Advertisement

அதற்கு மேல் எப்படி சாப்பிடுவது? தட்டை அப்படியே வைத்து விட்டு கை கழுவி விட்டு அறைக்குள் அடைந்து கொண்டாள்.

அவள் சாப்பிடாமல் போனது தாரணிக்கே கஸ்டமாக தான் இருந்தது. இதையெல்லாம் தாமோதரனும் பார்த்துக் கொண்டு தான் இருந்தார். வேலை முடிந்து வந்த வினோத்திடம் தாரணி விஷயத்தைச் சொல்ல அவனோ “ஒரு தடவை சாப்பிடலைன்னா ஒண்ணும் செத்துற மாட்டா”, என்றான்.

“என்னங்க இப்படிச் சொல்றீங்க? அவ உங்க தங்கச்சி”

“யார் இல்லைன்னு சொன்னது? யார் இருந்தா என்ன செத்தா என்னன்னு கவலைப்படாம அவ வாழ்க்கையைப் பாத்துட்டு போய்கிட்டே இருக்கணும். இங்க தான் இருப்பேன்னு கிடந்தா இதான் நிலைமை”, என்று சொல்லி விட்டு குளிக்கச் சென்றான்.

அவன் பேசியதை தாமோதரன் மற்றும் காவேரி இருவரும் கேட்டுக் கொண்டு தான் இருந்தார்கள். ஆனால் எதுவும் பேச வில்லை.

அறைக்குள் சென்ற யமுனாவின் கண்கள் கண்ணீரால் நிறைந்தது. அப்போது உள்ளே வந்த அருண் அதைக் கண்டு அவள் கண்ணீரைத் துடைக்க அவனை வாரி அனைத்துக் கொண்டவள் கண்ணீரை அடக்கி அவனை திசை மாற்றி தூங்க வைத்தாள். அருண் மட்டும் இல்லையென்றால் இந்நேரம் யமுனாவுக்கு பைத்தியமே பிடித்திருக்கும்.

அன்று என்ன முயன்றும் அவளால் அழுகையை அடக்க முடிய வில்லை. வயிறு வேறு பசித்தது. பசிக்கு கூட உண்ண முடியாமல் இருக்கும் இந்த நிலை தேவையா என்று மனசாட்சி குரல் கொடுத்தது. இத்தனைக்கும் அவள் சம்பளம் மாதம் மூன்று லட்சம். கிட்டத்தட்ட பரணியின் இருபத்தி ஏழு நிறுவனங்களுக்கு அவள் தான் ஆடிட்டர் என்பதால் அவள் வேலையும் அதிகம், சம்பளமும் அதிகம். ஆனாலும் அவளால் ஒரு வாய் உணவு உண்ண முடிய வில்லை.

தன்னுடைய விதி மாறுமா என்று எண்ணி கண்ணீர் வடித்தாள். பழைய விஷயங்கள் எல்லாம் நினைவில் வந்தது. ஏழு வருடங்களுக்கு முன்பு இதே காவேரி தான் மகளுக்கு பிடித்த உணவுகளை செய்து கொடுத்து அன்புடன் ஊட்டி விடுவாள். அந்த அன்பு எல்லாம் இப்போது காணாமல் போய் விட்டது.

செல்லம் தங்கம் என்று கொஞ்சும் தந்தை இப்போது இவளைக் கண்டால் முகத்தை திருப்பிக் கொள்கிறார். பாதை மாறிய தன் வாழ்வைப் பற்றி எண்ணினாள். அதே  நேரம்  பரணியும் அதை தான் எண்ணிக் கொண்டிருந்தான். இத்தனை நாள் ஏக்கத்துக்கு முடிவு என்று கிடைக்கும் என அவனுக்கு  வேதனையாக இருந்தது.

சாருவுக்கு அழைத்த முகுந்தனும் யமுனா மற்றும் பரணி வாழ்க்கையில் நடந்ததை தான் சொல்ல ஆரம்பித்தான்.

