Advertisement

தோப்பைத் தாண்டி வீட்டின் முன் காரை நிறுத்தியவன் “எனக்கு உன் கிட்ட பேசணும். அதான் இங்க கூட்டிட்டு வந்தேன் வா”, என்று சொல்ல தடுமாற்றத்துடன் உள்ளே சென்றாள்.

உள்ளே சென்றதும் அங்கு கிடந்த கயிற்றுக் கட்டிலில் அவளை அமரச் சொன்னவன் சற்று தள்ளி அவனும் அமர்ந்து கொண்டான்.

அவள் கைகளைப் பிசைந்து தலை குனிந்து அமர்ந்திருக்க “இப்ப உனக்கு என்ன பிரச்சனை பேபி?”, என்று கேட்டான் பரணி.

“ஒண்ணும் பிரச்சனை இல்லையே?”

“இல்லை இருக்கு, கொஞ்ச நாளாவே நீ சரியே இல்லை. மச்சானும் அதை தான் சொன்னாங்க. என்ன பிரச்சனை யமுனா சொல்லு?”

“நிஜமா ஒண்ணும் இல்லை”

“என் கிட்ட எதையுமே சொல்ல மாட்ட அப்படி தானே? ஏன் பேபி இப்படி பண்ணுற? உனக்கு என்னைப் பாத்தா பாவமா இல்லையா? தயவு செஞ்சு எனக்காக கொஞ்சம் இறங்கி வா டி. என் கிட்ட சொன்னா நான் பிரச்சனையை சரி செய்வேன். கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லு டி, என்ன வந்தாலும் நான் பாத்துக்குறேன். நமக்கு வயசு போய்க்கிட்டே இருக்கு. இவ்வளவு நாள் எப்படியோ ஓட்டிட்டேன். ஆனா இன்னைக்கு முகுந்தனையும் சாருவையும் பொண்ணு மாப்பிள்ளையா பாத்ததும் எனக்கும் கல்யாணம் பண்ணணும்னு ஆசையா இருக்கு டி. நான் உங்க வீட்ல வந்து பேசவா?”

“வேண்டாம், எங்க வீட்ல அவமானப் படுத்துவாங்க”

“அப்ப, நீயாவது ஏதாவது செய் டி. உனக்கு என் மேல ஆசையே இல்லையா யமுனா? நாமளும் கல்யாணம் பண்ணி குழந்தைகள் பெத்துக்கணும்னு உனக்கு தோணவே இல்லையா? ஒவ்வொரு நாள் நைட்டும் ரொம்ப கஷ்டப் பட்டு முடியுற வேதனை உனக்கு இல்லையா? இந்த தனிமை வாழ்க்கைல நீ சந்தோஷமா இருக்கியா?”, என்று அவன் கேட்க அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவள் கண்கள் கலங்கி கண்ணீரைப் பொழிந்தது. அதே நேரம் அதில் காதலும் தவிப்பும் இருந்தது.

அவள் கலக்கத்தைப் பார்த்தாலும் “எனக்கு பதில் வேணும் யமுனா. இது வரைக்கும் நீ உன்னோட காதலை ஒத்துக்கலை தான். ஆனா நீ எப்ப என்னோட நெஞ்சுல சாஞ்சியோ அப்பவே எனக்கு உன் மனசு புரிஞ்சிட்டு. நான் வெக்கத்தை விட்டு சொல்றேன் டி. என்னோட ஒவ்வொரு நிமிஷம் உன்னை நினைச்சு தான் ஓடிட்டு இருக்கு. உனக்காக எத்தனை வருஷம் ஆனாலும் காத்துட்டு இருப்பேன் தான். ஆனா இந்த காத்திருப்பு ரொம்ப வலிக்குது டி. நீ இல்லாம ரொம்ப வேதனையா இருக்கு. இதே வேதனையை தான் எனக்கு காலம் முழுக்க கொடுக்கப் போறியா? என்னைப் பாத்தா உனக்கு ஒரு சதவீதம் கூட பாவமா இல்லையா?”, என்று கேட்டான்.

அவள் ஆம் என்பதை தவிர வேறு என்ன சொல்ல முடியும்? நிச்சயம் அவளால் அவன் தான் முக்கியம் என்று முடிவெடுக்க முடியாது. அவள் மனம் இரும்பு குண்டை வைத்தது போல வலித்தது. அவனது கேள்வியில் அவளது உடல் முழுக்க நடுங்கியது.

அவள் உதடுகள் அழுகையில் துடிக்க “பிளீஸ் அழாத பேபி, எனக்கு கஷ்டமா இருக்கு”, என்று பரணி சொல்ல அடுத்த நொடி அவன் மார்பில் சாய்ந்து விட்டாள். அவன் கரங்களும் அவளை அணைத்துக் கொண்டது. அவள் பதில் சொல்லாமல் தப்பிக்கிறாள் என்று புரிந்தும் பரணிக்கு என்ன செய்ய என்று தெரிய வில்லை. “இது என்ன எங்களுக்கு நீ கொடுத்த சாபமா?”, என்று கடவுளிடம் கேட்டான் பரணி. அவளோ அவன் நெஞ்சில் சாய்ந்து குலுங்கி குலுங்கி அழுதாள்.

