Advertisement

அவள் உதடுகள் அவன் கன்னத்தில் எங்கு பதிந்தது என்று அவன் விரல்கள் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தது. தன்னவளின் காதலை அவள் வாய் மொழியாக அறியாமல் போனாலும் இந்த மாதிரி செய்கைகளால் உணர்ந்து கொண்டிருந்தவனுக்கு இன்றைய நாள் பெரிய பொக்கிஷம் தான்.

உள்ளே அவன் தன்னை மறந்து நிற்க வெளியே யமுனாவும் தன்னை மறந்து அழுது கொண்டிருந்தாள்.

“யமுனா”, என்ற குரல் கேட்டு தன்னிலை அடைந்து நிமிர்ந்து பார்த்தாள்.

அவளை ஆதரவாக பார்த்த படி நின்றிருந்தான் முகுந்தன். அவனைக் கண்டதும் அவள் கண்கள் மீண்டும் உடைப்பெடுக்க “அண்ணா”, என்றாள்.

“என்ன மா இது, சின்னப் பிள்ளை மாதிரி?”

“என்னால முடியலைண்ணா. இவங்களை நினைச்சா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. இந்த காதலுக்கு எதுவும் செய்ய முடியாத படி சூழ்நிலைக் கைதியா இருக்கேனே?”

“இங்க பாரு யமுனா, இந்த உலகத்துல மாற்றம் அப்படிங்குறது மட்டும் தான் மாறாதது. அதை தவிர எல்லாமே மாறக் கூடியது. உங்க வாழ்க்கைலயும் மாற்றம் வரும் மா. இப்ப அவன் உன்னை உள்ளங்கையில் வச்சு தாங்குறான்னா உனக்கான நேரம் வரும் போது அவனை உன் கண்ணுக்குள்ள வச்சு தாங்கு. அவன் கொடுக்குற காதலை உன்னாலயும் கொடுக்க கூடிய சூழ்நிலை வரும் மா. இவ்வளவு நாள் பொறுத்து இருந்துட்ட. இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கோ யமுனா”

“சரிண்ணா, நீங்க கொஞ்சம் அவங்களைப் பாருங்களேன். கவலைப் பட்டுட்டு இருக்க போறாங்க”

“இரு, ஐயா என்ன பண்ணுறார்ன்னு பாக்குறேன்”, என்று சொல்லி லேசாக கதவைத் திறந்து உள்ளே பார்த்தான். அங்கே பரணி கண்களை மூடி கன்னத்தில் கை வைத்த படி சிலை போல ஆனந்த பரவசத்தில் இருக்க சத்தமில்லாமல் கதவை மூடி விட்டான்.

“என்ன அண்ணா? உள்ள போகலையா?”

“இப்ப அவனுக்கு தேவை தனிமை தான் மா”

“என்ன அண்ணா சொல்றீங்க? அழுறாங்களா?”

“அழலை மா. ஆனந்த பரவசத்துல இருக்கான். கன்னத்துல ஒரு வப்பு வச்சியா என்ன? பையன் கன்னத்தை பிடிச்ச படி இருக்கான்?”, என்று முகுந்தன் கேட்க கன்னத்தில் என்ன கொடுத்தாள் என்று நினைவு வந்ததும் அவள் முகம் சிவந்து விட்டது.

அவள் சிவந்த முகத்தைப் பார்த்தவனுக்கு விஷயம் புரிந்து போக “ஆஹா பெருசா கவனிச்சிருக்க போலயே? இப்ப போனா நான் அவன் பிரண்டுங்குறது கூட அவனுக்கு கண்ணுக்கு தெரியாது. கொஞ்சம் தனியா இருக்கட்டும்”, என்று சிறு சிரிப்புடன் சொல்ல “போங்க அண்ணா”, என்று சிணுங்கியவள் “அவங்களை கொஞ்சம் பாத்துக்கோங்க அண்ணா. நான் என் சீட்டுக்கு போறேன்”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டாள்.

முகுந்தனும் அங்கிருந்து செல்லப் பார்க்க அப்போது அங்கே வந்தாள் சாரு. அவளைக் கண்டு அவன் முகம் மலர்ந்தது.

“என்ன பி. ஏ மேடம், எங்க இவ்வளவு அவசரமா போறீங்க?”

“சார் கிட்ட இந்த பைல்ல சைன் வாங்கணும் முகுந்தன். சார் லஞ்ச்க்கு போயிட்டா அப்புறம் வாங்க முடியாது. அதான்”

“இப்ப வேண்டாம் சாரு. ஐயா வேற மைண்ட் செட்ல இருக்காங்க. இந்த நேரத்துல தொந்தரவு பண்ண வேண்டாமே பிளீஸ்”

“ஏதாவது பிரச்சனையா முகுந்தன்?”

