Advertisement

அத்தியாயம் 2 

அலைகள் வந்து தகர்க்க

கூடியதா நீ இருக்கும்

என் இதய சிம்மாசனம்?!!!

“சார்”, என்று சாரு அழைக்க “ஹான், சரி பணிஷ்மெண்ட் கொடுக்கலாமா? என்ன பணிஷ்மெண்ட் கொடுக்கலாம்?”, என்று கேட்டான்.

“என்ன வேணும்னாலும் சார். ஆனா வேலையை விட்டு மட்டும் அனுப்பிறாதீங்க? ஐ லவ் மை ஜாப் சார்”

“சே சே, அப்படி எல்லாம் பண்ண மாட்டேன்”

“அப்படின்னா பணிஷ்மெண்ட் கிடையாதா சார்?”

“அது கண்டிப்பா உண்டு. நீங்களே வேணும்னு கேட்டீங்களே?”

“சார்”

“நீங்க என்ன பண்ணுறீங்க?”, என்று ஆரம்பித்து அவன் ஒரு வேலையை செய்யச் சொல்ல “சார்”, என்று அதிர்ந்து போனாள். அது அதிர்ச்சி என்றும் சொல்லலாம், திகைப்பு என்றும் சொல்லலாம்.

“என்ன ஆரம்பிக்கிறீங்களா? இப்ப மணி பன்னிரெண்டு. இப்ப இருந்து சாயங்காலம் சரியா அஞ்சு மணி வரைக்கும் இந்த வேலையை நீங்க செஞ்சா போதும் சாரு”, என்று அவன் பெருந்தன்மையாகச் சொல்ல உள்ளுக்குள் வேர்த்தாலும் “ஓகே சார்”, என்று சொன்னாள். ஆனாலும் செய்யப் போகும் வேலையை நினைத்து மனதுக்குள் திகில் பிடித்தது.

“குட், இந்தாங்க”, என்று சொல்லி தன்னுடைய பெர்சனல் மொபைலை எடுத்து அதை பிளைட் மோடில் போட்டவன் அவளிடம் நீட்டினான். நடுக்கத்துடன் அதை வாங்கினாள் சாரு. அவள் கைகள் எல்லாம் தந்தி அடித்தது.

“சார்”, என்று தடுமாற்றத்துடன் அழைத்தாள்.

“என்ன சாரு?”

“இது ரொம்ப காஸ்ட்லி போன் சார். வேணும்னா என்னோட போன் வச்சு……”

“நோ, நோ, எனக்கு கிலாரிட்டி இருக்கணும். கிலாரிட்டி ரொம்ப முக்கியம் சாரு”

“இதை நான் உடைச்சிட்டா என்ன செய்யுறது?”

“உடைஞ்சா வேற வாங்கிக்கலாம். ஆனா நான் கேட்ட வேலை மட்டும் செஞ்சு முடிச்சிருக்கனும். உங்க டைம் ஸ்டார்ட் நவ். நீங்க போகலாம்”, என்று சொல்ல அங்கிருந்து சென்றாள். அறையை விட்டு வெளியே வந்தவளின் மனமோ “உனக்கு இது தேவையா டி? சாரே பேசாம சாந்த சொரூபியா இருந்தாங்க. பணிஷ்மெண்ட்ன்னு கேட்டு வசமா சிக்கிட்டியே?”, என்று எண்ணிக் கொண்டு பல லட்சம் மதிப்பிலான அந்த போனை பார்த்தாள்.

அதை அவள் ஆன் செய்ய முயல அதுவோ பாஸ்வேர்ட் கேட்டது. மீண்டும் அவன் அறைக் கதவை தட்டி விட்டு அவள் அனுமதி கேட்க அவளைக் கண்டு ஒரு சின்ன கோபம் அவனுக்கு வந்தது.

“நீங்க இன்னும் போகலையா சாரு? டைம் வேஸ்ட் ஆகிட்டு இருக்கு தெரியும் தானே?”, என்று அவன் கேட்க “ஆமா ஆமா, இது நேரத்தை மதிக்கிற முக்கியமான வேலை தான்”, என்று மனதில் எண்ணிக் கொண்டு “பாஸ்வேர்ட் கேக்குது சார்”, என்று அவனிடம் நீட்டினாள்.

