Advertisement

அத்தியாயம் 5

கடந்து போகும் நொடிகள்

கூட நின்று தான் போகிறது

உன்னைக் காண்கையில்!!!

சிறிது நேரம் அமைதியாக இருந்த சரவணப் பெருமாள் “எத்தனை நாளைக்கு சதா என் மகன் இப்படிக் கஷ்டப் படணும்? அவனுக்கும் வயசு கூடுதே? அவளுக்காக இவன் இவ்வளவு இறங்கணுமா?”, என்று கேட்டார்.

“காதலுக்காக ராஜா என்ன? ராஜாதி ராஜாவாக இருந்தாலும் இறங்கத் தாண்ணே செய்யணும்?”

“ஆனா வயசு….”

“அந்த பொண்ணுக்கும் வயது ஆகுதே அண்ணா? அது நிலையா தானே இருக்குது? யமுனா ஒண்ணும் நம்ம சின்ன தம்பியை மறந்துட்டு வேற வாழ்க்கையைத் தேடிப் போகலையே? ஏழு வருசமா அந்த சனியனுங்க கூட சேந்து போராடிட்டு தானே இருக்குது? அவங்க வீட்ல யமுனாவுக்கு ஒரு முடிவு எடுக்கும் போது தம்பிக்கும் ஒரு முடிவு வரும் அண்ணே. அது நல்ல முடிவா இருக்கணும்னு தான் என்னோட ஆசை”

“அது என்னமோ உண்மை தான். நல்ல முடிவா இல்லைன்னா இந்த பய என்ன ஆவான்னே தெரியலை. பெரியவனை வச்சு கவலை இல்லை. நிஷா பாப்பாவும் செட்டில் ஆகிட்டா. ஆனா இவனை வச்சிக்கிட்டு அல்லாடிட்டு இருக்கேன் நான்”

“சரியாகிரும் அண்ணே”, என்று ஆறுதல் படுத்தினார். சரவணப் பெருமாளும் யமுனா மற்றும் பரணியின் சந்தோசத்துக்காக கடவுளிடம் வேண்டுதலை வைத்தார்.

அதே நேரம் “நீ இவ்வளவு யோசிப்பியா பேபி? அதுவும் எனக்காக”, என்று காதலுடன் கேட்டான் பரணி.

அவன் கேள்வியில் அவன் கண்களில் இருந்த காதலில், அவன் வார்த்தையில் இருந்த உருகலில் எரிச்சல் அடங்கியவள் “ஏன் இப்படி பண்ணுறீங்க”, என்று கலக்கமாக கேட்டாள். அதைக் கேட்கும் போதே அவள் கண்கள் கலங்கியது. அடுத்த நொடி வேகமாக அவளை நெருங்கியவன் அவள் கண்ணீரை துடைத்து விட்டு “என்ன பேபி இது சின்ன பிள்ளை மாதிரி?”, என்று கேட்டான். அவளுடைய கண்ணீரை துடைக்க கை கிடைத்து விட்டது என்ற சந்தோசத்தில் அவள் கண்கள் விடாமல் கண்ணீரை சொரிந்தது.

“நீங்க பண்ணுறது தான் சின்ன பிள்ளை மாதிரி இருக்கு? எனக்காக நீங்க மேலும் மேலும் செய்யுறது எனக்கு குற்ற உணர்ச்சியைக் கொடுக்குது. நான் உங்களை மேலும் மேலும் காயப் படுத்துறேன். நீங்க எனக்காக படுற கஷ்டங்களைப் பாக்கும் போது என்னாலே என்னை மன்னிக்க முடியலை. பேசாம செத்துறலாம்னு கூட தோணுது. ஆனா எனக்கு ஒண்ணுன்னா நீங்க இருக்க மாட்டீங்கன்னு தெரியும். அதான் வாழ்ந்துட்டு இருக்கேன்”

“விடு பேபி, எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை. எனக்கு என்ன கஷ்டம்னு நினைச்சு நீ இப்படி பீல் பண்ணுற?”

