Advertisement

அத்தியாயம் 14 

உன் நினைவு கொல்கின்ற

வேளையில் தூக்கம் கூட காணக்

கிடைக்காத வரம் தான் எனக்கு!!!

ஒரு வழியாக நிஷாவின் திருமண நாளும் வந்தது. அதற்கு பரணி யமுனாவை தனியாக அழைத்திருந்தான். ஆனால் போகவா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தாள். எந்த முகத்தை வைத்து கொண்டு அவர்கள் வீட்டுக்கு செல்வாளாம்? அது மட்டும் இல்லை அங்கு சென்றால் தாமோதரனும் காவேரியும் என்ன சொல்வார்களோ என்று பயமாக இருந்தது.

ஆனால் அந்த பயத்துக்கு அவசியமே இல்லை என்பது போல முந்தைய நாளே தாமோதரனும் காவேரியும் ஒரு ஆன்மீக சுற்றுலாவுக்கு தாமோதரனின் அலுவலகத்தில் இருந்து போவதால் இவர்களும் சென்று விட்டார்கள்.

திருமண நாள் காலையில் வினோத் குளித்து கிளம்பி திருமணத்துக்கு தயாராகி விட்டான். ஆனால் யமுனா கிளம்பாமல் அமர்ந்திருந்தாள்.

தங்கையை முறைத்துப் பார்த்தவன் “நல்ல நாள் அதுவுமா மச்சானைக் கஷ்டப் படுத்தப் போறியா? அவரைக் கஷ்டப் படுத்தணும்னு தானே பிறப்பு எடுத்துருக்க? அதை இன்னைக்கு ஒரு நாள் ஒத்தி வச்சிக்கோ. எந்திரிச்சு கிளம்பு”, என்று ஒரு கடி கடித்தான்.

வேறு வழி இல்லாமல் அவள் கிளம்ப போக “இந்தா இதை பிடி. மச்சான் உன் கிட்ட கொடுக்கச் சொன்னாங்க”, என்று நீட்டினான்.

“என்ன அண்ணா இது?”, என்ற படியே அதை பிரித்துப் பார்த்தாள். அதில் கிராண்டாக ஒரு உடை இருந்தது. கூடவே அதற்கு மேட்சான நகைகளும்.

வெள்ளையில் சிவப்பு கலந்த உடையும் அதற்கேற்ப நகைகளும் என அவ்வளவு அழகாக இருக்க வினோத்தைப் பார்த்தவள் “ரொம்ப கிராண்டா இருக்குண்ணா. இது வேண்டாமே”, என்று சொல்ல அவளை முறைத்தான். வேறு வழி இல்லாமல் அதையே எடுத்துக் கொண்டு அறைக்குள் சென்றாள்.

அவள் கிளம்பி வந்த போது வினோத்துக்கே சற்று அதிகப் படியாக தான் தோன்றியது. ஆனால் யமுனாவின் அழகும் பல மடங்கு கூடித் தெரிந்தது.

‘”வா போகலாம்”, என்று சொன்னவன் அவளுடன் வெளியே வந்தான். வண்டியை எடுக்கும் போது அவனுக்கே தங்கையை இந்த உடையில் வண்டியில் அழைத்துச் செல்ல வேண்டுமா என்று தோன்றியது.

கால் டேக்ஸி அழைக்கலாம் என்று எண்ணும் போது பரணியே அவனை அழைத்தான்.

அதை எடுத்து “சொல்லுங்க மாப்பிள்ளை”, என்று வினோத் சொல்ல யமுனா அண்ணனை முறைத்தாள்.

“கிளம்பிட்டீங்களா மச்சான்”, என்று பரணி கேட்டதும் “கிளம்பியாச்சு”, என்றான் வினோத்.

“என் பொண்டாட்டி கிளம்பிட்டாங்களா?”

“மேடமும் கிளம்பிட்டாங்க”, என்று சொல்லி சிரித்தான் வினோத்.

“அப்படின்னா ஒரு அஞ்சு நிமிஷம் இருங்க. கார் அனுப்பி விடுறேன்”, என்று சொல்லி போனை வைத்தான் பரணி. சொன்ன படி கார் வர அதில் ஏறி அமர்ந்தார்கள். அங்கே சென்றதும் யமுனாவுக்கு ஏன் தான் போனோம் என்று தான் இருந்தது.

அமைச்சர் சரவணப் பெருமாளின் மகள் நிஷாவின் திருமணம் வெகு விமர்ஸையாக நடந்து கொண்டிருந்தது. மண்டபத்துக்கு வெகு தொலைவில் இருந்தே கட்டவுட்டும் போஸ்டர்களும் குவிந்திருந்தன.

