Advertisement

‘என் பிரண்டை போல யாரு மச்சான்?’, என்ற பாடல் ஒலிபரப்பாக அழைப்பது முகுந்தன் என்று கௌரிக்கு கூட நன்கு தெரிந்தது.

ஒரு ரிங்கில் அவனது அழைப்பு கட் ஆக போனை குழப்பத்துடன் பார்த்தான் பரணி. அப்போது முகுந்தன் அனுப்பி வைத்திருந்த மெஸ்ஸேஜ் கண்ணில் பட்டது. அதை எடுத்து பார்த்தான்.

“உங்க அப்பா கிட்ட என்னத்த டா பேசிட்டு போன? உன் மேல இருக்குற காண்டுல என்னை வச்சி செய்றார். அந்த பைலைக் கொண்டு வா, இந்த பைலைக் கொண்டு வான்னு ஒரே டார்ச்சலா இருக்கு. என் அப்பாவை ஆஸ்பத்திரில அட்மிட் பண்ணிருக்கேன் டா. அம்மா காலைல இருந்து ஆஸ்பத்திரில இருந்துட்டாங்க. இப்ப நான் போய் தான் அம்மாவை வீட்டுக்கு அனுப்பனும். ஆனா அமைச்சர் என்னை விட மாட்டிக்கார் டா. பிளீஸ் காப்பாத்து நண்பா, மீ பாவம்”, என்று அனுப்பி இருந்தான்.

அதை வாசித்த பரணி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு உடனே தந்தையை அழைத்தான். அதை எடுத்து “என்ன டா?”, என்று கடுப்புடன் கேட்டார் சரவணப் பெருமாள். திருமணத்துக்கு சரி என்று சொல்ல மாட்டிக்கானே என்று கடுப்பு அவருக்கு.

“உடனே வீட்டுக்கு வாங்கப்பா”, என்று அழைத்தான் பரணி.

“நான் வர நேரம் ஆகும். நிறைய பைல்ல கையெழுத்து போட வேண்டியது இருக்கு. நான் ரொம்ப பிஸி”, என்று அவர் கராராக பேச

“நீங்க வந்தா தான் சாப்பிடுவேன்னு அம்மா அடம் பிடிக்கிறாங்க. உடனே வாங்க பா. அம்மா சுகர் மாத்திரை வேற போடணும், சீக்கிரம் வாங்க”, என்றான் பரணி.

“ஏது? நான் வந்தா தான் சாப்பிடுவேன்னு உங்க அம்மா அடம் பிடிக்கிறாளா? இது நம்புற மாதிரியா இருக்கு?”, என்று நக்கலாக கேட்டார்.

“இப்ப வரப் போறீங்களா இல்லையா?”, என்று அவன் குரலில் சற்று சூடு ஏற “சரி சரி, வரேன். வந்து தொலையுறேன்”, என்று சொல்லி போனை வைத்தவர் “நாளைக்கு பாக்கலாம் முகுந்தா, நீ வீட்டுக்கு கிளம்பு”, என்று சொல்லி எழுந்தார்.

“அப்பாடி”, என்று முகுந்தனும் கிளம்பி விட்டான். பரணியைப் பார்த்த கௌரி “எதுக்கு டா உங்க அப்பா கிட்ட அப்படிச் சொன்ன? நான் தான் ஏற்கனவே சாப்பிட்டுட்டேனே? நீ வரணும், உங்க அப்பா வரணும்னு காத்திருந்தா இந்நேரம் நான் துரும்பா போயிருப்பேன்”, என்று சொன்னாள்.

