Advertisement

அவன் அருகாமையில் அமைதியடையும் அவள் மனம் அவனைக் காண வில்லையென்றால் வெறுமையுடன் இருக்கும். அந்த வெறுமையை அவனும் அனுபவிப்பதால் அவ்வப்போது கிடைக்கும் சந்தர்ப்பங்களில் அவளைப் பார்த்து மனதுக்குள் நிரப்பிக் கொள்வான்.

இருவரும் சந்திப்பதே சந்தோஷம் என்றால் சில நேரம் வேலை விசயமாக பேசிக் கொள்ள நேரிடும் போது உள்ளம் குத்தாட்டம் போடும். அன்றைய இரவுகளில் இருவரும் பேசியதை அசை போடும் சந்தோசமே அலாதியானது தான்.

அவர்கள் இருவரும் என்ன தான் ஒதுங்கி நின்றாலும் அவர்கள் மனம் காதல் என்ற வேர் கொண்டு இறுகி இருந்தது. இன்று அந்த காதல் மரமாகி பூவாகி காய்த்து செழித்திருந்தது. இது சரவணப் பெருமாளுக்கு தெரியுமா?

அவனைப் பொறுத்த வரைக்கும் அவள் ஆராதனைக்குரியவள். அதற்கான மரியாதையைக் கொடுத்து தான் விலகி இருக்கிறான்.

அவன் நினைத்திருந்தால் அனைவரையும் எதிர்த்து அவளை தூக்கி  வந்து விட முடியும். அவனுக்கு அவள் ஒரு பூ. போல என்பதால் அவளை கட்டாயப் படுத்தி கசக்கி முகர அவன் நினைக்க வில்லை. அதுவும் அவளே அவனை விரும்பி அவன் கழுத்தில் மாலையாகப் போகும் நாளுக்காக காத்திருக்கையில் அவளை எப்படி காயப் படுத்துவானாம்?

அப்படியே ஒரு வாரம் கடந்திருந்தது. அப்போது ஒரு நாள் மதுரையில் இருக்கும் பரணிக்கு சொந்தமான ஒரு கார் ஷோரூமில் ஒரு பிரச்சனை வெடித்தது. அங்கிருந்த யாருக்கும் என்ன செய்ய என்று தெரிய வில்லை. அந்த கம்பெனிக்கு பொறுப்பு வினோத் தான். அவன் இப்போது தான் பரணி ஜூவல்லரிக்கு விசிட் போயிருந்தான்.

அவன் இல்லாத நேரம் ஈஸ்வர் என்பவன் அந்த ஷோரூமுக்கு கார் வாங்க வந்திருந்தான். வந்தவன் திமிர் பிடித்தவன் என்று சற்று நேரத்திலே அங்கிருந்தவர்களுக்கு புரிந்தது. சேல்ஸ் பையனை அவன் தரக் குறைவாக பேச அந்த பையனுக்கும் கோபம் வந்தது.

ஆனால் அவன் வேலை முக்கியம் என்பதால் எரிச்சலுடன் ஈஸ்வரை முறைக்க மட்டும் செய்தான்.

“என்ன டா முறைக்கிற? பெரிய இவனா நீ?”, என்று ஈஸ்வரின் குரல் அங்கு ஓங்கி ஒலித்தது. தான் பேசுவது மற்றவர்களின் சுயமரியாதை பற்றியது என்ற கவலை இல்லாமல் ஈஸ்வர் பேச சுற்றி இருந்த அனைவரின் கவனமும் அங்கு தான் இருந்தது.

அவன் பேசுவது சரியில்லை என்று உணர்ந்த ரிசப்சனிஸ்ட் உடனே வினோத்தை அழைத்து “சார் ஷோரூம் வாங்க, ஒருத்தர் பிரச்சனை பண்ணுறார்”, என்று சொல்லி போனை வைத்து விட்டாள்.

