Advertisement

அத்தியாயம் 17 

நேசிப்பது புரிந்தும்

நெருங்க விடாமல்

செய்கிறது உந்தன் மௌனம்!!!

பரணி சொன்னதைக் கேட்டு அதிர்ந்த முகுந்தன் “என்ன டா சொல்ற? நக்கல் அடிக்கிறியா?”, என்று கேட்டான்.

“நக்கல் அடிக்கிற நிலைமையிலயா நாம இருக்கோம்? சொல்றதைச் செய் டா. இப்போதைக்கு வேற வழி இல்லை. வினோத் கிட்ட சொல்லி அவங்களை கிட்னாப் பண்ணச் சொல்லு”

“சரி சொல்றேன். ஆனா அவங்களை எங்க கடத்திட்டுப் போக?”

“நம்ம கெஸ்ட் அவுஸ்க்கு போ. இப்போதைக்கு வினோத் கிட்ட சொல்லி சாமர்த்தியமா வேலையை முடிக்கச் சொல்லு. நம்ம இடம் வந்த உடனே மத்தது பாத்துக்கலாம்”

“இவங்க அந்த அளவுக்கு வொர்த்தா டா? பிள்ளை பூச்சிக டா”

“இப்ப தானே சொன்ன அவங்க பிளான் வேறன்னு? அதை முறியடிக்கணும்னா அவங்க நம்ம கஷ்டடில இருக்கணும். அவங்க பொண்ணு சந்தோசத்துக்காக தான் இவ்வளவு நாள் நான் அவளையே தூக்காம இருந்தேன்? நான் அமைதியா இருந்தா என்னை வெத்து வெட்டுன்னு நினைச்சிருவாங்களா அவங்க? என்னால அவங்களையே தூக்க முடியும்னு காட்ட வேண்டாம்? பேசி நேரத்தை வேஸ்ட் பண்ணாத. உடனே சொன்னதைச் செய். அங்க இருந்து எந்த நியூசும் லீக் ஆகிறக் கூடாது”, என்று சொல்லி போனை வைத்தான்.

வினோத்தை நெருங்கிய முகுந்தன் பரணி சொன்னதை அவன் காதில் சொல்ல ஒரு நொடி திகைத்தாலும் மனதுக்குள் தங்கைக்காக என்று எண்ணிக் கொண்டு “அப்பா அம்மா ரெண்டு பேரும் என் பேச்சைக் கேப்பீங்களா மாட்டீங்களா?”, என்று இறங்கிய குரலில் கேட்டான் வினோத்.

“எங்களால முடியாது. நாங்க அவளை வாழ விட மாட்டோம். கலெக்டர் ஆபீஸ் போறோம்”, என்றாள் காவேரி.

“சரி வாங்க, முதல்ல அங்க போய் பேசிக்கலாம்”, என்று நயமாய் பேசி அவர்களை அழைத்தான்.

“அதுவும் சரி தான், வாங்க போகலாம்”, என்று சொன்ன காவேரி காரில் ஏற தாமோதரன், தாரணி, முகுந்தன், வினோத் அனைவரும் காரில் ஏறினார்கள். கார் மதுரையை நோக்கிச் செல்லாமல் அதற்கு எதிர் திசையில் செல்ல திகைத்தனர்.

“டேய் வினோத், கார் எங்க டா போகுது?”, என்று கேட்டார் தாமோதரன்.

“இதோ இங்க ஒரு வீடு இருக்கு பா. அங்க தான் யமுனாவும் மாப்பிள்ளையும் இருக்காங்க. அங்க போய் பேசி முடிச்சு நாம யமுனாவை நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு போகலாம்”, என்று சொல்ல அவர்களும் சரி என்பது போல அமைதியானார்கள்.

சொன்னது போல அந்த பண்ணை வீட்டின் முன் கார் நின்றது. முகுந்தனும் வினோத்தும் காவேரி மற்றும் தாமோதரனை அந்த வீட்டுக்குள் தள்ளி கதவை அடைக்க உள்ளே இருந்து கத்தினார்கள் இருவரும். அருண் தாரணியின் மடியில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்ததால் அவனுக்கு எதுவுமே தெரிய வில்லை.

அப்போது பரணியின் நம்பிக்கைக்குரிய ஆட்கள் ஒரு டாட்டா சுமோவில் வர முகுந்தன், வினோத் மற்றும் தாரணியை அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.

