Advertisement

வீட்டுக்கு வந்ததும் அவள் விஷயத்தைச் சொல்ல தாமோதரன் மற்றும் காவேரி இருவரும் தடுத்தார்கள். ஆனால் யமுனா அவர்களிடம் போராடி சண்டை போட்டு தான் வேலைக்குச் செல்ல அனுமதி வாங்கினாள். வினோத்க்கு சந்தோஷமாக இருந்தது.

அடுத்த நாள் காலை எழும் போதே யமுனாவுக்கு புத்துணர்வாக இருந்தது. அன்று கல்லூரிக்கு லீவ் போட்டிருந்தாள். முதல் நாள் என்பதால் வினோத் தான் அவளை அழைத்துச் சென்றான். ஆனால் அவளிடம் எதுவும் பேச வில்லை. இறக்கி விட்டதும் ‘உனக்கு நான் சொல்ல வேண்டியது இல்லை. இது பெரிய ஆபீஸ். அதனால வேலைல எப்பவும் கவனமா இருக்கணும். அதை மட்டும் மனசுல வச்சிக்கோ. சாயங்காலம் கூப்பிட வரேன்”, என்று சொல்லி விட்டுச் சென்றான். அலுவலகம் உள்ளே சென்ற போது கொஞ்சம் படபடப்பாக தான் இருந்தது. இவ்வளவு பெரிய அலுவலகத்திலா வேலை செய்யப் போகிறேன் என்று மிரண்டாள். கூடவே பரணியின் உயரமும் புரிந்தது.

அதுவும் அங்கிருந்த கருப்பு நிற பளிங்கு கல்லில் பரணி குருப் ஆப் கம்பெனிஸ் கீழே என்ன என்ன கம்பெனிகள் வருகிறது என்று பொரிக்கப் பட்டிருக்க இந்த அலுவலகம் அவன் சாம்ராஜியத்தின் ஒரு துளி என்று மட்டும் புரிந்தது. இவ்வளவு உயரத்தில் இருப்பவனையா தன்னுடைய பெற்றோர் அவமானப் படுத்தினார்கள் என்று தோன்றியது? தானும் அவனை வெகு சாதாரணமாக நடத்துகிறோமோ என்ற கேள்வி எழுந்தது. நான் அவனிடம் உரிமையாக கோபப் படுவதும், அவன் எனக்காக பார்த்து பார்த்து செய்வதும் ரொம்பவே அதிகம் தான் என்று அவளுக்கே தோன்றியது.

உள்ளே சென்றதும் “யாரைப் பாக்கணும் மேடம்?”, என்று ரிசப்ஷனில் இருந்த பெண் கேட்க தன்னுடைய பையில் இருந்த பரணியின் கார்டைக் கொடுத்தாள் யமுனா. அந்த கார்டைப் பார்த்து திகைத்து போனாள் ரிசப்சனிஸ்ட்.

பரணி மூன்று விதங்களில் விசிட்டிங் கார்ட் வைத்திருந்தான். அவன் நண்பர்கள், அவன் அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் அனைவருக்கும் சில்வர் கார்ட். தொழில் சம்பந்தப்பட்ட, தந்தையின் வாயிலாக வரும் அரசியல் சம்பந்தப் பட்டவர்களுக்கு கோல்ட் கார்ட், அது போக பிளாட்டினம் கார்டும் வைத்திருக்கிறான்  என்று ரிசப்சனிஸ்ட் கேள்வி பட்டிருக்கிறாள். ஆனால் அதை இப்போது தான் பார்க்கிறாள். ஏனென்றால் அவளுக்கு தெரிந்து பரணி யாருக்கும் அந்த கார்டை கொடுத்ததே இல்லை.

ஒற்றைக் கார்டில் வந்திருப்பவள் தனக்கு எவ்வளவு முக்கியம் என்று அங்கே வராமலே ரிசப்சனிஸ்டுக்கு உணர்த்தி இருந்தான் பரணி. இது புரியாத யமுனாவோ திகைப்புடன் அவளைப் பார்த்தாள்.

