Advertisement

யமுனா அருணைத் தூக்கி கொண்டு தாரணிக்கு உதவச் செல்ல பரணியின் அருகில் சென்று அமர்ந்தான் வினோத். “அப்புறம் மாப்பிள்ளை, லைப் எப்படி போகுது?”, என்று சிரிப்புடன் கேட்டான்.

“நல்லாப் போகுது மச்சான்”, என்று சிரித்தான் பரணி.

“அப்படின்னா சீக்கிரம் நான் என் மருமகனை எதிர் பார்ப்பேன்”, என்று வினோத் சொல்ல “ஏன் மருமகளா இருந்தா ஏத்துக்க மாட்டீங்களோ?”, என்று சிறு வெட்கத்துடன் கேட்க பரணியின் சிரிப்பு அவ்வளவு அழகாக இருந்தது. ஆண்களின் வெட்கம் இவ்வளவு அழகாக இருக்குமா என்று வியந்து போனான் வினோத்.

அங்கே விருந்தை முடித்து விட்டு அருணை அழைத்துக் கொண்டு ஷாப்பிங் சென்றார்கள். அருணுக்கு, தாரணிக்கு, அண்ணனின் வீட்டுக்கு என வாங்கிக் குவித்தாள் யமுனா.

மீண்டும் அருணை வீட்டில் விட்டுவிட்டு தங்களின் வீட்டுக்கு சென்றார்கள். நிஷா லண்டன் சென்றிருந்தாள். ஆனால் யமுனாவுக்கு நல்ல தோழியாக விஷ்ணுவின் மனைவி சஞ்சனா இருந்தாள். இரண்டு மருமகள்களும் நல்ல மாதிரியாக அமைந்ததில் கௌரி மற்றும் சரவணப் பெருமாளுக்கு அவ்வளவு சந்தோஷம்.

அன்று இரவு அறைக்குள் வந்ததும் கதவைச் சாற்றி விட்டு அலேக்காக யமுனாவைத் தூக்கி படுக்கையில் போட்ட பரணி அவள் கழுத்தில் முகம் புதைக்க அவள் கரங்களும் அவனை வாகாக அனைத்துக் கொண்டது.

அவன் அவளுடன் ஒன்ற “பிளீஸ் குளிச்சிட்டு வறேனே? கசகசனு இருக்கு”, என்றாள்.

“அப்போ நானும் வருவேன்”, என்று அவன் சிணுங்க அவன் தலையில் மெல்ல தட்டியவள் “அஞ்சு நிமிசத்துல வந்துருவேன்”, என்றாள்.

“வேண்டாம், எனக்கு உன்னோட இந்த வாசனை தான் பிடிச்சிருக்கு. அப்படியே என்னை கொல்ற டி”, என்று முணங்கியவன் அவள் கன்னம் தாங்கி இதழ்களைச் சிறை செய்தான்.

அவன் கரங்களுக்குள் ஒடுங்கிக் கொண்டவள் அவன் தேடுதலுக்கு முழு மனதாக அனுமதி வழங்கினாள். அவன் கரங்கள் முன்னேற எதிர்ப்பில்லாமல் அவன் கைகளுக்குள் கரைந்தாள்.

கரங்கள் பயணித்த இடங்களில் அவன் இதழ்கள் பயணிக்க அவன் கேட்ட எதையும் மறுக்கும் மன நிலையில் அவள் இல்லை. இப்படியே அவர்கள் வாழ்க்கை நகர்ந்தது. ஆனால் யமுனா ஒரு முறை கூட தாய் தந்தையைப் பார்க்க வேண்டும் என்று சொல்ல வில்லை. அவள் சொல்லாததால் பரணியும் அவளை அங்கே அழைத்துச் செல்ல வில்லை. ஆனால் அவளுக்கான எல்லா சீர்களையும் வினோத் முழுமனதுடன் செய்தான்.

அடுத்த பத்து வருடங்களில் அனைவரின் வாழ்க்கையிலும் பல  மாறுதல்கள் ஏற்பட்டது. பரணி யமுனா தம்பதிக்கு இப்போது இரண்டு பிள்ளைகள். மகன் விஸ்வாவுக்கு ஆறு வயது. மகள் மித்ராவுக்கு மூன்று வயது.

சாரு மற்றும் முகுந்தனுக்கு எட்டு வயதில் டுவின்ஸான இரண்டு ஆண் பிள்ளைகள் கண்ணன் மற்றும் கார்த்திக். வினோத் மற்றும் தாரணிக்கும் அருணைத் தவிர ஆறு வயதில் ஷாலினி என்ற பெண் குழந்தையும் இருக்கிறது.