ஏழு வருடங்களுக்கு முன்பு… தன்னுடைய அறையில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான் பரணி. அந்த உறக்கத்தில் அப்படி ஒரு ஆழ்ந்த கனவு, மேகங்களுக்கு மத்தியில் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தாள் ஒரு மங்கை. ஆனால் முகம் அவனுக்கு தெரிய வில்லை. அவள் முகத்தைப் பார்க்க எவ்வளவோ முயற்சித்தும் அவனுக்கு தெரிய வில்லை. காலை ஆறு மணிக்கு அலாரம் அடித்ததும் எழுந்து குளித்து கிளம்பி அலுவலகம் செல்ல கீழே வந்தான். அவனைக் கண்டதும் அவனைப் முறைத்துப் பார்த்தாள் அவன் அன்னை கௌரி.

“என்ன மா அப்படி பாக்குற?”, என்று கேட்ட படி டைனிங் டேபிளில் அமர்ந்தான். அவனது தந்தையும் சாப்பிட அமர்ந்தார்.

“நான் உன் கிட்ட சொன்ன விஷயம் என்ன ஆச்சு பரணி?”, என்று கேட்டாள் கௌரி.

“அப்பா பாருங்கப்பா அம்மாவை”, என்று சிணுங்கினான் மகன்.

“அவ சொல்றதுல என்ன டா தப்பிருக்கு? உன் அண்ணனுக்கு கல்யாணம் முடிஞ்சு இப்ப மருமக டெலிவரிக்கு ஊருக்கு போயிருக்கா. அடுத்து உனக்கு கல்யாணம் பண்ணனும்ல?”

“அம்மா எனக்கு இருபத்தி நாலு வயசு தான் ஆகுது. எம். பி. ஏ படிச்சு முடிச்சிட்டு வந்து ரெண்டு வருஷமா தான் நான் கம்பெனியைப் பாத்துக்குறேன். நகை கடையை  ஆரம்பிச்சு சக்ஸஸ் புல்லா பண்ணுற மாதிரி இன்னும் நிறைய கனவுகள் இருக்கு. இப்பவே கல்யாணம்ன்னா எப்படி? அண்ணன் எல்லாம் இருபத்தி ஏழு வயசுல தானே கல்யாணம் பண்ணிக்கிட்டான். அப்புறம் என்ன?”

“டேய் இப்ப உனக்கு பொண்ணு கொடுக்க அவன் இவன்னு வரிசைல நிக்குறாங்க டா”

“அது நீங்க அமைச்சர் அப்படிங்குறதுனால இருக்கலாம்”, என்றான் மகன். அப்போது சரவணப் பெருமாள் கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்தார்.

“உனக்கு இப்ப கல்யாணம் பண்ணினா அடுத்து நிஷாவுக்கு பண்ண சரியா இருக்கும் டா”

“அப்பா நிஷா இப்ப பைனல் இயர் படிக்கிறா. இன்னும் ரெண்டு வருசத்துல அவளுக்கு முடிங்க. அதுக்கு அப்புறம் ரெண்டு வருஷம் கழிச்சு எனக்கு முடிங்க”, என்றான் மகன் .

“ஏன்டா ஏதாவது லவ் பண்ணுரியா? அதான் கல்யாணம் வேண்டாம்னு சொல்றியா?”, என்று கேட்டாள் கௌரி.

அவனுக்கு கனவில் வந்த காரிகை நினைவில் வந்தாலும் அதைச் சொல்ல மனதற்று “லவ் பண்ணினா உங்களை எதுக்கு அஞ்சாறு வருஷம் கழிச்சு பொண்ணு பாக்க சொல்லப் போறேன்?”, என்று கேட்டான்.

“சரி உனக்கு எப்படி ஒரு பொண்ணு வேணும்?”, என்று கேட்டாள் கௌரி.

“அப்படி இது வரை எந்த எண்ணமும் வரலை மா. எனக்கு இன்னும் கொஞ்சம் மெச்சூரிட்டி வரணும். அப்புறமா பொண்ணு எப்படி இருக்கணும்னு சொல்றேன். அதுக்கு அப்புறம் தேடுங்க. அது வரைக்கும் லவ் எல்லாம் வராது”, என்று சொன்னாலும் அவனுக்கு வந்த கனவு அவனை இன்று அதிகமாக தாக்கிக் கொண்டே இருந்தது.

