Advertisement

“சார், அமைச்சர் பையனா பேசுறது?”, என்று வியப்பாக கேட்டான் பிரகாஷ். அவனை அறியாதவர்கள் இந்த மதுரையில் உண்டா என்ன?

“ஆமா”, என்று அவன் தர்மசங்கடத்துடன் சொல்ல “சொல்லுங்க சார், என்ன விஷயம்? எனக்கு கால் பண்ணிருக்கீங்க?”, என்று கேட்டான் பிரகாஷ்.

“நாளைக்கு காலைல நான் உங்களை மீட் பண்ணனுமே? நீங்க எப்ப பிரீயா இருப்பீங்க?”

“சார்… நீங்க எப்ப சொல்றீங்களோ அப்பவே பாக்கலாம். எங்க பாக்கணும். எப்ப வரணும்? உங்களை எல்லாம் நேர்ல பாக்குறதே எங்களுக்கு எல்லாம் பெரிய விஷயம்? நீங்க என்னடான்னா என் கிட்ட ப்ரீ டைம் கேட்டுட்டு இருக்கீங்க?”

“அப்படி எல்லாம் இல்லை பிரகாஷ். நானும் சாதாரண மனுஷன் தான். ஒரு முக்கியமான விஷயம் உங்க கிட்ட பேசணும். போன்ல அதைச் சொல்ல முடியாது. நாளைக்கு காலைல ஒரு ஒன்பது மணிக்கு எங்க ஹோட்டல்க்கு வர முடியுமா? ஒரு அரை மணி நேரம் தான். பிளீஸ்”

“எனக்கு நாளைக்கு பத்து மணிக்கு தான் சார் ஆபீஸ் போகணும். நான் கண்டிப்பா வரேன். ஆனா என்ன விசயம்னு சொன்னா என்னோட படபடப்பு கொஞ்சம் போகும்?”

“நேர்ல சொல்லுறேனே?”

“சரி சார், நான் வரேன். காலைல பாக்கலாம்.., குட் நைட் சார்”, என்று சொல்லி போனை வைத்தான்.

பரணியோ “காலை ஒன்பது மணில இருந்து பத்து மணி வரைக்கும் எந்த அப்பாயின்மேண்ட் இருந்தாலும் கேன்சல் பண்ணிருங்க சாரு”, என்று சாருவுக்கு மெஸ்ஸேஜ் அனுப்பி வைத்தான்.

அதைப் பார்த்து பதட்டத்துடன் அவனை அழைத்தவள் “சார், நாளைக்கு ஒன்பது டூ பத்து ஒரு முக்கியமான காண்ட்ராக்ட் சைன்  பண்ணனும். இது ரொம்ப முக்கியமானது”, என்றாள்.

“ஓ, சரி நான் அப்பாவை வரச் சொல்றேன். ஆனா என்னால வர முடியாது. நீ அங்க இருந்து எல்லாம் பாத்துக்கோ சாரு. எனக்கு முக்கியமான வேலை இருக்கு. வைக்கிறேன் சாரு”, என்று சொல்லி வைத்து விட்டான்.

வைத்ததும் இல்லாமல் தந்தையை அழைத்து “அப்பா காலைல ஒன்பது டூ பத்து ஆபீஸ் போயிருங்க”, என்றான்.

“டேய் நான் அமைச்சர் டா, எனக்கு நிறைய வேலை இருக்கு. உன் ஆபீஸ் வேலை எல்லாம் என்னால சாயங்காலம் ஆறு மணிக்கு மேல தான் செய்ய முடியும்”, என்று பிகு செய்தார் அவர்.

“அமைச்சர்ன்னு பேர்ல கார்ல ஊர் ஊரா சுத்திட்டு தானே இருக்கீங்க? நாளைக்கு ஒரு நாள் ஊர் சுத்தாம ஆபீஸ் போங்க. நான் ஒரு பதினொரு மணிக்கு வந்துருவேன்”

“டேய் உன்னை… சரி நீ எங்க போற ஆபீஸ் போகாம? அதுவும் இம்பார்டண்ட் மீட்டிங்கை விட்டுட்டு”

“ஒரு தெரிஞ்ச ஆளைப் பாக்கப் போகணும் பா”

“உனக்கு தெரிஞ்ச ஆளா? யமுனாவுக்கு தெரிஞ்ச ஆளா?”, என்று அவர் கடுப்புடன் கேட்க அவன் அமைதியாக இருந்தான்.

