அத்தியாயம் 15 

தெள்ளத் தெளிவாக உன்

மனதை உணர்த்தும் விழிகள்

எனக்கு கண்ணாடி தான்!!!

யமுனா மேல் குற்றம் சுமத்த தயாராக இருந்த சரவணப் பெருமாள் “நாம எல்லாரும் வந்துட்டோம். இன்னும் ஆடிட்டர் வரலைன்னா என்ன அர்த்தம் பரணி? இங்க இருக்குற எல்லாருக்கும் தனி தனி வேலை இருக்கு. நான் கட்சி ஆபீஸ் வேற போகணும். இப்படி பொறுப்பில்லாம இருந்தா என்ன அர்த்தம்?”, என்று கேட்டார்.

பரணிக்கு என்ன சொல்ல என்று தெரிய வில்லை. யமுனா எல்லா விசயத்திலும் சரியாக தான் இருப்பாள். அதுவும் நேரம் தவறவே மாட்டாள். அது மட்டும் அல்ல, அவள் இன்று எட்டு மணிக்கே அலுவலகம் வந்து விட்டாள் என்றும் அவனுக்கு தெரியும். அப்புறம் ஏன் மீட்டிங் ஹாலுக்கு வரலை என்று எண்ணினான்.

யமுனாவோ தலையை பிடித்த படி தன்னுடைய சீட்டில் அமர்ந்திருந்தாள். இங்கு வந்ததில் இருந்தே அவளுக்கு சரியான வயிறு வலி. மாதாந்திர பிரச்சனை இன்று தான் வர வேண்டுமா என்று கடுப்பாக இருந்தது. ஏனென்றால் இன்று ஒரு நாள் அவளை அனைவரும் கேள்வி கேட்டு சக்கையாக பிழிந்து விடுவார்கள். பேசி பேசியே அவளுக்கு நாக்கு தள்ளும். இதில் இந்த பிரச்சனை வேறா என்று இருந்தது.

நிமிர்ந்து மணியைப் பார்த்தாள். சரியாக பத்து ஐம்பது. இதற்கு மேல் தாமதிக்க முடியாது என்று எண்ணி தனக்கு தேவையான பைல்ஸ் மற்றும் பெண்ட்ரைவ் எல்லாம் எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

“மணி பதினொன்னு ஆகப் போகுது. மீட்டிங் ஸ்டார்ட் பண்ணலாமா?”, என்று கேட்டார் ரகுவரன். பரணி குருப் ஆப் கம்பெனிஸ் பணி புரியும் டேரக்டர்களில் ஒருவர்.

“கம்பெனி ஆடிட்டர் வர வேண்டியது இருக்கு அங்கிள். இப்ப வந்துருவாங்க”, என்றான் பரணி.

“தகுதி தராதரம் தெரிஞ்சு வேலைக்கு வச்சிருந்தா அந்த பதவிக்கான இம்பார்டன்ஸ் தெரிஞ்சிருக்கும். சேர்மன் நான் வந்துட்டேன். எம் டி நீ வந்துட்ட, மத்த டேரக்டர்ஸ் வந்துட்டாங்க. எல்லா கம்பெனிஸ் மேனஜர் கூட வந்துட்டாங்க. ஆனா நீ அப்பாயின்மெண்ட் பண்ணின ஆடிட்டர் இன்னும் வரலை. அவ்வளவு பெரிய பதவிக்கு அந்த பொண்ணு தகுதியே கிடையாது”, என்றார் சரவணப் பெருமாள்.

“இது தான் சாக்குன்னு இந்த அப்பா பண்ணுறாரே?”, என்று எரிச்சலுடன் அமர்ந்திருந்தான் பரணி.

“அப்பா, இது ஆடிட்டிங்க் சம்பந்தப் பட்ட மீட்டிங். இப்ப யமுனா இங்க இருக்கணும்னு அவங்களுக்கு நல்லாவே தெரியும். அப்படி தெரிஞ்சும் அவங்க லேட்டா வராங்கன்னா கண்டிப்பா ஏதாவது ரீசன் இருக்கும். இன்னும் சொல்லப் போனா அவங்க அப்பவே ஆபீஸ் வந்துட்டாங்க”, என்று சொன்ன பரணி “சாரு, யமுனாவைக் கூட்டிட்டு வாங்க”, என்று சொல்லும் போதே “குட் மார்னிங் ஜெண்டில் மேன்”, என்ற படி உள்ளே நுழைந்தாள் யமுனா.

