Advertisement

காயத்ரி சிலை என நிற்க “நீ நல்ல நேரத்துல தான் காயு நம்ம வீட்டுக்கு வந்திருக்க? இனியும் நம்ம வீட்லயே இரு. அவங்க இந்த பொண்ணைக் கல்யாணம் பண்ணுறாங்க. இல்லை கருமாதி பண்ணுறாங்க. இவன் நிலைமை தெரிஞ்ச உடனே இந்த பொண்ணு கூட விவரமா வேண்டாம்னு சொல்லிருச்சு. நீயும் வா, போகலாம். இங்க இருந்து இவனுக்கு நர்ஸ் வேலை பாக்கப் போறியா?”, என்றான் வினோத்.

“அண்ணா என்ன பேசுற நீ? எனக்கு அவர் மேல வருத்தமும் கோபமும் இருக்கு தான். அதுக்குன்னு இந்த நிலைமைல அவரை விட்டுட்டு எப்படி இருப்பேன்? அது மட்டும் இல்லாம இப்ப குழந்தை இல்லைன்னா என்ன? நாங்க ரெண்டு பேரும் எப்படியோ வாழ்ந்துட்டு போறோம். ரொம்ப ஆசையா இருந்தா ஒரு குழந்தையை தத்து எடுத்துக்குறோம். நீங்க எல்லாரும் போங்க. நான் அவர் கூடவே இருந்து பாத்துக்குறேன்”, என்று சொன்னவள் “நீங்க கவலைப் படாதீங்க. உங்களுக்கு ஒண்ணும் இல்லை. ரொம்ப வலிக்குதா? ஏதாவது சாப்ட்டீங்களா?”, என்று கணவனிடம் கேட்டுக் கொண்டிருந்தாள். ஒரு ஓரமாக நின்றிருந்த பரணி காயத்ரியின் பேச்சால் மலர்ந்த கேசவனின் முகத்தை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

அனைவரும் அவர்களை வியப்பாக பார்க்க வினோத் மெதுவாக கேசவனின் தாய் அருகே சென்று “என்ன மா அப்படி திகைச்சு போய் நிக்குறீங்க? இது தான் என் தங்கச்சி. நீங்களும் உங்க பிள்ளையும் அவளை எவ்வளவு நோகடிச்சாலும் அன்பை மட்டும் தான் காட்டுவா. உங்களை மாதிரி அவ சுயநலம் பிடிச்சவ கிடையாது. நாங்களும் உங்க பிள்ளைக்கு ஆண்மை இல்லை, அதனால எங்க வீட்டு பொண்ணு உங்க பையனை விட்டுட்டு வரணும்னு எல்லாம் நினைக்க மாட்டோம். நான் இவ்வளவு நேரம் பேசினது கூட காயத்ரி பத்தி நீங்க புரிஞ்சிக்கணும்னு தான். இப்ப என் தங்கச்சியைப் பத்தி உங்க எல்லாருக்கும் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்”, என்றான்.

அனைவருக்கும் காயத்ரியின் நல்ல மனது புரிந்தது. கேசவனின் அம்மா உண்மையிலே காயத்ரியிடம் மன்னிப்பு கேட்டாள். அப்போது அந்த அறையை விட்டு வெளியே வந்த பரணி டாக்டரைத் தான் அழைத்தான். அடுத்த இரண்டு நிமிடத்தில் நர்ஸ் உடன் உள்ளே வந்த டாக்டர் “இவருக்கு ஒரு சின்ன சர்ஜரி இருக்கு. பாரீன்ல இருந்து ஒரு டாக்டர் வந்திருக்கார். அவர் இவரைப் பாக்கணும். நாங்க ஐ.சி.யுக்கு கொண்டு போறோம்”, என்றார்.

காயத்ரி கேசவனின் கையைப் பற்றி கண்ணீர் விட அவள் காதலில் கொஞ்சம் கொஞ்சமாக உயிர்த்தெழுந்து கொண்டிருந்த கேசவன் அவளைப் பார்த்து புன்னகைத்தான். அவளுக்காக வாழ வேண்டும் என்ற ஆசை அவனுக்குள் எழுந்தது. செவிலியர்கள் அவனை அழைத்துச் சென்றார்கள்.

அடுத்த அரை மணி நேரம் கழித்து அனைவரையும் காண வந்த டாக்டர் “இப்ப எந்த பிரச்சனையும் இல்லை. அவரோட எல்லா பிரச்சனையும் சரியாகிருச்சு. அவர் முதுகுல இருந்த பிரச்சனையையும் சரி பண்ணியாச்சு”, என்று சொன்னவர் காயத்ரி புறம் திரும்பி “உங்களுக்கும் குழந்தை பிறக்கும் மா”, என்று சொல்லிச் செல்ல அனைவரின் கண்களிலும் ஆனந்த கண்ணீர் வந்தது.