“முகுந்தனோட அப்பாவை டைபாய்ட் பீவர்ன்னு ஆஸ்பத்திரில அட்மிட் பண்ணிருக்காங்க மா. அவன் சீக்கிரம் போகணும்ல? காலைலே லீவ் போடச் சொன்னேன், ஆனா அவன் கேக்கலை. அப்பா அவனை பிடிச்சு வச்சு டார்ச்சல் பண்ணிருக்கார் அதுவும் என் மேல உள்ள கடுப்புல? அதான் அப்பாவை வர வைக்க அப்படிச் சொன்னேன். அப்புறம் அம்மா, நீங்க நாளைக்கு முகுந்தன் அப்பாவை போய் பாத்துட்டு வந்துருங்க. நான் வீட்டுக்கு வந்ததும் போய்ப் பாக்குறேன்”

“சரி டா போறேன். ஆமா உங்க அப்பாவுக்கு எதுக்கு உன் மேல கடுப்பு”

“வேற என்ன? எல்லாம் கல்யாண விஷயம் தான். புதுப் பொண்ணு பாத்துட்டு வந்துருக்கார்”

“இவருக்கு வேற வேலையே இல்லை”, என்று சொன்ன கௌரி “டேய் பரணி, இன்னும் எத்தனை நாள் டா? எவ்வளவு தான் காதல் அதிகமா இருந்தாலும் அது கிடைக்கலைன்னா ஒரு நாள் புளிச்சுப் போயிரும் டா. உனக்கும் வயசு ஆகுதே கண்ணா”, என்றாள்.

“அவளுக்கும் வயசு கூடுது தானே மா?”

“இருந்தாலும்….”

“இந்த பேச்சு வேண்டாம் மா, பிளீஸ்”

“சரி, யமுனா எப்படி இருக்கா? அவளைப் பாத்தியா பேசுனியா?”

“பாத்தேன், ஆனா பேசலை. சரி நிஷா கால் பண்ணினாளா? பேசுனீங்களா அவ கிட்ட?”

“பேசுனேன் டா”

“சரி அண்ணா அண்ணி நித்திஷ் எல்லாம் எங்க?”

“உன் அண்ணி வீட்ல ஒரு விஸேஷம் டா. அங்க போயிருக்காங்க. சரி நீ குளிச்சிட்டு வா, சாப்பிடலாம்”, என்று கௌரி சொன்னதும் அறைக்குள் சென்றான்.

அதே நேரம் யமுனா உணவு உண்டு கொண்டிருந்தாள். முதலில் அருணுக்கு ஊட்டி விட்டாள். பின் தாரணி கொடுத்த மூன்று இட்லியையும் கசப்பு மருந்து போல விழுங்கி விட்டு அருணையும் தூக்கிக் கொண்டு அறைக்குள் சென்று விட்டாள். சிறிது நேரம் அவனுடன் விளையாடியவள் அவனுக்கு கதை சொல்லி தூங்க வைத்தாள். அவள் மார்பிலே தூங்கியவனை அருகில் கிடந்த தலையணையில் கிடத்தி விட்டு அவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள்.

அவனுடைய மென்மையும் அழகும் தூக்கத்தில் கூட அவன் உதடுகளில் உறைந்திருக்கும் புன்னகையும் தன் மேல் அழகாக காலைப் போட்டுப் படுத்திருக்கும் அவன் அழகும் அவள் மனதை அமைதிப் படுத்தியது. மனது அமைதியான அந்த நேரம் இவனைப் போல எனக்கும் ஒரு குழந்தை வேண்டும் என்று அவள் மனது எண்ணியது. உடனேயே அவள் மனது பரணிக்காக ஏங்கத் துவங்கியது.

அவனை எண்ணிய போதே அவள் கண்கள் கலங்கியது. அவன் வேண்டும் என்ற தாபம் அவளை அலைக்களித்தது. மனதில் எழும் ஏக்கங்களையும் ஆசைகளையும் துறந்து வாழ அவள் ஒன்றும் துறவி இல்லையே? அவளுக்கும் பல ஏக்கங்கள் உண்டு. அவன் கையால் தாலி கட்டி, அவனுடன் காதலாக வாழ்ந்து அவனைப் போலவே ஒரு குழந்தையைப் பெற்று… என அவளுக்கும் அந்த வயதுக்கே உரிய ஆயிரம் ஆசைகள் உண்டு.