ஈஸ்வர் ரொம்ப கேவலமாக அந்த சேல்ஸ் மேனை மட்டும் அல்லாமல் அங்கிருக்கும் மேனேஜர், கடை ஓனர், சரவணப் பெருமாள், அவரின் கட்சி வரை தரக் குறைவாக பேச பேசுபவரை அடக்க யாருக்கும் தைரியம் இல்லை.

தைரியம் இல்லை என்று சொல்ல முடியாது அவனிடம் மாட்டிக் கொண்டு முழிக்கும் சேல்ஸ்மேன் ரத்தினம் ஆஜானுபாகுவான பராக்கிரமசாலி தான். ரத்தினத்தின் ஒரு அடிக்கு ஈஸ்வர் தாங்க மாட்டான். ஆனால் தான் செய்யும் வேலைக்கும் தனக்கு வேலை கொடுத்த முதலாளிக்கும் பயந்து அமைதியாக நின்றான்.

இருந்தாலும் அவனது சுயமரியாதை சற்று தலை தூக்க “சார் நீங்க பேசுறது ரொம்ப தப்பு”, என்று மட்டும் சொன்னான். அதற்கும் “என்னையே பேசுவியா நீ? ஆஃப்ட்ரால் நீ ஒரு சேல்ஸ்மேன்”, என்று கத்தினான் ஈஸ்வர்.

தனக்கு தகவல் வந்ததும் உடனே பரணியை அழைத்த வினோத் “மாப்பிள்ளை ஷோரூம்ல ஒருத்தன் பிரச்சனை பண்ணுறானாம். நான் ஜூவல்லரிக்கு வந்தேன். இப்ப தான் போகப் போறேன். போயிட்டு என்னன்னு சொல்றேன். உங்களுக்கு இன்பார்ம் பண்ணணும்னு தான் சொல்றேன்”, என்றான்.

“நீங்க அங்க பாருங்க மச்சான், நான் ஷோ ரூமுக்கு தான் போயிட்டு இருக்கேன். ரெண்டு நிமிசத்துல போய்ருவேன். நான் பாத்துக்குறேன்”, என்று சொல்லி போனை வைத்தவன் காரின் வேகத்தைக் கூட்டினான்.

அவன் கார் ஷோரூம் முன் நிற்க செக்யூரிட்டி வந்து கதவை திறந்து விட்டான். அதில் இருந்து இறங்கிய பரணி அவன் கையில் கார் சாவியைக் கொடுத்து விட்டு கம்பீரமாக உள்ளே நுழைந்தான். இவ்வளவு நேரம் அங்கு இருந்த அனைவரும் ஈஸ்வரைப் பார்த்துக் கொண்டிருக்க இப்போது அனைவரின் கவனமும் பரணி புறம் திரும்பியது.

கோர்ட் சூட் என்ற உடை இல்லை தான். ஆனால் அவன் அணிந்திருந்த பேண்ட் மற்றும் சட்டை அவன் அதை டக்கின் செய்திருந்த விதம், கண்களில் இருந்த கூலிங்கிளாஸ் என அவனது அடையாளத்தை இன்னும் பிரம்மாண்டப் படுத்தியது மட்டும் நிஜம்.

அங்கு வேலை செய்யும் பெண்கள் எப்போதும் போல் அங்கு நடக்கும் பிரச்சனையை மறந்து அவனை சைட் அடிக்கும் வேலையை செவ்வன செய்தார்கள்.

ஆண்கள் கூட பார்வையை அவன் பக்கம் வீச ஈஸ்வரை கண்டு கொள்வார் யாரும் இல்லை. பரணியைக் கண்டதும் பதட்டப் பட்டது ரத்தினம் மட்டுமே. வாடிக்கையாளரை மதிக்க வில்லை என்று அவன் மீது பழி வந்து விடுமோ, இந்த வேலை போய் விடுமோ என்று பயந்து போனான்.

