Advertisement

“சார் நீங்க என்குயரி கூட வைக்கலையே? என்னால ஒரு விற்பனை போச்சு”, என்று வருந்தினான் ரத்தினம்.

“இந்த சேல் போனா இன்னொன்னு வரும். ஆனா தன்மானம் எல்லாருக்கும் இருக்கணும் ரத்தினம். நான் நியாயத்தின் பக்கம் தான் நிப்பேன். நீங்க ஒரு கஷ்டமர் கிட்ட மரியாதை குறைவா நடந்திருந்தா கண்டிப்பா உங்களை அடுத்த நிமிஷம் வேலைல இருந்து பயர் பண்ணிருப்பேன். அதுக்காக தப்பு நீங்க செய்யாம உங்களை கடிஞ்சு பேசுறது என்னால முடியாது. இப்ப வேலையை பாக்க போகலாம் தானே?”, என்றதும் அவனை பிரம்மிப்பாய் பார்த்த படி அனைவரும் சென்றார்கள்.

இவன் நேராக உள்ளே சென்று அவன் இருக்கையில் அமர்ந்தான். அப்போது அவனிடம் அனுமதி வேண்டி உள்ளே வந்தான் ரத்தினம். வினோத்தும் வந்து சேர்ந்தான்.

“உக்காருங்க வினோத்”, என்று சொன்ன பரணி “உள்ள வாங்க ரத்தினம்”, என்று அவனையும் அழைத்தான். இருவரும் அமர்ந்தார்கள்.

“என்ன ஆச்சு ரத்தினம்?”, என்று கேட்டான் வினோத்.

பரணியும் அவனைப் பார்த்தான். “சார், வினோத் சார் இங்க இருந்து போனதும் அந்த ஆள் வந்தான். நானும் காரைக் காமிச்சேன். ஆனா காரை டப்பா காருன்னு சொன்னான். அப்புறம் டீ கேட்டான், கொடுத்தேன். ஆறிருச்சுன்னு சொன்னான். அப்புறம் ஜூஸ் கேட்டான், கொடுத்தா ஜில்லுன்னு இல்லைன்னு சொன்னான். திடீர்னு எங்க ஓனர்ன்னு கேட்டான், சார் வெளிய போயிருக்கங்கான்னு சொன்னேன். அப்புறம் அவன் ரொம்ப கேவலமா பேசினான் சார். அடிக்க கூட வந்தான். அப்புறம் நம்ம பெரிய ஐயா பத்தி, அவர் கட்சி பத்தி தப்பா பேசினான். மரியாதையா பேசுங்கன்னு சொன்னேன். அதுக்கும் கத்தினான் சார். அந்த ஆள் பேச்சு சரி இல்லை. அவன் உங்க பேருக்கு ஏதாவது களங்கம் ஏற்படுத்தினா அது என்னாலன்னு ஆகிரும் சார். எனக்கு பயமா இருக்கு. நான் வேணும்னா மன்னிப்பு கேட்கவா?”, என்று கேட்டான் ரத்தினம்.

“அதெல்லாம் வேண்டாம். என்ன நடந்தாலும் பாத்துக்கலாம் ரத்தினம். இதுக்கெல்லாம் பயந்தா தொழில் பண்ண முடியாது. ஏதோ மீடியான்னு புலம்பிட்டு போனான். பிரஸ் கிட்ட சொல்லுவானா இருக்கும். அப்படி இல்லைன்னா போலீஸ் கம்ப்லைண்ட் பண்ணுவான். என்ன நடந்தாலும் பாத்துக்கலாம். அப்படி பிரச்சனை வந்தா பேஸ் பண்ண தயாரா இருக்கணும். சிசிடி‌வி புட்டெஜ் இருக்கா?”, என்று கேட்டவன் சிசிடிவி கண்ட்ரோல் செய்யும் கிருஷ்ணனை அறைக்கு வரச் சொன்னான்.

