Advertisement

அந்த கேள்விக்கு பதிலாக சாருவின் கையில் இருந்த ஐ போன் அவள் கண்ணில் பட்டது. பார்த்த உடன் அவள் கண்கள் விரிந்தது. அது பரணியின் போன் என்று அவளுக்கு நன்கு தெரியும். அவன் எந்த அளவுக்கு யமுனா மீது தீவிரமாக இருப்பானோ அதே போல யமுனாவும் அவனின் பேனா, மொபைல், உடை, தலையலங்காரம், அவன் கட்டியிருக்கும் வாட்ச் முதல் கொண்டு நோட் செய்வாள். அதனால் தான் பார்த்த உடன் அது பரணியின் மொபைல் என்று புரிந்தது.

அது எப்படி சாருவிடம் என்று எண்ணி ஒரு நொடி யோசித்தவள் உடனே அவள் என்ன செய்திருப்பாள் என்று யூகித்து விட்டாள். சட்டென்று அனைத்தும் விளங்க கோபமும் சிறு சந்தோஷமும் அவளுக்குள் ஒருங்கே உருவானது.

யமுனா ஏதோ யோசித்த படி இருக்கவும் ஐந்து மணி அடித்தது. “நம்ம நேரம் முடிஞ்சிருச்சு”, என்று எண்ணிய சாரு “ஓகே மேடம், நான் வீட்டுக்கு கிளம்புறேன்”, என்று சொல்லி திரும்பினாள்.

“ஒரு நிமிஷம் சாரு”, என்று அழைத்த யமுனா அவளையே கூர்மையாக பார்த்தாள். அவள் பார்வையில் சாருவுக்கு உள்ளுக்குள் கலவரம் உண்டானது.

“என்ன? மேடம் இப்படி பாக்குறாங்க? நான் செஞ்ச வேலையை  கண்டு பிடிச்சிருப்பாங்களோ?”, என்று எண்ணி “என்ன மேடம்?”, என்று கேட்டாள்.

“உங்க சார் கிட்ட போனைத் திருப்பிக் கொடுக்கும் போது நீங்க எடுத்த போட்டோஸ்ல இருந்து நல்லா வந்திருக்குற போட்டோசை மட்டும் எனக்கு அனுப்பி வைக்க சொல்லுங்க சாரு”, என்று நிதானமாக சொன்னாள் யமுனா.

தவறு செய்த முக பாவத்துடன் “மேடம்”, என்று தடுமாற்றத்துடன் அழைத்தாள் சாரு.

அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் “அப்புறம் இன்னொரு விஷயம் சாரு, இப்படி பண்ணுறது இது தான் கடைசி தடவையா இருக்கணும்னு நான் எச்சரித்தேன்னும் சார் கிட்ட சொல்லிருங்க”, என்று சொன்னாள்.

“சாரி மேடம். நான் சார் கிட்ட சொல்றேன். ஆனா நீங்க எப்படி நான் போட்டோஸ் எடுத்தேன்னு கண்டு பிடிச்சீங்க?”

“எம் டி சார் போன் உங்க கைல இருக்குறதை பாத்தும் எனக்கு தெரியாம போகுமா? அது மட்டுமில்லாம இன்னிக்கு முழுக்க உங்க தலை என்னைச் சுத்தி தான் தெரிஞ்சது. கண்டிப்பா இப்படி தான் ஏதாவது கிறுக்கு தனத்தை சார் செய்யச் சொல்லிருப்பார்ன்னு கெஸ் பண்ணுனேன்”, என்று சிறு சிரிப்புடன் சொல்ல சாருவுக்கு தலையை பிய்த்துக் கொள்ளலாம் போல இருந்தது.

“கடவுளே எனக்கு நீ சீக்கிரம் மோச்சத்தைக் கொடுத்துரு. என்னால இவங்க ரெண்டு பேரையும் புரிஞ்சிக்க முடியலை”, என்று எண்ணி தலையை அசைத்து விட்டு அவனைத் தேடிச் சென்றாள்.

“சார், இந்தாங்க உங்க போன், நீங்க சொன்னதை செஞ்சிட்டேன்”, என்று பரணியிடம் நீட்டினாள். சிறு சிரிப்புடன் அதை வாங்கியவன் சந்தோசத்துடன் “தேங்க் யு சாரு”, என்றான்.

“இவ்வளவு பெரிய ஆள் எனக்கு நன்றி சொல்கிறானா?”, என்று எண்ணியவள் “சார்”, என்று தயக்கத்துடன் அழைத்தாள்.

“என்ன சாரு?”

