Advertisement

அத்தியாயம் 6 

மௌன மொழியை

எங்கு கற்று தேர்ந்தது

உந்தன் விழிகள்!!!

எப்போதுமே பளிச்சென்று புன்னகை முகத்துடன் கல்லூரிக்கு வரும் யமுனா இன்று ஏதோ போல இருந்ததும் “என்ன ஆச்சு யம்மு பேபி ஏன் டல்லா இருக்க?”, என்று கேட்டாள் நிஷா. நிஷாவும் யமுனாவும் ஒரே கல்லூரியில் தான் படித்தார்கள். இருவரும் நண்பர்கள் தான். ஆனால் அதிக ஒட்டுதல் இல்லை. நிஷா பணக்கார பெண் என்பதால் யமுனா கொஞ்சம் விலகியே தான் இருப்பாள்.

ஆனால் மற்றவர்கள் நிஷாவுடைய பணத்துக்காக அவளை நெருங்க முயல நிஷாவோ தன்னை விட்டு விலகிச் செல்லும் யமுனாவை அதிகம் நாடுவாள். மற்ற யாராவது சோகமாக இருந்திருந்தால் நிஷா கட்டாயம் கேட்டிருக்க மாட்டாள். ஆனால் யமுனாவின் சோகம் அவளையும் பாதித்ததால் கேட்டு விட்டாள்.

“ஒண்ணும் இல்லை, நிஷா”, என்று சமாளித்தாள் யமுனா.

“நீ ஒண்ணும் இல்லைன்னு சொல்றதுலே ஏதோ இருக்குனு தெரியுது. என்னன்னு சொல்லு யமுனா”

“உண்மையிலே ஒண்ணும் இல்லை நிஷா”

“ஏன் யமுனா, இதுவே நான் அமைச்சர் மகளா இல்லாம போயிருந்தா நீ என்னை உண்மையான பிரண்டா ஏத்துக்கிட்டு இருப்பல்ல?”

“ஏய், என்ன நிஷா இப்படி எல்லாம் சொல்ற?”

“நான் உண்மையா தான் சொல்றேன். நீ ஒரு நாளும் என்னை உன் பிரண்டா நினைச்சது இல்லை. இப்ப வரைக்கும் உன் ஃபேமிலி பிரச்சனைகளைக் கூட என் கிட்ட பேசக் கூடாதுன்னு நினைக்கிற பாத்தியா?”

“அப்படி இல்லை நிஷா”

“எனக்கு தெரியும் யமுனா, நான் என்ன தான் சாதாரணமா இருந்தாலும் நீ என்னை தூரமா தான் நிறுத்துற? என் கிட்ட ஒட்டிட்டு அலையணும்னு நினைக்கிறவங்க என் கிட்ட உண்மையா இருக்குறது இல்லை. எங்க அப்பா அண்ணனுங்க பணக்காரங்களா இருக்குறதுக்கு நான் பொறுப்பா? எனக்குன்னு ஒரு உண்மையான ஃபிரண்ட் கூட இருக்க மாட்டாங்களா?”, என்று கேட்கும் போதே அவள் கண்கள் கலங்கிப் போனது.

உண்மையிலே சிறு வயதில் இருந்து உண்மையான தோழிகள் இல்லாததால் அது பெரிய குறையாகவே நிஷாவுக்கு இருந்தது. நிஷாவின் வருத்தம் யமுனாவை பாதித்தது. அது மட்டும் இல்லை. தன்னுடைய பிரச்சனையை யாரிடமாவது சொன்னால் தீர்வு கிடைக்கும் என்று எண்ணிய யமுனா அவளிடம் சொல்ல முடிவு எடுத்தாள்.

“வீட்டுப் பிரச்சனையை உன் கிட்டன்னு இல்லை நிஷா, நான் வேற யார்க் கிட்டயுமே ஷேர் பண்ணிக்கிட்டது இல்லை. ஆனா நீ இவ்வளவு பீல் பண்ணினதுனால சொல்றேன். அதுக்கு முன்னாடி என்னை நம்பு, நீ என்னோட பிரண்டு தாண்டி”, என்றாள்.