“திருந்தவே மாட்ட டா நீ”, என்று கத்தி விட்டு போனை வைத்தார் சரவணப் பெருமாள்.

“இவ்வளவு பெரிய வேலையை விட சார்க்கு வேற என்ன முக்கியமான வேலை இருக்கும்?”, என்று தலையைப் பிடித்த சாரு உடனே முகுந்தனை தான் அழைத்தாள். அதை எடுத்த முகுந்தன் “சொல்லு சாரு”, என்றான். அவனது உரிமையான பேச்சில் சிறு நடுக்கம் எழ “கொஞ்சம் பேசணும் முகுந்தன்”, என்றாள்.

“பரணி பத்தியா?”

“ஆமா”

“நாளைக்கு பேசலாமா? நான் இப்ப அப்பாக்கு உடம்பு சரி இல்லைன்னு ஆஸ்பத்திரில இருக்கேன்”

“ஐயோ, என்ன ஆச்சு?”, என்று அவள் உண்மையிலே பதற அவனுக்கு அவள் பேச்சு சற்று ஆறுதலைக் கொடுத்தது.

“திடீர்னு பீவர் அதிகமாகிருச்சு. நேத்து ஈவிங்க் செக் பண்ணலாம்னு கூட்டிட்டு வந்தேன். டைபாயிடுனு சொல்லி அட்மிட் பண்ணிருக்காங்க. பகல்ல அம்மா பாத்துக்குவாங்க. நைட் நான் பாத்துக்குறேன்”

“ஒகே முகுந்தன். அவருக்கு சரியாகிரும். சரி அப்பாவை பாத்துக்கோங்க. நாம நாளைக்கு பேசலாம்”, என்று சொல்லி போனை வைத்தாள். முகுந்தனுக்கு அவளிடம் பேச ஆசை தான். ஆனால் அமைதியாக இருக்கும் மருத்துவமனையில் இருந்து கொண்டு என்ன பேசவாம்? அதனால் தான் நாளை பேசுவதாக சொன்னான்.

அன்றைய இரவு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக கடந்தது.

அடுத்த நாள் காலை ஒன்பது மணி பரணி ஹோட்டலில் தனக்கு எதிரே அமர்ந்திருந்த பிரகாஷ் என்பவனை தீர்க்கமாக பார்த்துக் கொண்டிருந்தான் பரணி. இந்த நொடி தான் அவனை நேரில் பார்ப்பது. இதற்கு முன் இருவரும் பார்த்துக் கொண்டது கூட கிடையாது.

என்ன சொல்வது? எப்படி சொல்வது? சொன்னால் அவன் என்ன ரியாக்ட் செய்வான்? இது தான் பரணியின் எண்ணம். இது அவன்  தகுதிக்கு மீறிய செயல். அவனுக்கு இருப்பது ஆயிரம் வேலைகள். அவனது அப்பாயின்மெண்ட்க்கு கூட பலர் காத்திருக்கின்றனர். இப்போது கூட அவனது முக்கியமான பொறுப்பை தந்தையின் தலையில் கட்டி விட்டு இங்கு வந்து அமர்ந்திருக்கிறான்.

பிரகாஷோ சிறு குழப்பத்துடன் அமர்ந்திருந்தாலும் அவன் கண்கள் சற்று ஆர்வமாகவே பரணியை அளவிட்டது. தன்னையே தயக்கமாக பார்த்துக் கொண்டிருக்கும் பரணியை பிரகாஷின் பார்வையும் எளிதாக எதிர்க் கொண்டது.

பரணிக்கோ தயக்கமோ தயக்கம். அவன் பேச வந்திருப்பது ஒன்றும் சாதாரண விஷயம் அல்லவே. இந்த விஷயம் எல்லாம் அவனது வீட்டினருக்கு தெரிந்தால் அதை அவர்கள் தாங்கிக் கொள்வார்களா? அது கூட பரவாயில்லை, அவன் இப்போது வந்திருக்கும் வேலை, அதை நினைத்து தான் அவன் மனம் காந்தியது .