அவன் வந்ததும் “இப்ப நடந்ததுக்கு சிசிடிவி புட்டேஜ் இருக்கா கிருஷ்ணன்?”, என்று கேட்டான் பரணி.

“இருக்கு சார். ஆனா அதுல பேசினது கிளியரா இருக்காது. ஆனா நடந்ததை என்னோட போனில் நான் ரெக்கார்ட் பண்ணிருக்கேன் சார். அவன் தெனாவெட்டா பேசும் போதே எனக்கு டவுட் வந்துச்சு. அதான். இப்ப உங்க நம்பருக்கு வீடியோ அனுப்புறேன்”, என்று சொல்ல அனைவருக்கும் நிம்மதி.

“சரி நீங்க ரெண்டு பேரும் போய் வேலையைப் பாருங்க. நான் பாத்துக்குறேன்’, என்றான் பரணி. அவன் அப்படிச் சொன்ன பிறகும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்த படி நின்றார்கள். அவர்களைப் வியப்பாக பார்த்த வினோத் மற்றும் பரணி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். “என்ன ஆச்சு? நீங்க ரெண்டு பேரும் இப்படி பாத்துட்டு இருக்கீங்க?”, என்று கேட்டான் வினோத்.

“எவ்வளவு பெரிய உதவி செஞ்சிருக்கேன். ஒரு தேங்க்ஸ் சொல்ல சொல்லுங்க சார்”, என்று சொன்னான் கிருஷ்ணன்.

ரத்தினம் சங்கடத்தில் நெளிய அவனை வியப்பாக பார்த்தார்கள் பரணியும் வினோத்தும். “ரத்தினம் சொல்லலைன்னா என்ன? நான் சொல்றேன் கிருஷ்ணா. நீ செஞ்சது பெரிய விஷயம். ரொம்ப தேங்க்ஸ்”, என்றான் பரணி.

“உங்க தேங்க்ஸ் எல்லாம் வேண்டாம் சார். இவன் தேங்க்ஸ் தான் வேணும்”, என்று கிருஷ்ணன் சொல்ல அவர்களின் வியப்பு கூடியது.

“என்னங்க டா இது? லவ்வர் மாதிரி சீன் போடுறீங்க ரெண்டு பேரும்? ஏன் ரத்தினம் ஒரு தேங்க்ஸ் தானே சொன்னா தான் என்னவாம்? அந்த ஈஸ்வர் கிட்டயே சாரி கேட்டுருப்ப தானே? இப்ப இவன் கிட்ட தேங்க்ஸ் சொல்ல வேண்டியது தானே?”

“இவன் கிட்ட சொல்ல மாட்டேன் சார். ஏன்னா இந்த கிருஷ்ணன் என் தங்கச்சி பின்னாடி சுத்துறான் சார்”

“ஐயோ, இல்லை சார். நாங்க ரெண்டு பேரும் விரும்புறோம் சார். ஒரு நாள் வண்டில போகும் போது மச்சான் பாத்துட்டான். அதுல இருந்து என் கிட்ட பேச மாட்டிக்கான். எப்படி எல்லாமோ கேட்டு பாத்துட்டேன். பொண்ணு தர மாட்டிக்கான். நீங்க கொஞ்சம் சொல்லுங்க”, என்று கிருஷ்ணன் சொல்ல வினோத் மற்றும் பரணி இருவரும் புன்னகைத்துக் கொண்டார்கள்.

“நண்பன்ன்னு வீட்டுக்குள்ள விட்டேன் சார். இவன் உண்ட வீட்டுக்கே ரெண்டகம் பண்ணலாமா?”

