Advertisement

“என்னது? இந்த தடவையுமா? எவ்வளவு திமிர் இருக்கணும் இவனுக்கு. எல்லாம் நாம பெத்து வச்சதுகளை தான் சொல்லணும். வினோத்தும் யமுனாவும் அவன் பக்கம் நிக்குறதுனால தான் இப்படி நடக்குது. இருங்க இன்னைக்கு ரெண்டு பேருக்கும் இருக்கு”, என்று சொன்ன காவேரி போனை எடுத்து வினோத்தை அழைத்தாள்.

வீட்டு எண்ணில் இருந்து அழைப்பு வரவும் மனைவியோ என்று எண்ணி அதை எடுத்தான் வினோத். ஆனால் எடுத்ததும் “நீ நல்லா இருப்பியா டா? உன் தங்கச்சி வாழ்க்கைக்கு எமனா இருக்கியே? வீட்டுக்கு மூத்த மகன்னு உன் கிட்ட விசயத்தை சொன்னா நீ அதை அந்த பய கிட்ட சொல்லி காரியத்தை கெடுப்பேன்னு தான் இந்த தடவை எதுவும் உன் கிட்ட சொல்லலை. அப்படி இருந்து காரியத்தை கெடுத்திட்டியே? நல்ல சம்பந்தம் உன்னால போச்சு”, என்று காச்சு மூச்சென்று கத்த வினோத் அந்த பக்கம் அமைதியாக இருந்தான். அவன் எதுவும் பேச மாட்டான் என்று தெரிந்த காவேரி எரிச்சலுடன் போனை வைத்து விட்டு யமுனாவை அழைத்தாள். 

“வீட்ல இருந்து இந்த நேரத்துல யார் பேசுறா?”, என்று எண்ணி போனை யமுனா எடுத்ததும் “ஹலோ”, என்று அன்னையின் குரல் கேட்டது. சிறு அதிர்வுடன் “சொல்லுங்கம்மா”, என்றாள் யமுனா. 

“சீ உன் வாயல என்னை அப்படிச் சொல்லாத. உன்னைப் போய் பெத்தேனே? எங்க நிம்மதியை குழி தோண்டி புதைக்கன்னே பிறந்தியா டி? நீ எதுக்கு உயிரோட இருக்க? பேசாம செத்துரு”, என்று கத்தி விட்டு போனை வைத்தாள். 

அன்னையின் பேச்சு சிறு சலிப்பைத் தந்தாலும் “இன்னைக்கு என்னவோ?”, என்று தெரியாமல் வினோத்தை அழைத்தாள். அவனோ யாரிடமோ பேசிக் கொண்டிருந்தான். சற்று நேரத்தில் வினோத்தே அவளை அழைத்தான்.

அதை எடுத்த யமுனா “என்ன ஆச்சுண்ணா? அப்பா இப்ப தான் கால் பண்ணினாங்க”, என்றாள். அவன் அவளிடம் பேச மாட்டான் என்றாலும் “எனக்கும் பண்ணினாங்க”, என்றான். 

“என்ன நடந்துச்சுண்ணா?”

“இன்னைக்கு உன்னை பொண்ணு பாக்க வரதா சொல்லிருந்தாங்க யமுனா. எனக்கு அம்மா அப்பா சொல்லலை. தாரணி காதுல விஷயம் விழுந்துருக்கு. அவ தான் எனக்கு சொன்னா. நான் தரகர் கிட்ட பேசி விவரம் வாங்கி பரணி மாப்ள கிட்ட சொன்னேன். அவர் அந்த பையன் கிட்ட பேசிருப்பார் போல? இப்ப தான் அந்த பிரகாஷ் கிட்ட பேசினேன். ஏதோ கவர்ன்மெண்ட் வேலை எல்லாம் வாங்கித் தறேன்னு பரணி மாப்பிள்ளை சொன்னதா அவன் சொன்னான். இதெல்லாம் மாப்ளைக்கு தேவையா? அவர் எவ்வளவு உயரத்துல இருக்கார் தெரியுமா? ஆனா உனக்காக… இன்னும் அவர் எவ்வளவு தான் கீழ இறங்கணுமோ தெரியலை”, என்று சொல்லி போனை வைத்து விட்டான். 