இப்போது வரை காவேரி மற்றும் தாமோதரன் இருவரும் அந்த வீட்டில் தனியாக தான் இருக்கிறார்கள். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை வினோத் மட்டும் குடும்பத்துடன் அங்கே சென்று வருவான். யமுனா இது வரை தாய் தந்தையை பார்க்கச் செல்ல வில்லை. அவர்களும் மகளைக் காணச் செல்ல வில்லை. தங்களின் தவறை அவர்கள் உணர்ந்தார்களா என்று கூட தெரிய வில்லை. காலம் அவர்களை மாற்றுமா என்றும் தெரிய வில்லை.

அன்று தாத்தா பாட்டியை தாய் தந்தையுடன் காண வந்திருந்தார்கள் அருணும் ஷாலினியும். அவர்களை வரவேற்று அமர வைத்து பேசினார்கள் காவேரியும் தாமோதரனும்.

வினோத்துக்கு தங்கை விஷயத்தில் தாய் தந்தை மீது கோபம் இருந்தாலும் அவ்வப்போது குடும்பத்துடன் வந்து பார்த்து விட்டுச் செல்வான். அவர்களும் யமுனா எப்படி இருக்கிறாள் என்று கேட்க மாட்டார்கள், அவனும் தங்கையைப் பற்றி அவர்களிடம் பேச மாட்டான்.

“எப்படி படிக்கிற அருண்?”, என்று கேட்டார் தாமோதரன்.

“நல்லா படிக்கிறேன் தாத்தா”, என்று அவன் பெருமையாக சொல்ல “ஷாலினி குட்டி நீ எப்படி படிக்கிற டா?”, என்று கேட்டார்.

“நானும் நல்லா படிக்கிறேன் தாத்தா. எனக்கு எல்லாமே தெரியுமே?”

“எல்லாம் தெரியுமா? என்ன என்ன தெரியும் சொல்லு”, என்று அவர் கேட்க அவள் ஒவ்வொன்றைப் பற்றியும் சொல்லிக் கொண்டு வந்தாள்.

இந்தியாவின் ஜனாதிபதி, பிரதமரிலிருந்து தமிழ்நாட்டின் மரம், தமிழ்நாட்டின் விலங்கு என்று ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டே வந்தவள் தமிழ்நாட்டின் ஆளுநர், முதலமைச்சர் பற்றியும் சொன்னாள். கடைசியாக “தமிழ்நாட்டின் ஆடிட்டர் ஜெனரல் நம்ம யமுனா அத்தை தான்னு கூட எனக்கு தெரியும் தாத்தா”, என்று முடிக்க பெரியவர்கள் முகத்தில் ஈ ஆட வில்லை. அவ்வளவு பெரிய பதவியிலா இருக்கிறாள் என்று தாமோதரனுக்கு வியப்பாக இருந்தது.

அப்போதாவது அவளைப் பற்றி ஏதாவது பெற்றவர்கள் கேட்பார்கள் என்று வினோத் பார்க்க அவர்களோ எதுவுமே கேட்க வில்லை என்றதும் “அம்மு உனக்கு ரைம்ஸ் தெரியும்ல? அதை தாத்தா பாடிக் கிட்ட பாடிக் காட்டு”, என்று பேச்சை மாற்றினான் வினோத்.

அதே நேரம் சென்னையில் இருந்த தலைமைச் செயலகத்தில் ஒரு மீட்டிங்கில் இருந்தாள் யமுனா. இப்போது அவள் தான் தமிழ்நாட்டின் ஆடிட்டர் ஜெனரல் என்பதால் அந்த மீட்டிங்கில் அவளுடன் முதலைமைச்சர், ஆளுநர் முதற்கொண்டு மற்ற மந்திரிகளும் மற்ற அதிகாரிகளும் அமர்ந்திருந்தார்கள். இந்த சிறு வயதில் அவளுக்கு இந்த பதவி கிடைத்திருப்பது மிகவும் பெரிய விஷயமே. இந்த பதவி கிடைப்பதற்கு அவளுக்கு வழி காட்டியவன் பரணி என்றால் அதற்கு பக்கபலமாக இருந்தது சரவணப் பெருமாளும் கௌரியும் தான்.

பரணி அவளுக்கு நல்ல கணவனாக, அன்பான காதலனாக, உற்ற தோழனாக மட்டும் இல்லை நல்ல வழிகாட்டியாக இருந்தான் என்றால் கௌரியும் சரவணப் பெருமாளும் அவளுக்கு பெற்ற தாய் தந்தை போலவே இருந்து அவளைக் கவனித்துக் கொண்டார்கள். அவள் கருவுற்ற போது பெற்றவளைப் போல பார்த்துக் கொண்டது கௌரி தான். பரணியும் அவளை உள்ளங்கையில் வைத்து தாங்கினான் .

சரவணப் பெருமாள் இப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். அவரது உண்மையும் நேர்மையும் அவரை உயர்த்தி இருந்தது. விஷ்ணு இப்போது தமிழ்நாட்டின் கல்வித் துறை அமைச்சராக இருந்தான்.