“எனக்காக எவனோ ஒருத்தன் கிட்ட போய் மடிப் பிச்சை கேக்கணுமா? இது கஷ்டம் இல்லையா? இதெல்லாம் வேண்டாமே? நீங்க அப்படி பண்ணக் கூடாது”

“நீங்க அப்படி பண்ணக் கூடாதுன்னு எனக்காக நீ பேசுறது கூட எனக்கு சந்தோஷமா இருக்கு பேபி. இதுல எனக்கு எந்த கஷ்டமும் இல்லை. பிளீஸ் என்னை பிரிச்சு பேசாத. அது தான் எனக்கு கஷ்டமா இருக்கும்”

“நீங்க என்னை பாத்துருக்கவே கூடாது. நான் உங்க கிட்ட உதவி கேட்டுருக்கவே கூடாது. அப்படி மட்டும் நடக்காம இருந்திருந்தா இந்நேரம் நீங்க கண்டிப்பா ஒரு நல்ல பொண்ணைக் கல்யாணம் பண்ணி லைப்ல செட்டில் ஆகிருப்பீங்க?”

“கண்டிப்பா அப்படி நடந்துருக்காது பேபி”

“எப்படி அப்படிச் சொல்றீங்க?”

“அதுவா? ஒரு விஷயம் இருக்கு”

“என்ன விஷயம்?”

“இன்னொரு நாள் சொல்றேன்”

“பிளீஸ் இப்பவே சொல்லுங்க. என்னைப் பாக்காம இருந்தா கண்டிப்பா வேற பொண்ணைக் கல்யாணம் பண்ணிருந்துருப்பீங்க தானே?”, என்று அவ்வளவு ஆர்வமாக கேட்டாள். அவளின் ஒரு மனதோ அந்த கேள்விக்கு அவன் ஆம் என்று பதில் சொல்ல வேண்டும் என்று ஆசைப் பட்டது. மற்றொரு மனதோ இல்லை என்று சொல்ல வேண்டும் என்று ஆசைப் பட்டது.

“கண்டிப்பா இல்லை பேபி. நான் கடைசி வரைக்கும் ஒரு பொண்ணைத் தேடிட்டு இருந்துருப்பேன். ஆனா உன்னைப் பாத்ததும் அந்த தேடல் முடிஞ்சிருச்சு. உன்னைப் பாக்கலைன்னா என் தேடல் தொடர்ந்துட்டே இருந்துருக்கும். எங்க வீட்ல உள்ளவங்க, வினோத் மச்சான் எல்லாரும் உன்னால தான் என்னோட வாழ்க்கையே போச்சுன்னு நினைச்சிட்டு இருக்காங்க. சத்தியமா இல்லை யமுனா. நீ என் வாழ்க்கைக்குள்ள வந்த பிறகு தான் எனக்கு நிம்மதியாவே இருக்கு. அது யாருக்கும் புரியலை”

“எனக்குமே நீங்க சொல்றது புரியலை”

“அது ஒரு கனவு பேபி. என் கனவுல ஒரு பொண்ணு வந்தா. முகம் எல்லாம் தெரியலை. ஆனா அந்த கனவு வந்த அடுத்த நாள் அந்த உருவத்துக்கு உயிர் கொடுத்த மாதிரி நீ கண் முன்னாடி நிக்குற? எனக்கு என்னமோ நீ எனக்கானவள்ன்னு சொல்றதுக்கு தான் கடவுள் எனக்கு அந்த கனவைக் கொடுத்தாரோ என்னவோ? ஒரு வேளை அன்னைக்கு உன்னைப் பார்க்ல பாக்கலைன்னா நான் பாக்குற பொண்ணுங்க கிட்ட எல்லாம் அந்த கனவுப் பொண்ணைத் தேடிட்டே இருந்துருப்பேன்”, என்று அவன் சொல்ல “இப்படி எல்லாமா நடக்கும்?”, என்று எண்ணி வியப்பாக அவனைப் பார்த்தாள்.