வினோத் சொன்னதை எல்லாம் கேட்ட யமுனாவுக்கு ரத்தம் கொதித்தது. எரிச்சலுடன் தன்னுடைய சீட்டில் இருந்து எழுந்தவள்  பரணியைத் தேடி அவன் அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். 

பிரகாஷைப் பார்த்து விட்டு அலுவலகத்துக்கு வந்த பரணி தன்னுடைய அறைக்கு போக அங்கே கோபத்துடன் அமர்ந்திருந்தார் சரவணப் பெருமாள். 

அவரின் கோபத்தைக் கண்டு ஒரு நொடி திகைத்தாலும் “பா, நீங்க இன்னும் கிளம்பலையா? இந்நேரம் நீங்க கட்சி ஆஃபிஸ்க்கு கிளம்பிருப்பீங்கன்னு நினைச்சேனே? நீங்க என்னடானா என்னோட ரூம்ல இருக்கீங்க? உங்க கார் வேற வெளிய இல்லை”, என்று கேட்டான். 

“காரை பெட்ரோல் போட சதா எடுத்துட்டு போய்ருக்கான். கொஞ்ச தொகுதிக்கு போகலாம்னு கிளம்பும் போது தான் சதா நீ பண்ணிட்டு இருக்குற கூத்தைப் பத்தி சொல்றான். நீ பண்ணுறது உனக்கே நல்லா இருக்கா பரணி?”,  என்று கடுப்புடன் கேட்டார்.

“நான் என்ன பண்ணிட்டேன்”, என்று அசால்டாக கேட்ட படி அவர் எதிரே சென்று நின்றான். 

“ஒரு ஏழைப் பையனுக்கு அரசாங்க வேலை வாங்கிக் கொடுக்க நாம முயற்சி செய்யுறது நல்ல விஷயம் தான். ஆனா நீ அவனுக்கு உதவுனதுக்கு என்ன காரணம் பரணி?”

“அப்பா… அது வந்து…”

“எனக்கு தெரியும் பரணி. காரணம் யமுனா தானே? அவன் கிட்ட போய் கெஞ்சினியா? உனக்கு ஏன் டா இவ்வளவு சீப்பான வேலை. நீ என்ன சாதாரணமானவனா? ஏன் பரணி இப்படி இருக்குற? நீ என்னோட பரணி டா. பரணின்னா உலகம். இந்த உலகத்தையே ஆளப் பிறந்தவன்னு தான் உனக்கு அந்த பேர் வச்சேன். ஆனா நீ…”

“யமுனாவுக்கு முன்னாடி நான் கண்டிப்பா சாதாரணமானவன் தான்  பா”

“யமுனா….. யமுனா… யமுனா…. எல்லாம் அவளால தான். அவளை நினைச்சு எனக்கு எரிச்சலா இருக்கு பரணி”, என்று சரவணப் பெருமாள் கத்தும் போதே அறைக் கதவை திறந்து கொண்டு புயலென அங்கு வந்தாள் யமுனா. 

அவளைக் கண்டதும் பரணி முகம் மென்மையாக மாற சரவணப் பெருமாளோ அவளைத் தீயாக முறைத்தார். அவரை எல்லாம் கண்டு கொள்ளாமல் நேராக பரணியை நெருங்கி அவனை முறைத்துப் பார்த்தாள் யமுனா.

அவளை அப்படியே விட்டால் அவர் சரவணப் பெருமாள் அல்லவே? “உனக்கு கொஞ்சமாவது மேனர்ஸ் இருக்கா? ஒரு எம்.டி ரூமுக்கு வரும் போது பெர்மிசன் கேட்கனும்னு கூட தெரியாதா? இது தான் நீ படிச்சிட்டு வந்த லட்சணமா?”, என்று கத்தினார்.