“சரி விடு, நான் எதுவும் கேக்கலை. உன்னோட வேதனை புரிஞ்சும் உன்னைக் கேட்டது என் தப்பு தான். வா வீட்டுக்கு போகலாம்”, என்று பரணி தான் இறங்கி வந்தான். ஆனாலும் அவள் அவன் மார்பில் இருந்து விலக வில்லை.

“வா பேபி போகலாம்”, என்று அவன் மீண்டும் சொல்ல அவள் இன்னும் நெருக்கமாக அவனை அணைத்துக் கொண்டாள்.  வெகு நாட்கள் கழித்து கிடைத்த இந்த அருகாமையை அவள் இழக்க விரும்ப வில்லை. அவள் நெருக்கம் அவனையும் சிலிர்க்க வைத்தது.

அவன் உடல் மெல்ல சூடேற அவன் உதடுகள் அவளுடைய வெற்றுத் தோளில் பதிந்தது. அவள் கரம் உயர்ந்து அவன் கழுத்தைக் கட்டிக் கொள்ள அவனும் அவளை இறுக அணைத்து இத்தனை நாள் தாபத்தை ஈடு கட்டினான். கொடி போல அவன் மீது படந்திருந்தவளை இன்னும் இறுக்கி அணைத்த படி கட்டிலில் சரித்தவன் அவள் மேல் சரிந்தான்.

அவன் உதடுகள் அவள் முகம் முழுக்க ஊர்வலம் போய் அவள் இதழ்களில் அழுந்த பதிந்தது. அவன் முத்தத்தில் அவள் உடல் குழைந்தது. வெகு அருகில் தெரிந்த அவன் முகம் அவளை மயக்கியது. அனைத்தையும் மறந்து அவனிடம் அடைக்கலமாகி விட அவள் உடலும் மனமும் துடித்தது.

உதடுகளில் இருந்து விலகியவன் அவள் கழுத்து வளைவில் முகம் புதைக்க அவள் கரம் அவனை இறுக்கி அணைத்தது என்றால் அவள் தோளைத் தடவி இறங்கிய அவன் கரங்கள் அவளுக்குள் மின்சாரத்தைப் பாய்ச்சியது.

அவன் செய்கையிலும் அவள் காதோரத்தில் கசிந்த அவனது ரகசிய பேச்சிலும் மயங்கிப் போனாள் யமுனா. அவனது தழுவலின் வேகமும் உதடுகளின் ஜாலமும் முரட்டுத் தனமாக இருந்தாலும் அதை ரசிக்கவே செய்தாள்.

“ஐ லவ் யு பேபி”, என்று காதோரமாக கிசுகிசுத்தவனின் உதடுகள் அவள் காதில் பதிந்து அவளை வேறு உலகத்துக்கு அழைத்துச் சென்றது.

அவன் கைகளுக்குள் குழைந்தவளின் காதில் குயில் கூவும் சத்தம் கேட்க நடப்புக்கு வந்தவள் “நேரம் ஆச்சு வீட்டுக்கு போகணும்”, என்று முணுமுணுத்தாள்.

“போகணுமா? என் கூடவே உன்னை வச்சிக்கணும் போல இருக்கு டி. இப்படி உன்னோட அருகாமைக்காக இன்னும் எத்தனை வருஷம் காத்திருக்கணுமோ?”, என்று கேட்டவனின் குரலில் ஏக்கம் அப்பட்டமாக வெளிப்பட்டது.

அதைக் கேட்டு அவள் கண்கள் கலங்க “சரி சரி வா போகலாம்”, என்று எழுந்து கொண்டவன் இறுதியாக அவள் இதழ்களில் முத்தமிட்டு விட்டே விலகினான்.

சிறிது நேரத்தில் அவளை அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டான். ஆனால் வரும் வழியில் அவன் பார்வை முழுவதும் அவள் மேலே இருந்தது. அவன் பார்வை மேய்ச்சல் நிலத்தைப் போல அவள் மீது மேய்ந்ததில் அவள் கன்னம் மட்டும் அல்ல அவள் மேனி முழுவதுமே சிலிர்த்தது. அந்த பார்வையை எதிர்க் கொள்ள முடியாமல் உதட்டைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

பரணியின் கார் யமுனாவின் வீட்டு வாசலில் நின்றது. அவனைத் திரும்பிப் பார்த்தாள். அவனை பிரியும் வேதனை அவள் கண்களில் இருந்தது. அவள் காரில் இருந்து இறங்கப் போக “பேபி”, என்ற அவன் அழைப்பு அவளைத் தடுத்து நிறுத்தியது. திரும்பிப் பார்த்தாள்.

இரு கை நீட்டி அவளை அழைக்க அடுத்த நொடி அவன் கரங்களுக்குள் புகுந்து கொண்டாள். அவன் உதடுகள் சற்று வேகத்துடன் அவள் மேல் பதிந்தது. சிறிது நேரம் கழித்து காரில் இருந்து இறங்கிய யமுனா வெட்கத்துடன் அவனைப் பார்த்தாள். சிறு சிரிப்புடன் அவளிடம் விடை பெற்றான் பரணி.

