல போய் அவர் கிட்ட பேசினதைச் சொல்லலை. சொல்லிருந்தா அம்மா என்னை அடியே பின்னிருப்பாங்க”, என்று எண்ணிக் கொண்டு தன்னுடைய போனை எடுத்து தன்னுடைய நன்றியை பரணிக்கு மெஸ்ஸேஜ் மூலம் தெரிவித்தாள்.

அவளிடம் இருந்து வந்த தகவலில் அவன் முகமும் அகமும் மலர்ந்தது. ஆனால் பதில் அனுப்பினால் மீண்டும் மீண்டும் பேசத் தோன்றும் என்று அமைதியாக இருந்தான். ஆனால் சிறிது நேரத்தில் தன்னுடைய மெஸ்ஸேஜ்க்காக அவள் காத்திருப்பாள் என்று எண்ணி ஒரு சிரிக்கும் பொம்மையை மட்டும் அவளுக்கு அனுப்பி வைத்தான். அதிலே அவள் முகம் மலர்ந்து போனது.

அவன் வேறு ஏதாவது அனுப்பி இருந்தால் அவள் பதில் அனுப்பி இருப்பாள். இப்போது அதை அப்படியே விட்டுவிட்டாள். ஆனால் அவன் செய்த நன்றி மட்டும் மனம் நிறைய நிறைந்திருந்தது. நிஷாவுக்கும் அழைத்து நன்றி சொல்லி நடந்ததைச் சொன்னாள்.

காரிகை வருவாள்…..

Advertisement