Advertisement

அத்தியாயம் 16

கதறித் துடிக்கும் எந்தன்

இதயம் உந்தன் ஒற்றை

வார்த்தையில் அமைதி கொள்கிறது!!!

வினோத் அந்த வீடியோவை அனுப்பியதும் உடனே அதை அனைத்து சோசியல் மீடியாவிலும் போட்ட யமுனா “உண்மையில் என்ன நடந்தது என்று தெரியாமல் பேசக் கூடாது”, என்று அந்த வீடியோவுக்கு கீழே கமெண்ட் கொடுத்தாள்.

பரணியைப் பற்றி எங்கெங்கு பேசப் படுகிறதோ அங்கே எல்லாம் அந்த வீடியோவை பதிவிட்டாள். கொஞ்சம் கொஞ்சமாக அந்த வீடியோவுக்கு லைக் குவிந்து கொண்டிருந்தது.

ஈஸ்வரைத் திட்டி தகவல் பரப்ப பட அதைப் பார்த்து கொஞ்சம் நிம்மதியானவள் முகுந்தனை அழைத்து விவரம் சொல்லி பரணி சார்பில் அந்த ஈஸ்வர் மீது மான நஷ்ட வழக்கு போடச் சொன்னாள்.

அவனும் கோர்ட்டில் தான் இருப்பதால் உடனே அந்த வீடியோவைக் காட்டி கோர்ட்டில் கேஸ் பதிவு செய்தான். மினிஷ்டர் வீட்டு விவகாரம் என்பதால் அடுத்த ஒரு மணி நேரத்தில் டி‌வி ஸ்டேஷனில் வைத்தே அந்த ஈஸ்வர் கைது செய்யப் பட்டான்.

ஈஸ்வர் கைது செய்யப் பட்ட விஷயம் தெரிந்த பிறகு தான் அவள் பரணியை அழைத்தாள். வெகு நாட்கள் கழித்து அவனை அழைப்பதால் ஆவலுடன் அதை எடுத்தவன் “சொல்லு பேபி”, என்றான்.

“எங்க இருக்கீங்க?”

“வேலையா இருக்கேன். ஆஃபிஸ்ல என்னைத் தேடினியா?”

“இல்லை, நான் வீட்ல இருக்கேன்”

“வீட்லயா? எதுவும் பிரச்சனையா? நான் உடனே கிளம்பி வரவா?”

“பிரச்சனை தான், ஆனா எனக்கு இல்லை. உங்களுக்கு தான்”

“எனக்கா?”, என்று அவன் கேட்க விஷயம் அவனுக்கு தெரிய வேண்டும் என்பதால் நடந்ததை அவள் தெளிவாக எடுத்துரைத்தாள். அவனுக்கே அதை எல்லாம் கேட்டு திகைப்பு தான். கூடவே அவள் தனக்காக செய்த விசயங்களைக் கேட்டு சந்தோஷப் பட்டான்.

“இனி நான் பாத்துக்குறேன்”, என்று சொன்ன பரணி முகுந்தனுடன் ஈஸ்வர் கைது செய்யப் பட்ட போலீஸ் ஸ்டேசனுக்கு சென்றான். அங்கே கூனி குறுகி அமர்ந்திருந்தான் ஈஸ்வர்.

அவனை முறைத்து விட்டு கேசை தொடர்ந்து நடத்தச் சொன்னான். அடுத்த இரண்டு நாளில் கோர்ட்டில் கேஸ் விசாரணைக்கு வந்தது.

பரணிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தியதற்காக, ஷோரூமில் கேவலமாக நடந்தற்காக ஈஸ்வருக்கு பத்து லட்சம் அபராதம் விதிக்கப் பட்டது.

அந்த பத்து லட்சத்தை அப்படியே ரத்தினம் மற்றும் கிருஷ்ணனுக்கு கொடுத்தான் பரணி. அடுத்து வந்த நாட்களில் பரணிக்கும் சரவணப் பெருமாளுக்கும் நல்ல பெயர் கிடைத்தது. சரியான நேரத்தில் யமுனா செயல் பட்டதால் தான் பிரச்சனை சுமுகமாக முடிந்தது என்று சரவணப் பெருமாளே அவளை அழைத்து நன்றி சொன்னார்.