இந்த திருமணத்துக்கு முதலமைச்சரும் வருவதாக இருந்ததால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலமாக இருந்தது. சரவணப் பெருமாள், விஷ்ணு, பரணியின் புகைப்படங்கள் ஒரு பக்கம் பெரிதாக கட்டவுட்டுகளாக இருந்தது என்றால் கட்சியில் இருக்கும் விஷ்ணுவின் மாமனார், மற்ற தலைவர்கள் என அனைவரின் புகைப்பட கட்டவுட்டுகள் ஒரு புறம், பெண் மாப்பிள்ளை, மாப்பிள்ளை வீட்டினர் அவர்களின் கட்டவுட் என பணம் வாரி செலவழிக்கப் பட்டிருந்தது.

யமுனா மற்றும் வினோத் சென்ற போது பரணி தான் வாசலுக்கு வந்து அவர்களை வரவேற்றான். அது அனைவரின் கண்களிலும் பட்டது வேறு யமுனாவுக்கு அவஸ்தையாக இருந்தது. அவர்களை மரியாதையாக அமர வைத்து விட்டு அன்னை தந்தையைத் தேடிச் சென்றவன் யமுனாவை கை காட்ட அவர்களும் அவளைத் தேடி வந்தார்கள்.

அவர்கள் தங்களை நோக்கி வர மற்ற அனைவரின் பார்வையும் யமுனா மற்றும் வினோத் மேல் நிலைக்க யமுனாவுக்கு மூச்சே நின்றது என்றால் வினோத்துக்கோ தர்மசங்கடமாக இருந்தது. ஏனென்றால் மணமகள் வீட்டில் உள்ளவர்கள் யமுனாவைப் பார்த்து வர மண்டபமே அவளைத் தான் பார்த்தது.

“வா மா, வாங்க தம்பி”, என்று வரவேற்ற கௌரி யமுனாவை அன்புடன் அனைத்துக் கொண்டாள். யமுனா சங்கடமாக உணர்ந்தாள். இந்த அன்பை அனுபவிக்க அவளுக்கு கொடுத்து வைக்க வில்லையே.

வினோத்தை வரவேற்ற சரவணப் பெருமாள் “வா மா”, என்று வரவேற்றார். அவள் தர்ம சங்கடமாக அவரைப் பார்க்க அவருக்கும் வேறு என்ன சொல்ல என்று தெரிய வில்லை.

விஷ்ணுவும் அங்கே வந்து யமுனா மற்றும் வினோத்தை வரவேற்று தன்னுடைய மனைவிக்கு அவர்களை அறிமுகப் படுத்தி வைத்தான். மேடையில் இருந்தே நிஷா யமுனாவை வரவேற்று தன்னுடைய கணவனுக்கு அறிமுகப் படுத்தி வைத்தாள். முகுந்தனும் சென்று அவர்களிடம் பேசினான்.

அந்த பத்து நிமிடத்தில் அங்கே இருந்த அனைவருக்கும் யமுனா மற்றும் வினோத் இருவரும் எவ்வளவு முக்கியமானவர்கள் என்று உணர்த்தி இருந்தார்கள் பரணி குடும்பத்தினர்.

இந்த விஷயத்தை எல்லாம் பரணி சரியாக கவனித்துக் கொண்டாலும் அவள் அழகைக் கண்டு திணறிக் கொண்டு தான் இருந்தான். தான் வாங்கிக் கொடுத்த உடை இவ்வளவு அழகா என்று தான் அவனுக்கு தோன்றியது.

அவளை தனியே சந்தித்து அவளிடம் சொல்ல வேண்டும் போல இருந்தது. ஆனால் அவனால் அது முடிய வில்லை. ஒரு வழியாக திருமணம் நல்ல படியாக முடிந்தது. பெரிய பெரிய வி.ஐ.பி எல்லாம் மணமக்களுக்கு பரிசு கொடுத்து உணவு உண்ண சென்று கொண்டிருந்தார்கள்.

வினோத்துக்கு எப்போது மேடைக்குச் சென்று கிஃப்ட் கொடுக்க வேண்டும் என்று கூட தெரிய வில்லை. அந்த அளவுக்கு கூட்டம். அவன் திணறி கொண்டிருக்க பரணியே அவர்கள் அருகில் வந்து “வாங்க ஒரு போட்டோ எடுக்கலாம்”, என்று அழைத்தான்.

வினோத் மற்றும் யமுனா இருவரும் பரணியுடன் மேடை ஏறினார்கள். “ஐயோ கிஃப்ட் வாங்கலையே”, என்று யமுனா திணற அவள் கரத்தில் ஒரு செயினைக் கொடுத்த வினோத் “நிஷாவுக்கு போட்டு விடு மா”, என்றான். அண்ணனை நன்றியோடு பார்த்தவள் நிஷாவுக்கு அதை அணிவித்தாள்.

