Advertisement

கம்பீரமாக அமர்ந்திருந்த பரணியின் அருகில் அமர வைக்கப் பட்ட பிறகும் அவளால் நிமிர்ந்து பார்க்க முடிய வில்லை. சிறிது நேரம் கழித்து ஆர்வம் தலை தூக்க அவனை ஓரக்கண்ணால் பார்த்தாள். அவனோ ஐயர் சொன்னதைச் செய்து கொண்டிருந்தாலும் அவன் கண்கள் அவளையே பரவசத்துடன் நோக்கியது.

அவன் பார்வையில் முகம் சிவந்து நிலம் பார்க்க அவன் மேனி சிலிர்த்தது. ‘கெட்டிமேளம் கெட்டிமேளம்’ என்ற ஐயரின் குரலில் நடப்புக்கு வந்தவன் அவர் கொடுத்த தாலியை வாங்கி அவள் கழுத்தில் கட்டினான்.

நிஷா மூணாவது முடிச்சைப் போட வந்த போது அந்த முடிச்சையும் அவனே போட்டு விட்டு அவளிடம் கொடுத்தான். சிறு சிரிப்புடன் மேலும் சில முடிச்சுகளைப் போட்டு அந்த பந்தத்தை இறுக்கினாள் நிஷா.

அதற்கு பிறகு நடந்த அனைத்து திருமண விளையாட்டுகளிலும் சடங்குகளிலும் உற்சாகமாக கலந்து கொண்டார்கள் மணமக்கள். ஆசீர்வாதம் வாங்குவது, பரிசு கொடுப்பது, போட்டோ எடுப்பது என திருமணம் நல்ல படியாக முடிந்தது. “எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க மாமா அத்தை”, என்று சிரித்த படி தாமோதரன் மற்றும் காவேரி கால்களில் மனைவியுடன் விழுந்தான் பரணி. அவர்களுக்கு ஆசீர்வாதம் பண்ணுவதை தவிர வேறு வழி இல்லையே.

திருமணம் முடிந்ததும் பிரஸ்க்கு இன்டர்வியூ கொடுத்தார் சரவணப் பெருமாள். அதில் மகனின் திருமணம் காதல் திருமணம் என்றும் வேறு ஜாதி என்று அவர்கள் வீட்டில் ஒத்துக் கொள்ளாததால் இவ்வளவு நாட்கள் காத்திருந்ததாகவும் பேட்டி கொடுத்தார்.

காதலில் நிலையாக இருந்த மருமகளைப் பாராட்டவும் செய்தார். மகனுக்கு வேறு ஜாதியில் இருந்து பெண் எடுத்ததால் அவர் செல்வாக்கு இன்னும் கூடியது. இனி காவரி மற்றும் தாமோதரனால் வீண் வதந்திகளை பரப்ப முடியாது என்று புரிந்து அனைவருக்கும் நிம்மதியாக இருந்தது.

திருமணம் முடிந்ததும் யமுனாவின் பெற்றோரை தன்னுடைய ஆட்களுடன் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டான் பரணி. இனி அவர்களைப் பார்க்க மனைவியை அனுப்ப கூட மாட்டான் என்று வினோத்துக்கு புரிந்தது.

ஏற்கனவே வினோத் குடும்பத்துடன் பரணியின் அப்பார்ட்மெண்ட்க்கு சென்று விட அந்த வீட்டில் தன்னந்தனியாக இருந்தார்கள் காவேரியும் தாமோதரனும். இந்த தனிமை தான் அவர்களுக்கு தண்டனையோ என்னவோ?

சரவணப் பெருமாளின் இல்லத்துக்குள் மருமகளாக அடி எடுத்து வைத்தாள் யமுனா. கௌரி அவளை பாசமாக அணைத்துக் கொண்டாள். நிஷா தான் ஆரத்தி எடுத்தாள்.

மணமக்கள் பாலும் பழமும் உண்டார்கள். மாலை ரிசப்ஷன் கிராண்டாக நடந்தது. முகுந்தனும் விஷ்ணுவும் அனைத்து ஏற்பாடுகளையும் பார்த்துக் கொண்டார்கள். வினோத்துக்கு கூட அவர்கள் எந்த வேலையையும் வைக்க வில்லை.

.

வரவேற்பில் மணமக்கள் இருவரும் அவ்வளவு சந்தோஷமாக நின்றார்கள். இருவருக்கும் அந்த நேரம் தனிமை வேண்டும் போல இருந்தது. அவள் அழகில் சொக்கிக் கொண்டிருந்தான் பரணி.

அன்று இரவு பரணியின் அறையில் முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. நிஷா சொன்னதும் குளிக்கச் சென்றாள் யமுனா. குளிக்கும் போது அவள் கண்கள் கழுத்தில் கிடந்த திருமாங்கல்யத்தில் பதிந்தது. அதை தன் முகத்துக்கு நேராக பிடித்துப் பார்த்தாள். இது உண்மை தானா என்று அவள் மனம் எண்ணியது. இதற்காக எத்தனை நாட்களாக காத்திருந்தாள்? சிறு சிரிப்புடன் குளித்து முடித்தாள்.