ஆனால் யமுனா மனதுக்குள் “இந்த சின்ன விசயத்துக்கே அவனுக்கு இவ்வளவு கெட்ட பெயர் என்றால் எங்கள் காதல் விஷயத்தில் எப்படி எல்லாம் இந்த மக்கள் பேசுவார்கள்?”, என்று எண்ணி பயந்தாள்.

யமுனா முகம் முன்னை விட சோர்ந்து இருக்க அவள் எதை நினைத்தோ கவலைப் படுகிறாள் என்று உணர்ந்த வினோத் தங்கையிடம் மீண்டும் அவளை திருமணத்துக்கு வற்புறுத்த அவள் உறுதியாக மறுத்தாள். அதை வினோத் முகுந்தனிடம் புலம்பிக் கொண்டிருந்தான். “இவங்க ரெண்டு பேர் வாழ்க்கையும் இப்படியே தான் இருக்குமா? அண்ணன்னு ஒருத்தன் நான் இருந்தும் என்னால எதுவும் செய்ய முடியலையே?”, என்று அவன் கண் கலங்க முகுந்தன் உடனே பரணியைத் தேடிச் சென்றான்.

“பரணி நீ இன்னும் அமைதியா இருக்குறது நல்லாவா இருக்கு? ஏதாவது செய் டா. வருஷம் போய்க்கிட்டு இருக்கு. அவங்க வீட்ல யமுனாவுக்கு மிரட்டி கல்யாணம் பண்ணி வச்சா என்ன பண்ணுவ? அவ முகமே வேற சரி இல்லை. வினோத் வேற புலம்புறாங்க. ஏதாவது செய் டா”

“என்னை என்ன பண்ணச் சொல்ற? எனக்கு மட்டும் அவ கூட வாழ ஆசை இல்லையா? அவ சம்மதிக்கலைன்னா நான் என்ன பண்ண?”

“யமுனாவை தூக்கிறலாம் டா”

“அவ இஷ்டம் இல்லாம அவளைக் கடத்தி அவளைக் காயப் படுத்தச் சொல்றியா? என்னால என்னோட காதலுக்காக அவ வீட்டோட போராடிட்டு இருக்கா டா. சொந்த வீட்லே அன்னியமா வாழ்ந்துட்டு இருக்கா. அவ சம்மதத்துக்காக இன்னும் எத்தனை நாள் ஆனாலும் காத்துட்டு இருப்பேன். ஆனா அவளுக்கு இஷ்டம் இல்லாத ஒண்ணைச் செய்ய மாட்டேன்”

“உன்னைத் திருத்தவே முடியாது”

“என்னை விடு, நீ உன் மனசை சாரு கிட்ட சொல்லிட்டியா?”

“டேய் உனக்கு எப்படி டா தெரியும்?”

“உன் முழியே சொல்லுதே? அவ கிட்ட பேசிட்டியா?”

“இல்லை டா, பயமா இருக்கு. என்ன பண்ணனு தெரியலை. அவ முடியாதுன்னு சொல்லிட்டா என்ன பண்ணுறது?”

“அவ கிட்ட சொல்ல வேண்டாம் முகுந்தா. நான் சொல்றதை மட்டும் செய். உன் அம்மா அப்பாவைக் கூட்டிட்டு நேரா அவ வீட்டுக்கே போயிரு. பொண்ணு கேளு, அது மட்டும் இல்லாம கல்யாணத்துக்கு பிறகும் சாருவோட சம்பளத்தை அவ வீட்டுக்கு தான் தருவான்னு சொல்லு. இதுவும் என் குடும்பம்னு அவங்க கிட்ட சொல்லு. எல்லாம் நல்ல படியா முடிஞ்சிரும். அதை விட்டுட்டு காதல்ன்னு அவ கிட்ட போய் நின்னா கண்டிப்பா ஒத்துக்க மாட்டா”

“அப்படிங்குற?”