“சரி நம்புறேன். சொல்லு. என்ன பிரச்சனை? பிராப்ளம் உன்னோட அக்காவுக்கா? இல்லை, உன்னோட அண்ணனுக்கா?”

“உண்மையைச் சொல்லனும்னா ரெண்டு பேருக்கும் தான் டி. அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் முடியுற வரைக்கும் ரொம்ப சந்தோஷமா தான் எங்க குடும்பம் இருந்துச்சு. கல்யாணம் முடிஞ்சதும் பிரச்சனை தான். அண்ணனுக்கு சரியான வேலை இல்லை. சும்மா கிடைச்ச வேலைக்கு போறாங்க. அவங்க கல்யாணம் பேசும் போது அண்ணாவுக்கு பணம் கட்டி வேலை வாங்கணும்னு அப்பா மூணு லட்சம் ஒரு ஆள் கிட்ட கொடுத்தாங்க. அவன் இப்ப வரை வேலையும் வாங்கித் தரலை. பணத்தையும் தரலை. பணத்தைக் கேட்டா அங்க கொடுத்துட்டேன் இங்க கொடுத்துட்டேன், வேலைக்கான ஆர்டர் வரும்னு நாளைக் கடத்திட்டு இருக்கான். அதனால அண்ணி எங்க வீட்ல ஏமாத்திட்டோம்னு சொல்லி அண்ணா கூட வாழவே இல்லை டி. ரெண்டு பேரும் என்ன சண்டை போட்டாங்கன்னு தெரியாது. ஒரே ரூம்க்குள்ள இருந்தாலும் தனித் தனியா தான் வாழுறாங்க”

“இத்தனை வருஷமா வா?”

“ஆமா நிஷா. அப்புறம் அக்காவுக்கு அதை விட பெரிய பிரச்சனை. கேசவன் மாமா பேங்க்ல வேலை பாக்குறார்னு தான் கட்டி வச்சாங்க. கல்யாணம் முடிஞ்ச ஒரு ஆறு மாசம் நல்லா இருந்தாங்க. அப்புறம் முழுக்க பிரச்சனை. மாமியார், நாத்தனார்னு எப்பவும் குடைச்சல் கொடுக்குறாங்க. குழந்தை இல்லைன்னு வேற பிரச்சனை. அவளுக்கு துணையா இருக்க வேண்டிய மாமா எப்பவும் அவங்க அம்மா பக்கம் தான் பேசுறாங்க. அவங்க ஏதாவது சொல்லி இவ சண்டை போட்டு கோச்சிக்கிட்டு வீட்டுக்கு வருவா. நாங்க எல்லாரும் போய் சமாதானம் செஞ்சு வச்சிட்டு வருவோம். இது அஞ்சாவது தடவையா திருப்பி வந்திருக்கா. அதுவும் மாமாவுக்கு வேற கல்யாணம் பண்ணி வைக்கிறதைப் பத்தி அவங்க வீட்ல பேசுறாங்களாம். மாமாவோட அத்தை பொண்ணும் அடிக்கடி அவங்க வீட்டுக்கு வந்து போகுதாம்? ஆம்பளைங்க மனசு தான் அலைபாயுமே?”

“என்ன டி சொல்ற? உங்க மாமாவுக்கும் அப்படி ஒரு எண்ணம் இருக்கா?”