“மேடம், நான் அவங்களை போட்டோ எடுத்ததைக் கண்டு பிடிச்சிட்டாங்க”

“எப்படி கண்டு பிடிச்சா?”, என்று சிரிப்புடன் கேட்டான்.

இவன் சிரிக்கும் போது எவ்வளவு அழகா இருக்கான் என்று எண்ணிக் கொண்டு “உங்க போனைப் பாத்து தான் கண்டு பிடிச்சாங்க”, என்றாள்.

“அவ முன்னாடியே போய் போனை நீட்டுனியாக்கும்? சரி வேற என்ன சொன்னா?”, என்று லகுவாக கேட்டான். சாருவையும் உரிமையாக ஒருமையில் பேசினான். அதுவும் அவன் முகத்தில் இருந்த புன்னகையும் ரசிப்பு தன்மையும் கண்டு அவளுக்கு பிரம்மிப்பாக இருந்தது.

“சொல்லு சாரு, வேற என்ன சொன்னா?”, என்று கேட்டவனின் குரலில் ஆர்வம் கொப்பளித்தது.

“நல்லா இருக்குற போட்டோசை அவங்க நம்பருக்கு அனுப்பச் சொன்னாங்க.. அப்புறம்”

“ஹா ஹா,  போட்டோ அனுப்பச் சொன்னாளா? அனுப்பிருவோம். அப்புறம் என்ன சொன்னா?”

“போட்டோ எடுத்தது, இது தான் கடைசி தடவையா இருக்கணும்னு வார்ன் பண்ணினாங்க”

“அந்த வார்னிங்க் எனக்கு தானே? அதை நான் பாத்துக்குறேன். நீங்க வீட்டுக்கு கிளம்பலாம்”

“சார், நான் இன்னைக்கு வேலையே செய்யலையே?”

“அதான் செஞ்சிட்டியே? இன்னைக்கு மட்டும் உனக்கு மூணு நாளுக்கான சம்பளம் கிரடிட் ஆகிரும். நான் அக்கவுண்டண்ட் கிட்ட சொல்லிறேன்”, என்று சொல்ல தலையை பிய்த்துக் கொள்ளாமல் போல இருந்த உணர்வை அடக்கிய படி தலையை ஆட்டி விட்டு அங்கிருந்து சென்றாள்.

அவள் சென்றதும் கொஞ்சம் கூட பொறுமை இல்லாமல் சிறு சிரிப்புடன் ஒவ்வொரு புகைப்படமாக பார்த்துக் கொண்டிருந்தான் பரணி. யமுனாவை தத்ரூபமாக படம் பிடித்திருந்தாள் சாரு. அவனது போன் அதிக கிலாரிட்டி கொண்டதால் அவ்வளவு அழகாக இருந்தது.

ஒவ்வொரு புகைப்படத்திலும் அவ்வளவு அழகாக இருந்தாள் யமுனா. வெகு இயல்பான புகைப்படம் தான். ஆனால் அவனைப் பொறுத்த வரைக்கும் எப்போதுமே அவள் பிரம்மாண்டம்.

அதே நேரம் யமுனாவும் அவனைப் பற்றி எண்ணிக் கொண்டே தன்னுடைய வேலையை முடித்தவள் அங்கிருந்தவர்களிடம் சில தகவல்களைச் சொல்லி விட்டு தன்னுடைய கேண்ட் பேகையும், வண்டிச் சாவியையும், முக்கியமான பைல்ஸையும் எடுத்துக் கொண்டு கிளம்பினாள்

யமுனா பார்க்கிங்கில் தன்னுடைய வண்டியை எடுத்துக் கொண்டிருக்கும் போது அங்கே ஒரு கார் வந்தது. காரைக் கண்டதும் அதில் இருந்த கொடியே சொன்னது அது யாருடைய கார் என்று. பரணி குருப் ஆப் கம்பெனியின் சேர்மனும் பால்வளத் துறை அமைச்சருமான சரவணப் பெருமாளின் கார் தான் அது. அதில் இருந்து வெள்ளைச் சட்டையும், கருப்பு பேண்ட்டும், தங்க நிற கண்ணாடியும் அணிந்து கம்பீரமாக இறங்கினார் சரவணப் பெருமாள்.

வயது ஐம்பத்தைந்து ஆனாலும் சொட்டை, தொப்பை எதுவும் இல்லாமல் பரணியின் மூத்த அண்ணன் போன்ற தோற்றத்தில் இருந்தவரை முகத்தில் எந்த சலனத்தையும் காட்டாமல் பார்த்தாள் யமுனா.