அனைவரும் அவள் புறம் திரும்பிப் பார்க்க பரணியும் அவள் புறம் திரும்பினான். சேலையோ சுடிதாரோ போட்டுக் கொண்டு வராமல் அன்றைய மீட்டிங்க்காக கருப்பு நிற கோர்ட் சூட்டில் தலையைக் கொண்டையிட்டு ஒரு ஆபீஸ் மீட்டிங்குக்கு எப்படி வர வேண்டுமோ அப்படி வந்திருந்தாள். அந்த உடை அவளுக்கு தனி கம்பீரத்தைக் கொடுத்தது.

பரணி அவளை ரசித்துப் பார்த்தான். மற்ற நாட்களில் எல்லாம் நேர்த்தியான காட்டன் புடவை அணிபவள் மீட்டிங் அன்று இப்படி தான் வருவாள். ஆனால் எல்லா உடையுமே அவளுக்கு அழகு தான். இன்றும் அவளை அவன் ரசித்துப் பார்க்க அவள் முகத்தில் இருந்த சோர்வு அவன் கண்ணில் பட்டது. கூடவே அவள் வலது கன்னத்தில் லேசாக அமுங்கி இருந்த பருவும் தான். அதைப் பார்த்ததும் அவள் சூழ்நிலை அவனுக்கு புரிந்தது. ஆனால் இன்று அவளுக்கான நாள் அல்லவா?

அவள் முன்னே போய் நிற்க “என்ன நினைச்சிட்டு இருக்கீங்க மிஸ் யமுனா? இன்னைக்கு எவ்வளவு முக்கியமான நாள்? சீக்கிரம் வரணும்னு தெரியாதா? நாங்க எல்லாரும் வேலையை விட்டுட்டு இங்க வந்து உக்காந்துருக்கணும்னு நினைக்கிறீங்களா?”, என்று கேட்டார் சரவணப் பெருமாள்.

“உங்களை வெயிட் பண்ண வச்சதுக்கு சாரி சேர்மன் சார். ஆனா நான் சரியான டைம்க்கு தானே வந்துருக்கேன்? லவன் ஆக இன்னும் டூ மினிட்ஸ் இருக்கே?”, என்று அவரைப் பார்த்து சொன்னவள் “மீட்டிங் ஸ்டார்ட் பண்ணலாம்”, என்று பொதுப்படையாக சொன்னாள். அவள் பேச்சு சரவணப் பெருமாளுக்கு மூக்கை உடைத்ததைப் போல இருந்தது.

யமுனா பெண்ட்ரைவைக் எடுத்து சாருவிடம் கொடுக்க அவள் புராஜெக்டரில் சில ரிப்போர்ட்களை ஓட விட்டாள். “இந்த வருஷம் பரணி குருப் ஆப் கம்பெனிசின் டர்ன் ஓவர் முப்பத்தஞ்சு சதவீதம் அதிகரிச்சிருக்கு. ஆனா எல்லா கம்பெனிஸ்லயும் புராஃபிட் தான் வருதுன்னு சொல்ல முடியாது”, என்று ஆரம்பித்தவள் அதைப் பற்றி விளக்கம் கொடுக்க ஆரம்பித்தாள். அது மட்டும் இல்லாமல் எல்லா வகையான செலவு கணக்கு, வரவு கணக்கு என்று அவள் போட்டுக் காட்ட அனைவரும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

கம்பெனியின் ஆடிட்டர் என்ற முறையில் அவள் இதை எல்லாம் இவ்வளவு தெளிவாக அனைவருக்கும் விளக்க வேண்டியது இல்லை தான். ஆனால் அவள் வேலையை குறை சொல்லி அவளை கம்பெனியில் இருந்து விரட்ட சரவணப் பெருமாள் இந்த கேள்விகளை எல்லாம் கேட்பார் என்று தெரிந்தே அவள் முதலிலே சொல்லி விட்டாள்.