“தெரியலை. ஆனா, மாமா எங்க அந்த பொண்ணு பக்கம் சாஞ்சிருவாரோன்னு அக்கா  பயப்படுறா? அவரும் அந்த நம்பிக்கையை அவளுக்கு கொடுக்க மாட்டிக்கார். அவங்க அம்மா பேசும் போது சரின்னு சொல்ற மாதிரி அமைதியா இருக்காராம். இவ காலைல வந்து ஒரே அழுகை. எங்க வீட்ல யாரும் சமாதானம் பண்ண போக மாட்டோம்னு சொல்றாங்க. போயும் வேஸ்ட் தான் நிஷா. போறப்ப எல்லாம் அவங்க வீட்ல ரொம்ப அவமானப் படுத்துவாங்க. அக்காவை இருந்தா இரு, போனா போ அப்படிங்குற மாதிரி பேசுவாங்க. இந்த வாழ்க்கையை விட்டுட்டு எங்க வீட்டுக்கே வந்தா சொந்தபந்தம் ஒரு மாதிரி பேசும்னு அவளை அங்க விட்டுட்டு வருவோம். ஆனா மறுபடியும் இதே கதை தான். இது எல்லாம் எப்ப தான் முடியுமோ?”, என்று கதையை முடித்தாள் யமுனா.

“இதுக்கெல்லாம் தீர்வு என்னவா இருக்கும்னு நீ நினைக்கிற யமுனா?”

“அண்ணா பிரச்சனை சரியாகணும்னா கவர்ன்மெண்ட் வேலையாவது இல்லை, நல்ல சம்பளத்துல ஏதாவது ஒரு வேலை கிடைச்சா சரியாகிரும். ஆனா அக்கா வாழ்க்கை, அது மாமா திருந்தினா தான் சரியாகும். அப்படி இல்லைன்னா அவரை வேண்டாம்னு சொல்லிட்டு இவ வெளிய வரணும். அப்படி வீட்ல வந்து இருந்தா எங்க அம்மாவே அவளை வாழாவெட்டின்னு பேச ஆரம்பிச்சிருவாங்க. புருஷன் இல்லாம இங்க வந்து இருந்தாலும் அவ வாழ்க்கை வீணா போகிரும். அண்ணா அக்கா வாழ்க்கை இப்படி இருக்க அம்மா தினமும் வீட்டுக்கு ஒரு வாரிசு இல்லையேன்னு புலம்பிட்டு இருக்காங்க. பிள்ளைங்க சந்தோஷமா இருந்தா தானே வாரிசு வரும்னு அவங்களுக்கு புரியலை. என்னத்த சொல்ல?”

“இப்ப என்ன? எப்படியாவது உன் குடும்ப பிரச்சனை சரியாகனும்? அதானே?”

“ஆமா டி”

“அப்படின்னா இன்னைக்கு சாயங்காலம் நீ எங்க வீட்டுக்கு வர. மத்த எல்லா விசயத்தையும் நான் பாத்துக்குறேன்”

“என்ன விளையாடுறியா? சாரி நிஷா. சத்தியமா என்னால முடியாது. பிளீஸ் என்னையும் கொஞ்சம் புரிஞ்சிக்கோ. ஒரு மினிஷ்டர் வீட்டுக்கு வர அளவுக்கு எல்லாம் என் மனசுல தைரியம் இல்லை. அது மட்டுமில்லாம உங்க அப்பா எல்லாம் இதுல தலையிட்டா எங்க வீட்ல பெரிய பிரச்சனை ஆகிரும் டி. நான் தான்  சொன்னேன்னு தெரிய வரும். உன் கிட்ட சொன்னது எங்க அம்மாவுக்கு தெரிஞ்சாலே நான் செத்தேன். இதை இதோட விட்டுரு நிஷா”

“நீ சொல்றதும் சரி தான். எங்க அப்பா இன்வால்வ் ஆனா உங்க வீட்ல என்ன சொல்லுவாங்களோ தெரியாது. ஆனா உன்னோட பிரச்சனையை நான் சரி செய்வேன். வேற ஏதாவது தான் பிளான் பண்ணனும்”, என்று சொன்ன நிஷா அன்று லஞ்ச் பிரேக்கில் இதை பரணியிடம் சொல்ல வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள்.

மதிய உணவு இடைவேளையில் யமுனாவுக்கு தெரியாமல் பரணியை போனில் அழைத்தாள். “சொல்லு நிஷா என்ன இந்த நேரம் கால் பண்ணிருக்க?”, என்று கேட்டான் பரணி.