“ஆமா டா, சாரு வீட்ல அவளுக்கு கல்யாணம் பண்ண ஆசை தான். ஆனா அவங்க வீட்டு நிலைமை கொஞ்சம் சரி இல்லை. சாரு குடும்பமே அவ சம்பளத்தை நம்பி தான் இருக்கு. அதனால இன்னொருத்தன் முந்துறதுக்குள்ள நீ விஷயத்தை முடிச்சிரு. துணைக்கு நான் வேணும்னா வரேன்”, என்று சொல்ல முகுந்தன் முகம் மலர்ந்தது.

அவர்கள் முடிவு செய்தது போல முகுந்தன் தாய் தந்தையுடன் சாரு வீட்டுக்குச் சென்று பேசினான். குடும்ப சூழ்நிலையைக் கண்டு அவர்கள் தயங்க முகுந்தன் பேசியே அவர்களை சரி செய்தான். இதையெல்லாம் வியப்பாக பார்த்துக் கொண்டிருந்தாள் சாரு.

இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் என்றும் அதற்கு முந்தைய நாள் நிச்சயதார்த்தம் என்றும் பேசி முடிக்கப் பட்டது. அவனிடம் தனியே பேச தவித்தாள். ஆனால் அவனோ அப்போது பேசினால் அவள் ஏதாவது குழப்பி விடுவாள் என்று எண்ணி தனிமையைத் தவிர்த்தான்.

அடுத்த நாள் அலுவலகத்தில் முகுந்தனைக் கண்ட சாரு “ஏன் என் கிட்ட உங்க மனசுல இப்படி ஒரு எண்ணம் இருக்குனு சொல்லலை முகுந்தன்? என் கிட்ட பேசாம ஏன் வீட்டுக்கு வந்து பேசுனீங்க?”, என்று கேட்டாள். அவள் குரலில் கோபம் எல்லாம் இல்லை. சிறு ஆர்வம் மட்டுமே.

“நீ இங்க வேலைக்கு வந்த நாளில் இருந்தே எனக்கு உன்னைப் பிடிக்கும் சாரு. நான் நேரடியா வந்து உன்னைக் காதலிக்கிறேன்னு சொல்லிருந்தா நீ சரின்னு சொல்லிருப்பியா?”, என்று முகுந்தன் கேட்க இல்லை என்னும் விதமாய் தலையசைத்தாள்.

“சரி கல்யாணம் பண்ணிக்கலாமானு கேட்டா சரின்னு சொல்லிருப்பியா?”, என்று கேட்க இல்லை என்றாள்.

“அதான் உங்க வீட்ல பேசினேன். ஆனாலும் உன் கிட்ட ஒண்ணு கேக்கணும் சாரு”

“என்ன?”

“என்னைப் பிடிச்சிருக்கு தானே?”

“ரொம்ப சீக்கிரம் கேட்டுட்டீங்க”

“பிளீஸ் சொல்லு. ஒரு ஆர்வத்துல வந்து பேசி கல்யாணம் முடிவு பண்ணிட்டேன். ஆனா உன் மனசுல நான் இருக்கேனா?

“லவ் இருக்கான்னு தெரியலை. ஆனா உங்களைப் பிடிச்சிருக்கு”, என்று வெட்கத்துடன் முணுமுணுக்க சந்தோஷமாக அவள் கரம் பற்றினான் முகுந்தன்.

அப்போது அவனை அழைத்தான் பரணி. “கரடி”, என்று முணுமுணுத்து விட்டு போனை எடுத்து காதில் வைத்து “சொல்லு டா”, என்றான் முகுந்தன்.

“நான் என்னத்த சொல்றது? உனக்கு தான் லவ் அதிகமா ஆய்ட்டா சுத்தி இருக்குற எல்லாம் மறந்துரும் போல?”

“என்ன டா சொல்ற?”

“சிசிடிவில ரொமான்ஸ் ஷோ ஓடிட்டு இருக்கு. என் லேப்டாப்ல மட்டும் இல்லை. சிசிடிவி ரூம்ல உள்ளவங்களும் பாப்பாங்க”

“ஐயோ, எல்லாம் தெரியுதா?”

