Advertisement

அடுத்த நாள் காரில் கிளம்பிச் சென்றார்கள். அந்த காரை அவர்களுக்கு ஏற்பாடு செய்ததும் பரணி தான். பரணியின் கார் வினோத் மற்றும் முகுந்தனை ஏற்றிக் கொண்டு அந்த காரை அவர்களுக்கு தெரியாமல் பின் தொடர்ந்தது.

யமுனா அங்கே சென்ற போது அவளது அத்தை வீட்டில் திருமண ஏற்பாடுகள் தடாபுடாலாக நடந்து கொண்டிருந்தது. வீட்டுக்குள் சென்றதும் அவளது அத்தை அவளை வரவேற்றாள்.

“யமுனா அந்த ரூம்ல போய் இந்த புடவையை மாத்திக்கோ மா”, என்று காவேரி சொல்ல தாரணியும் யமுனாவுடன் செல்லப் போனாள்.

“தாரணி நீ எங்க போற? இங்க இரு மா”, என்று சொல்லி அவளை தன்னுடன் இருத்திக் கொண்டாள் காவேரிக்கு. தாரணிக்கு சந்தேகம் வலுத்தது. அதுவும் அனைவரும் யமுனாவையே மணப்பெண் என்பது போல பேசினார்கள். அதனால் “பிரச்சனை தான் நடக்கப் போகுது. எல்லாரும் யமுனா தான் பொண்ணுங்குற மாதிரி பாக்குறாங்க. அவளையும் சேலை மாத்த அனுப்பிருக்காங்க. சீக்கிரம் வாங்க”, என்று கணவனுக்கு தகவல் அனுப்பி வைத்தாள்.

அறைக்குள் சென்ற யமுனா அந்த புடவையைப் பார்க்க அது கிரண்டாக இருந்ததிலே புரிந்தது அது திருமணப் புடவை என்று. அவசரமாக வெளியே வந்தவள் “அம்மா என்ன இது? எதுக்கு இப்படி ஒரு புடவை?”, என்று கூர்மையுடன் கேட்டாள்.

“அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம் மருமகளே, இப்ப போய் மாத்திட்டு வா”, என்று சொன்ன அவளின் அத்தை இரண்டு பெண்களைக் கண்ணைக் காட்ட அவர்களும் யமுனாவை இரு பக்கமும் பிடித்து அழைத்துச் செல்ல முயன்றனர்.

யமுனா திமிறிய படி “அம்மா என்ன நடக்குது இங்க?”, என்று கத்தினாள்.

“ஆமா இப்ப உனக்கு தான் கல்யாணம். பேசாம போய் தயாராகு யமுனா. இல்லைன்னா நாங்க என்ன பண்ணுவோம்னு தெரியாது”, என்று காவேரி மிரட்ட யமுனா அதிர்ச்சியாக தாயை பார்த்தாள். அவள் கையை இறுக்கமாக பற்றிக் கொண்டு “உள்ள வா”, என்று அடிக்குரலில் சீறி இழுத்துக் கொண்டு சென்றாள் அவளது அத்தை. அவளது கையை உதறித் தள்ளி விட்டு நிமிர்ந்து நின்றாள் யமுனா. தாராணியோ வாசலைப் பார்த்தாள்.

யமுனாவுக்கு உள்ளுக்குள் சுறுசுறுவென்று கோபம் கொந்தளித்தது. நிச்சயம் இது நடக்கப் போவதில்லை தான். கண்டிப்பாக நடக்க விட மாட்டாள். ஆனால் எப்படி எப்படி என்று அவள் சிந்தனை ஓடியது.

“போய் டிரெஸ் மாத்து யமுனா. சொந்தக்காரங்க முன்னாடி எங்களை கேவலப் படுத்தாதே”, என்றார் தாமோதரன்.