அவரோ அவளை கண்டு கொதிப்புடன் பார்த்தார். அவர் பார்வையில் இருந்த கனலில் மற்ற யாராக இருந்தாலும் எரிந்து விடுவார்கள். ஆனால் யமுனாவோ சலனமே இல்லாமல் இருந்தாள். அவர் முன் அப்படி நின்றாலும் மனதுக்குள் குற்ற உணர்வு அவளை குறுகுறுக்க வைத்தது.

“எப்படி இருக்கீங்க சார்?”, என்று தர்ம சங்கடமாக கேட்டாள்.

“நாங்க நல்லா இருக்குற மாதிரி நிலைமையை நீ உருவாக்கலை யமுனா. எங்க எல்லாரோட நிம்மதியையும் குழி தோண்டி புதைச்சிட்டு இருக்குற நீ, என்னை எப்படி இருக்கேன்னு கேக்குற பாத்தியா? இது உனக்கே ஓவரா தெரியலை”, என்று சீற்றத்துடன் வந்தது அவர் குரல்.

“சார் நான்…”, என்று அவள் எதுவோ சொல்ல வர கை நீட்டி அவளை பேச விடாமல் தடுத்தவர் மீண்டும் அவளை முறைத்து விட்டு அலுவலகத்துக்குள் சென்றார். அவரின் பி.ஏ சதாசிவம் மட்டும் அங்கே நின்றிருந்தார். அவரைக் கண்டதும் சிறு சிரிப்புடன் “எப்படி இருக்கீங்க அங்கிள்?”, என்று கேட்டாள்.

“நல்லா இருக்கேன் யமுனா பாப்பா. வீட்டுக்கு கிளம்பிட்டியா?”

“ஆமா அங்கிள்”

“கார்ல கொண்டு வந்து விடவாமா?”

“வண்டி இருக்கு அங்கிள். சரி நான் கிளம்புறேன்”

“பாத்து போ மா. பொறுமையா இருந்தா எல்லாம் நல்லதே நடக்கும்”, என்றார் அவர். அவர் எதற்கு சொல்கிறார் என்று புரிந்து சரி என்னும் விதமாய் தலையசைத்து விட்டுச் சென்றாள். அந்த நல்லது சீக்கிரம் நடக்கணும் என்று எண்ணிக் கொண்டே சதாசிவமும் உள்ளே சென்று அமர்ந்து கொண்டார்.

ஒரு பெருமூச்சை வெளியேற்றி விட்டு வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினாள் யமுனா. சரவணப் பெருமாளின் கோபம் நியாயமானது தான் என்று அவளுக்கே தெரியும். ஆனால் அவள்… அவள் நிலைமை… மனமும் கண்களும் கலங்கியது. வீட்டுக்குச் செல்லவே மனதில்லை. ஆனாலும் சென்றாக வேண்டுமே. நிதானமாக வண்டியை ஓட்டிச் சென்றாள்.

கோபத்துடன் உள்ளே சென்ற சரவணப் பெருமாளின் கோபம் சீட்டில் அமர்ந்திருந்த பரணியைக் கண்டதும் மாயமானது.

“பரணி கண்ணா”, என்ற படி உள்ளே சென்றார்.

“பா, வாங்க.. சாரி சாரி வாங்க சேர்மன் சார்”, என்ற படி தன்னுடைய சீட்டில் இருந்து எழுந்து நின்றான்.

“அடப் போடா. எப்பவும் நான் உனக்கு அப்பா தான். என்ன வீட்டுக்கு கிளம்பலையா டா?”, என்று கேட்ட படி அவனை நெருங்கியவர் அவனை அமர வைத்து அவன் எதிரே அமர்ந்து கொண்டார்.

“போகணும் பா. நீங்க என்ன இந்த டைம்ல இங்க?”

“ஒரு முக்கியமான விஷயம் பேசணும்னு வந்தேன் டா. வீட்ல வச்சு பேசினா உன் அம்மா பேச விட மாட்டா. அதான் இங்க வந்தேன்”, என்று சொன்னதும் அவனுக்கு அவர் என்ன பேசுவார் என்று புரிந்து போனது. அதனால் என்ன என்று கூட கேட்காமல் அமைதியாக அமர்ந்திருந்தான்.

“என்னணு கேக்க மாட்டியா பரணி?”

“என்ன சொல்லுவீங்கன்னு தெரியும் பா. பிளீஸ் இந்த பேச்சு வேண்டாமே?”, என்று தவிப்புடன் வந்தது அவன் குரல். அவனுக்கும் தந்தையின் ஆசை தெரிந்தும் அவரைக் காயப் படுத்துவது கஷ்டமாகவே இருந்தது.

Advertisement