Advertisement

“இன்னும் எவ்வளவு வருஷம் டா எங்களை தண்டிக்க போற?”, என்று ஆதங்கத்துடன் கேட்டார் சரவணப்பெருமாள்.

“ஏன் தண்டனைன்னு நினைக்கிறீங்க? என்னோட சந்தோசத்தைப் பாருங்களேன்”

“நீ இப்ப சந்தோஷமா இருக்கியா பரணி?”

“நிச்சயமா பா, நான் சந்தோஷமா தான் இருக்கேன்”

“ப்ச் சென்ட்ரல் மினிஷ்டர் பொண்ணை உனக்கு கொடுக்கணும்னு ஒத்தைக் கால்ல நிக்குறாங்க பரணி. எனக்கும் இந்த கல்யாணம் நடக்கணும்னு ஆசையா இருக்கு”

“அப்பா பிளீஸ்”

“எனக்கு உன் முடிவு தெரியணும் பரணி. நீ இன்னும் சின்னப் பையன் இல்லை. வயசு முப்பத்தி ஒண்ணு ஆச்சு. உனக்காக ஏழு வருஷம் பொறுமையா இருந்துட்டேன்”, என்று சொல்லும் போதே பரணியின் மொபைல் ஒலித்தது.

“ஒரு நிமிஷம் பா”, என்று சொல்லி அதை எடுத்துப் பார்த்தான். அதில் வினோத் என்ற பெயருடன் ஒருவனின் புகைப்படம் மின்னியது. அதைக் கண்டு அவன் முகம் மலர அதை எடுத்து காதில் வைத்து “சொல்லு மச்சான்”, என்று சந்தோஷமாக சொன்னான்.

அவன் முகம் மலர்ந்திருக்க அவன் பேசுவது யாரிடம் என்று தெரிந்து கொண்ட சரவணப் பெருமாள் முகம் இறுகிப் போனது. வினோத் என்ன சொன்னானோ தெரிய வில்லை. ஆனால் பரணியின் முகமும் இறுகிப் போனது.

ஆம் அவனுடைய சந்தோஷத்தை துணி கொண்டு துடைக்கும் விஷயத்தை தான் சொல்லிக் கொண்டிருந்தான் வினோத். வினோத் வேறு யாரும் அல்ல. யமுனாவின் கூடப் பிறந்த அண்ணன் தான்.

“நாளைக்கு யமுனாவை பொண்ணு பாக்க வராங்க. எனக்கே தெரியாம அப்பா ஏற்பாடு பண்ணிருக்கார் மாப்ள. இப்ப தான் விஷயம் தெரியும். இன்னும் யமுனாவுக்கு கூட விஷயம் தெரியாது. தெரிஞ்ச உடனே உனக்கு தான் கூப்பிடுறேன் மாப்ள. என்ன செய்ய போற?”, என்று கேட்டான் வினோத்.

“எப்ப வராங்கலாம்?”, என்று இறுக்கத்துடன் கேட்டான் பரணி.

“நாளைக்கு சாயங்காலம். அவன் பேர் பிரகாஷ், கவர்ன்மெண்ட் ஆஃபிஸ்ல பியூன் வேலை பாக்குறானாம்”

“அவன் நம்பர் இருக்கா மச்சான்?”

“இதோ அனுப்புறேன். என்ன செய்யணும்னு பாத்துக்கோ மாப்ள”, என்று சொல்லி போனை வைத்தான்.

வினோத் போனை வைத்ததும் தந்தையைப் பார்த்தான் பரணி. அவரோ அவனையே முறைத்து பார்த்துக் கொண்டிருந்தார். “அப்பா எனக்கு கொஞ்சம் தலை வலிக்கு. நான் வீட்டுக்கு கிளம்புறேன். இப்ப முகுந்தன் வருவான், நீங்க கொஞ்சம பைல்ஸ் பாக்க வேண்டியது இருக்கு. பாத்துட்டு சைன் பண்ணிட்டு மெதுவா வாங்க”, என்று சொல்லி விட்டு அவர் பதிலைக் கூட எதிர் பார்க்காமல் சென்று விட்டான். எரிச்சலுடன் அமர்ந்திருந்தார் சரவணப் பெருமாள்.

மகனை எண்ணி பெருமூச்சு வந்தது. யமுனாவை எண்ணிக் கோபம் வந்தது. அப்பா மகன் இருவரையும் ஆட்டி வைத்த யமுனா தன்னுடைய வீட்டுக்குச் சென்ற போது வாசலில் பல செருப்புகள் கிடந்தன. “காயத்ரி அக்கா வந்திருக்கிறாள் போல?”, என்று எண்ணிக் கொண்டாள்.

