Advertisement

அத்தியாயம்

இதமான தென்றலும் உந்தன்

விரல்களும் எந்தன் பொக்கிஷம்

என் குழல் கோதுவதால்!!!

பரணி உதவ முடியுமா என்று கேட்டதும் “கண்டிப்பா சார். நீங்க நினைச்சிருந்தா என்னை உங்க இடத்துக்கு வர வச்சிருக்கலாம். அது மட்டுமில்லாம உங்க கிட்ட இருக்குற பணத்துக்கும் பதவிக்கும் என்னை எல்லாம் மனுசனா மதிக்கனும்னு கூட அவசியம் இல்லை. அப்படி இருந்தும் நீங்க என் கிட்ட இவ்வளவு தன்மையா பேசுறீங்கன்னா உங்க மனசும் குணமும் எனக்கு புரியுது. யமுனாவும் உங்களை விரும்புறாங்களா சார்?”, என்று கேட்டான். 

இந்த கேள்விக்கு அவனுக்கு பதில் தெரிந்தும் “தெரியலை, ஆனா அவ வீட்ல உள்ளவங்க சொன்னா அவ கேப்பா”, என்று விரக்தியாக சொன்னான். 

“அவங்க விரும்பலைன்னா இந்த தகவல் எப்படி சார் உங்களுக்கு தெரியும்?”

“அவளோட அண்ணன் வினோத் தான் சொன்னார்”

“ஓ, சரி சார், நான் எங்க வீட்ல பேசிக்கிறேன். அவங்க வீட்ல என்ன காரணம் சொல்லணும் சார்? எனக்கு பிடிக்கலைன்னு சொல்லிறவா?”

“வேண்டாம், நான் வந்து உங்களை பொண்ணு பாக்க போகக் கூடாதுன்னு சொன்னேன்னு சொன்னாப் போதும். இதுல மறைக்க எதுவும் இல்லை. நான் இப்படி செய்வேன்னு அவங்களுக்கும் தெரியும். நான் தடுத்து நிறுத்துறதுல ஏழாவது ஆள் நீங்க”, என்று பரணி சொல்ல பிரகாஷ்க்கே அவனைக் கண்டு பாவமாக இருந்தது. 

“சரி சார், எங்க வீட்ல நான் பேசிக்கிறேன். நீங்க கூடிய சீக்கிரம் யமுனாவை கல்யாணம் பண்ணிக்கங்க சார். இப்படியே போராட முடியாது இல்லையா?”

“சரி பிரகாஷ், தேங்க்யு என்னை புரிஞ்சிக்கிட்டதுக்கு”

“சார், உங்களை மாதிரி ஒரு நல்லவரை கடவுள் அறிமுகப் படுத்தினதுக்கு நான் தான் தேங்க்ஸ் சொல்லணும்… அப்புறம் சார்….”

“என்ன? சொல்லுங்க பிரகாஷ்”

“நீங்க என் கிட்ட உதவி கேட்டு வந்துருக்கீங்க, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இதைக் கேக்குறேன்னு நீங்க நினைக்க கூடாது. நான் உங்களுக்கு செஞ்சதுனால எனக்கு  நீங்க செய்யணும்னு கட்டாயம் இல்லை. நான் இப்ப எதுக்கு இதைக் கேக்குறேன்னா உங்களை மாதிரி இருக்குற பெரிய ஆட்களை எல்லாம் எங்களால நேர்ல பாக்கவே முடியாது. அதான் இப்ப கேக்கணும்னு நினைக்கிறேன்”

“நான் அப்படி எதுவுமே நினைக்கலை பிரகாஷ். என் கிட்ட நீங்க என்ன கேக்கணுமோ தயங்காம கேளுங்க பிரகாஷ்’, என்று லகுவாகவே சொன்னான். அவன் நம்பி வந்த விஷயம் முடிந்த சந்தோஷம் அவனுக்கு.

“சார், என்னோட குடும்பம் மிடில் கிளாஸ்ன்னாலும் கொஞ்சம் கஷ்டப் பட்டது தான். கடனை உடனை வாங்கி தான் இன்ஜினியரிங் படிக்க வச்சாங்க. படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்கலை. இருந்த இடத்தை வித்து அப்புறம் எம். எல். ஏ வை பாத்து மூணு லட்சம் கட்டி அவருக்கு தனியா ஒரு லட்சம் கொடுத்து தான் இந்த வேலைக்கு சேந்தேன். பணம் கொடுத்து வேலைக்கு போறது தப்பு தான். எனக்கும் தெரியும். ஆனா உலகமே அப்படி தான் சார் இயங்கிட்டு இருக்கு. எங்க ஆஃபிஸ்ல வேலை பாக்குற ஒரு ஆள் பதினாறு லட்சம் கொடுத்து வேலைக்கு வந்திருக்கான். சரி தப்பு எல்லாம் பாத்து வாழுற உலகத்துல நாம இல்லை சார். எல்லாருமே சுயநலமா தான் இருக்காங்க”

“ஆமா பிரகாஷ், உலகமே அப்படி மாறிருச்சு. அதை விடுங்க. நான் உங்களுக்கு என்ன செய்யணும்?”

