Advertisement

அத்தியாயம் 3 

மௌனமும் காதலும்

அழகு தான் அதை

உணரும் போது!!!

வீட்டில் இருக்கும் யாரிடமும் பேசாமல் யமுனா ஹாலின் ஒரு ஓரத்தில் அமர்ந்திருக்க இப்போது அவளது அண்ணன் வினோத் வேலை முடிந்து வீட்டுக்குள் வந்தான். அவன் உள்ளே வந்ததும் அவன் கண்களில் விழுந்தது யமுனா தான். தங்கையைக் கண்டதும் சுள்ளென்று கோபம் எழுந்தது. அதனால் அவளை முறைத்து பார்த்து விட்டு அவள் மடியில் இருந்த வைஷ்ணவியை கண்டவன் “குட்டி மா, எப்படி இருக்க டா?”, என்று கொஞ்சி விட்டு கேசவனிடம் வந்து “வாங்க”, என்று மட்டும் சொல்லி விட்டு அவனுடைய அறைக்குச் சென்று விட்டான்.

வினோத்தால் கேசவனை வாய் நிறைய மாப்பிள்ளை என்று அழைக்க முடிய வில்லை. பரணியை அவ்வளவு எளிதாக உரிமையாக மாப்பிள்ளை என்று அழைக்க முடிந்த அவனால் கேசவனை அப்படி அழைக்க முடிய வில்லை. இத்தனைக்கும் கேசவன் வினோத்தின் தங்கை காயத்ரியின் கணவன். ஆனால் பரணிக்கும் யமுனாவுக்கும் இன்னும் திருமணம் கூட நடக்க வில்லை. உறவுகள் என்பது வெறும் வாய் வார்த்தை அல்லவே. அது உள்ளத்தில் இருந்து வர வேண்டும் அல்லவா?

கேசவனைக் கண்டதும் பழைய நினைவுகள் மனதில் அணிவகுக்க எரிச்சலுடன் தான் அவனுடைய அறைக்குள் நுழைந்தான். அவன் உள்ளே நுழையும் போது தான் அறைக்குள் இருந்த பாத்ரூமில் இருந்து குளித்து முடித்து வெளியே வந்தாள் அவன் மனைவி தாரணி.

சோர்ந்து வந்து அமர்ந்திருந்த வினோத்தைக் கண்டு “என்னங்க ரொம்ப வேலையா? ரொம்ப டயர்டா தெரியுறீங்க? நான் காபி எடுத்துட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு அவசரமாக சென்றாள். அவளைக் கண்டு அவன் முகத்தில் புன்னகை வந்தாலும் ஒரே ஒரு நொடி மட்டும் பழைய விஷயங்கள் அவன் மனதில் அணிவகுத்தது. என்ன தான் இப்போது எந்த மனக் கஷ்டமும் இல்லாமல் போனாலும் முன்பு அவன் நெஞ்சில் விழுந்த அடியில் பதிந்த காயங்கள் அவ்வப்போது மேல் எழும்பும்.

முன்பெல்லாம் தாரணி அவனை மதிக்கவே மாட்டாள். இன்னும் சொல்லப் போனால் திருமணம் முடிந்து மூன்று வருடம் வரை அவனுக்கு வேலை இல்லை என்பதால் அவனை விலக்கியே தான் வைத்திருந்தாள். அவனை இந்த அளவுக்கு மதித்து இப்போது அவளுக்கு நான்கு வயதில் ஒரு மகன் இருக்க காரணம் கூட பரணி தான். வினோத்துக்கு என்று வேலை, வீட்டில் இருப்பவர்களிடமிருந்து மரியாதை அனைத்தையும் வாங்கிக் கொடுத்தது பரணி தான். பரணி மீது வினோத்துக்கு இருப்பது நன்றிக் கடன் மட்டும் அல்ல. அதிக அளவிலான அன்பும் பாசமும் தான்.