அவனுக்கு ஒரு தங்கை இருக்கிறாள். அவளுக்கு திருமணம் செய்ய வேண்டியது அவன் கடமை. அப்படி இருக்க அவனுக்கு இந்த வேலை முக்கியம். எட்டு மணி நேர வேலைக்கு இருபதாயிரம் சம்பளம் எங்கு கிடைக்கும்? அவன் கண்களில் பதட்டம் ஏற எந்த விதமான டென்சனும் இல்லாமல் அவர்களை நெருங்கினான் பரணி.

அருகில் வந்து கூலிங்க் கிளாசை கழட்டிய படி “வாட் ஹேப்பெண்ட் ரத்தினம்”, என்று கேட்டான்.

“சார், நான் ஒண்ணும் பண்ணலை சார்”, என்று ரத்தினம் நடுங்க “எதுக்கு இவ்வளவு பதட்டம் ரத்தினம்? நான் இப்ப உங்களை ஒண்ணும் சொல்லலையே? என்ன ஆச்சுன்னு தானே கேட்டேன்?”, என்று புன்னகைத்தான் பரணி. அவன் சிரிப்பு அழகாக இருந்தாலும் இருக்கும் டென்சனில் இப்படி சிரிக்கிறானே என்று இருந்தது ரத்தினத்துக்கு.

அதைப் பார்த்த ஈஸ்வர் “என்ன நடக்குது இங்க? நீ யாரு யா? நீ தான் இந்த ஷோரூம் ஓனரா? என்ன ஆளுங்களை வேலைக்கு வச்சிருக்க? ஒரு மேனஸ் தெரியலை. அவ்வளவு பணம் கொடுத்து கார் வாங்குறவனுக்கு ஒரு மரியாதை கொடுக்க தெரியலை. நீயும் வந்ததும் எனக்கு ஒரு வணக்கம் வைக்கலை. ஒரு கஷ்டமரை இப்படியா டிரீட் பண்ணுறது? ஆமா வேலை பாக்குறவனே அப்படி இருக்கான்? பின்ன நீ எப்படி இருப்ப? உங்க அப்பா அரசியல்வாதி தானே? அவரை எல்லாம் எப்படி ஓட்டுப் போட்டு மக்கள் தேர்ந்தெடுத்தாங்களோ”, என்று பொரிந்து தள்ளினான்.

அவன் பேச்சை கேட்டு சிறிதும் அசராதவனாக “ரத்தினம் உங்க மேல எவ்வளவு பெர்சண்ட் மிஸ்டேக் இருக்கு?”,. என்று கேட்டான் பரணி.

அதைக் கேட்டு கொதித்தான் ஈஸ்வர். தான் இப்படி பேசியதும் அனைவரும் மரியாதை கொடுப்பார்கள் என்று நினைத்தான். அதுவும் கடை ஓனர் வந்து தனக்கு வணக்கம் வைத்து வேலை செய்பவர்களுக்காக மன்னிப்பை வேண்டுவான் என்று எதிர் பார்க்க பரணியோ அவன் பக்கம் திரும்பவே இல்லை என்றதும் அவனுக்கு பி.பி எகிறியது.

“சார் என் பக்கம் ஒரு பெர்சண்ட் கூட தப்பு இல்லை சார்”, என்று சொன்னான் ரத்தினம்.

“நீங்க சொல்றது உண்மை தானா?”

“சத்தியமா சார், என்ன நடந்ததுன்னா…?”, என்று ரத்தினம் விளக்கம் கொடுக்க வர “அது எனக்கு தேவையே இல்லை. இங்க என்ன வேணும்னாலும் நடந்துருக்கட்டும். தப்பு நம்ம பக்கமா இல்லையான்னு தான் என் கேள்வி”, என்றான் பரணி.

“தப்பு என் மேல இல்லை சார்”, என்று ரத்தினம் நம்பிக்கையாக சொல்ல “அப்படின்னா ஓகே”, என்ற படி ஈஸ்வர் பக்கம் திரும்பி முறைத்தான் பரணி.