எல்லாவற்றையும் விளக்கியவள் சில கம்பெனிகளில் இருக்கும் குறைகளையும் சுட்டிக் காட்ட மறக்க வில்லை. சரவணப் பெருமாளுக்கு கூட கொஞ்சம் பிரம்மிப்பாக தான் இருந்தது. யமுனா இந்த பதவிக்கு பொருத்தமானவள் என்று இந்த வருடமும் நிரூபித்தாள். ஏற்கனவே மகன் என்ன செய்தாலும் அதில் ஒரு நியாயம் இருக்கும் என்ற அவரின் நம்பிக்கையை மீண்டும் நிரூபித்திருந்தான் மகன்.

எப்பவும் போல நல்ல திறமையான பொண்ணைத் தான் வேலைக்கு வச்சிருக்கான் என்று அவர் எண்ணும் போதே அந்த திறமையை அவளிடம் வளர்த்ததும் மகன் தான் என்ற உண்மையும் புரிந்தது. அது தான் அவருக்கு தலை வேதனையாக இருந்தது.

அவளை மகனிடம் இருந்து வெகு தூரமாக அப்புறப் படுத்த துடிக்கும் அவருக்கு மீண்டும் மீண்டும் தோல்வி ஏற்படுவதை தான் அவரால் தாங்க முடிய வில்லை.

அன்றைய மீட்டிங் முடிய அனைவரும் அவள் வேலையை பாராட்டினார்கள். எல்லா கணக்கு வழக்கும் சரியாக இருக்கிறது என்று சொன்ன பரணி முதல் வேலையாக அவளுக்கு சாருவிடம் சொல்லி ஜூஸ் கொடுக்கச்  சொன்னான். அதை வாங்கிக் கொண்டவளுக்கு அவன் அக்கறை புரிந்தது.

பரணிக்கு ஒரு வேலை கொடுத்து வெளியே அனுப்பிய சரவணப் பெருமாள் யமுனா அருகில் சென்றார்.

அவரைக் கண்டதும் “சார்”, என்ற படி எழுந்து நின்றாள்.

“உனக்கு என்ன தான் மா வேணும்? நீ செய்யுறது உனக்கே நியாயமா இருக்கா?”, என்று அவர் கேட்க திகைத்து அவரைப் பார்த்தாள்.

“நீ நல்ல திறமையான பொண்ணு. உனக்கு எங்க போனாலும் நல்ல எதிர்காலம் இருக்கு. எதனால நீ இங்கயே இருக்கணும்?”, என்று அவர் கேட்க “நேரடியாவே பேசுங்க சார்”, என்றாள் யமுனா.

“நாம வாங்கின செருப்பு காலை விட சின்னதாவோ பெருசாவோ இருந்தா அதை தலையை சுத்தி தூர தான் போடணும் யமுனா. அது உண்மை தானே?”

“ஆமா சார்”

“நீ காலுக்கு உதவாத செருப்புன்னு தெரிஞ்சிருந்தும் உன்னை கூட வச்சிட்டே சுத்துறானே? அவனுக்கு நீ புத்தி சொல்லக் கூடாதா?”

“நீங்க சொல்றது எல்லாமே சரி தான் சார். அது அந்த செருப்புக்கு கூட நல்லா தான் தெரியும். ஆனா உங்க மகன் அதை தங்கச்  செருப்பா நினைக்கிறார். அதை யாரால சார் தூக்கிப் போட முடியும்?”

“ஏதாவது செஞ்சு அவனுக்கு உன் மேல வெறுப்பு வர வைக்க கூடாதா?”

“நான் செய்யலைனு நினைக்கிறீங்களா? இல்லை சொல்லலைன்னு நினைக்கிறீங்களா? என் கண்ணு முன்னாடியே அவர் வாழ்க்கை பாழாகுறதை பாத்துட்டு தான் இருக்கேன். ஆனா என்னால ஒண்ணும் செய்ய முடியலை”

“இப்படிச் சொன்னா எப்படி? நீ கல்யாணம் பண்ணிட்டு போய்றலாம்ல?”