இன்று காலையில் அவனைக் கண்டதும் அவன் கண்களில் வழிந்த காதலும் நேசமும் இப்போதும் அவளை மயக்கியது. அவன் கைகளுக்குள் சரண் புக வேண்டும் என்று அவள் மனது ஏங்கியது. அனைவரும் இருந்தும் அநாதை போன்ற ஒரு உணர்வு அவளுக்குள் எழுந்தது. அப்போது உனக்கு நான் இருக்கிறேன் என்னும் விதமாய் அவளுடைய மொபைலில் சத்தம் வந்தது.

போனை எடுத்து பார்த்தாள். பரணி தான் அவளுக்கு மெஸ்ஸேஜ் அனுப்பி இருந்தான். அதை எடுத்து பார்த்தாள். அன்று முழுவதும் சாரு எடுத்த புகைப்படங்களில் அவன் கண்களுக்கு அழகானவைகளை மட்டும் அவளுக்கு அனுப்பி வைத்திருந்தான்.

எல்லாமே அவளது புகைப்படங்கள் தான். ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தாள். “என்னோட கண்ணுக்கு எல்லாமே அழகா தான் இருக்கு. ஒண்ணு கூட நல்லா இல்லைன்னு சொல்லவே முடியலை”, என்று வேறு டைப் செய்து அனுப்பி இருந்தான்.

அதை வாசித்ததும் அவளுக்கு சிரிப்பு வந்தது. அந்த புகைப்படங்களில் அவள் அப்படி ஒன்றும் அழகாக தெரிய வில்லை. “இதெல்லாம் அழகா? காலேஜ் படிக்கும் போது, பாரின்ல படிக்கும் போது, பிஸ்னஸ் சர்க்கில்ல எவ்வளவு அழனாக பொண்ணுங்களை இவன் பாத்திருப்பான்? ஆனா என் கிட்ட என்ன இருக்குனு என் மேல இப்படி பைத்தியமா இருக்கான்? இந்த அன்புக்கு நான் என்ன கைமாறு செய்யப் போறேன்”, என்று கவலையாக இருந்தது அவளுக்கு.

அதே நேரம் அவனும் அவளைப் பற்றி தான் எண்ணிக் கொண்டிருந்தான். நாளை எவனோ ஒருவன் அவளை பெண் பார்க்க வருவதைப் பற்றி அவளிடம் சொல்லலாமா வேண்டாமா என்று எண்ணினான். பின் வேண்டாம் இந்த இரவில் அவள் தூக்கத்தைக் கெடுக்க கூடாது. அந்த விஷயம் இப்போதே தெரிந்தால் அவளும் நிம்மதி இல்லாமல் இருப்பாள். அவளாவது நிம்மதியாக இருக்கட்டும் என்று எண்ணி அமைதியாகி விட்டான்.

அப்போது அவனது மொபைல் ஒலித்தது. அதை எடுத்துப் பார்த்தான். பிரகாஷ் என்று வந்தது. மாலை வினோத் மூலம் யமுனாவை பிரகாஷ் என்பவன் பெண் பார்க்க வரப் போகிறான் என்று  தெரிந்ததுமே பிரகாஷ்க்கு அழைத்தான் பரணி. ஆனால் பிரகாஷ் வேலையில் இருந்ததால் பரணியின் அழைப்பை எடுக்க வில்லை. இப்போது தான் அவன் பரணியை அழைத்தான்.

பரணி போனை எடுத்ததும் “ஹலோ, யாருங்க, இந்த நம்பர்ல இருந்து கால் வந்தது. நீங்க கால் பண்ணும் போது கொஞ்சம் பிசியா இருந்தேன். அதான் அப்ப எடுக்கலை”, என்று தன்மையாக பேசினான் பிரகாஷ்.

அவன் தன்மையாக பேசியதும் இது வரை பரணிக்கு இருந்த தயக்கம் சற்று விலக “நான்… பரணி பேசுறேன். பரணி குருப் ஆப் கம்பெனிஸ் எம். டி”, என்று சொன்னான்.

Advertisement