Advertisement

“எப்பவும் இப்படி இருக்குறது தான். ஆனா இப்ப அவங்க அம்மா திடீர்னு உன்னை விரட்டிட்டு என் அண்ணன் பொண்ணை இந்த வீட்டுக்கு மருமகளா ஆக்கப் போறேன்னு பேசுறாங்க. இவரும் அவங்களை ஒண்ணும் சொல்லாம அமைதியா இருக்கார். எனக்கு என்ன சொல்லன்னு தெரியலை. கூடிய சீக்கிரம் அவங்க நினைக்கிறது நடந்துருமோன்னு பயமா இருக்கு. அங்கயே இருந்தா மெண்டல் ஆகிருவேன் போல இருக்கு. எல்லாரும் வந்து பேசுங்கன்னு சொல்றேன், இந்த அம்மா என்னை பொறுமையா போன்னு சொல்லுது. அப்பா மூச்சே விட மாட்டிக்கார். நான் என்ன செய்யட்டும்? என் வாழ்க்கையை விட்டுக் கொடுத்துறட்டுமா?”, என்று சொல்லி கண்ணீர் சிந்தினாள் காயத்ரி.

“அப்படி இன்னொரு கல்யாணம் பண்ணணும்னா பண்ணிட்டு போகட்டுமே. நீ நம்ம வீட்டுக்கு வந்துருக்கா”, என்று யமுனாவால் சொல்ல முடியவில்லை.

காய்த்ரி அப்படி எளிதாக வந்து விடலாம், அதற்கு பின் அவள் நிலைமை கேள்விக் குறி தானே? அது மட்டுமில்லாமல் காயத்ரிக்கு அவளது கணவன் கேசவனை மிகவும் பிடிக்கும். அவன் மேல் உயிராக இருந்தாள். அவனுக்காக தான் மாமியார் நாத்தானர் கொடுமைகளை சகித்துக் கொண்டாள். ஆனால் இன்று அவனே அவளுக்கு இல்லாமல் போய் விடுவானோ என்று எண்ணி தான் அவள் மனம் வேதனை கொண்டது. அதுவும் அவனது மௌனம் அவளை அதிகம் கொன்றது.

கேசவன் ஒரு அம்மா பிள்ளை. அவனுடைய அம்மா என்ன சொன்னாலும் அவன் கேட்பான். அதில் நல்லதா கெட்டதா என்று மட்டும் யோசிக்கவே மாட்டான். திருமணம்  நடந்த புதிதில் காயத்ரியுடன் சந்தோஷமாக தான் வாழ்ந்தான். ஆனால் எப்போது அவனது அம்மாவுக்கு காயத்ரியை பிடிக்காமல் போனதோ அதில் இருந்து கேசவனிடம் ஒதுக்கத்தைக் கண்டாள் காயத்ரி. அவனை எப்படி மாற்ற என்று அவளுக்கு தெரிய வில்லை. அதே நேரம் அவனை விட்டுக் கொடுக்கவும் அவளால் முடிய வில்லை. இதற்கு ஒரே ஒரு தீர்வு கேசவன் திருந்துவது மட்டுமே. ஆனால் அவன் திருந்துவானா என்று தெரியாதே.

திருமணம் முடிந்து ஆறு மாதத்தில் இருந்து பல முறை காயத்ரி இப்படி தான் கோபித்துக் கொண்டு வருவாள். அதற்கு விசாரணை செய்ய மொத்த குடும்பமே கிளம்பிச் சென்று பல முறை அவமானப் பட்டு தான் திரும்பி இருக்கிறார்கள். அதுவும் ஒரு நாள் காயத்ரியின் அண்ணன் வினோத் கோபத்தில் கேசவனின் சட்டையை பிடித்து விட அன்றில் இருந்து வினோத் அந்த பக்கமே வரக் கூடாது என்று வேறு கேசவன் சொல்லி இருக்கிறான். வினோத்தும் இனி அங்கே செல்ல மாட்டேன் என்று சொல்லி விட்டான். தாமோதரன் மற்றும் காவேரியைக் கூட கேசவனும் அவன் குடும்பமும் மதிக்க மாட்டார்கள்.

அதனால் இப்போது யார் போய் சமாதான பேச்சு வார்த்தை நடத்த என்று யாருக்குமே தெரிய வில்லை. யாருக்குமே அந்த கேசவன் வீட்டுக்கு போவதற்கு பிடிக்க வில்லை என்பது மட்டும் நிஜம்.

அப்போது வாக்கிங் போய் விட்டு வந்த வினோத், அனைவரையும் பார்த்து மீண்டும் என்ன பிரச்சனை என்று கேட்க நடந்ததைச் சொன்னாள் காயத்ரி.