முதலிரவுக்கு என யமுனாவை அலங்கரித்த நிஷா அவளைக் கிண்டல் அடித்துக் கொண்டிருந்தாள். யமுனாவோ வெட்கத்தில் திணறிக் கொண்டிருந்தாள். அவள் மனம் சந்தோசத்தில் நிறைந்து இருந்தது. தன்னை ஏமாற்றி அழைத்துச் சென்று கட்டாயத் திருமணம் செய்ய எண்ணிய அவளது தாய் மற்றும் தந்தையைப் பற்றிய நினைவுகள் இப்போது அவள் மனதில் இல்லவே இல்லை.

அவளை பரணியின் அறைக்கு வெளியே விட்ட நிஷா “ரொம்ப அழகா இருக்க யம்மு பேபி. இல்லை இல்லை அண்ணின்னு தான் சொல்லணும். அழகா இருக்க அண்ணி. இன்னைக்கு எங்க அண்ணா பாவம்”, என்றாள். “சீ போ டி”, என்று வெட்கப் பட்டாள் யமுனா.

ஆர்வமும் வெட்கமும் கலந்த உணர்வுடன் அவனுடைய அறைக்குள் நுழைந்தாள் யமுனா. அவளைக் கண்டதும் சிறு சிரிப்புடன் அவள் அருகே வந்தவன் அவளை உள்ளே நன்றாக இழுத்து கதவை சாற்றினான். பின் அவள் கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றவன் அவள் கையில் இருந்த பால் சொம்பை வாங்கி அங்கிருந்த டேபிள் மீது வைத்து விட்டு அவளைக் கட்டிலில் அமர வைத்து தானும் அமர்ந்து கொண்டான்.

அவன் இந்த தருணம் நிஜம் தானா என்ற பிரம்மிப்புடன் அவளையே பார்க்க அவளோ “இப்ப எதுக்கு இப்படி பாத்துட்டு இருக்கீங்க?”, என்று சிணுங்களாக கேட்டாள்.

“நீ என் கிட்ட இருக்குறது, நம்ம கல்யாணம் நடந்தது எல்லாம் உண்மையான்னு தோணுது டி? உண்மை தானே? விடிஞ்சதும் கனவா போயிராது தானே?”, என்று கேட்க அவன் ஆசையில் அவள் கண்கள் கலங்கியது.

“சாரி,  நான் உங்களை ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன்”

“நீயும் தானே கஷ்டப் பட்ட? சரி இப்ப சொல்லு, முதல் நாள் நாம வெளிய போனப்ப ஹோட்டல்ல வச்சு ஏன் அழுத?”, என்று கேட்க அவள் முகம் சிவந்தது.

“நீ சொல்லியே ஆகணும் பேபி”

“அது உங்களை ரொம்ப பிடிச்சதா? சைட் அடிச்சிட்டு இருந்தேன். திடீர்னு உங்களை கட்டிக்கணும் போல இருந்தது,. அது முடியாதுன்னு தெரிஞ்சு அழுகை வந்துச்சு. அப்புறம் நினைச்சது நடந்ததும் சந்தோஷமா ஆயிருச்சு”

“அதை இப்பவும் செய்யலாமே?”, என்று அவன் சொல்ல அடுத்த நொடி சந்தோஷமாக அவன் நெஞ்சில் போய் விழுந்தாள். அவன் கரங்களும் அவளை அணைத்துக் கொண்டது.  முதல் முறை கிடைத்த உரிமையான நெருக்கத்தில் இருவரின் உணர்வுகளும் தீப் பற்றிக் கொண்டது.

அவளது தலையில் சூடியிருந்த மல்லிகையின் வாசனையில் அவன் கிறங்கினான் என்றால் அவன் மேல் எழுந்த ஆண்மை வாசனில் யமுனா மயங்கினாள்.

அவன் இதழ்கள் அவள் இதழ்களை முற்றுகை இட சிலிர்த்துக் கொண்டன இருவரின் தேகங்களும். இப்படிக் கூட முத்தமிட முடியுமா என்ற எண்ணம் தான் வந்தது அவளுக்கு. அவன் தொடுகையில் முழுதாக அவள் தடுமாற அவன் நிலையை சொல்லவும் வேண்டுமா?

தன்னவளை முழுதாக அறிந்து கொள்ளும் வேட்கையில் அவன் கரங்கள் அவள் மேனியில் அத்துமீற அவள் தான் வெட்கத்தை துறக்க வேண்டி இருந்தது. விடியும் வரை அவளை கொள்ளையிட்டவன் விடிந்த பின்பே அவளை உறங்க விட்டான். அவன் கனவில் வந்த தேவதையே அவன் கைகளுக்குள் உறங்கிக் கொண்டிருந்தாள்.