போட்டோ எடுக்க ஏற்பாடு ஆனது. நிஷா அருகில் யமுனா நிற்க அவள் அருகே வினோத் நின்றிருந்தான். பரணி அவசரமாக நிஷா மற்றும் யமுனா இடையே சென்று நின்று கொண்டான். அது மட்டுமில்லாமல் அந்த புகைப்படத்தில் சரவணப் பெருமாள் கௌரி விஷ்ணு வர்தன் குடும்பமும் இருந்தது.

மொத்தத்தில் யமுனா மற்றும் வினோத்துடன் குடும்ப புகைப் படம் எடுக்கப் பட்டது. எதார்த்தமாக சூழ்நிலை அமைந்தாலும் இதை பிளான் செய்தது பரணி தான் என்று வினோத் மற்றும் யமுனாவுக்கு புரிந்தது.

அது மட்டும் இல்லாமல் யமுனா தான் இந்த வீட்டுக்கு சின்ன மருமகளாக வரப் போகிறாள் என்ற பேச்சையும் உலாவ விட்டது பரணி தான் என்றும் புரிந்தது.

வினோத் மற்றும் யமுனாவை உணவு உண்ண அழைத்துச் சென்றான் பரணி. உணவு வகைகளும் பிரம்மாண்டமாக இருந்தது. அவர்கள் உண்டு முடித்ததும் “இதுக்கு மேல இங்க இருக்க வேண்டாம். யமுனா டயர்ட் ஆகிட்டா. கிளம்புங்க”, என்று சொல்லி வினோத் மற்றும் யமுனாவை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்தான்.

ஏனென்றால் இதற்கு மேல் இங்கே இருந்தால் யமுனாவின் குடும்பம் பற்றிய கேள்வி எழும் என்பதால் தான் அவர்களை அனுப்பி வைத்தான்.

காரில் செல்லும் போது “ரொம்ப தேங்க்ஸ் அண்ணா, நான் ஒரு கிஃப்டும் வாங்கலை. பணமா கொடுத்துறலாம்னு தான் நினைச்சேன். ஆனா அங்க போய் வெறும் கையோட வந்துருக்கோம்னு தோணுச்சு”, என்றாள் யமுனா.

“நீ குழப்பத்துல இருக்கேன்னு தெரியும். அதான் நான் உன் கிட்ட கேக்காமலே வாங்கிட்டேன். பரணி மாப்பிள்ளை சம்பளத்தை அள்ளி அள்ளிக் கொடுக்குறார். அதான் நிஷாவுக்கு தங்கத்துலே வாங்கிட்டேன். உன் அண்ணி தான் ஐடியா சொன்னா. ஆனா நீ பண்ணுறது நியாயமே இல்லை யமுனா”

“நான் என்ன செஞ்சேன் அண்ணா?”

“இன்னைக்கு பாத்த தானே அவங்க உனக்கு கொடுத்த மரியாதையையும் அவங்க உயரத்தையும். அதே மரியாதையை நாமளும் திருப்பி கொடுக்கணும் மா. பிளீஸ் மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிக்கோ. நான் முன்னே நின்னு உங்க கல்யாணத்தை நடத்துறேன் யமுனா. அம்மா அப்பாவை கொஞ்ச நாள் கழிச்சு சரி பண்ணிக்கலாம்”

“வேண்டாம் அண்ணா, அம்மா அப்பாக்கு மட்டும் இல்லை. எனக்கே இது சரி வராதுன்னு தோணுது. அவங்க உயரத்தை பாத்த தானே? அங்க எப்படி என்னால தாக்கு பிடிக்க முடியும்? அவருக்கு வேற பொண்ணு கிடைப்பாண்ணா. எனக்கு வேற எங்கயாவது வேலை வாங்கித் தாயேன். நான் இங்க இருந்து போனா பரணி என்னை மறந்துருவாங்க”

“உன்னை எல்லாம் திருத்தவே முடியாது. கோழிக்கு எங்க தெரியும் வைரக் கல்லோட மதிப்பு? அதை கூலாங்கல்லுன்னு தான் நினைக்கும்”, என்று சொன்னவன் வாயை மூடிக் கொண்டான்.

ஆனால் அடுத்த நாளே அவள் சொன்னதை எல்லாம் பரணியிடம் சொல்லி விட்டான். அதைக் கேட்டு கொதித்துப் போனான் பரணி. என்னை விட்டுப் போய்விடுவாயா என்று அவள் கழுத்தை நெரித்து கேட்க வேண்டும் போல இருந்தது.

Advertisement