பரணியின் காரையும், முகச் சிவப்புடன் உள்ளே வந்த மகளையும் கண்ட காவேரி மகளைப் முறைத்துப் பார்க்க காவேரியைக் கண்டு கொள்ளாமல் கனவில் நடந்து செல்பவளைப் போல அவளது அறைக்குச் சென்றாள் யமுனா.

உடனேயே அதைக் கணவனிடம் சொன்ன காவேரி உடனடியாக எதையாவது செய்யச் சொன்னாள். உடனே தன்னுடைய போனை எடுத்த தாமோதரன் அவருடைய தங்கையை அழைத்தார். முன்பே அவரது தங்கை மகனுக்கு காயத்ரியை கேட்டார்கள். ஆனால் அவன் நல்ல வேலையில் இல்லை என்று மறுத்து விட்டார்கள்.

இப்போது மீண்டும் அவளை அழைத்து சொந்தம் விட்டுப் போக கூடாது என்றும் யமுனா மீது அரசியல்வாதியின் மகனுடைய கண் விழுகிறது என்றும் சொல்லி ஊரில் வைத்து ரகசிய திருமணத்துக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார்.

அவளும் சரி என்று சொல்ல தாமோதரன் மனைவியிடம் தன்னுடைய திட்டத்தைச் சொன்னார். அவர் சொல்லிய படி அன்று இரவு உணவு உண்ணும் போது “யமுனா நாளைக்கு லீவ் போடு. நாம ஊருக்கு போகணும். உன் அத்தை பையனுக்கு கல்யாணம் வச்சிருக்காங்க”, என்றாள் காவேரி.

அதைக் கேட்டு வினோத் புருவம் உயர சந்தேகம் வரக் கூடாது என்று எண்ணி “வினோத் நீயும் தான் டா. எல்லாரும் போயிட்டு வந்துருவோம்”, என்றாள்.

“எனக்கு லீவ் எடுக்க முடியாது மா. நீங்க எல்லாரும் போயிட்டு வாங்க”, என்றான் வினோத்.

யமுனாவும் மறுக்க “உனக்கு தான் ஆடிட் முடிஞ்சிட்டுல்ல? போயிட்டு வா யமுனா. தாரணியும் அருணும் வருவாங்க. அருண் வேற வீட்டுக்குள்ளே இருக்கான்”, என்று வினோத் சொல்ல யமுனா சரி என்று சொன்னாள்.

அதற்கு மேல் தாரணியை கழட்டி விட முடியாமல் யமுனா வருவதே போதும் என்று எண்ணிக் கொண்டார்கள் காவேரியும் தாமோதரனும்.

அடுத்த நாள் எப்போதும் போல விடிந்தது. “யமுனா பட்டு சேலை எல்லாம் வேண்டாம், சாதாரண சேலை உடுத்திக்கோ. அங்க போய் மாத்திக்கலாம்”, என்று காவேரி சொல்வது வினோத் காதில் விழுந்தது. அவனுக்குள் குழப்பமும் எழுந்தது.

“என்ன அம்மா இப்படிச் சொல்றாங்க? கார்ல போகப் போறாங்க, கல்யாணத்தை அட்டண்ட் பண்ணிட்டு அதே கார்ல திரும்பி வரப் போறாங்க. இதுக்கு எதுக்கு அங்க போய் டிரஸ் மாத்தணும்?”, என்று எண்ணியவன் தாரணியிடம் “ஊரில் இருந்து பத்திரிக்கை வந்ததா?”, என்று கேட்டான்.

“இல்லைங்களே, யாருமே வரலையே?”

“எனக்கு சந்தேகமா இருக்கு தாரணி. கொஞ்சம் கவனமா இருக்கணும். ஏதோ தப்பா நடக்கப் போகுதுன்னு என் மனசுக்கு படுது”

“அப்படின்னா யமுனாவை ஏதாவது முக்கியமான வேலை இருக்குன்னு சொல்லி ஆபீஸ் கூட்டிட்டு போய்ருங்களேன்”

“வேண்டாம் தாரணி, இவங்க ஏதாவது குழப்பம் செஞ்சா அதுக்கு ஒரு தீர்வு கிடைக்கும்ல? நீ என்ன பண்ணுற அம்மா அப்பா கூட கிளம்பி போ. நான் பரணி மாப்பிள்ளையைக் கூட்டிட்டு பின்னாடியே வரேன். அங்க என்ன நடக்குதுன்னு அப்ப அப்ப எனக்கு மெஸ்ஸேஜ் பண்ணு. ஒண்ணும் நடக்கலைன்னா நாங்க அப்படியே திரும்பி வந்துறோம். ஏதாவது நடந்தா அடுத்த அஞ்சு நிமிசத்துல அங்க இருப்போம்”, என்று சொல்ல அவளும் கவனமாக சரி என்று கேட்டுக் கொண்டாள்.

Advertisement