“நீ கரடின்னு சொன்னது கூட தெரிஞ்சது”, என்று சொல்லி பரணி போனை வைக்க அசடு வழிய சிரித்தவன் “பை அப்புறம் பேசலாம் சாரு”, என்று சொல்லி விட்டு ஓடி விட்டான். சாருவும் சிரித்த படி வேலையைப் பார்த்தாள்.

ஒரு வழியாக முகுந்தன், சாரு திருமண நாளும் வந்தது. அதற்கு அலுவலகத்தில் வேலை பார்க்கும் அனைவரும் வந்திருந்தார்கள். வினோத், தாரணி, அருண், யமுனா நால்வரும் வந்திருந்தார்கள்.

அதே போல பரணி, கௌரி, சரவணப் பெருமாள் மூவரும் வந்திருந்தார்கள். சரவணப் பெருமாள் மணமக்களை வாழ்த்தி பரிசுப் பொருளைக் கொடுத்து விட்டு மனைவியை அழைத்துச் சென்று விட்டார். பரணி வினோத்திடம் பேசிக் கொண்டிருந்தாலும் அவன் கண்கள் யமுனாவையே வட்டம் இட்டது.

பரணி மற்றும் யமுனாவுக்கு தனிமை கொடுக்க முடிவு எடுத்த வினோத் “யமுனா, நாங்க தாரணி வீட்டுக்கு போயிட்டு வரோம். நீ கொஞ்ச நேரம் இங்க இருந்துட்டு ஆட்டோ பிடிச்சு வீட்டுக்கு போய்றியா? இல்லை எங்க கூட வரியா?”, என்று கேட்டான்.

“நீ அண்ணியையும் குட்டியையும் கூட்டிட்டு போ அண்ணா. நான் கொஞ்ச நேரம் இருந்துட்டு வீட்டுக்கு போறேன்”, என்று சொல்ல பரணியிடம் கண்ணைக் காட்டி விட்டு கிளம்பி விட்டான். அவள் அப்படிச் சொன்னதற்கு காரணம் இங்கு இருந்தால் பரணியை சற்று நேரம் பார்க்கலாமே என்ற ஆசை தான்.

இங்கயே இருந்தால் யமுனாவுடன் தனியே நேரத்தை செலவழிக்க முடியாது என்று எண்ணிய பரணி முகுந்தன் மற்றும் சாருவிடம் சொல்லி விட்டு யமுனா அருகில் வந்தான்.

அவள் அவனை நிமிர்ந்து பார்க்க “வா போகலாம்”, என்றான்.

“எங்கே?”, என்று தவிப்புடன் வந்தது அவள் குரல்.

“கண்டிப்பா என் வீட்டுக்கு இல்லை. எழுந்து வா”, என்று சொல்ல வேறு வழியில்லாமல் அவன் பின்னால் சென்றாள்.

அவளை காரில் ஏற வைத்து காரைக் கிளப்பிய பரணி மதுரையை தாண்டி காரைப் பறக்க விட்டான்.

“எங்கே போறோம்?”, என்று அவள் மீண்டும் அந்த கேள்வியைக் கேட்க அவன் முறைத்த முறைப்பில் வாயை மூடிக் கொண்டாள். ஆனாலும் மனதுக்குள் “கடவுளே, இவன் என்னை எங்க வேணும்னாலும் கூட்டிட்டு போகட்டும். ஆனா எங்களுக்கு தனிமை மட்டும் கிடைக்க கூடாது”, என்று வேண்டிக் கொண்டாள்.

ஆனால் தனிமை வேண்டும் என்று ஆசைப் பட்டு தான் அவளை அவர்களுடைய பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்றான். மதுரையை தாண்டி இருந்த பைபாசில் ஒரு இடத்தில் இருந்தது அந்த வீடு. அதுவும் சுற்றி மரம் சூழ்ந்து, ஆள் அரவம் இல்லாத இடம் யமுனாவை பயம் கொள்ள வைத்தது.

Advertisement