காரை ஓட்டிக் கொண்டே யமுனாவை திரும்பி பார்த்த பரணி “சாரி பேபி, இதைத் தவிர இப்போதைக்கு வேற வழி இல்லை. ஏன்னா உங்க அம்மா அப்பா நீ பயந்த மாதிரி தான் மந்திரி மகன் எங்க பொண்ணைக் கடத்திட்டு போய்ட்டான், இதைக் கேக்க யாருமே இல்லையான்னு கத்துறாங்களாம்? அவங்க வாயை அடைக்க இது ஒண்ணு தான் வழி. நம்ம பண்ணை வீட்டுல பத்திரமா இருப்பாங்க”, என்றான்.

அதற்கு அவள் கோபப் படுவாளோ என்று அவன் எண்ண “சாரி”, என்றாள் யமுனா.

“நீ எதுக்கு பேபி சாரின்னு சொல்ற?”

“இல்லை, முன்னாடியே நான் உங்க கிட்ட அவங்க மிரட்டுற விஷயத்தை சொல்லிருந்தா நீங்க முன்னாடியே அவங்களை கடத்திருப்பீங்க? நம்ம கல்யாணமும் முன்னாடியே முடிஞ்சிருக்கும்ல? எனக்கு இந்த ஐடியா தோணாம போய்ட்டே?”, என்று அவள் சொன்னதும் சிரிப்பு வந்தது அவனுக்கு.

“உங்க அம்மா அப்பாவை உனக்கு ரொம்ப பிடிக்கும் பேபி. அதனால தான் அவங்க இந்த அளவுக்கு இறங்குவாங்கன்னு நீ எதிர் பாத்திருக்க மாட்ட? ஆனா அது கூட நல்லது தான். இத்தனை நாள் நாம பிரிஞ்சி இருந்தப்ப நம்ம காதல் இன்னும் கூடிருக்கு. சில நேரம் மனசுக்கு கஷ்டமா இருந்தாலும் பல நேரம் சுவாரசியமா தானே போச்சு?”, என்று அவன் சொல்ல ஆம் என்று தலையசைத்தாள்.

“அவங்களை என்ன பண்ணப் போறீங்க?”

“அவங்க என்னோட மாமனார் மாமியார் டி. அவங்களை என்ன பண்ணப் போறேனாம்? அவங்களை நம்ம கல்யாணத்துக்கு தயார் படுத்தணும்”

“அப்படின்னா?”

“அதை விடு, நான் பாத்துக்குறேன். இப்ப நாம கிளம்பலாம். உன்னை உன்னோட வீட்ல விட்டுட்டு நான் கல்யாண வேலை எல்லாம் பாக்க ஆரம்பிக்கணும்”

“என்னால உங்களுக்கு ரொம்ப கஷ்டம் தானே? உங்க அம்மா அப்பாவும் என் மேல கோபமா இருப்பாங்க”

“அது நீ கல்யாணத்துக்கு சம்மதிக்கலையேன்னு வருத்தம் இருக்கு பேபி. இப்ப தான் நீ சம்மதிச்சிட்டியே? இன்னும் எதுக்கு உன் மேல கோபப் படப் போறாங்களாம்? நாம நம்ம வீட்டுக்கு போகலாமா?”

“இல்லை, முறைப் படியே வரேன்?”, என்று சொல்ல அவன் முகம் மலர்ந்தது.

அவளை அவளது வீட்டில் கொண்டு வந்து விட்டவன் முகுந்தனை அழைத்து இங்கே வரச் சொன்னான். முகுந்தன், வினோத், தாரணி மூவரும் வந்ததும் அவர்களிடம் யமுனாவை ஒப்படைத்து விட்டு  திருமணம் வரை தாமோதரன் மற்றும் காவேரியை எப்படி கவனிக்க வேண்டும் என்று எல்லாம் பேசி விட்டு கிளம்பி விட்டான்.

“போய் மாப்பிள்ளையை வழி அனுப்பு யமுனா”, என்று வினோத் சொன்னதும் கார் வரை அவனுடன் சென்றாள்.

அவளைப் பார்த்து சிரித்தவன் “வீட்டுக்கு போயிட்டு அம்மா அப்பா கிட்ட கல்யாண விஷயம் பேசிட்டு உனக்கு கால் பண்ணுறேன் பேபி”, என்றான்.

“ம்ம்”

“கல்யாணத்துக்கு சம்மதம் தானே பேபி?”

“சம்மதம்… சம்மதம்… சம்மதம் போதுமா?”

“தேங்க்ஸ் டி”, என்று சொன்னவன் அன்புடன் அவள் கன்னத்தை வருடினான்.

அவள் முகம் சிவக்க “உன் கன்னம் பட்டு மாதிரி இருக்கு பேபி”, என்று அவன் செர்டிபிகேட் வழங்க அவள் வெட்கத்துடன் கண்களை மூடிக் கொண்டாள். இது ஜென்ம ஜென்மமாய் ஏற்பட்ட பந்தம் என்று இருவருக்கும் தோன்றியது. சந்தோசத்துடன் விடை பெற்றான் பரணி.