“நீங்க கேவலப் பட்டா அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? என்னால பரணியைத் தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ண முடியாது. நான் போறேன். அண்ணி வாங்க போகலாம். அருண் வா”, என்று சொல்ல “எங்களை மீறி நீ எங்கயும் போக முடியாது யமுனா. என் மகன் தான் உன் கழுத்துல தாலி கட்டுவான். டேய் கோகுல், வந்து தாலி கட்டு டா”, என்றாள் யமுனாவின் அத்தை.

இங்கிருந்து எப்படி தப்பிக்க என்ற யோசனையில் யமுனா இருக்க அவள் கவலை தேவையே இல்லை என்பது போல பரணியும் வினோத்தும் அங்கே வந்தார்கள். அனைவரும் அங்கே திரும்பிப் பார்த்தார்கள். பரணியைக் கண்டதும் யமுனாவின் கண்கள் மின்ன அவசரமாக அவன் அருகே வந்தவள் அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள். அவளை அணைத்துக் கொண்ட பரணி அவளது பெற்றோரை முறைத்தான். அவள் உடல் பயத்தில் நடுங்கியது. அனைவரும் அவர்களைத் தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.

“மாப்பிள்ளை யமுனாவை இங்க இருந்து கூட்டிட்டு போங்க. இங்க நான் பாத்துக்குறேன்”, என்று சொன்ன வினோத் பெற்றவர்களை முறைக்க பரணி அவளை அழைத்துச் சென்றான்.

காவேரியும் தாமோதரனும் அவர்களை தடுக்க முயல முகுந்தனும் வினோத்தும் அரணாக இருந்தார்கள். பரணி அவளை காரில் அமர வைத்து காரை எடுத்தான். சிறிது தூரம் சென்றதும் அருகில் அமர்ந்திருந்தவளை திரும்பிப் பார்த்தான். அவளோ கண்களை மூடி அமர்ந்திருந்தாள்.

அவள் உடலும் கை கால்களும் நடுங்கியது. அவளுடைய பாதிப்பு பெரியது என்று தெரிந்தது. அவளுக்கு ஆறுதல் சொன்னால் கூட இந்த நிமிடம் அவள் கலங்குவாள் என்று எண்ணி அமைதியாக இருந்தான். ஆனால் அவன் கண்கள் சொந்தத்துடன் அவளை வருடியது. அவளை அனைத்து ஆறுதல் சொல்ல வேண்டும் போல அவ்வளவு ஆசையாக இருந்தது. ஆனால் அவள் மனநிலை உணர்ந்து அமைதி காத்தான்.

இப்போது இந்த நிமிடம் அவளை அவனது வீட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற வேகம் எழுந்தது. ஆனால் அது சரி வராதே என்று எண்ணிக் கொண்டான். கூடவே அவள் என்ன முடிவு எடுப்பாள் என்று குழப்பம் வந்தது.

நடுங்கிக் கொண்டிருந்த அவள் விரல்களைப் மெல்ல பற்றினான். அவன் தொடுகையில் மேலும் நடுங்க அவன் கையை விலக்கிக் கொண்டான்.

“பேபி”, என்று மென்மையாக அழைத்தான்.

“ம்ம்”, என்ற படி முணுமுணுத்தாள் அவள்.

“எதுக்கு இவ்வளவு பயம்?”

“நடந்தது அப்படி பட்ட விசயமாச்சே? என்னால அதுல இருந்து இன்னும் வெளிய வர முடியலை. ஏன் இப்படி பண்ணினாங்க? நான் பொறுமையா அவங்க பேச்சுக்கு கட்டுப்பட்டு தானே இருந்தேன்? நீங்க வந்ததுனால சரியாப் போச்சு. இல்லைன்னா என்ன ஆகிருக்கும்?”

“அதான் வந்துட்டேன்ல பேபி. விடு. எல்லாம் நல்லதுக்குன்னு நினைச்சிக்கோ”

“என்னது நல்லதுக்கா? நான் எப்படி பயந்துட்டேன் தெரியுமா? நீங்க மட்டும் வரலைன்னா….”