பரணியையும் யமுனாவையும் அரசியலுக்கு வரச் சொல்லி சரவணப் பெருமாள் எவ்வளவோ சொன்னார். ஆனால் பரணிக்கு பிஸ்னசில் மட்டுமே ஆர்வம் என்று சொல்லி விட்டான். யமுனாவும் அரசியலை மறுக்க அவளை இன்னும் படிக்க வைத்து ஆடிட்டர் ஆக்கி பெரிய பொறுப்பில் அமர வைத்தது பரணி தான்.

யமுனா இப்போது தமிழ்நாட்டின் தணிக்கையை மட்டும் அல்ல, பரணி குருப் ஆப் கம்பெனிசின் தணிக்கையையும் அவள் தான் பார்க்கிறாள். அதனால் அவளுக்கு வேலைப்பளு அதிகம்.

வேலைப்பளு கூட அவளுக்கு பொருட்டே இல்லை. அவளால் அதிகம் குழந்தைகளுடன் நேரம் செலவழிக்க முடியாமல் போனது தான் வருத்தமான விஷயம்.

ஆனால் அவளுக்கும் சேர்த்து அவளை மட்டும் அல்லாமல் குழந்தைகளையும் கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொண்டான் பரணி.

அவன் குழந்தைகளுடன் நேரம் செலவழிக்க அலுவலகத்தை முகுந்தன், சாரு, வினோத் மூவரும் நன்கு பார்த்துக் கொண்டார்கள்.

மீட்டிங் முடிந்து வெளியே வந்த யமுனா சரியான நேரத்துக்குள் விமான நிலையம் வந்து வீடு வந்து சேருவதற்குள் இரவு எட்டு மணி ஆகி இருந்தது.

அவள் வீட்டுக்குள் அடி எடுத்து வைத்ததும் “அம்மா”, என்ற படி அவள் காலைக் கட்டிக் கொண்டான். அவளது மூத்த மகன் விஷ்வா.

“செல்லக் குட்டி”, என்ற படி அவனைத் தூக்கிக் கொண்டவள் “சாப்பிட்டியா தங்கம்? பாப்பா எங்க?”, என்று கேட்டாள்.

“பாப்பா அழுதுட்டு இருந்தா மா. அதான் அப்பா மாடிக்கு தூக்கிட்டு போனாங்க”

“அப்படியா? பாப்பா அம்மாவைத் தேடினாளா?”

“ஆமா, நானும் தேடினேன்”

“அப்படியா லட்டு? அதான் அம்மா வந்துட்டேனே? சரி பாட்டி எங்க டா?”

“பாட்டி கோவிலுக்கு போனாங்க, தாத்தா இப்ப தான் டெல்லில இருந்து பேசினாங்க. நாளைக்கு வருவாங்களாம்”

“சரி டா குட்டி, அம்மா குளிச்சிட்டு வரேன். நீ மாடிக்குப் போய் அப்பாவைக் கூட்டிட்டு வரியா?”

“சரி மா”, என்ற படி அவன் ஓட இவள் அவசர அவசரமாக அறைக்குள் சென்று ஒரு காக்கா குளியலைப் போட்டு விட்டு வேகமாக வெளியே வந்தாள்.

அவள் வெளியே வரும் போது கணவன், மகள், மகன் மூவரும் அவளுக்காக காத்திருக்க வேகமாக மித்ராவை வாங்கி மடியில் வைத்துக் கொண்டவள் கணவன் தோளில் சாய்ந்தாள். விஸ்வாவை தூக்கி மடியில் வைத்துக் கொண்ட பரணி அவளை தோளோடு அனைத்து அவள் நெற்றியில் இதழ் படித்தான்.

அவள் குழந்தைகளைக் கொஞ்சும் அழகை ரசித்தவன் “மீட்டிங் எப்படி போச்சு பேபி?”, என்று கேட்க “கணக்கு கேட்டு வருத்து எடுத்துட்டாங்க. பட் எல்லாம் ஓகே தான். ஆனா உங்க மூணு பேரையும் தான் ரொம்ப மிஸ் பண்ணேன்”, என்று சொல்ல அவனும் அழகாக சிரித்தான்.

அவன் அழகில் மயங்கிப் போனவள் அந்த மயக்கத்தை கண்களில் வெளிபடுத்த அவன் கண்கள் மின்னியது. “சீக்கிரம் ரெண்டு குட்டிசையும் சாப்பாடு கொடுத்து தூங்க வைக்கணும்”, என்று கள்ளச் சிரிப்போடு சொன்னவனின் தோளில் சாய்ந்து அமர்ந்தவளின் மனம் எல்லையில்லா நிம்மதியையும் சந்தோசத்தையும் சுமந்திருந்தது.

அதற்கு பின் அவர்கள் உலகம் குழந்தைகளுடன் செல்ல எப்போதும் அவர்கள் குடும்பத்தில் சந்தோசமே இருக்கும் என்று நம்பி விடைபெறுவோமாக.

…..முற்றும்……

Advertisement