அவரை நிதானமாக திரும்பிப் பார்த்தவள் “இந்த கம்பெனி ஆடிட்டரா நான் இங்க வந்திருந்தா எம்.டி சார் கிட்ட அனுமதி கேட்டு வந்திருப்பேன் சேர்மன் சார். ஆனா நான் வந்திருக்குறது பரணிங்குற தனி மனுசனைப் பார்க்க. அதுக்கு எனக்கு எந்த அனுமதியும் தேவை இல்லைன்னு நினைக்கிறேன்”, என்று அவரிடம், சொல்லி விட்டு அவன் புறம் திரும்பியவள் “உங்க மனசுல நீங்க என்ன நினைச்சிட்டு இருக்கீங்க?”, என்று கோபத்துடன் கேட்டாள். அவள் தன்னிடம் பேசியதும் பரணியின் கண்கள் மின்னியது. அவள் கோபம் எல்லாம் அவனை ஒன்றுமே செய்ய வில்லை. 

யமுனா தன்னுடைய மகனைப் முறைப்பதையும் கோபமாக பேசுவதையும் கண்டு சரவணப் பெருமாளுக்கு சந்தோஷமாக இருந்தது. மகன் செய்திருக்கும் வேலைக்கு இவள் கோபப் படுகிறாள். இனி இருவருக்கும் சண்டை வரும், இருவரும் பிரிந்து விடுவார்கள் என்று ஆவலாக அவர்களைப் பார்த்தார்.

ஆனால் அவர் எண்ணத்தை தவிடு பொடியாக்கும் வகையில் “நான் என்ன செஞ்சேன் யம்மு பேபி?”, என்று உருகிப் போய் வந்தது பரணியின் குரல். அந்த குரலில் தான் எவ்வளவு காதல்? அவன் முகத்திலும் குரலிலும் காதல் தெறித்தது. 

அவன் குரலில் வழிந்த காதலைக் கண்டதும் அங்கே நிற்க சரவணப் பெருமாள் பெரிதும் சங்கடப் பட்டார். அங்கிருந்து செல்ல தான் வேண்டும் என்று நினைத்தார். ஆனால் அவர்கள் சண்டையைப் பார்த்து சந்தோஷப் பட வேண்டுமே என்று அமைதி காத்தார். 

ஆனால் யமுனா அவன் குரலில் மயங்க வில்லை. மயங்க வில்லையா? இல்லை, அவன் குரலால் எழுந்த மயக்கத்தை மறைத்துக் கொண்டாளா என்பது அவள் மட்டுமே அறிந்த ரகசியம். 

“பண்ணுறதையும் பண்ணிட்டு இந்த கொஞ்சுற வேலை எல்லாம் என் கிட்ட வேண்டாம். எதுக்கு அந்த பிரகாஷ் கிட்ட அப்படி பேசுனீங்க?”, என்று கடுப்புடன் கேட்டாள் யமுனா.

“நான் உனக்கு கெட்ட பேர் வாங்கித் தரலை பேபி. நான் மட்டும் தான் உன்னை விரும்புறேன்னு சொன்னேன். உன்னைப் பத்தி தப்பா பேசலை”, என்று அவன் தனிவாக சொல்ல “இவனுக்கு இது தேவை தான். இவளுக்காக போய் இவன் இந்த வேலை பாத்தான்ல? நல்லா அவ கிட்ட வாங்கிக் கட்டிக்கட்டும். அப்ப தான் திருந்துவான்”, என்று எண்ணிக் கொண்டார் சரவணப் பெருமாள். 

“நான் அதையா சொன்னேன்? உங்களை யார் அவன் கிட்ட எல்லாம் போய் பேசச் சொன்னது? அதுக்கு என்ன அவசியம்? நீங்க யார் என்னன்னு உங்களுக்கு நினைவு இருக்கா இல்லையா? கண்டவன் கிட்ட எல்லாம் நீங்க போய் பேசனுமா? எப்பவும் எங்கயும் யாருக்காகவும் உங்க கம்பீரம் மட்டும் குறையவே கூடாது. அவன் பொண்ணு பாக்க வந்தா என்ன வரலைன்னா என்ன? அதை நான் பேஸ் பண்ணிக்குவேன். ஆனா நீங்க ஏன் அடுத்தவங்க கிட்ட கெஞ்சனும்? எனக்கு அது பிடிக்கலை”, என்று யமுனா சொல்ல சரவணப் பெருமாள் அவள் பேச்சைக் கேட்டு அதிர்ந்து போனார். மகனோ மயங்கிப் போனான். 