வீட்டுக்கு வந்ததும் தாய் தந்தையிடம் நடந்ததைச் சொன்னான். அதற்கு பின் திருமணத் தேதி எல்லாம் முடிவு செய்தார்கள். திருமணம் வரை தாமோதரன் மற்றும் காவேரி இருவரையும் பரணியின் கஷ்டடியிலே வைக்க முடிவு எடுத்தார்கள். கூடவே பரணி அவனுடைய ஆட்களிடம் அவர்களை தனி கவனிப்பு கவனிக்கச் சொன்னான்.

அதில் ஊமையாக பல அடி விழுந்தது தாமோதரனுக்கு. அதுவும் அவர்களை திருமணத்துக்கு சம்மதிக்க வைக்க தான். அடித்த அடியிலே தாங்கள் இனி திருமணத்தில் எந்த குழப்பமும் செய்ய மாட்டோம் என்று சொல்லி விட்டார்கள். ஆனால் அவர்களை அடித்ததை வினோத்துக்கு கூட தெரியாமல் பார்த்துக் கொண்டான் பரணி.

அடுத்து வந்த நாட்கள் பரபரப்பாக கடந்தது. ஏற்பாடுகள் நிறைய செய்ய வேண்டும் என்பதால் ஒரு மாதம் கழித்து தான் திருமண நாளைக் குறித்தார்கள்.

அடுத்த நாளே யமுனாவின் தாய் தந்தை இல்லாமலே முறைப்படி வந்து யமுனாவை நிச்சயம் செய்து விட்டுச் சென்றனர் பரணி குடும்பத்தினர். அக்கம் பக்கத்தினர் தாமோதரன் மற்றும் காவேரியைப் பற்றி கேட்க அவர்கள் ஆன்மீக சுற்றுலா சென்றதாக சொல்லப் பட்டது. நாட்கள் வேகமாக கடக்க ஒரு வழியாக திருமண நாளும் வந்தது.

பரணி மற்றும் யமுனாவின் திருமணம் அதே மதுரையில் இரண்டு குடும்பத்தின் சம்மதத்தோடு பிரம்மாண்டமாக நடந்து கொண்டிருந்தது. மாப்பிள்ளை அழைப்பு, நலங்கு என எல்லா சம்பர்தாயங்களும் நன்றாகவே நடந்தது.

சொந்தக்காரர்கள், கட்சிக்காரர்கள், ஆபீஸில் வேலை செய்பவர்கள் என அந்த மண்டபமே நிறைந்து வழிந்தது. யமுனா குடும்பத்தில் இருந்த அனைவரும் வந்திருந்தார்கள். காவேரி மற்றும் தாமோதரன் கடைசி வரை சம்மதிக்கவே இல்லை. ஆனால் பரணியின் ஆட்கள் கொடுத்த ஊமைக் காயங்களால் அமைதியாக திருமணத்தில் பொம்மை போல அமர்ந்திருந்தார்கள்.

திருமணத்தில் அவர்கள் ஏதாவது கலவரம் செய்து விடக் கூடாது என்று எண்ணி அவர்கள் அருகில் அடியாட்களை வெள்ளை வேஷ்டி சட்டையில் நிற்க வைத்தான் பரணி. அவர்களை கண்ட பிறகும் இருவரும் வாய் திறப்பார்களா என்ன? ஆனாலும் வினோத்திடம் பரணி ஆள் வைத்து தங்களை அடித்ததைச் சொல்ல வினோத்தோ “என் மாப்பிள்ளை அப்படி செய்யவே மாட்டார். நீங்க பொய் சொல்லாதீங்க”, என்று பல்ப் கொடுத்து விட்டுச் சென்றான்.

மணமேடையில் பட்டு வேஷ்டி சட்டையில் கம்பீரமாக அமர்ந்திருந்தான் பரணி. “பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ”, என்று ஐயர் குரல் கொடுத்ததும் யமுனா உடலில் சிறிது நடுக்கம் ஓடியது. முழு அலங்காரத்தில் ஜொலித்தாள் யமுனா. அவளை தாரணி, காயத்ரி மற்றும் நிஷா மூவரும் மணமேடைக்கு அழைத்துச் சென்றார்கள். யமுனா கை கால்கள் எல்லாம் நடுங்கியது அங்கிருந்த கூட்டத்தைக் கண்டு. மேடையேற கால்கள் சற்று பின்னியது.

ஆனாலும் அவள் உள்ளத்தில் சந்தோசமே நிறைந்து இருந்தது. தான் ஆசைப் பட்டவனையே கணவனாக அடையப் போகிறோம் என்ற நிம்மதி எழுந்தது.

Advertisement