“நிஜமா இல்லை சார். நான் அகிலாவை காலேஜ்ல இருந்தே லவ் பண்ணுறேன். அவளுக்கு அம்மா அப்பா கிடையாது. மச்சான் தான் எல்லாமும்னு தெரியும். இவன் கிட்ட நல்லவன்னு பேர் வாங்கி இவன் தங்கச்சியைக் கல்யாணம் பண்ண தான் இங்க வேலைக்கே சேர்ந்தேன். இவனும் மாப்பிள்ளை மாப்பிள்ளைன்னு கூப்பிட்டு என்னை நண்பனாக்கிட்டான். இப்ப இவன் தங்கச்சியைக் கட்டிக் கொடுக்கலைன்னா கூட பரவால்ல. இவன் மறுபடியும் எனக்கு நண்பனா வேணும்”, என்று சொல்ல ரத்தினம் அவனை திகைப்பாக பார்த்தான்.

“கிருஷ்ணாவைப் பார்க்க நல்ல பையனா இருக்கான் ரத்தினம். என்னை விட உனக்கு தான் அவனை தெரியும். உன் தங்கச்சியை விட உன் நட்பை அவன் மதிக்கிறான். உன் தங்கச்சியைக் கட்டிக் கொடுத்தா நல்லா வச்சிக்குவான். எனக்கும் சரின்னு தோணுது ரத்தினம். யோசியேன்”, என்று பரணி சொல்ல “கிருஷ்ணா நல்லவன் தான் சார். ஆனா கல்யாணம் எப்படி பண்ணி வைக்க? ரெண்டு பேரும் வேற வேற ஜாதி. நாங்க சைவம் இவன் அசைவம்”, என்றான் ரத்தினம்.

“இந்த சைவம் அசைவம் உங்க நட்புக்குள்ள இருந்துச்சா ரத்தினம்?”

“சார்”

“இல்லை, இவ்வளவு நாள் பழகினதுல அவன் சாப்பாடை நீங்க சாப்பிட்டது இல்லையா? இல்லை கிருஷ்ணா தான் உங்க வீட்டு சப்பாடை சாப்பிடலையா? இதையும் விட நானும் அசைவம் சாப்பிடுவேன். இன்னைக்கு காலைல கூட சுட சுட இட்லியையும் மட்டன் குழம்பையும் ஒரு கை பாத்துட்டு தான் வந்தேன். அப்படின்னா என்னையும் ஒதுக்கி வைப்பீங்களா?”

“அப்படி இல்லை சார். சொந்தக்காரங்க….”

“உங்க அம்மா அப்பா இறந்தப்ப உங்க சொந்தக்காரங்களா உங்களை பாத்துக்கிட்டாங்க? இப்ப உங்க தங்கச்சிக்கு கல்யாண வயசு. யாராவது வரன் பாத்தாங்களா? கல்யாண சுமை வந்துரும்னு ஒதுங்கித் தானே போறாங்க? நீங்க மட்டும் அவங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கணுமா? அசைவம் சாப்பிடுறதுனால நாங்க எல்லாம் கெட்டவங்க இல்லை. எங்களோட நட்பை ஏத்துக்க முடிஞ்ச உங்களால எங்க உறவை ஏத்துக்க முடியாதா?”

“என்னை மன்னிச்சிருங்க சார். எனக்கு கல்யாணத்துக்கு சம்மதம். இவன் தான் என் தங்கச்சிக்கு மாப்பிளை”, என்று ரத்தினம் சொல்ல “தேங்க்ஸ் மச்சான்”, என்று அவனைக் கட்டிக் கொண்டான் கிருஷ்ணன்.

“சரி சரி மச்சானும் மாப்பிள்ளையும் கட்டிப் பிடிச்சது போதும். இப்ப போய் வேலையைப் பாருங்க”, என்று சொன்னதும் இருவரும் கிளம்பினார்கள். சிறு சிரிப்புடன் தன்னவளைப் பற்றி எண்ணிப் பார்த்தான். தன்னுடைய திருமணமும் இந்த பிரச்சனை போன்றது தான் என்று தோன்றியது அவனுக்கு.