“நான் பாக்குற வேலை நல்ல வேலை தான் சார். ஆனா இன்ஜினியரிங் முடிச்சிட்டு பியூன் வேலை பாக்குறது ரொம்ப கஷ்டமா இருக்கு சார். அது நல்ல வேலை இல்லைன்னு சொல்ல மாட்டேன் சார். எனக்கு மரியாதையை வாங்கிக் கொடுத்த வேலை தான். ஆனா ஏனோ தெரியலை… என்னால…. அதுல திருப்தி அடைய முடியலை”

“எனக்கு புரியுது பிரகாஷ். சில நேரம் குடும்ப நிலைமைக்காக பிடிக்காத வேலைக்கு போக நேரும். கவர்ன்மெண்ட் ஆஃபிஸ்ல பத்து படிச்சிருப்பான். வி.ஏ.ஓ வா உக்காந்துருப்பான். இன்ஜினியர் முடிச்ச நீங்க அவனுக்கு கீழ வேலை பாப்பீங்க? அது தானே உங்க பிரச்சனை?”, என்று கேட்டான் பரணி. 

“ஆமா சார், உங்களால முடிஞ்சா வேற ஏதாவது வேலை வாங்கித் தர முடியுமா சார்? முடிஞ்சா தான். இல்லைன்னா பரவால்ல. நமக்கு விதிச்சது இதுன்னு நினைச்சிக்கிறேன்”

“இவ்வளவு தானே? ஒரு நிமிஷம் இருங்க”, என்று சொன்னவன் தன்னுடைய போனை எடுத்து தன்னுடைய தந்தையின் பி.ஏவான ஸ்வாதியை அழைத்தான்.

அதை எடுத்து “சார்,  சொல்லுங்க”, என்றாள். 

“சேர்மன் எங்க இருக்காங்க ஸ்வாதி?”

“நம்ம ஆஃபிஸ்ல சார். ஒரு மீட்டிங்ல இருக்காங்க”

“சரி கவர்ன்மெண்ட் ஜாப்க்கு ஏதாவது வேகன்சி போட்டுருக்காங்களா? எந்த ஊர்ல நம்ம ஜாப் எடுக்க முடியும்னு சதாசிவம் அங்கிள் கிட்ட கேட்டுட்டு லைன்ல வாங்க. இல்லை இல்லை பிரகாஷ்ன்னு ஒரு பையனுக்கு வேலை ரெடி பண்ணிட்டே எனக்கு கூப்பிடுங்க. நான் சதா அங்கிள் கிட்ட கேட்டா நேரடியா அப்பா கிட்ட கோத்து விட்டுருவாங்க”

பிரகாஷின் விவரங்களைக் கேட்ட ஸ்வாதி “ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ்ல கூப்பிடுறேன் சார்”, என்று சொல்லி போனை வைத்தாள். 

சிறிது நேரம் கழித்து பரணியை அழைத்தவள் “சார் இப்போதைக்கு எதுவும் போஸ்டிங் போட முடியாது. அப்படிப் போட்டா எதிர்கட்சி தலைவரால நம்ம சேர்மன் நேம் ஸ்பாயில் ஆகும். அதனால நெக்ஸ்ட் மன்த் ரயில்வே எக்ஸாம் போடப் போறாங்க. அதை அவங்களை அட்டண்ட் மட்டும் பண்ணச் சொல்லுங்க. ஜாப் போட்டுறலாம்”, என்று சொல்லி போனை வைத்தாள். 

அவள் போனை வைத்ததும் “பிரகாஷ்”, என்று அழைத்தான் பரணி.

“சார்”

“அடுத்த வாரம் ரயில்வே எக்ஸாம் போடப் போறாங்க. உங்களுக்கு தெரியுமா?”