“உங்க மகன் என்னைத் தான் கல்யாணம் பண்ணணும்னு நான் சொல்ல மாட்டேன். உங்க மகனுக்கு நீங்க வேற கல்யாணம் பண்ணி வைங்க. ஆனா என்னைக் கட்டாயப் படுத்தாதீங்க. எனக்கு அதை செய்ய முடியாது”

“நீ வேணும்னு பண்ணுற? நீ ஒரு சுயநலவாதி”

“நான் வேணும்னு பண்ணலை. எல்லாம் டிரை பண்ணிட்டு முடியாம தான் வாழ்க்கையை அதன் போக்குல விட்டுட்டேன். அவர் நல்லா இருக்கணும்னு ஆசையா தான் இருக்கு. ஆனா அவர் மனசு மாறனுமே?”

“நீ அவன் கண்ணு முன்னாடி இல்லைன்னா அவன் மனசு மாறுவான்”

“கண்டிப்பா உடைஞ்சு போய்ருவார் சார். நான் இல்லைன்னா பரணி ஒண்ணும் இல்லாம போய்ருவார் சார். அந்த பாவத்தை என்னால செய்ய முடியாது”

“இங்க பாரு யமுனா, என் மகனுக்கு மட்டும் இல்லை, எங்க வீட்ல இருக்குற எல்லாருக்கும் உன்னை ரொம்ப பிடிக்கும். பேசாம எங்க வீட்டுக்கு வந்துரு மா. உங்க காத்திருப்புக்கும் ஒரு அர்த்தம் வேணும் மா”, என்று அவர் கேட்க நெகிழ்ந்து போனாள் யமுனா.

“இவ்வளவு நடந்த பிறகும் நீங்க என்னை ஏத்துக்குறது உங்க பெருந்தன்மை சார். எனக்காக எங்க வீட்ல உள்ளவங்க பேசுனதைக் கூட மன்னிக்கிறீங்கன்னா அதுவே உங்க உயர்ந்த குணத்தைக் காட்டுது. ஆனா அதை ஏத்துக்க முடியாத நிலைமைல நான் இருக்கேன். இது நடக்காது சார்”

“ப்ச்”, என்று சலிப்புடன் அவர் சொல்லி விட்டுச் செல்ல அதே இடத்தில் மடங்கி அமர்ந்தாள் யமுனா. ஒரு தந்தையாக மகனின் வாழ்வை எண்ணி அவர் மனம் என்ன பாடுபடும் என்று அவளுக்கு புரிந்தது. இத்தனைக்கும் அவர் ஒன்றும் ஒண்ணும் இல்லாதவர் இல்லை. இந்த மதுரையையே தன்னுடைய கைக்குள் வைத்திருக்கிறார்.

இப்போது தமிழ்நாட்டில் அவர் செல்வாக்கு இருந்தாலும் கூடிய விரைவில் இந்தியாவில் கூட அவர் பேர் பெருமை பெரும். அப்படிப் பட்டவர் மகனின் வாழ்வை சரி செய்ய முடியாத படி இருக்கிறார். இதற்கெல்லாம் காரணம் மகனின் காதல். பரணிக்கு அவள் மேல் ஏன் இவ்வளவு காதல்? ஒரு மனுசனால இந்த அளவுக்கு சுயநலம் இல்லாம காதலிக்க முடியுமா? என்று வியப்பாக இருந்தது யமுனாவுக்கு.

முன்பு உண்மையிலே அவனின் நல்வாழ்வுக்காக அவனிடம் இருந்து ஒதுங்க தான் நினைத்தாள். ஆனால் அவனை கண்டு விட்டால் அவள் மனம் குறுகுறுக்கும். அவன் இல்லாமல் அவளுக்கும் வாழ்க்கை ஏது?

இத்தனைக்கும் தினமும் ஒரே அலுவலகத்தில் வேலை பார்த்தாலும் தேவை இல்லாமல் அவன் முன்பு போய் நிற்க மாட்டாள். எங்காவது அவனைக் கண்டு விட்டால் விலகித் தான் செல்லுவாள். ஆனாலும் சில நேரம், மீட்டிங் நடக்கும் போது, ஆடிட்டிங்க் நடக்கும் போது இருவரும் சந்தித்து தானே ஆக வேண்டும். நேருக்கு நேர் எதிர்ப் படும் போது அமைதியாக அவனைக் கடந்து செல்வாள். ஆனால் அவன் பார்வையில் அவளைக் கண்டதும் சிறு வெளிச்சம் வரும். மனதில் பூ பூக்கும். முகமும் மனமும் மென்மை அடையும்.