“அப்படிச் சொல்லாதே அண்ணா, லவ் எப்ப வரும் எப்படி வரும்னு யாருக்கும் தெரியாது, நீ வராதுன்னு சொன்னாலும் உன்னை அட்டாக் பண்ணிரும்”, என்று சிரித்த படி வந்தாள் நிஷா. கௌரி அவளுக்கும் உணவு பரிமாறிய படி “அவனை விடு, நீ என்ன காதலைப் பத்தி இவ்வளவு பேசுற? யாரையாவது லவ் பண்ணுறியா டி?”, என்று கேட்டாள்.

சரவணப் பெருமாள் சிறு சிரிப்புடன் அமர்ந்திருந்தார். “சே சே அந்த தப்பை எல்லாம் நான் செய்ய மாட்டேன் பா. அப்படி செஞ்சா என் வாழ்க்கை என்ன ஆகுறது?”, என்று கேட்டாள் நிஷா.

“என்ன ஆகும்?”, என்று அப்பாவியாக கேட்டாள் கௌரி. சரவணப் பெருமாளும் மகளின் பதில் என்னவாக இருக்கும் என்று எதிர் பார்த்தார். பரணிக்கு மட்டும் அவள் நிச்சயம் ஏதோ விவகாரமாக தான் பேசப் போகிறாள் என்று புரிந்தது.

“என்ன ஆகுமா? நான் ஒரு சாதாரண பையனை லவ் பண்ணினா சும்மாவே குடும்பத்துல எதிர்ப்பு இருக்கும். நம்ம வீட்ல அப்பா மினிஷ்டர், ஒரு அண்ணன் மேயர், இன்னொரு அண்ணன் பிஸ்னஸ்மேன், மூணு பேரும் சேந்து காதல் படத்துல வர மாதிரி என் வாழ்க்கையை ஆக்கிற மாட்டீங்களா? அது எதுக்கு விஷப் பரீட்சை. அமைதியா காலேஜ் போனோமா வந்தோமான்னு இருந்தேன்னு வைங்க. படிச்சு முடிச்சதும் கிலோ கணக்குல நகை செஞ்சு பணக்கார பையனா பாத்து கட்டி வைப்பீங்க. கண்டிப்பா அவன் நல்லவனா தான் இருப்பான். ஒரு வேளை கெட்டவனா இருந்தா கூட அப்பா அண்ணனுங்களுக்கு பயந்து என்னை தங்கமா வச்சிக்குவான், அப்படி ஒரு லைப் தான் எனக்கு வேணும்”, என்று சொன்னாள்.

அனைவரும் அவள் பேச்சைக் கேட்டு ரசித்தார்கள். கூடவே அவளது தொலை நோக்கு பார்வையை கிண்டல் பண்ணி சிரிக்கவும் செய்தார்கள்.

உணவு உண்டு முடித்ததும் “அண்ணா, என்னை காலேஜ்ல விட்டுறேன்”, என்றாள் நிஷா.

“ஏன் டிரைவர் கூட கார்ல போனா என்ன டி?”, என்று கேட்டாள் கௌரி.

“இருந்தாலும் அண்ணா கூட போய் இறங்கினா தனி கெத்து தானே?”, என்று சிரித்தாள்.

அப்போது அணிந்திருந்த வெள்ளைச் சட்டையின் கையை மடக்கி விட்ட படி வந்த விஷ்ணு “பரணிக்கு வேலை இருக்கும் நிஷா.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              நான் உன் காலேஜ் பக்கமா தான் போறேன். உன்னை இறக்கி விட்டுறேன்”, என்ற படி சாப்பிட அமர்ந்தான்.

“சரிண்ணா., யாரோ ஒருத்தர் கூட்டிட்டு போனா சரி. ஆமா நீ எதுக்கு என் காலேஜ் பக்கமா போற? என்ன அண்ணியை பார்க்காம இருக்க முடியலையாக்கும்?”, என்று கேட்டாள்.

அவன் அழகாக வெக்கப் பட அவள் காதை திருகிய பரணி “அண்ணனையே கிண்டல் பண்ணுறியா?”, என்று கேட்டான்.