“நீ ஒண்ணும் அங்க போக வேண்டாம் காயு. பேசாம நம்ம வீட்லே இரு. அவன் எக்கேடோ கெட்டு போகட்டும். அவன் மட்டும் தான் உன்னோட வாழ்க்கை இல்லை. உன்னை வேண்டாம்னு சொல்றவனை எதுக்கு இழுத்து பிடிக்க நினைக்கிற?”, என்று எரிச்சலுடன் கேட்டான் வினோத்.

“டேய் டேய், இது அவ வாழ்க்கை டா. பொறுமையா தான் இருக்கணும்”, என்றாள் காவேரி.

“என்னால எல்லாம் பொறுமையா இருக்க முடியாது. தயவு செஞ்சு என்னை எல்லாம் பஞ்சாயத்துக்கு அனுபாதீங்க. எனக்கு அவனைப் பாக்கவே பிடிக்கலை. நீங்களா என்னமும் செஞ்சிக்கோங்க”, என்று சொல்லி விட்டு அவனுடைய அறைக்குள் சென்று விட்டான்.

வெளியே இவ்வளவு பெரிய கலவரம் வெடிக்க அவனுடைய அறைக்குள் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தாள் அவன் மனைவி தாரணி. ஒரு நொடி நின்று அவளைப் பார்த்தான். அவர்களுக்கு திருமணம் முடிந்து கிட்டத்தட்ட மூன்று வருடமாகிறது. ஆனால் இப்போது வரைக்கும் இருவரும் தனித்தனி தான்.

தாரணி கொஞ்சம் பணக்கார வீட்டுப் பெண். தாரணி மற்றும் வினோத்தின் திருமணப் பேச்சு வார்த்தையின் போது “கவர்ன்மெண்ட் வேலைக்கு மூணு லட்சம் ரூபாய் பணம் கட்டிருக்கோம். கூடிய சீக்கிரம் பையனுக்கு வேலை கிடைச்சிரும்”, என்று சொல்லி தான் திருமணத்தை நடத்தி இருந்தார்கள்.

திருமணம் முடிந்ததில் இருந்து ஒரு பத்து நாட்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்திருப்பார்கள். அவ்வளவு சந்தோஷமாக தான் இருந்தார்கள். அப்போது ஒரு நாள் அவளுடைய சித்தியின் மகள் திருமணத்துக்கு போன போது வினோத்துக்கு வேலை இல்லை என்று சொல்லி அவர்கள் பேச தாரணிக்கு ஒரு மாதிரி இருந்தது.

அவர்கள் அப்படி அவமானப் படுத்திய போது கணவனுக்கு சப்போர்ட்டாக பேசாமல் “ஆமா கல்யாணம் முடிஞ்சு இவ்வளவுய் நாள் ஆகுதே? உங்களுக்கு ஏன் வேலை இல்லை?”, என்று வினோத்திடம் கேட்டாள் தாரணி. அவள் ஆதங்கத்தை அவன் புரிந்து கொள்ள வில்லை.

அன்று இரவு அவன் ஆசையாக அவளை நெருங்க அவன் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் “வேலையை வாங்கிட்டு பக்கத்துல வாங்க. என்னால எங்க சொந்தக்காரங்க கிட்ட அவமானப் பட முடியாது”, என்று தாரணி பட்டென்று சொல்லி விட்டாள்.

அதைக் கேட்டு அவமானமாக உணர்ந்தான் வினோத். ஒரு வேலை இருந்தால் தான் தன்னை தொட விடுவாளாமா என்று தன்மானம் சீண்ட அதற்கு பின் அவளோடு பேசுவதை கூட கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திக் கொண்டான். அவளும் அவனை சமாதானம் செய்ய வில்லை. என்ன ஒன்று அவர்களுக்குள் இருக்கும் பிரச்சனை யமுனாவுக்கு மட்டும் தான் தெரியும்.

அதுவும் எப்போதும் புன்னகையுடன் இருக்கும் அண்ணனின் முக மாற்றத்தை வைத்து அவளாக கண்டு கொண்டது தான். அதற்கு தனியாக இருக்கும் போது அண்ணனுக்காக அவள் தாரணியிடம் நியாயம் கேட்க “என்னை ஏமாத்திக் கல்யாணம் பண்ணின குடும்பம் தானே இது? எனக்கு அட்வைஸ் பண்ணுற அளவு எல்லாம் நீ பெரிய இவ இல்லை”, என்று பட்டென்று சொல்லி விட்டாள் தாரணி. அதில் இருந்து யமுனாவும் அவளிடம் அதிகம் பேசிக் கொள்ள மாட்டாள்.