“என்ன லுக் விடுற? ஒழுங்கா நீயும் உன் கடைல இருக்குற எல்லாரும் என் கிட்ட மன்னிப்பு கேக்கணும்”, என்று ஈஸ்வர் குதிக்க “முதல்ல வெளிய போ. இப்ப நீ போகலைன்னா என்னோட ஸ்டாப் உன்னை வெளிய தள்ளுவாங்க”, என்றான் பரணி.

“ஏய் என்ன இப்படி எல்லாம் பேசுற? இப்படி பேசினா நான் இங்க கார் வாங்க மாட்டேன் பாத்துக்கோ”

“உன்னை யார் கார் வாங்க சொன்னா? நீ கார் கேட்டா கூட நான் கொடுக்க போறது இல்லை. முதல்ல வெளிய போ”

“என்னது?”, என்று திகைத்தவன் “முப்பது லட்சத்துக்கு வாங்க போறேன் யா. அதுவும் ரெடி கேஸா”, என்றான்.

“சோ வாட், நீ முன்னூறு கோடி கொடுத்தாலும் உனக்கு கார் கிடையாது. வெளிய போன்னா போ”

“என்ன வா போன்னு பேசுற? ஒழுங்கா மரியாதையா பேசு”

“உனக்கு மரியாதை கொடுக்கணும்னு எனக்கு எந்த தலையெழுத்தும் இல்லை. மரியாதையா இங்க இருந்து ஓடிரு. இல்லை என்ன பண்ணுவேன்னு தெரியாது

“என்ன மிரட்டுறியா?”

“ஆமா, இதுல என்ன சந்தேகம்? என் கிட்டயே இப்படி பேசுறன்னா என் ஸ்டாப் கிட்ட எப்படி பேசிருப்ப? என் ஷோ ரூம் வந்து என் ஆட்கள் கிட்ட மரியாதை இல்லாம பேசுவியா நீ? அவங்க ஒண்ணும் உன் அடிமை இல்லை. என் கிட்ட வேலை பாக்குறவங்க எனக்கு ஃபேமிலி மாதிரி. நான் அவங்களை கண்டிப்பேனே தவிர கடிஞ்சு பேசினது இல்லை. ஆனா எவனோ ஒருத்தனான நீ வந்து என் ஸ்டாபை அதிகாரம் பண்ணுவியா? தோலை உறிச்சிருவேன் பாத்துக்கோ”, என்று பரணி கேட்க அங்கு வேலை செய்பவர்கள் விசில் அடித்து தங்கள் சந்தோஷத்தை தெரிவித்தார்கள்.

அதில் கடுப்பான ஈஸ்வர் “அஃப்ட்ரால் உன் கிட்ட வேலை பாக்குற சேல்ஸ்மேனுக்காக ஒரு விற்பனையை இழக்கப் போறியா? உனக்கு தான் நட்டம்”, என்றான்.

“நஷ்டம் அடைய நான் ஒண்ணும் அழுகிப் போற காய்கறி வியாபாரம் பண்ணலை. அப்படியே நஷ்டம் வந்தாலும் அதை எப்படி மேனேஜ் பண்ணுறதுன்னு எனக்கு தெரியும். உனக்கு கார் கிடையாது. இப்ப நீ வெளிய போறியா இல்லை, நானே கழுத்தை பிடிச்சு வெளிய தள்ளட்டுமா?”

“என்னையே மிரட்டுறியா? உன்னை என்ன பண்ணுறேன் பாரு? இந்த ஷோரூமையும் உன் பேரையும், உன் அப்பா பேரையும் நான் கிழி கிழின்னு கிழிக்கலை நான் ஈஸ்வர் இல்லை டா. சோசியல் மீடியா பவரை நான் உனக்கு காட்டுறேன்”, என்று கத்திக் கொண்டே வெளியே சென்றான் ஈஸ்வர்.

அவன் சென்றதும் அனைவரும் அமைதியாக இருக்க “என்ன எல்லாரும் திகைச்சுப் போய் இருக்கீங்க? போய் வேலையைப் பாருங்க”, என்று சொன்னான் பரணி.

Advertisement