அவனை பாவமாக பார்த்துக் கொண்டிருந்த வினோத் “உங்க மனசுல இருக்குற வலியை என்னால புரிஞ்சிக்க முடியுது மாப்பிள்ளை. ஆனா என்னைக்கு அதுக்கு விடிவு வரும்னு தெரியலை. சரி நான் போய் வேலையை பாக்குறேன்”, என்று சொல்லி விட்டுச் சென்றான்.

“என்ன ஆனாலும் சரி, யமுனாவுக்காக காத்துட்டு இருப்பேன்”, என்று எண்ணிக் கொண்டு கிருஷ்ணா அனுப்பிய வீடியோவைப் பார்த்துக் கொண்டிருந்தான் பரணி. பார்த்தவனுக்கு சுள்ளென்று கோபம் வந்தது.

என்ன வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையும் வந்தது. ஆனால் அவன் பிரச்சனையை சாதாரணமாக நினைக்க அது வேறு விதமாக வெடித்தது.

ஈஸ்வர் ஆன்லைனில் யுடியூப் லைவில் பரணியை திட்டிக் கொண்டிருந்தான். “அப்பா அரசியல்வாதி மகன் அடியாளா?”, என்ற தலைப்பில் அவன் தனக்கு அவலம் நேர்ந்ததாகவும் மரியாதை குறைவாக பேசி மிரட்டியதாகவும் அதனால் தான் மிகப் பெரிய மனஉளைச்சலுக்கு ஆளானதாகவும் பேசிக் கொண்டிருந்தான். அந்த லைவுக்கு லைக்கள் குவிந்தது. பரணியை திட்டி பல வாசகங்கள் கமென்ட்டில் பதிவிடப் பட்டது.

அன்று மாலை சீக்கிரமே வீட்டுக்கு வந்த யமுனா கண்களில் விழுந்தது அந்த டிவி நியூஸ். பணம் இருந்தா என்ன வேணும்னாலும் செய்யலாமா? அப்பாவிக்கு நியாயம் வேண்டும் என்ற மீம்கள் குவிய அது டி‌வி செய்திகளிலும் வந்தது.

அதை தான் பார்த்தாள் யமுனா. நான்கு பேர் அமர்ந்து அதைப் பற்றி வாதம் புரிய மற்ற தொலைகாட்சியில் ஈஸ்வரின் இன்டர்வியூ இடம் பெற்றது. பல இளைஞர்கள் பரணியை திட்டிக் கொண்டிருந்தார்கள்.

அடுத்தவர்கள் அவனைத் திட்டுவதை அவளால் தாங்க முடிய வில்லை. “நாங்க தான் இவன் பேருக்கு கேவலத்தை உண்டு பண்ணுவோம்னு நினைச்சோம். ஆனா இவனே சிக்கிட்டான் போல? பாத்த தானே, ஒரு கார் பிரச்சனைக்கே அந்த பையன் எப்படி திட்டு வாங்குறான்னு. இதுல நீ அவனைக் கல்யாணம் பண்ண நினைச்சா இன்னும் கேவலப் படுவான்”, என்று காவேரி சொல்ல கல்யாணத்துக்கு சம்மதிக்க கூடாது என்று தெளிவாக முடிவெடுத்த யமுனா வினோத்தை அழைத்தாள்.

“சொல்லு யமுனா?”

“இன்னைக்கு ஷோ ரூம்ல என்ன நடந்துச்சு?”, என்று அவள் கேட்க அவன் விளக்கினான்.

“உடனே அந்த வீடியோவை எனக்கு அனுப்பி வைண்ணா. சீக்கிரம்”

“என்ன ஆச்சு மா?”

“எல்லாம் சொல்றேன். நீ சீக்கிரம் அனுப்பு. நம்ம கிட்ட டைம் இல்லை”, என்று சொல்லி போனை வைக்க அவன் உடனே அனுப்பி வைத்தான்.

காரிகை வருவாள்….

Advertisement