காலையில் கண்  விழித்தவன் அவளைத் தேட அவள் அங்கே இல்லை. குளிக்கச் சென்றான். குளியல் அறையில் அவள் குளித்து சென்றதற்கான சுவடுகள் தெரிய சிரித்த படியே குளித்து முடித்து கீழே சென்றான்.

கீழே ஹாலில் கௌரி மற்றும் சரவணப் பெருமாள் அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருக்க மற்றொரு சோபாவில் அமர்ந்து காபியை பருகிய படி அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தாள் யமுனா.

இளம் சிவப்பு வண்ண காட்டன் புடவை அணிந்து நீண்ட தலை முடியை ஒரு கிளிப்பில் அடக்கி புத்தும் புது தாலி கழுத்தில் மிளிர, நெற்றி வகிட்டில் குங்குமத்துடன் அமர்ந்திருந்தவளின் அழகு அவனைக் கொள்ளை கொள்ள அவளைப் பார்த்த படியே அமர்ந்தான் பரணி. அவன் பார்வையில் அவள் முகம் சிவந்து போனது. நேற்றைய நினைவுகள் இருவரின் மனதிலும் எழுந்தது.

“குட் மார்னிங் பரணி கண்ணா”, என்றார் சரவணப் பெருமாள்.

“குட் மார்னிங் பா”, என்று அவன் சொல்லிக் கொண்டிருக்க யமுனா எழுந்து சென்று அவனுக்கு காபி எடுத்து வந்து கொடுத்தாள். நிஷா குடும்பம், விஷ்ணு குடும்பம் அனைவரும் எழுந்து வர காலை உணவே தடாபுடாலாகவும் கலகலப்பாகவும் சென்றது. வெகு நாட்கள் கழித்து அந்த வீட்டில் சிரிப்பு சத்தம் கேட்பது போல இருந்தது. பரணி வாழ்க்கை நேரானதில் அனைவருக்கும் அவ்வளவு சந்தோஷம்.

காலை உணவு முடிந்து வழக்கம் போல போல அவரவர் அவரவர் வேலையைப் பார்க்க போக யமுனா வினோத்தின் வீட்டுக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள் விருந்துக்காக.

அவளைக் கிளம்ப விடாமல் அவளை இறுக அணைத்து வாசம் பிடித்து வம்பிழுத்துக் கொண்டிருந்தான் பரணி.

“உங்க கொஞ்சலை எல்லாம் நைட் பாத்துக்கலாம், பிளீஸ், அருண் என்னைத் தேடுவான். நாம இப்ப போகணும்”, என்று கெஞ்சி கொஞ்சி அவனை கிளப்ப வைப்பதற்குள் வெகுவாக திணறிப் போனாள்.

காரில் போகும் போதும் அவனது சேட்டைகள் தொடர “ரோட்டைப் பாத்து வண்டி ஒட்டுங்க”, என்று சிரிப்புடன் சொன்னாள் யமுனா.

“ஏன் நான் உன்னைப் பாக்க கூடாதா பேபி? இல்லை பாக்க தான் உரிமை இல்லைன்னு சொல்லிருவியா?”, என்று அவன் வம்பிழுக்க “நான் எங்க அப்படிச் சொன்னேன்?”, என்று சிறு புன்னகையுடன் கேட்டாள். அவனது அடாவடியான பேச்சு அவளைக் கவர்ந்தது.

வீட்டுக்கு வந்தவர்களை முறையாக வரவேற்றார்கள் தாரணியும் வினோத்தும். பரணி சோபாவில் அமர அவன் அருகே அமர்ந்த யமுனா அருணைத் தூக்கி மடியில் வைத்து அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள். அவளுடைய வேதனைகளின் வடிகால் அவன் அல்லவா? அவளுக்கே குழந்தை வந்தாலும் அவன் மீதிருக்கும் அன்பு போகுமா என்ன?

அத்தை அத்தை என்று அருணும் அவளையே சுற்றி வந்தான். அவளிடம் பேச அவனுக்கு அவ்வளவு கதைகள் இருந்தன. தினமும் தன்னைக் கட்டி அணைத்து தூங்கும் அவளை வெகுவாக தேடினான்.

பரணியும் யமுனாவும் ஜோடியாக அமர்ந்திருப்பதைக் கண்ட வினோத்துக்கு பார்க்க பார்க்க தெவிட்ட வில்லை. தங்கையை சந்தோஷமாக பார்க்க வேண்டும் என்பது அவனது நெடுநாள் கனவு அல்லவா? எல்லாருக்கும் நன்மையே செய்யும் பரணியின் சந்தோஷம் அவனுடைய தங்கையிடம் இருக்கிறது என்று தெளிவாய் புரிந்தது.

Advertisement