“ஆமா பண்ணுவேன். உனக்கும் ஒரு ஆள் வரட்டும் உன்னையும் கிண்டல் பண்ணுவேன்”, என்று சிரித்தாள். பிள்ளைகளின் சந்தோசத்தைக் கண்டு பெற்றவர்களின் முகமும் மலர்ந்தது.

அதற்கு பின் சிறிது நேரம் பேசி விட்டு சரவணப் பெருமாள் முதலில் கிளம்பினார்,. அடுத்து பரணி அவன் காரில் சென்று விட்டான்,. அதற்கு பின்னர் விஷ்ணுவும் நிஷாவும் கிளம்பி விட்டார்கள்.

அனைவரும் சென்றதும் அப்பாடி என்ற படி அமர்ந்தாள் கௌரி. தனக்கு கிடைத்த அழகான இந்த குடும்பத்தை எண்ணி சந்தோஷப் பட்டாள்.

பரணியின் விடியல் இப்படி என்றால் யமுனாவின் விடியல் வேறு மாதிரி இருந்தது.

ஆதிகால வேளையில் கீச் கீச் என்று கத்திக் கொண்டு இறை தேடப் பறந்தன பறவைகள்.

அழகான அந்த காலைப் பொழுது மதுரை நகருக்கே உரித்தான பரபரப்புடன் தொடங்க ஆரம்பித்தது. காலை ஆறரை மணிக்கு லேசாக விழிப்பு வந்தது யமுனாவுக்கு. அதுவும் தன்னால் வந்த விழிப்பு இல்லை. அவளது அறைக்கு வெளியே கேட்ட சத்தத்தால் தான் கண் விழித்தாள்.

எழுந்து அமர்ந்தவள் அது என்ன சத்தம் என்று யோசிக்க “இது நீங்க தேடி வச்ச வாழ்க்கை. என்ன நடந்தாலும் பொறுத்து தான் போகணும்னு சொல்றீங்க? கோச்சிக்கிட்டு இங்க வராதேன்னு சொல்றீங்க? அப்ப நான் எங்க போக? என்  வாழ்க்கையே கொஞ்சம் கொஞ்சமா அழிஞ்சிட்டு இருக்கு”, என்று காயத்ரியின் கண்ணீர் குரல் கேட்டது.

“இவ்வளவு காலையிலே அக்கா வந்திருக்கிறாளா?”, என்று வியப்புடன் எழுந்து நின்றவள் இன்னைக்கு என்ன பிரச்சனையோ என்று முணுமுணுத்து விட்டு அறைக் கதவை திறந்து வெளியே வந்தாள்.

ஒரு சோபாவில் அமர்ந்து அவளது அக்கா காயத்ரி அழுது கொண்டிருக்க அவர்களது தந்தை தாமோதரன் தலையைப் பிடித்த படி மற்றொரு சோபாவில் அமர்ந்திருந்தார். அவளது அம்மா காவேரி “நாங்க என்ன டி செய்யட்டும்? உன் தலையெழுத்து இப்படி ஆகும்னு நாங்க கனவா கண்டோம்?”, கத்திக் கொண்டிருந்தாள்.

காயத்ரி அருகில் சென்று அமர்ந்த யமுனா “என்ன பிரச்சனை அக்கா?”, என்று கேட்டாள்.

“என் மாமியார் டார்ச்சல் தாங்க முடியலை யமுனா. அதுலயும் அவரோட தங்கச்சியை வளைகாப்பு போட்டு கூட்டிட்டு வந்தோம்ல? அவ வேற சேந்துட்டு ஆடுறா. அவங்க கொடுமையை தாங்க முடியாம என் புருஷன் கிட்ட சொன்னா ஒண்ணுமே பேச மாட்டிக்கார். அவங்களை கண்டிக்கவும் மாட்டிக்கார். எனக்கு அங்க இருக்கவே பிடிக்கலை. அங்க சண்டை போட்டுட்டு இங்க வந்தா அம்மா ஏன் வந்தேன்னு கேக்குறாங்க?”

“இது எப்பவுமே நடக்குறது தானே அக்கா? புதுசா ஏதாவது நடந்துச்சா? ஏன்னா இப்ப நீ சொன்ன விஷயம் எல்லாம் உனக்கு பழகிப் போனது தான்”

Advertisement