“தெரியும் சார், நானும் அப்ளை பண்ணணும்னு தான் இருக்கேன். எல்லா எக்ஸாமும் எழுதிட்டு தான் சார் இருக்கேன். ஆனா ஒரு மார்க் ரெண்டு மார்க்ல போய்ருது. குடும்ப சூழ்நிலை வேலைக்கு போயே ஆகணும்னு இருந்ததுனால தான் மேலும் முயற்சி பண்ணலை. ஆனா எல்லா எக்ஸாமும் எழுதிட்டு தான் சார் இருக்கேன்”

“குட், அப்படின்னா நீங்க என்ன பண்ணுறீங்க? ரயில்வே எக்ஸாம் போய் எழுதுங்க. அந்த ஜாப்க்கு ரிசல்ட் போடுற அன்னைக்கு அதுல உங்க பேர் இருக்கும். அப்படி இல்லைன்னா நான் காலைல உங்களுக்கு கூப்பிட்டேன்ல அந்த நம்பருக்கு கூப்பிடுங்க. அது என்னோட பெர்ச்னல் நம்பர் தான். அடுத்த ஜாப் கிடைக்கிற வரை நீங்க பியூன் வேலை பாக்க தான் செய்யணும். வேற வழி இல்லை. சாரி”

“சரி சார், ஒண்ணும் பிரச்சனை இல்லை. நீங்க சொன்னதே எனக்கு ரொம்ப சந்தோஷம் சார்”, என்று உண்மையான சந்தோசத்துடன் தான் சொன்னான் பிரகாஷ். ஆனால் பரணிக்கு தான் அவனுக்கு உண்மையிலே ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. எங்களுக்கு சம்பளம் வேண்டும் என்று கேட்காமலே தொழிலாளர்களுக்கு அள்ளி கொடுப்பவன் அவன். அப்படி இருக்க பிரகாஷ் வாய் விட்டு உதவி என்று கேட்டும் செய்யாமல் இருப்பானா? 

என்ன செய்ய என்ன செய்ய என்று யோசித்தான். தன்னுடைய அலுவலகத்துக்கு அழைத்து பெரிய சம்பளமாக அவனுக்கு கொடுக்க முடியும் தான். ஆனால் பிரகாஷ் மனது அரசு வேலையில் நிலைத்திருப்பது புரிந்தது. அவன் ஆசையை கெடுக்க பரணிக்கு மனதில்லை. இதற்கு பிறகு ரயில்வே பரீட்சை எழுதி அதற்கு ரிசல்ட் வந்து வேலை போட இரண்டு வருடமாவது ஆகி விடும். உடனடியாக இவனுக்கு எப்படி உதவ என்று யோசித்து விட்டு “இதுக்கு முன்னாடி ஏதாவது எக்ஸாம் எழுதி ரிசல்ட் வராம இருக்கா பிரகாஷ்?”, என்று கேட்டான்.

“ஆமா சார், குருப் ஒன் மெயின் எக்ஸாம் எழுதிருக்கேன். பிரிலிமினரில பாஸ் ஆகி மெயின் எக்ஸாம் எழுதி ஆறு மாசம் ஆகுது. ஆனா ரிசல்ட் வரும்னு நம்பிக்கை இல்லை. எக்ஸாம் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு சார்”

“நம்ம ஸ்டேட் எக்ஸாம் தானே? அப்புறம் என்ன கவலை? விடுங்க பாத்துக்கலாம்”, என்று சொன்னவன் ஸ்வாதியை அழைத்து உதவி கேட்க அவள் சதாசிவத்திடம் பேசி அவரும் உடனே சரி என்று சொன்னார். பரணிக்கும் தகவல் வந்தது. அவன் முகம் மலர்ந்தது. 

“அடுத்த மாசம்  பதினேழாம் தேதி ரிசல்ட் வருதாம் பிரகாஷ். அதுல கண்டிப்பா உங்க பேர் இருக்கும். கவலை படாதீங்க”

“சார், அது பெரிய வேலை, பெரிய பெரிய போஸ்டிங் இருக்கும். கிட்டத்தட்ட கலெக்டர்க்கு அடுத்த படியான போஸ்டிங் இருக்குமே?”, என்று சிறு பயத்துடன் கேட்டான். 

“நீங்க அதுக்கான தகுதி வாய்ந்தவர் தான் பிரகாஷ். அதுல உங்க பேர் இருக்கான்னு பாருங்க. இல்லைன்னா என்னைக் கூப்பிடுங்க. கண்டிப்பா இருக்கும். அப்புறம் நீங்க பரீட்சை எழுதி நீங்க பாஸ் ஆகி வேலை வாங்கினாதாவே இருக்கட்டும். யாருக்கும் இந்த விஷயம் தெரிய வேண்டாம். நீங்களே உங்க மனசுல அது நீங்க வாங்கின மார்க்குனு நம்புங்க. கண்டிப்பா உங்களுக்கு இதே மதுரைல போஸ்டிங் உண்டு. கலெக்டர் ஆஃபிஸ்ல நான் உங்களை பாக்கணும். ஒரு வேளை உங்களுக்கு ஸ்டேட் கவர்ன்மெண்ட் வேலை வேண்டாம், சென்ட்ரல் கவர்ன்மெண்ட் வேலை வேணும்னு நினைச்சாலும் ரயில்வே எக்ஸாம் எழுதிட்டு எனக்கு கூப்பிடுங்க”, என்று சொல்லி எழுந்து கொண்டான். 