யமுனாவின் குடும்பம் பரணியின் குடும்பத்தைப் போல பணக்கார குடும்பம் கிடையாது. நடுநிலையான மிடில்கிளாஸ் குடும்பம் தான். அவளது தந்தை தாமோதரன் ஒரு பிரைவேட் மில்லில் வேலை பார்த்து ரிட்டயர்ட் ஆனவர். காவேரி கணவரையும் வீட்டையும் பார்த்துக் கொள்ளும் குடும்பத் தலைவி. அவளுக்கு ஆடம்பர குணம் எல்லாம் கிடையாது. சிக்கனமாக இருந்து கணவரின் சம்பளத்தில் குடும்பத்தை நடத்தும் நல்ல மனைவி. ஆனால் நிறைய கட்டுப் பெட்டித்தனம் அவளுக்கு உண்டு. பொண்ணுங்கன்னா இப்படி தான் இருக்கணும் என்று எதிர்பார்க்கும் அந்த காலத்து மனுஷி. அவளை எப்படி வளர்த்தார்களோ அதே போல தான் அவளும் பிள்ளைகளை வளர்த்தாள்.

தாமோதரன் காவேரி தம்பதிக்கு மூன்று பிள்ளைகள். மூத்தவன் வினோத், இப்போது பரணி குருப் ஆப் கம்பெனிஸில் அவனும் ஒரு மேனேஜர். பரணியின் மூன்று கம்பெனிகளையும், மதுரையில் இருக்கும் பரணி ஜூவல்லரியையும் நிர்வாகம் செய்வது வினோத் தான். அவனது மனைவி தாரணி. இயல்பும் எதார்த்தமும் கொண்ட குடும்ப பெண். அவர்களின் மகன் அருண், இப்போது யுகேஜி படிக்கிறான்.

வினோத்துக்கு அடுத்து பிறந்தவள் காயத்ரி. அவளது கணவன் கேசவன். அவர்களுக்கு இப்போது வைஷ்ணவி என்ற மூன்று வயது பெண் குழந்தை இருக்குறது. கேசவன் இருப்பது விழுப்புரத்தில் தான். அவன் வங்கி ஒன்றில் பணி புரிகிறான். மூத்த பிள்ளைகள் இருவருக்கும் தாமோதரன் மற்றும் காவேரி தான் திருமணம் செய்து வைத்தார்கள்.

கடைசியாக பிறந்தவள் தான் யமுனா. ஆடிட்டிங்க் பிரிவில் கல்லூரி முடித்து விட்டு பரணி குருப் ஆப் கம்பெனிசில் ஆடிட்டராக பணிபுரிகிறாள். உயர் படிப்பையும் கரசில் முடித்திருந்தாள்.  இப்போது அவளுக்கு வயது இருபத்தி ஏழு. ஒரு காலத்தில் அந்த வீட்டின் செல்ல இளவரசி. கடைசி பெண் என்பதால் அதிக செல்லம். இப்போதோ அந்த வீட்டுக்குள் வேண்டா வெறுப்பாக நுழைந்தாள். இப்போது அவளிடம் யாருமே பேசுவதில்லை.

அவள் உள்ளே சென்ற போது காயத்ரியின் கணவன் கேசவன் சோபாவில் அமர்ந்திருந்தான். அவன் எதிரே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார் அவளின் தந்தை தாமோதரன்.

“வாங்க மாமா”, என்று சொல்லி விட்டு அவன்  பதிலைக் கூட எதிர் பார்க்காமல் அக்காவைத் தேடி சமையல் அறைக்குச் சென்றாள் யமுனா.

அங்கே வைஷ்ணவியை இடுப்பில் வைத்த படி பஜ்ஜி சுட்டுக் கொண்டிருந்தாள் அவளது அன்னை காவேரி. அவள் யமுனாவை திரும்பிக் கூட பார்க்க வில்லை. காயத்ரி அதை தட்டில் எடுத்து  வைத்து விட்டு காபியை ஆற்றிக் கொண்டிருந்தாள்.

“எப்படி இருக்கக்கா?”, என்று காயத்ரியிடம் கேட்டாள்.

“நல்லா இருக்கேன் யமுனா. காபி தரட்டா?”

“இல்லை, ரெஃப்ரெஷ் ஆகிட்டு வரேன்”, என்று சொன்னவள் குழந்தை புறம் திரும்பி “பட்டுக் குட்டி சித்தி கிட்ட வறீங்களா?”, என்று கேட்டாள்.