“இப்படி பேசி பேசி தான் என் பையனை மயக்கி வச்சிருக்கா”, என்று எண்ணிக் கொண்டார் சரவணப் பெருமாள்.

“விடு பேபி. நான் ஒண்ணும் அடுத்தவங்களுக்காக இந்த வேலை செய்யலை. உனக்காக தான் பண்ணினேன். உன்னை பொண்ணு பாக்க வறேன்னு சொல்லி யாரும் மனசங்கடப் படுத்தக் கூடாதுன்னு தான் ஆரம்பத்துலே ஸ்டாப் பண்ணினேன். இன்னொரு விஷயம் யாரும் உன்னை உரிமையா பாக்குறதை என்னால தாங்க முடியாது பேபி”, என்று சொல்ல மகனை நே என்று பார்த்தார் சரவணப் பெருமாள். 

அதற்கு மேல் அங்கேயே இருந்தால் இருக்கும் தலை வலி இன்னும் அதிகமாகி விடும் என்பதால் மெதுவாக அங்கிருந்து சென்றார். போகும் போது யமுனாவை முறைத்துப் பார்க்கவும் அவர் மறக்க வில்லை.

இறுகிய முகத்துடன் வந்தவரை அமைதியாக பார்த்த சதா “தொகுதிக்கு போகலாமா அண்ணா?”, என்று கேட்டார். 

“வண்டியை வீட்டுக்கு விடு சதா. இப்ப தொகுதிக்கு போனா என் எரிச்சல் இன்னும் அதிகமாகிடும்”

“உக்காருங்க அண்ணே”, என்று சொன்னவர் அவர் அமர்ந்ததும் முன் இருக்கையில் டிரைவர் அருகில் அமர்ந்து கொண்டார் சதாசிவம்.

“வீட்டுக்கு போ செல்வம்”, என்று சதாசிவம் சொன்னதும் அவனும் சரிங்க மாமா”, என்றான். செல்வம் சதாசிவத்தின் சொந்த அக்காவின் மகன். சதாசிவம் சொல்லி தான் சரவணப் பெருமாள் அவனை வேலைக்கு வைத்திருந்தார். சதாசிவத்தின்  மகளையும் செல்வத்துக்கு கட்டி வைத்திருந்தனர். இவர்கள் மூவருக்கும் இருக்கும் ரகசியம் வேறு ஒருவரையும் எட்டாது.

அதனால் “என்ன ஆச்சுண்ணே? எதுக்கு இவ்வளவு எரிச்சல்?”,  என்று கேட்டார் சதாசிவம். 

“அரசியல்ல இருந்து, இவ்வளவு பெரிய பதவியையும் வச்சிக்கிட்டு இந்த சின்ன பொண்ணை என்னால ஒண்ணும் பண்ண முடியலையே?”, என்று ஆதங்கமாக வந்தது சரவணப் பெருமாளின் குரல். 

“யமுனா பாப்பாவைச் சுத்தி பரணி தம்பி கேடையமா இருக்குற வரைக்கும் நம்மால ஒண்ணும் செய்ய முடியாது. அது மட்டும் இல்லை”, என்று அவர் இழுக்க “என்ன சதா?”, என்று கேட்டார் சரவணப் பெருமாள். 

“யமுனா பாப்பா மேல உங்களுக்கு கோபம் இருந்தாலும் அதை உருத் தெரியாம அழிக்க உங்களுக்கு மனசு வராதுங்க அண்ணே. ஏன்னா உங்களுக்கும் பாப்பாவை பிடிக்கும்”

“ம்ம்”, என்று எரிச்சலுடன்  முணுமுணுத்தார். 

“யமுனா பாப்பா நல்ல பொண்ணுண்ணே. அது ஒரு பொக்கிஷம் மாதிரி. அதான் பரணி தம்பி விடாம இழுத்து புடிக்குது”, என்று சதா சொல்ல அது சரி என்பது போல அமைதியாக இருந்தார் சரவணப் பெருமாள். 

காரிகை வருவாள்….

Advertisement