பரணியின் வாழ்வு செழிக்காமல் இருக்க காரணம் யமுனா தான் என்பதால் தான் தங்கையின் மீது அவனுக்கு அவ்வளவு கோபம். பரணிக்காக, யமுனாவின் நிம்மதிக்காக, அவர்களின் நல்ல வாழ்க்கைக்காக தான் ஒவ்வொரு நாளும் தங்கையிடம் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கிறான் வினோத். ஆனால் அவளோ அசைவேனா என்று இருக்கிறாள்.

வினோத்தைப் பொறுத்த வரை பரணி அவன் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்த கடவுள். முன்பெல்லாம் அவனை வாங்க போங்க என்று அழைத்து சார் என்று தான் பேசுவான். கடந்த ஐந்து வருடமாக தான் இருவரும் மச்சான் மாப்ள என்று அழைத்துக் கொள்ள ஆரம்பித்தார்கள். அப்படி அழைப்பதால் அவர்கள் ஒன்றும் நண்பர்கள் கிடையாது. அந்த அழைப்பில் இருக்கும் உறவுக்கு உயிர் கொடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் அந்த உறவுக்கு உயிரைக் கொடுக்க யமுனாவால் மட்டும் தானே முடியும்?

ஒரு பெருமூச்சோடு எழுந்து கொண்ட வினோத் மாற்றுடையை எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றான். குளித்து முடித்து ஒரு டீஷர்ட் மற்றும் லுங்கி அணிந்து வெளியே வர காபி டம்ப்ளரை அவன் கையில் கொடுத்தாள் தாரணி.

அதை வாங்கிக் கொண்டு கேசவனின் அருகில் சென்று அமர்ந்தவன் அங்கிருந்த யாரையும் கவனிக்காமல் யமுனாவின் மடியில் இருந்த வைஷ்ணவியை வாங்கிக் கொஞ்சத் துவங்கி விட்டான். அண்ணனையும் அக்காவின் குழந்தையையும் பார்த்த படி இருந்தாள் யமுனா. அப்போது டியூசன் முடிந்து “அத்தை”, என்று கத்திய படி வினோத்தின் மகன் அருண் வீட்டுக்குள் வர அவனை மடியில் தூக்கி வைத்துக் கொண்டாள் யமுனா.

அந்த செல்லக் குட்டியும் அவள் மடி மீது சமத்தாக ஏறி அமர்ந்தது. “செல்லக் குட்டி, ஹோம் வொர்க் எழுதிட்டியா டா?”, என்று கேட்ட படி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.

“முடிச்சிட்டேன் அத்தை. பட்டர்பிளை புராஜெக்ட் மட்டும் செய்யணும். நீ செஞ்சு தரியா?”, என்று அவன் பிள்ளைக் குரலில் கேட்க “இது பெரிய விஷயமா குட்டி? அத்தை செஞ்சி தரேன் டா”, என்றாள்.

பின் வைஷுவைக் காட்டி “யாரு டா குட்டி அது?”, என்று கேட்டாள். அவள் கை காட்டியதும் வினோத் மடியில் இருந்து வைஷ்ணவியும் யமுனா அருகில் சென்றாள். அவளையும் தூக்கி தன்னுடைய மடியில் வைத்துக் கொண்டாள் யமுனா.

யமுனா அருண் மற்றும் வைஷ்ணவியிடம் பேசிக் கொண்டிருக்க மற்றவர்கள் அனைவரும் அவர்களை வேடிக்கை பார்த்தார்கள். ஆனால் அவர்கள் மூவரும் தனி உலகத்தில் இருந்தார்கள்.

தாமோதரனும் காவேரியும் யமுனாவிடம் என்று பேச்சை நிறுத்தினார்களோ அன்றே வினோத்தும் தாய் தந்தையிடம் பேச்சை நிறுத்தி விட்டான்.

தங்கையை கஷ்டப் படுத்துவது அம்மா அப்பா என்று அறிந்த பிறகு அவன் அவர்களிடம் பேசுவானா என்ன? இப்போது அருணும் வைஷ்ணவியும் பொம்மை வைத்து விளையாட பொம்மைக்காக இருவருக்குள்ளும் சண்டை வந்தது.