அவளை சிறு சிரிப்புடன் பார்த்தவன் அவள் தலையை லேசாக தட்டி “இந்த சின்ன மண்டைக்குள்ள அதிக டென்சனை ஏத்திக்காத. இந்த ஜென்மம் மட்டும் இல்லை, இனி வர எல்லா ஜென்மத்துலயும் நீ எனக்கு தான்னு கடவுள் முடிவு பண்ணிட்டார். அதனால நம்ம கல்யாணம் நடந்தே ஆகும். உன் அம்மா அப்பா என்ன? யார் நினைச்சாலும் நம்மளை பிரிக்க முடியாது”, என்று அவ்வளவு உறுதியாக சொல்ல அடுத்த நொடி அவளாகவே அவன் மார்பில் சாய்ந்து அவனை இறுக கட்டிக் கொண்டாள். அவள் செய்கையில் அவன் முகம் மட்டும் அல்ல, அகமும் மலர்ந்து போனது.

அவனும் ஒரு கையை எடுத்து அவள் முதுகில் கோர்த்துக் கொண்டவன் மற்றொரு கையை எடுத்து அவள் பின்னந்தலையில் வைத்த படி அனைத்துக் கொண்டான்.

ஒருவர் அணைப்பில் மற்றவர் இருக்கும் இந்த தருணத்தில் அந்த அறையில் மட்டும் அல்ல, அவர்கள் மனதிலும் அப்படி ஒரு அமைதி சூழ்ந்தது. அந்த அமைதியைக் கலைக்க இருவருமே விரும்ப வில்லை.

எவ்வளவு நேரம் அப்படியே இருந்தார்களோ? மதியம் பன்னிரெண்டு மணிக்கு அந்த அறையில் இருந்த கடிகாரம் அடிக்கவும் தான் சுய உணர்வுக்கு வந்தார்கள். படக்கென்று அவனை விட்டு விலகியவள் சிறு கூச்சத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்து படக்கென்று குனிந்து கொண்டாள்.

அவள் பார்வையில் இருந்த வெட்கத்தில் அவன் உடலில் புதுவித ரசாயன மாற்றம் நிகழ்ந்தது. அவளின் அருகாமையில் அவன் உடல் கொஞ்சம் கொஞ்சமாக சூடேறுவதை தெளிவாக உணர்ந்தான். அவளால் மட்டுமே தன்னை உயிர்ப்பிக்க முடியும் என்று இப்போதும் உணர்ந்து கொண்டான் பரணி.

அவளுக்கோ அவனை நிமிர்ந்து பார்க்க முடியாத சங்கடம். அவள் செய்கையை நினைத்து அவளுக்கே ஒரு மாதிரி தான் இருந்தது. இது வரை அவள் அவனிடம் காதலைச் சொல்லியதே இல்லை. காதலிக்கிறேன்னு சொல்லாமலே அடிக்கடி அவன் மார்பில் சாய்ந்து கொள்வதை வழக்கமாக்கி கொண்டிருந்ததால் தான் இந்த சங்கடம். அவன் ஒன்றும் நினைக்க மாட்டான் தான். இருந்தாலும் அவளுக்கு ஒரு மாதிரி இருந்தது. அவளும் அவனை விரும்புகிறாள். ஆனால் காதலைச் சொல்லாமல் இருந்தாலாவது என்றாவது ஒரு நாள் அவன் தன்னை மறந்து வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வான் என்று நம்பினாள்.

அவள் சங்கடத்துடன் நிற்க அவள் உணர்வுகள் அவனுக்கு புரிந்ததோ என்னவோ? “பேபி”, என்று ஆழ்ந்த குரலில் அழைத்தான். “ம்ம்”, என்றாளே தவிர அவனை நிமிர்ந்து பார்க்க வில்லை.

“இதுல சங்கடப் பட எதுவுமே இல்லை பேபி. இன்னும் சொல்லப் போனா உன்னோட இந்த செய்கை பத்து நாளைக்காவாது என்னை சந்தோஷப் படுத்தும்”, என்று சொன்னான்.

அதைக் கேட்டு அவனை நிமிர்ந்து பார்த்தவள் அடுத்த நொடி வேகமாக அவனை நெருங்கி அவன் கன்னத்தில் இதழ் பதித்து விட்டு அதே வேகத்தில் அங்கிருந்து ஓடி விட்டாள்.

வெளியே வந்து சுவரில் சாய்ந்து நின்றவளின் கண்கள் கண்ணீரைச் சொரிந்தன. உள்ளே நின்றவனோ அவள் முத்தமிட்ட கன்னத்தை தடவிய படி கண்களை மூடி மெய் மறந்து நின்றிருந்தான்.

Advertisement