அப்போது தான் வினோத்துக்கு பொறி தட்டியது. “இதென்ன இவ்வளவு பெரிய பிரச்சனையை உடனே சரி பண்ணிட்டாங்க?”, என்று எண்ணியவன் அப்போது தான் அனைத்தையும் யோசித்தான்.

தன்னை பரணி எப்படி இங்கு அழைத்து வந்தான்? அம்மா அப்பா காயத்ரி எல்லாம் இங்கே எப்படி வந்தார்கள்? என்று யோசித்து அவன் பரணியின் புறம் திரும்ப அவனோ மென்மையாக அவனைக் கண்டு புன்னகைத்தான்.

அப்படி என்றால்….. என்ன நடந்திருக்கும் என்று புரிந்த வினோத்தின்  கண்கள் மின்ன இங்கு வைத்து எதுவும் பேச வேண்டாம் என்னும் விதமாய் கண்களைக் காட்டினான் பரணி.

நிம்மதி பெருமூச்சு எழுந்த வினோத் யாரும் கவனிக்காதவாறு பரணியை நெருங்கி அவன் கையை இறுக பற்றிக் கொண்டு தன்னுடைய நன்றியை அவனுக்கு தெரிவித்தான்.

பரணியும் அவனை ஆறுதலாக அணைத்துக் கொண்டான். சிறிது நேரத்தில் கேசவனை தனி அறைக்கு மாற்றி இருந்தார்கள். அவன் நல்ல உறக்கத்தில் இருந்தான். அவன் அருகே சென்று அமர்ந்து கொண்டாள் காயத்ரி.

கேசவனின் குடும்பத்துடன் காயத்ரியை சேர்த்த நிம்மதியுடன் மற்ற அனைவரும் கிளம்பினார்கள்.

டிரைவர் சீட்டில் அமர்ந்து கம்பீரமாக கார் ஒட்டிக் கொண்டிருந்தான் பரணி. அவனை பிரம்மிப்பாக பார்த்துக் கொண்டிருந்தான் வினோத். கிட்டத்தட்ட மூன்று வருடமாக நடந்து கொண்டிருந்த போராட்டம் ஒரே நாளில் முடிவுக்கு வந்ததை எண்ணி அவன் மனம் விம்மியது.

கடவுள் நேரில் வந்து மனிதர்களின் பிரச்சனையை தீர்க்க முடியாது என்பதனால் இந்த மாதிரி தேவதூதர்களை அனுப்பி வைக்கிறானோ என்று எண்ணிக் கொண்டான்.

தாமோதரன் மற்றும் காவேரி இருவரும் மனதுக்குள் மகள் வாழ்க்கை சரியாகி விட்டது என்ற சந்தோஷம் இருந்தாலும் பரணி யார் என்று அவர்களுக்கு தெரியும். பரணியுடன் வினோத் எப்படி இங்கு வந்தான்? கேசவனுக்கு எப்படி அடி பட்டது என்று பல கேள்விகள் அவர்களுக்குள்ளும் இருந்தது. ஆனால் அவன் முன்னிலையிலே விடை கேட்க முடியாமல் மௌனமாக இருந்தார்கள்.

அவர்கள் வீட்டு வாசலில் காரை நிறுத்தினான் பரணி. தாமோதரன் மற்றும் காவேரி இருவரும் இறங்கியதும் வினோத்தை பார்த்தான். “உள்ள வந்துட்டு போங்க சார்”, என்றான் வினோத்.

“இல்ல வினோத், பரவால்ல. இன்னொரு நாள் வரேன்”, என்று சொன்னதும் வினோத்தும் இறங்கப் போனான்.

“நீங்க எங்க போறீங்க? இன்னொரு முக்கியமான வேலை இருக்கு. உக்காருங்க”, என்று சொன்னதும் குழப்பத்துடன் அமர்ந்தான் வினோத். தாமோதரன் மற்றும் காவேரி இருவரும் கேள்வியாக அவர்களைப் பார்க்க “சார் கூட கொஞ்சம் வெளிய போய்ட்டு வரேன் பா”, என்று வினோத் சொன்னதும் அவர் குழப்பத்துடன் தலையசைத்தார்.

போயிட்டு வரேன் என்னும் விதமாய் பரணியும் அவர்களை பார்த்து தலையசைக்க அவர்களும் சரி என்னும் விதமாய் தலையசைத்தார்கள். அவனை உள்ளே அழைக்க கூட அவர்களுக்கு தோன்ற வில்லை.