ஆனால் தாமோதரன் மற்றும் காவேரி இருவரிடமும் அவள் நன்கு பேசுவாள். அவர்கள் தான் சாப்பாடு போடுகிறார்கள் என்ற காரணமாக கூட இருக்கலாம் என்பது வினோத்தின் எண்ணம்.

வினோத் வேலைக்காக பணம் கொடுத்த இடத்துக்கு நடையாக நடந்து தான் மிச்சம். வேலையும் கிடைக்க வில்லை. கொடுத்த பணமும் திருப்பி வர வில்லை. அதனால் அவனை தாமோதரனும் கொஞ்சம் தறுதலை என்பது போல தான் பேசுவார். கட்டிய மனைவியும் மதிக்காமல் பெற்ற தந்தையும் மதிக்காமல், சொல்லிக் கொள்ள வேலையும் இல்லாமல் பயங்கர மன உளைச்சலில் இருந்தான் வினோத். இப்போது காயத்ரி பிரச்சனை வேறு.

வெளியே அவ்வளவு பிரச்சனை நடக்க உள்ளுக்குள் தூங்கிக் கொண்டிருந்த மனைவியைக் கண்டு எரிச்சல் வந்தாலும் அவளைக் கண்டு கொள்ளாமல் குளிக்கச் சென்றான்.

அம்மா அப்பா அமைதியாக இருக்க அண்ணனும் கண்டு கொள்ளாமல் செல்ல “நாம இதை இப்படியே விடக் கூடாது. இன்னைக்கே போய் அவர் கிட்ட ரெண்டுல ஒண்ணு கேக்கணும். அம்மா அப்பா என் கூட வறீங்களா?”, என்று கேட்டாள் யமுனா. அவள் இப்போது தான் கல்லூரி மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தாள்.

“நாங்க வரலை. அந்த வீட்டுப் படியேற மாட்டோம்”, என்றாள் காவேரி.

“அப்பா… நீங்க”

“நீ போகணும்னா போ யமுனா. எங்களை விட்டுரு. எங்களுக்கு எங்க மரியாதை முக்கியம்”, என்றார் தாமோதரன்.

“உங்க பொண்ணோட வாழ்க்கையை விட உங்க மரியாதை தான் முக்கியமா? இந்த பிரச்சனை ரொம்ப நாளா இருக்கு பா. நாம தான் சரி செய்யணும்”

“எங்களால முடியாது. வேணும்னா உங்க அக்கா இங்கயே இருக்கட்டும். எங்க காலம் வரைக்கும் அவளுக்கு சோறு போடுறோம்”, என்றார் தாமோதரன்.

தந்தையின் பேச்சில் எரிச்சல் அடைந்த யமுனாவுக்கு இது உடனே தீர்க்கும் விஷயம் இல்லை என்று புரிந்தது. தன்னுடன் அன்னை, தந்தை, அண்ணன் சேர்ந்து பேசினால் அவள் ஏதாவது செய்யலாம். ஆனால் அனைவரும் கழண்டு கொண்டால் யமுனா மட்டும் எப்படி கேசவன் வீட்டில் சென்று பேச முடியும்? அப்படிப் பேசினாலும் அவர்கள் அவளை மதிப்பார்களா என்று கேள்வி பிறந்தது.

அதனால் “அக்கா ஒரு ரெண்டு நாள் அமைதியா இரு. என்ன பண்ணலாம்னு யோசிப்போம். சரி நான் காலேஜ் கிளம்பனும். நீ அழாம ரெஸ்ட் எடு. நான் குளிச்சிட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு கிளம்பச் சென்றாள்.

அவள் உள்ளே சென்றதும் “இதைக் குடி தெம்பா இருக்கும்”, என்று பூஸ்ட் கலந்த பாலை காயத்ரியிடம் கொடுத்தாள் காவேரி.

“எனக்கு ஒண்ணும் வேண்டாம். போ மா”, என்று எரிந்து விழுந்தாள் காயத்ரி.

“அழுறதுக்காவது உடம்புல தெம்பு வேணாமா? குடி டி”, என்று சொன்னதும் அன்னையை நிமிர்ந்து பார்த்தாள். காவேரி கண்களிலும் மகள் வாழ்வை எண்ணி கண்ணீர் வந்தது. அன்னையின் பரிதவிப்பு புரிந்தது. ஆனால் காலம் கடந்து யோசித்து என்ன பயன்? அரசாங்கத்தில் வேலை பார்க்கும் மாப்பிள்ளை என்று கட்டிக் கொடுத்தால் அவன் குடும்பம் இப்படி இருக்கும் என்று அவர்கள் கனவா கண்டார்கள்?

காரிகை வருவாள்…..

Advertisement