“பிரச்சனை எல்லாம் இல்லை. எம். டி சார் இப்ப அவங்க ஆள் கூட கனவுல டூயட் பாடிட்டு இருக்காங்க. அதைக் கெடுக்கணுமா?’

“வேண்டாம் வேண்டாம்”, என்று அவசரமாக சொன்னவள் “பிளீஸ் அந்த கதையை எனக்கும் சொல்லுங்களேன்”, என்றாள்.

“சரி சொல்றேன். ஆனா இப்ப வேலை இருக்கே?”

“அப்படின்னா சாயங்காலம் சொல்லுவீங்களா?”

“சரி”

“ஆனா நீங்க ஆஸ்பத்திரிக்கு போவீங்களே? ஐயோ கேக்கணும்னு நினைச்சேன். அப்பா எப்படி இருக்காங்க? இப்ப உடம்புக்கு பரவால்லயா?”

“நல்லா ஆகிட்டாங்க. இன்னைக்கு சாயங்காலம் டிஸ்சார்ஜ் பண்ணிருவோம். நான் நைட் உனக்கு கால் பண்ணுறேன். நைட் பேசலாம் தானே?”

“பேசலாமே? ஏன் அப்படி கேக்குறீங்க?”

“இல்லை ஒரு வயசு பையன் ஒரு வயசு பொண்ணுக்கு நைட் கால் பண்ணினா உங்க வீட்ல ஏதாவது தப்பா நினைப்பாங்கல்ல?”

“ஏன் தப்பா நினைக்க போறாங்க? நாம ஆபீஸ் விஷயம் தானே பேசப் போறோம்? அதெல்லாம் பேசலாம்”, என்று சொல்லி விட்டுச் செல்லும் அவளையே பார்த்த படி நின்றான் முகுந்தன்.

“என்னல்லாமோ பேச ஆசை தான். ஆனா முடியுமானு தெரியலையே? இப்ப என்ன மச்சான் பத்தி பேச வாய்ப்பு கிடைச்சிருக்கே, அதுவே போதும்?”, என்று எண்ணிக் கொண்டு தன்னுடைய வேலையைப் பார்க்க போனான்.

கோபத்துடன் வீட்டுக்குள் நுழைந்த சரவணப் பெருமாளைக் கண்ட கௌரி முதலில் மோரைக் கொடுத்து அவரை சாந்த படுத்தி விட்டு “என்ன ஆச்சுங்க?”, என்று கேட்டாள்.

“எல்லாம் உன் சீமந்த புத்திரனை நினைச்சு தான் எனக்கு பி.பி ஏறுது”

“நீங்க இல்லாமலா என் மகன் வந்தான்?”, என்று அவள் சிறு சிரிப்புடன் கேட்க அவர் உதடுகளும் சிரிப்பில் மலர்ந்தது.

“போடி ஆள் மயக்கி. உன்னை மாதிரி தான் உன் மகனும் இருக்கான்”, என்று அவர் சலித்துக் கொள்ள “இது என்ன புதுக்கதை? எல்லாரும் உங்களை மாதிரி தானே உங்க மகன் இருக்கான்னு சொல்றாங்க?”, என்று கேட்டாள்.

“அது ஆள் பாக்க என்னை மாதிரி தான் இருக்கான். ஆனா குணம் அப்படியே நீ தான் கௌரி”

“எதுக்கு அப்படி சொல்றீங்க?”

“எங்களை மயக்குறதுல தான்”, என்று அவர் சரசமாக சொல்ல இப்போது அவள் முகம் வெட்கத்தால் சிவந்தது.

“இந்த வயசுல பேச்சைப் பாரு அமைச்சருக்கு. சரி நான் உங்களை மயக்குறேன், என் மகன் யாரை மயக்குறானாம்?”

“வேற யாரை? அந்த யமுனா பொண்ணைத் தான். பேபின்னு என்னமா உருகுறான்? எனக்கே அப்படியே சிலிர்த்துருச்சு. ஆனா அந்த பொண்ணு சரி ஸ்ட்ராங்க் தான். அவன் பேச்சுக்கு மயங்காம அந்த திட்டு திட்டுறா. இவன் பல்லைக் காட்டிட்டு நிக்குறான்”

“ஏது? யமுனா பரணியை திட்டினாளா? ஏன்? என்ன ஆச்சு?”