கார் நகர்ந்ததும் அவர்கள் குழப்பத்துடன் உள்ளே சென்றார்கள். தாரணி என்ன விஷயம் என்று கேட்க எல்லாம் தெளிவாக சொன்னார்கள். அவளுக்கும் குழப்பமே.

“சார், என்னால நம்பவே முடியலை சார். எப்படி சார் இதெல்லாம்? காயத்ரி விஷயத்தை ஒரு நிமிசத்துல ஒண்ணும் இல்லாம பண்ணிட்டீங்க? உங்களுக்கு எப்படி என்னோட நன்றியை சொல்லப் போறேன்னு தெரியலை”, என்று நெகிழ்ந்து போய் உரைத்தான் வினோத்.

“ஒரு மனுசனுக்கு இயல்பிலே நல்ல குணமும் சுயநலமும் இருக்கும்  வினோத். அந்த சுயநலம் எப்ப உடையும் தெரியுமா? நாம அடுத்தவங்க தயவை எதிர் பார்த்து நிக்கும் போது தான். அதை வச்சு தான் இதை சரி செஞ்சேன். அப்புறம் நான் உங்க கிட்ட சாரியும் கேக்கணும்”

“எதுக்கு சார்?”

“கேசவனை கார் வச்சு தூக்கினது நான் தான்”, என்று சொல்ல அதிர்ந்து அவனை பார்த்தான் வினோத். இது வரை கேசவனுக்கு ஏதோ ஆக்ஸிடெண்ட் நடந்து அதை எப்படியோ தெரிந்து கொண்ட பரணி டாக்டரை வைத்து அப்படி பேச வைத்திருக்கிறான் என்று தான் எண்ணி இருந்தான். ஆனால் அந்த ஆக்ஸிடெண்ட்டே பரணி தான் செய்திருப்பான் என்று நினைக்க வில்லை.

அவன் திகைத்து விழிக்க “என்னோட ஆள் தான் கேசவனை தூக்கினது. உடனே ஆஸ்பத்திரில சேத்ததும் என் ஆட்கள் தான். லேசா தான் தட்ட சொன்னேன். உங்களுக்கே தெரியும், சில அறுவை சிகிச்சை செய்யாம நோயை குணப் படுத்த முடியாதுன்னு. அதனால தான். கேசவனை முதல்ல உடல் ரீதியா பலவீனப் படுத்தி அதற்கு பிறகு மன ரீதியாக பலவீனப் படுத்தினோம். அப்படி செஞ்சா தான் அவன் அவனைப் பத்தி யோசிப்பான். யார் அவனுக்கு முக்கியம் அப்படிங்குற எண்ணம் வரும். முதல்ல அவனுக்கு வேற விதமா புரிய வைக்க தான் நினைச்சேன். ஆனா அவன் சரியா ஆனாலும் உங்க தங்கைக்கு புகுந்த வீட்டு சொந்தம் எல்லாம் வேணுமே? அதனால தான் மொத்த குடும்பத்தையும் டார்கெட் பண்ண வேண்டியதா போச்சு. கேசவனோட அம்மா அப்பாவுக்கும் மருமகளோட நல்ல குணம் தெரியனுமே? அதான் டாக்டர் வச்சு அப்படி சொல்லச் சொன்னேன். என்னை மன்னிச்சிருங்க வினோத்”

“சார், யாரு யாருகிட்ட மன்னிப்பு கேக்குறது? நீங்க செஞ்சதுக்கு எங்க மொத்தக் குடும்பமும் உங்க கால்ல விழுந்து கும்பிடனும் சார். நீங்க செஞ்சது சரி தான். இல்லைன்னா கேசவனும் அவனோட அம்மாவும் திருந்திருக்க மாட்டாங்க. அந்த அகல்யா பொண்ணோட குணமும் வெளிய வந்திருக்காது. ரொம்ப நன்றி சார்”

“சரி மாத்தி மாத்தி நன்றியும் சாரியும் சொல்லிட்டு இருக்கப் போறோமா? அப்புறம் இப்பவே சாயங்காலம் நாலு மணி ஆகிருச்சு. நாளைக்கு மார்னிங் வேலைல ஜாயின் பண்ணிருங்க சரியா?”

“கண்டிப்பா சார், யாராவது கிடைச்ச பொக்கிசத்தை தவற விடுவாங்களா?”

“விலைமதிப்பில்லாத பொக்கிஷம் ஒண்ணு உங்க கூடவே இருக்கு வினோத். அதை ஒருநாளும் தவற விட்டுறாதீங்க”, என்று சொல்ல அவன் குழப்பத்துடன் பரணியைப் பார்த்தான்.

Advertisement