“நான் வரலைன்னாலும் நீ சமாளிச்சிருப்ப…. ஆனா உங்க அம்மா அப்பா அப்படி எல்லாம் பண்ணினதுனால தானே இப்ப நீ அவங்களை விட்டுட்டு என் பக்கத்துல இருக்க? இனி நம்ம கல்யாணம் தாராளமா நடக்கும் தானே? ஏற்பாடு பண்ணவா?”, என்று ஆர்வமுடன் கேட்டான்.

கல்யாணம் என்றதும் அவள் உடல் நடுங்கியது. அதைக் கண்டவன் ஒரு மரத்தடியில் காரை நிறுத்தி விட்டான். அவள் குழப்பமாக அவனைப் பார்க்க “உன் மனசுல என்ன இருக்குன்னு தெளிவா சொல்லு பேபி. பிளீஸ், இனியும் எதையும் மறைக்க வேண்டாம். உனக்கு என்னைப் பிடிக்கும்னு எனக்கு தெரியும். உங்க அம்மா ஏதோ சொல்லி தான் நீ என்னை வேண்டாம்னு சொன்ன. ஆனா இப்பவும் கல்யாணம்னு சொன்னதும் நீ பயப்படுற? என்னன்னு விவரம் சொல்லு யமுனா. உங்க அம்மா என்ன சொன்னாங்க? எதனால என்னை வேண்டாம்னு சொன்ன?”, என்று கேட்டான்.

“அது…”

“செத்துருவோம்னு மிரட்டினாங்களா? இல்லை உன்னைக் கொன்னுருவேன்னு மிரட்டினாங்களா?”

“இல்லை, அது…. உங்களை… உங்க குடும்பத்துக்கு….”

“எங்க குடும்பத்துக்கா? என்ன சொல்ல வர நீ?””

“நான் உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா…. உங்களுக்காக வீட்டை விட்டுப் போனா…. எங்க அம்மாவும் அப்பாவும் போலீஷ்ல உங்க மேலயும் உங்க அப்பா மேலயும் கேஸ் கொடுப்பாங்களாம். அது மட்டும் இல்லாம பிரஸ்ல நீங்க என்னைக் கடத்திட்டீங்கன்னு சொல்லுவாங்களாம். உங்களுக்கும் சேர்மன் சாருக்கும் எந்த கெட்ட பேரும் வரக் கூடாதுன்னு தான் நான் அவங்க பேச்சைக் கேட்டேன்”, என்று அவள் சொல்ல திகைத்துப் போனான்.

“ஏய் என்ன டி சொல்ற? சின்னப் பிள்ளை தனமா இருக்கு? படிச்சவ தானே நீ? அவங்க தான் காமெடி பண்ணிருக்காங்கன்னா நீயும் அதை நம்பிட்டு இத்தனை வருஷம் என்னைக் கஷ்டப் படுத்தி நீயும் கஷ்டப் பட்டிருக்க”

“இது சின்னப் பிள்ளைத் தனம் இல்லைங்க. அவங்க அப்படி தான் சொன்னாங்க. இப்பவும் எனக்கு அவங்க அப்படி செஞ்சிருவாங்களோன்னு பயமா இருக்கு. நான் வேற அவசரப் பட்டு உங்க கூட வந்துட்டேனே?”

“நான் உன்னைக் கடத்திட்டேன்ன்னு அவங்க போலீஸ்ல சொன்னா அது உண்மையா ஆகிருமா? ஒரு வேளை போலீஸ் நம்பினாலும் நீ வந்து இல்லைன்னு சொல்ல மாட்டியா?”