“பாஸ்வோர்ட் யமுனான்னு டைப் பண்ணுங்க, ஆன் ஆகிரும். சீக்கிரம் போங்க”, என்று சொல்ல படபடப்புடன் வெளியே வந்தாள். வெளியே வந்து பாஸ்வேர்ட் போட்டு போனை ஆன் செய்ய ஸ்க்ரீன்சேவரில் அழகாக புன்னகைத்துக் கொண்டிருந்தாள் யமுனா.

இவ்வளவு பெரிய எம்.டி தன்னை போல அலுவலகத்தில் ஆடிட்டராக வேலை செய்யும் ஒரு பெண்ணின் புகைப்படத்தை வைத்திருக்கிறாரா? இன்னும் எத்தனை அதிர்ச்சியை தான் என்னால் தாங்க முடியும் என்று எண்ணிக் கொண்டு யமுனாவைத் தேடிச் சென்றாள்.

யமுனா இருந்த தளத்துக்குச் சென்ற சாரு அந்த பெரிய அறைக்குள் நுழைந்தாள். அங்கே நடுநாயகமாக ஒரு டேபிள் போட்டு அதில் கம்ப்யூட்டர் சகிதம் பல பைல்களை குவித்துப் போட்டு வேலை பார்த்துக் கொண்டிருந்தாள் யமுனா. அவளைத் தவிர ஒரு இருபது பேர் அதே போல அந்த அறையில் அவரவர் கம்ப்யூட்டரில் வேலை செய்து கொண்டிருந்தனர்.

யமுனாவை நெருங்கிச் சென்றாள் சாரு. அருகே வந்ததும் அவளை நிமிர்ந்து பார்த்த யமுனா “நீங்க என்ன இங்க வந்துருக்கீங்க சாரு?”, என்று கேட்டாள்.

“எம். டி சார் இங்க இருக்குற பைல் பாத்து ஒரு ரிப்போர்ட் கொண்டு வரச் சொன்னாங்க மேடம்”, என்று சொல்லி சுவரை ஒட்டி இருந்த பெரிய அலமாரியைக் கை காட்டினாள்.

பல ரிப்போர்ட்டை ஒன்று சேர்த்து தான் பைலே போடப் பட்டிருக்கிறது. இதில் பைல் பார்த்து என்ன ரிப்போர்ட் எடுக்கப் போகிறாள் என்று குழப்பம் வந்தாலும் “ஓகே சாரு, பாருங்க. ஏதாவது ஹெல்ப் வேணும்னா கேளுங்க”, என்று சொல்லி விட்டு தன்னுடைய வேலையைப் பார்த்தாள்.

“அப்பாடி, நாம சொன்ன பொய்யைக் கண்டு பிடிக்கலை”, என்று எண்ணிக் கொண்டு அலமாரிக்கும் சுவருக்கும் இடையில் இருந்த இடத்துக்குள் நுழைந்த சாரு பரணியின் போனை எடுத்து அவன் செய்யச் சொன்ன வேலையை செய்ய ஆரம்பித்தாள்.

“மாட்டினா செத்தோம்”, என்று அவள் மனது பயத்தில் புலம்பியது அவளுக்கு தான் தெரியும். அவளுக்கு எப்போது இரவு வரும், முகுந்தனிடம் இங்கே என்ன நடக்கிறது என்று கேட்க வேண்டும் போல இருந்தது.

சிறிது நேரம் கழித்தும் சாரு அங்கேயே இருக்கவும் “இவ என்ன இங்கேயே இருக்கா?”, என்று சிறு குழப்பம் வந்தது யமுனாவுக்கு.

யமுனா தன்னை நோக்கி திரும்பிப் பார்க்கவும் “கண்டு பிடிச்சிட்டாங்களோ?”, என்று திகைத்து ஒரு அசட்டுப் புன்னகையை உதிர்த்தாள் சாரு.

“வேலை முடியலையா சாரு?”, என்று கேட்டாள் யமுனா.

“ஆமா மேடம்”

“சாப்பிட நேரம் ஆச்சு. நான் கேண்டீன் போறேன். வறீங்களா?”, என்று கேட்க இந்த சந்தர்பம் அவளுக்கு லட்டு உண்பது போல அல்லவா?