“அவ வீட்ல ஏதோ வரன் பாத்துருப்பாங்க போல? வழக்கம் போல இவன் போய் பேசிருக்கான்? உடனே எப்படி நீங்க அப்படி போய் பேசலாம்னு லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கிட்டா”

“ஓ, அவ திட்டினதுக்கு உங்க மகன் என்ன சொன்னான்?”

“என்ன சொல்லி சமாதானப் படுத்தினான்னு தெரியலை. ஆனா கண்டிப்பா பேசியே அவளை மயக்கிருப்பான்? அதுக்கு மேல எனக்கு அங்க நிக்க ஒரு மாதிரி இருந்துச்சா? அதான் வந்துட்டேன்”, என்று அவர் சொல்ல கௌரி அமைதியாக இருந்தாள்.

“என்ன கௌரி அமைதியா இருக்க?”

“பரணி யமுனாவை நினைச்சா தான் கஷ்டமா இருக்குங்க. அவங்க வாழ்க்கை வீணாகிட்டு இருக்கு”

“என்ன பண்ணுறது கௌரி? எல்லாம் கடவுள் விட்ட வழி”

“நாம இன்னொரு தடவை போய் அவங்க வீட்ல பேசுவோமாங்க?”

“நமக்கும் சுயமரியாதை உண்டு கௌரி. நீ உன் மகன் வாழ்க்கைக்காக பேசுற. ஆனா எனக்கு நம்ம மரியாதை முக்கியம் கண்ணம்மா. நாம மறுபடியும் போய் அவமானப் பட முடியாது, அதை யமுனாவே விரும்ப மாட்டா. பாப்போம். என்ன நடக்குதுன்னு? வரன் தேடுறாங்கல்ல? சீக்கிரம் முடிவு வரும். எவ்வளவு நாள் தான் அவங்களும் பொம்பளைப் பிள்ளையை வீட்ல வச்சிருப்பாங்க. வேற வழி இல்லாம சம்மதிப்பாங்க”

“வேற வழி இல்லாம அவங்க பொண்ணைக் கொடுக்குற அளவுக்கு நம்ம மகன் தாழ்ந்து போய்ட்டானாங்க?”

“பரணி என்னைக்கும் தாழ்ந்து போக மாட்டான் டி. ஆனா அவன் காதலுக்காக கண்டிப்பா தாழ்ந்து தான் போவான். அதுல எனக்கு பெருமையும் தான். ஆனா இந்த யமுனா வீட்டை விட்டு நம்ம வீட்டுக்கு வர மாட்டிக்கான்னு தான் என்னோட கோபம். சரி சாப்பாடு எடுத்து வை வா”, என்று சொல்லிச் சென்றார்.

அதே நேரம் தன்னை மறந்து இருந்த பரணியை போனில் அழைத்த யமுனா அவனுடைய கனவைக் கலைத்து அவனை உண்ணச் சொல்லி அடுத்தடுத்த வேலையில் ஈடுபட வைத்தாள். ஆனால் அவனைப் பற்றிய நினைவில் அவள் அன்றைய உணவை மறந்தாள்.

அன்று மாலை யமுனா வேலை முடிந்து வீட்டுக்கு போன போது பயங்கர கோபத்தில் இருந்தார்கள் காவேரியும் தாமோதரனும். அவர்களை கண்டு கொள்ளாமல் அறைக்குள் சென்று விட்டாள். அதற்கு பின் அருண் வர அவள் நேரம் நகர்ந்தது.

இரவு  உணவுக்கு எப்போதும் போல “அருண் அத்தையைக் கூட்டிட்டு சாப்பிட வா”, என்று அழைத்தாள் தாரணி.

“அருண் குட்டி அம்மா சாப்பிட கூப்பிடுறாங்க போகலாமா?”, என்று கேட்ட படி அவனைத் தூக்கி கொண்டு வெளியே வந்தாள். எப்போதும் போல அருணுக்கு தோசையை ஊட்டியவள் அவனை டி‌வி பார்க்க போகச் சொன்னாள். அதற்கு பின் அவள் ஒரு தோசையை எடுத்து தட்டில் வைத்துக் கொண்டாள். அவளுக்கு சட்னி சாம்பாறை பரிமாறிய தாரணி “என்ன ஒரு தோசை வச்சிருக்க? நல்லா சாப்பிடு”, என்று சொல்லி இன்னொரு தோசையை வைக்கப் போக “ஆமா வை வை, ஏற்கனவே கொழுப்பு எடுத்து திரியுறா. இன்னும் நல்லா தின்னுட்டு அடங்காம ரோட்டுல அலையட்டும்”, என்று சமையல் அறையில் இருந்து கத்தினாள் காவேரி.

Advertisement