“உனக்கும் வாங்கிருக்கேன் டா கண்ணா”, என்ற படி அருணுக்கும் ஒரு பொம்மையைக் கொடுத்தாள் யமுனா. அவர்களுடன் சேர்ந்து அமர்ந்து அவளும் விளையாடினாள். அவளுக்கு குழந்தைகளுடன் இருக்கும் அந்த உலகம் பிடித்திருந்தது.

சிறிது நேரத்தில் காயத்ரி குடும்பம் கிளம்பிச் செல்ல அருணை தூக்கி கொண்டு அவனது பள்ளிப் பேகையும் எடுத்துக் கொண்டு தன்னுடைய அறைக்கு வந்தாள். அவன் கேட்ட புராஜெக்ட்டை அத்தையும் மருமகனும் சேர்ந்து செய்து முடித்தார்கள்.

ஒரு எட்டு மணி போல “யமுனா சாப்பாடு ரெடி ஆகிருச்சு. அருணை கூட்டிட்டு சாப்பிட வா டா”, என்று அன்போடு அழைத்தாள் தாரணி.

“இதோ வரேன் அண்ணி”, என்று குரல் கொடுத்தாள். அப்போது அவளது போன் அடிக்க எடுத்துப் பார்த்தாள். பரணியின் தங்கையும் யமுனாவின் தோழியுமான நிஷா தான் லண்டனில் இருந்து அழைத்திருந்தாள். இருவரும் சிறிது நேரம் பொதுப்படையாக பேசி விட்டு போனை வைத்தார்கள்.

நிஷா போனை வைத்ததும் யமுனாவுக்கு இன்னும் குற்ற உணர்வாக இருந்தது. அவளது அண்ணனுக்காக நிஷா ஒரு வார்த்தை கூட யமுனாவிடம் பேசாதது அவளது நட்பின் பெருமையை யமுனாவுக்கு எடுத்து உரைத்தது.

ஊரே மதிக்கும் பெரிய அந்தஸ்தில் இருப்பவன் தான் பரணி. அனைவரும் அவனுக்கு மரியாதை கொடுக்கிறார்கள் தான் இருவரைத் தவிர. அது வேறு யாரும் அல்ல தாமோதரனும் காவேரியும் தான். அவர்கள் பரணியை பேசாத பேச்சு இல்லை. அவன் அனைத்தையும் தாங்கிக் கொண்டு இன்னும் யமுனாவை நிழல் போல தொடர்கிறான்.

வேறு யாராவது அவ்வளவு பேச்சைக் கேட்டிருந்தால் இந்நேரம் யமுனாவை தூர தூக்கி போட்டு விட்டுப் போயிருப்பார்கள். ஆனால் யமுனாவுக்காக அனைத்தையும் கேட்டான் பரணி. அவன் மட்டுமா? அவன் குடும்பமே. யமுனாவின் பெற்றவர்கள் பரணி வீட்டினரை அவ்வளவு  அவமானப் படுத்தி அனுப்பி விட்டார்கள். அவளும் தான். அந்த கோபமும் மகன் இன்னமும் இவளை நினைத்துக் கொண்டிருக்கிறானே என்ற வேதனையும் தான் சரவணப் பெருமாள் இவள் மேல் காட்டிய கோபம். அது நியாயமானது தானே? நல்லவர்களுக்கு வரும் இயல்பான கோபம். அவனைப் பற்றி எண்ணிக் கொண்டே சாப்பிடச் சென்றாள்.

அப்போது தான் பரணியும் தன்னுடைய வீட்டுக்கு வந்தான். அவனைக் கண்டு முகம் மலர்ந்தாள் அவன் அன்னை கௌரி.

“என்ன டா நீ மட்டும் வர? அமைச்சரைக் காணும்? சாயங்காலம் உன்னைப் பாக்க போறேன்னு சொன்னாரே டா? ஆபீஸ் வரலையா என்ன?”, என்று சிறு குறும்புடன் கேட்டாள்.

“ஆஃபிஸ்ல் தான் மா இருக்கார். இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவார்”, என்று சொல்லும் போதே அவனது மொபைல் ஒலித்தது.

Advertisement