“வரேன் மேடம், சாப்பிட்டு வந்து மத்த வேலையை செஞ்சிக்கிறேன்”, என்று உடனே அவளுடன் கிளம்பி விட்டாள் சாரு.

“நான் லஞ்ச் கொண்டு வரலை சாரு. நீங்க கொண்டு வந்துருக்கீங்களா? லஞ்ச் பேக் எடுத்துட்டு வறீங்களா? நாம கேண்டீன்ல வச்சு சாப்பிடலாம்?”, என்று யமுனா கேட்டதும் காலையில் தனக்கு பிடித்த தக்காளிசாதமும், முட்டைத் தொக்கும் அன்னை கொடுத்து விட்டது நினைவில் வந்தது. ஆனாலும் இன்று அது தனக்கு எழுதப் பட வில்லை என்ற உண்மை புரிந்து “நானும் இன்னைக்கு லஞ்ச் எடுத்துட்டு வரலை மேடம். உங்க கூடவே சாப்பிட வரேன்”, என்றாள்.

“யமுனான்னே கூப்பிடுங்களேன் சாரு. எதுக்கு மேடம் எல்லாம்?”, என்று கேட்ட படியே நடந்தாள் யமுனா.

“நடக்குறதைப் பாத்தா எம். டி சாருக்கே நீங்க தான் ஒனர்ன்னு தோணுது மேடம். உங்களைப் போய் பேர் சொல்ல முடியுமா?”, என்று எண்ணிக் கொண்டு “பரவால்ல மேடம், அப்படி தான் கூப்பிட வருது”, என்று சொன்னாள் சாரு.

கேண்டீன் சென்று உணவு வாங்கி இருவரும் எதிர் எதிரே அமர்ந்து உண்டார்கள். உண்ணும் போதும் யமுனாவுக்கு தெரியாமல் சாரு அவளுக்கு கொடுக்கப் பட்ட வேலையை செய்து கொண்டு தான் இருந்தாள். ஆனால் அவனது போனின் மேலே சாருவின் கைக்குட்டை இருந்ததால் அதை யமுனா கவனிக்க வில்லை.

யமுனாவுக்குத் தெரியாமல் அவளின் ஒவ்வொரு செய்கையையும் சாரு படம் பிடித்துக் கொண்டிருக்க யமுனா அதைக் கவனிக்க வில்லை. உணவு உண்டு முடித்த பிறகும் சாரு அந்த பைலைத் தேடுகிறேன் என்னும் விதமாய் அந்த அறையிலே இருக்க யமுனாவுக்கு வியப்பாக இருந்தது.

சிறிது நேரம் கழித்து அவளைப் பார்த்த யமுனா “இவ்வளவு நேரம் சாருவுக்கு இங்க என்ன வேலை? கேட்டாலும் சொல்ல மாட்டிக்கா”, என்று மட்டும் எண்ணிக் கொண்டு தன்னுடைய வேலையைப் பார்த்தாள் .

அந்த மாத கணக்கு வழக்கை தீவிரமாக பார்த்துக் கொண்டிருந்ததால் வேறு எதுவும் அவள் மனதை தொட வில்லை.

அன்று மாலை நான்கு ஐம்பது ஆகி இருந்தது. இன்னும் பத்து நிமிடம் இருந்த நிலையில் அவள் அருகே சென்று நின்ற சாரு “ரொம்ப தேங்க்ஸ் மேடம்”, என்றாள். அப்போதும் புகைப்படம் எடுத்துக் கொண்டே தான் இருந்தாள்.

யமுனா அவளை வியப்பாக பார்க்க “காலைல சார் கிட்ட இருந்து என்னைக் காப்பாத்தினதுக்கு”, என்றாள் சாரு.

யமுனாவுக்கு குழப்பமாக இருந்தது. அன்று முழுவதும் சாரு யமுனாவின் கண் பார்வையில் தான் இருந்தாள். இருவரும் பேசிய படியே தான் உணவு உண்டார்கள். அப்படி இருந்தும் இவ்வளவு நேரம் சொல்லாத நன்றியை இப்போது சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி பிறந்தது .

Advertisement