“நான் சொல்லுவேன் தான். ஆனா அந்த விளக்கம் வெளிய வரதுக்குள்ள உங்களைப் பத்தி தப்பான செய்தி ஊர் முழுக்க முழுசா பரவிருங்க. ஜூவல்லரி ஷாப்ல நடந்தது மறந்துருச்சா? எங்க அம்மா அப்பா ஏதாவது பண்ணி நான் தெளிவா விளக்கம் கொடுத்தாலும் மக்கள் நம்புவாங்கன்னு நினைக்கிறீங்களா? ஒண்ணு பணத்தைக் கொடுத்து எங்க குடும்பத்து வாயை அடைச்சிட்டீங்கன்னு பேசுவாங்க, இல்லைன்னா நான் உங்க பணத்தைப் பாத்து மயங்கிட்டேன்னு பேசுவாங்க. இதெல்லாம் தேவையா? அது மட்டும் இல்லை. அரசியல்ல உங்க அப்பா ரொம்ப நல்ல பேர் வாங்கி வச்சிருக்கார். நம்ம காதல் அந்த பேரைக் கெடுக்கும். அதை வச்சு தான் எங்க அம்மா அப்பா என்னை பிளாக்மெயில் பண்ணினாங்க. என்னால ஒரு நிமிசத்துல எங்க வீட்ல இருந்து உங்க கூட வந்துருக்க முடியும். ஆனா நான் உங்க வீட்டுக்கு மருமகளா வரது உங்க வீட்டுக்கு பெருமையா தான் இருக்கணுமே தவிர சிறுமையா இருக்க கூடாது”, என்று சொல்ல அவள் சொல்வதும் சரியாகத் தான் பட்டது.

பெற்ற மகளையே இந்த அளவுக்கு ஆட்டிப் படைக்கும் அவர்கள் மனதில் எவ்வளவு வஞ்சம் இருக்க வேண்டும்? இப்போதும் ஏதாவது அவர்கள் செய்ய வாய்ப்பு இருக்கிறது என்று கண்டு கொண்டவன் முகுந்தனைத் தான் அழைத்தான்.

“சொல்லு பரணி”

“எங்க இருக்க டா?”

“வினோத் கூட தான் இருக்கேன். வினோத் அவங்க அம்மா அப்பாவை சத்தம் போட்டுட்டு இருக்கார். ஆனா அவங்க போலீஸ் கம்ப்லைண்ட் கொடுக்க போறாங்களாம். அதுவும் அந்த அம்மா கலெக்டர் ஆஃபிஸ்க்கு கெரசின் ஆயிலைத் தூக்கிட்டு போகப் போறேன்னு பேசிட்டு இருக்கு. வினோத் எவ்வளவோ முயற்சி செஞ்சிட்டார். ஆனா அவங்க மசிய மாட்டிக்காங்க. இவங்க பேசுறதைப் பாத்தா எதுக்கும் தயாரா இருக்குற மாதிரி இருக்கு. இதை இப்பவே முடிக்கலைன்னா நிலைமை வேற மாதிரி ஆகும் பரணி. பிரச்சனையை ஈஸியா முடிக்கப் பாக்கணும். சிக்கலாக்கிக்க கூடாதுன்னு எனக்கு தோணுது. ஏன் சொல்றேன்னா மந்திரிமகன் எங்க மகளைக் கடத்திட்டான்னு பேசுராங்க. திருப்பி திருப்பி மந்திரி மகன் மந்திரி மகன்னு சொல்றாங்க. அதுவும் எல்லாருக்கும் கேக்கணும்னு கத்துறாங்க. அவங்க அழுறதை வீடியோ எஉட்க்க சொல்றாங்க. இது பிரஸ் காதுல விழுந்தா அப்பா பேருக்கு கெட்ட பேர் வரும் டா. யமுனா வந்து சாட்சி சொன்னாலும் அதுக்குள்ள இவங்க பேரை நாறடிக்கணும்னு இருக்காங்க. என்ன பண்ண?”, என்று முகுந்தன் கேட்க யமுனா சொன்னது எவ்வளவு உண்மை என்று புரிந்தது.

“அப்படின்னா வினோத் கிட்ட நான் சொல்றதைச் சொல்லு”, என்று ஆரம்பித்தவன் சில விசயங்களைச் சொல்ல “என்னது?”, என்று முகுந்தன் அரண்டு போனான் என்றால் யமுனாவோ வாய் விட்டே சிரித்தாள் தன்னவனின் யோசனையில்.

காரிகை வருவாள்….

Advertisement