பல பேருக்கு அள்ளிக் கொடுக்கும் நிலைமையில் இருக்கும் அவன் இன்று சாதாரணமாக அரசாங்கத்தில் பியுனாக வேலை செய்யும் ஒருவனிடம் உதவி கேட்டு வந்திருக்கிறான். கிட்டத்தட்ட மடிப் பிச்சை.. அவனுக்காக.. அவனையே நம்பி இருக்கும் ஜீவனுக்காக…

எவ்வளவு நேரம் ஆனாலும் பரணி பேசுவது போல இல்லை என்று புரிந்து “சார் ஏதோ பேசணும்னு சொன்னீங்க? ஆனா தயக்கமா உக்காந்துருக்கீங்க? உங்க அப்பா ஸ்டேட் மினிஷ்டர், நீங்க இந்தியாவுக்கே தெரிஞ்ச பிஸ்னஸ் மேன். நீங்க எதுக்கு என்னை வரச் சொன்னீங்க? நான் கவர்ன்மெண்ட் ஆபீஸ்ல பியுனா தான் வேலை செய்யுறேன். என்னை வந்து பாக்கணும்னா.. ஏதாவது தொழில் விஷயமா சார்?”, என்று அவனே பேச்சை ஆரம்பித்தான்.

“ஆன்… இல்லை மிஸ்டர் பிரகாஷ்.. பெர்சனல் விஷயம் பேசணும்”

“பெர்ஸ்னலாவா? சொல்லுங்க சார்”

“நாளைக்கு சாயங்காலம் நீங்க பொண்ணு பாக்க போறீங்களாமே?”, என்று ஒரு வழியாக கேட்டு விட்டான் பரணி. அதைக் கேட்டு திகைத்து போனான் பிரகாஷ். இப்படி ஒரு கேள்வியை அவன் வாயில் இருந்து பிரகாஷ் எதிர் பார்க்க வில்லை.

அவன் கேள்வியில் திகைத்து போனாலும் ”ஆமா சார், பொண்ணு பேர் யமுனா. போட்டோ காமிச்சாங்க. பிடிச்சிருந்தது சரின்னு சொல்லிட்டேன். ஆனா உங்களுக்கு எப்படி? யமுனாவுக்கு நீங்க சொந்தக்காரா?”, என்று இயல்பாக கேட்டான்.

“சொந்தக்காரங்க இல்லை. பட் தெரியும். ஆனா நீங்க பொண்ணு பாக்க போகக் கூடாது பிரகாஷ். இதை நான் கட்டளையா சொல்லலை. பிச்சையா கேக்குறேன்”, என்று பரணி சொல்ல “சார்”, என்ற படி அதிர்ந்து போனான்.

“அவ என்னோடவ பிரகாஷ். அப்படி எல்லாம் என்னால அவளை அடுத்தவங்களுக்கு விட்டுக் கொடுக்க முடியாது. ஒரு கவர்ன்மெண்ட் மாப்பிள்ளைக்கு தான் பொண்ணைக் கொடுப்பேன்னு ஒத்தக் கால்ல இருக்குறாங்க அவளோட அப்பாவும் அம்மாவும். அதான் உங்களைப் பாக்க வந்தேன்”

“அவர் கவர்ன்மெண்ட் மாப்பிள்ளைன்னு மட்டும் வேணும்னு தரகர் கிட்ட சொன்ன மாதிரி இல்லையே சார்?”, என்று குழப்பத்துடன் கேட்டான் பிரகாஷ்.

“ஆமா, கவர்ன்மெண்ட் மாப்பிள்ளை தான் மகளுக்கு வேணும்னு கேக்கலை. ஆனா மிடில் கிளாஸ் குடும்பத்துல தான் அவங்க பொண்ணைக் கொடுக்கணும்னு நினைக்கிறாங்க. நாங்க அப்படி இல்லை. பணமும் பதவியும் மரியாதையும் புகழும் தேவைக்கு அதிகமாவே இருக்கு. அதனால தான் பொண்ணு தர மாட்டிக்காங்க”

“எனக்கு புரியுது சார். நான் யமுனாவை பொண்ணு பாக்க போகலை. ஆனா வீட்ல என்ன சொல்லன்னு தெரியலை. அவங்க வீட்லயும் காரணம் கேப்பாங்களே?”

“எனக்கு உதவணும்னு நினைக்கிறீங்களா பிரகாஷ்?”, என்று தடுமாற்றத்துடன் கேட்டான் பரணி. இது வரை உதவி என்று அவன் அடுத்தவரிடம் சென்று நின்றதில்லையே. அந்த அளவுக்கு சரவணப் பெருமாள் விட்டதில்லை. அவன் தந்தை மினிஷ்டர், அண்ணன் மேயர், இவனோ புகழ் பெற்ற தொழில் அதிபர். அதனால் அவனிடம் உதவி கேட்க தயக்கமாக இருந்தது.

காரிகை வருவாள்…… 

Advertisement