“நம்ம ஸ்டேட்லே வேலை பாக்குறேன் சார்”

“அப்படின்னா இந்த வேலை உங்களுக்கு கண்பார்ம் தான். ஆனா ஜாயின் பண்ணுற வரைக்கும் பியூன் வேலையை விட வேண்டாம். சரியா? உங்களைப் பாத்ததுல ரொம்ப சந்தோஷம். நான் வரேன்”, என்று பரணி சொல்ல பிரகாஷும் எழுந்து கொண்டான்.

“நீங்க எங்க எந்திரிக்கிறீங்க? காலைல என்னைப் பாக்குற குழப்பத்துல எதுவும் சாப்பிட்டுருக்க மாட்டீங்க? நம்ம ஹோட்டல்ல எல்லா டிஸும் நல்லா இருக்கும். உக்காந்து சாப்பிட்டு போங்க. சாரி என்னால உங்க கூட உக்காந்து சாப்பிட முடியலை. அப்பா தலைல வேலையை கட்டிட்டு வந்துருக்கேன். நான் போனா தான் அவங்க ரிலீப் ஆவாங்க”, என்று சொல்லி விட்டு அங்கிருந்த மேனேஜரிடம் பிரகாஷை கவனிக்க சொல்லி விட்டு அலுவலகத்துக்கு கிளம்பினான். 

போகும் அவனை பிரம்மிப்பாக பார்த்துக் கொண்டு நின்ற பிரகாஷை அமரச் சொன்ன மேனேஜர் பேரரை அழைத்து அவனுக்கு தேவையானதை கொடுக்கச் சொன்னான். சந்தோசமாக உண்டு முடித்த பிரகாஷ் பேரரிடம் பில் என்று கேட்க அங்கு வந்த மேனேஜர் “நீங்க எம். டி சார் பிரண்டுன்னு சார் சொல்லிட்டு போனாங்க, உங்களுக்கு பில் போட்டா எங்க வேலை காலி ஆகிரும் சார்”, என்றான். 

தன்னை நண்பன் என்றா சொன்னான் என்று வியந்தவாறே சிறு சிரிப்புடன் பைக் ஸ்டாண்டுக்கு வந்தான் பிரகாஷ். அப்போது அங்கு வந்த மேனேஜர் “சார், எம். டி சார் உங்களுக்கு லஞ்சும் பேக் பண்ணி கொடுக்கச் சொன்னாங்க”, என்று சொல்லி ஒரு கவரைக் கொடுத்து விட்டே சென்றான். உல்லாசமான மனநிலையில் தன்னுடைய பைக்கின் மீது சாய்ந்தவாறே தன்னுடைய தந்தையை அழைத்தான். 

“சொல்லு பிரகாஷ்”

“அப்பா, இன்னைக்கு சாயங்காலம் நாம பொண்ணு பாக்க போக போறது இல்லை”, என்று சொன்னவன் நடந்த அனைத்தையும் சொல்ல அவருக்கு திகைப்பாக இருந்தாலும் வேறு ஒன்றும் சொல்ல முடியலை. 

“சரி பிரகாஷ், நான் பொண்ணு வீட்ல சொல்லிறேன்”, என்று சொல்லி போனை வைத்து விட்டு யமுனாவின் தந்தை தாமோதரனை அழைத்தார். 

“ஹலோ சம்பந்தி வணக்கம்”, என்றார் தாமோதரன். 

“சம்பந்தின்னு எல்லாம் சொல்ல வேண்டாம் தாமு சார். அதுக்கு நமக்கு கொடுப்பனை இல்லை. நாங்க இன்னைக்கு உங்க மகளை பொண்ணு பாக்க வரப் போறது இல்லை”

“என்ன சொல்றீங்க?”, என்று அதிர்ச்சியாக கேட்டார். 

அவரும் நடந்ததைச் சொல்ல தாமோதரன் கொதிப்புடன் போனை வைத்தார். 

அவர் முகத்தை வைத்து “என்ன ஆச்சுங்க?”, என்று கேட்டாள் காவேரி. 

“இந்த தடவையும் அவன் நம்ம பொண்ணு வாழ்க்கையை கெடுத்துட்டான்.  பொண்ணு பாக்க வறேன்னு சொன்ன மாப்பிள்ளை கிட்ட ஏதேதோ பேசி வரக் கூடாதுன்னு சொல்லிட்டானாம்”, என்று வெறுப்புடன் சொன்னார்.

Advertisement