குழந்தையும் அவளிடம் தாவ அதை தூக்கி கொண்டு தன்னுடைய அறைக்குச் சென்றாள். ஏற்கனவே அவளுக்கு என வாங்கி வைத்திருந்த டெட்டி பியரை கொடுத்து கட்டிலில் வைத்து விளையாடச் சொன்னவள் உடை மாற்றி முகம் கழுவி குழந்தையுடன் கட்டிலில் அமர்ந்தாள்.

“இன்னும் ரெண்டு சாப்பிடுங்க மாப்பிள்ளை”, என்று வெளியே காவேரியும் தாமோதரனும் கேசவனிடம் கெஞ்சுவது கேட்டது. அதைக் கேட்டு எரிச்சல் வந்தது யமுனாவுக்கு. அதுவும் தன்னுடைய பெற்றவர்கள் கேசவனுக்கு கொடுக்கும் மரியாதையைக் கண்டு கோபமாக வந்தது யமுனாவுக்கு.

வில்லனாக இருந்தவன் இப்போது நல்லவனாகி விட்டான். ஹீரோ வேலை செய்தவன் இப்போது வில்லனாகி விட்டான். கேசவன் மட்டும் சரியாக இருந்திருந்தால் யமுனாவுக்கு இவ்வளவு மனம் வருத்தம் இல்லையே? காயத்ரியின் வாழ்க்கைக்காக கவலைப் பட்டு இப்போது அவள் வாழ்வை அல்லவா இழந்து கொண்டிருக்கிறாள். ஏழு வருடமாக அவள் அனுபவிக்கும் இந்த சித்திரவதை என்று தீருமோ?

இதே காயத்ரிக்காக தானே அவள் பரணியைச் சென்று சந்தித்தது. ஒழுங்காக அவன் உண்டு அவன் வேலை உண்டு அவன் உலகம் உண்டு என்று இருந்தவனை இப்போது ஒரு பைத்தியம் போல ஆக்கி வைத்திருப்பதற்கு அவள் தானே காரணம்?

எப்படி இருந்தவன் இன்று இப்படி நடந்து கொள்கிறான் என்று மனதுக்கு பாரமாக இருந்தது. தனக்கு கீழே வேலை செய்யும் பெண்ணிடம் அவனுக்கு கெட்ட பேர் வந்தாலும் பரவாயில்லை என்று தன்னை புகைப்படம் எடுக்கச் சொல்லியிருக்கிறானே என்று எண்ணி மன வேதனையாக இருந்தது. சாரு அவனைப் பற்றி என்ன நினைப்பாள் என்று எண்ணி வேதனை கொண்டாள். அதே நேரம் அவன் மனதுக்குள் தன் மீது எவ்வளவு காதல் இருந்தால் அவன் இந்த அளவுக்கு இறங்குவான் என்று அவள் மனம் பரணிக்காக உருகியது.

அவள் நேருக்கு நேர் பார்க்க முடியாத உயரத்தில் இருப்பவன் இப்போது அவளையும் உயர்த்தில் வைத்திருக்கிறான். இப்போதெல்லாம் இருவரும் அதிகம் பேசிக் கொள்ள வில்லை என்றாலும் அவன் கைகளுக்குள்ளே அவளை சிறை பிடிப்பது போல அருகிலே தான் வைத்திருக்கிறான். அதற்கு ஒரே காரணம் அவனது தன்னலமில்லாத காதல். அந்த காதலுக்காக அவன் எவ்வளவோ செய்து விட்டான். ஆனால் அவள்… அவனை அனுதினமும் கொஞ்சம் கொஞ்சமாக கொன்று கொண்டிருக்கிறாள். மதுரையில் தனி அரசாங்கமே நடத்திக் கொண்டிருக்கும் அவனது குடும்பம் அதே ஊரின் ஒரு மூலையில் குடியிருக்கும் யமுனாவின் பதிலுக்காக காத்திருக்கிறது.

அந்த பதிலைச் சொல்ல கொள்ளை ஆசை இருந்தாலும் அவளால் சொல்ல முடியவில்லை. அவள் செய்வது தவறு என்று தெரிந்தும் அதையே செய்து கொண்டிருக்கும் அவள் நிலைமை ரொம்பவே கொடிது தான். எண்ணங்கள் எங்கெங்கோ சுழன்றது. அறைக்கு உள்ளேயே வெகு நேரம் இருக்க முடியாது என்பதால் குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியே வந்து வாசல் அருகே இருந்த சேரில் அமர்ந்தாள்.

காரிகை வருவாள்…..

Advertisement