“அண்ணா, எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும்”

“சொல்லு டா”

“சொன்னா செய்வியான்னு தெரியலையே?”

“நீ சொன்னா நான் செய்யாம இருப்பேனா? நீ எங்க வீட்டு இளவரசி ஆச்சே? சரி என்ன பிரச்சனை? நான் என்ன செய்யணும்?”

“பிரச்சனை எனக்கு இல்லைண்ணா. என் பிரண்டுக்கு தான்”

“பிரண்டுக்கா? உனக்கு பிரண்டு எல்லாம் இருக்காங்களா? யார் அது?”

“ஒரே ஒரு ஃபிரண்ட் இருக்கா? நம்ம கிட்ட இருக்குற பணத்தைக் கண்டு ஒதுங்கிப் போறவ. அவ பேர் யம்மு பேபி”

“என்ன யம்மு பேபியா?”

“அவ பேர் யமுனா அண்ணா. நான் அப்படி தான் அவளைக் கூப்பிடுவேன்”

“சரி நிஷா, உன் பிரண்டுக்கு என்ன பிரச்சனைன்னு சொல்லு”, என்று அவன் கேட்டதும் யமுனா சொன்னதை எல்லாம் சொன்னவள் “பிளீஸ் அண்ணா, யமுனாவோட அண்ணா அக்கா வாழ்க்கை சரியாகனும். அப்பா கிட்ட இந்த பிரச்சனையை கொண்டு போக முடியாது. பெரிய அண்ணா கிட்ட சொன்னா முதல் வேலையா அப்பா கிட்ட தான் சொல்லுவாங்க. அதான் உன் கிட்ட கேக்குறேன். நீ தானே சொல்லுவ? நம்மளால முடிஞ்சா அடுத்தவங்களுக்கு உதவணும்னு”, என்று கேட்டாள்.

“கண்டிப்பா செய்றேன் நிஷா. உன் பிரண்டோட அண்ணனுக்கு என்னால வேலை வாங்கித் தர முடியும். நம்ம ஆஃபிஸ்லே கூட வேலை போட்டுக் கொடுத்துறலாம். ஆனா அவங்க அக்கா வாழ்க்கையை எப்படி சரி செய்ய? புருஷன் பொண்டாட்டிக்கு இடைல மூணாவது மனுஷன் போகக் கூடாது மா. அவங்க வீட்ல உள்ளவங்களே பேச தயங்கும் போது என்னால ஒண்ணும் செய்ய முடியாது. நான் உன் பிரண்டோட அக்காவுக்காக பேசினா அந்த ஆள் தப்பா பேச கூட வாய்ப்பு இருக்கு நிஷா. அது இன்னும் தப்பா போயிரும். பிரச்சனை மேலும் பெருசாகிரும்”

“அதெல்லாம் தப்பா போகாதுண்ணா. ஒரு நல்லதுக்காக ரிஸ்க் எடுக்கலாமே? நீ நேரடியா இதுல இறங்க வேண்டாம். யாரையாவது வச்சு அந்த ஆளை லேசா தட்டு. அந்த ஆள் திருந்திட்டார்ன்னா எல்லாம் சரியாப் போகும் அண்ணா”

“சரி நிஷா, அவங்க யாரு என்ன எங்க இருக்காங்க? என்ன என்ன பிரச்சனைன்னு எல்லா விவரமும் எனக்கு தெரியணும். நீ உன் பிரண்டைக் கூட்டிட்டு சாயங்காலம் வீட்டுக்கு வா பேசிக்கலாம்”

“வீட்டுக்கு கூப்பிட்டேன் அண்ணா. ஆனா அவ அப்பாவை நினைச்சு பயப்படுறா. ஒண்ணு செய், எங்க காலேஜ் பக்கத்துல இருக்குற பார்க்குக்கு சாயங்காலம் வரியா? அங்க வச்சு பேசிக்கலாம்’

Advertisement