“என்ன ஆச்சு மேடம்? சார் ஆஃபிஸ்ல இல்லையா? இன்னைக்கு பாக்க முடியாதா? ஆனா இன்னைக்கு வரச் சொன்னாங்களே? சரி நான் கால் பண்ணிக்கிறேன்”, என்று யமுனா சொல்ல “உங்களைப் பாக்க கூடாதுன்னு சொன்னா என் வேலை போயிரும் மேடம். சார் இருக்காங்க”, என்றாள்.

“என்ன சொல்றீங்க?”, என்று யமுனா குழப்பமாக கேட்க “ஒண்ணும் இல்லை மேடம், சார் பிரீயா தான் இருக்காங்க. ஒரு நிமிஷம் இருங்க”, என்று சொன்னவள் போனை எடுத்து ஆஷா என்ற பெண்ணுக்கு அழைத்தாள்.

“ஹலோ ஆஷா ஹியர்”

“ஆஷா எம்.டியைப் பார்க்க ஒரு மேடம் வந்திருக்காங்க”

“இன்னைக்கு சார்க்கு நிறைய அப்பாயின்மெண்ட் இருக்கு. இப்ப பாக்க மாட்டாங்க”

“புரியாம பேசாத ஆஷா. சாரை பாக்க வந்திருக்குறவங்க சாரோட விசிட்டிங் கார்ட் வச்சிருக்காங்க”

“கார்ட் வச்சிருந்தா என்ன?”

“ஐயோ ஆஷா உனக்கு எப்படி புரிய வைக்கிறது? மேடம் கையில இருக்குறது பிளாட்டினம் கார்ட்”

“வாட்?”

“ஆமா, சீக்கிரம் வா”

“இதோ உடனே வரேன்”, என்று சொல்லி அங்கே சென்றவள் “குட் மார்னிங் மேடம், நான் ஆஷா. சாரோட பி.ஏ. வாங்க சாரை பாக்கலாம்”, என்று அழைத்துச் சென்றாள்.

பரணி எம்.டி என்ற பெயர் பலகை போட்ட அறையின் முன்னே நின்று கதவைத் தட்டி விட்டு உள்ளே சென்றாள் ஆஷா. அவள் பின்னே போகவா வேண்டாமா என்ற யோசனையில் வெளியேவே நின்றிருந்தாள் யமுனா.

ஆஷா உள்ளே சென்றதும் “யமுனா வந்தாச்சா?”, என்று கேட்டான் பரணி.

“யெஸ் சார், மேடமை உள்ளே அனுப்பவா?”

“அனுப்புங்க. அப்புறம் நீங்க ஏ.கே கன்ஸ்ட்ரக்சன் டீட்டேயில் மேனேஜர் கிட்ட கலெக்ட் பண்ணிட்டு வாங்க”, என்று சொல்ல சரி என்னும் விதமாய் தலையசைத்துச் சென்றாள்.

வெளியே வந்த ஆஷா “சார் கூப்பிடுறங்க மேடம், உள்ள போங்க”, என்று சொல்லி விட்டுச் சென்றாள். தயக்கத்துடன் உள்ளே நுழைந்த யமுனா அதிர்ந்தாள் என்று தான் சொல்ல வேண்டும். அவனது அறையே அவ்வளவு பிரம்மாண்டமாக இருந்தது. அதுவும் கோர்ட் சூட் அணிந்து நடுநாயகமாக அமர்ந்திருந்தவனைப் பார்த்து பிரம்மித்தாள் என்று தான் சொல்ல வேண்டும்.

தன்னிடம் காதலுக்காக கெஞ்சிக் கொண்டிருப்பவனா இவன் என்பது போல இருந்தது அவன் தோற்றம். அவளைக் கண்டதும் சிறு சிரிப்புடன் எழுந்து அவளை நோக்கி வந்தவன் “ஒரு வழியா மகாராணியோட பாதம் இந்த ஏழையோட குடிசைல பட்டுருச்சே”, என்றான்.

“என்ன விளையாடுறீங்களா? நீங்க இவ்வளவு பெரிய மஹாராஜாவான்னு நானே பிரம்மிச்சு போய் நிக்குறேன். எவ்வளவு பெரிய ஆள். ஆனா உங்களை நான் ரொம்ப ஈஸியா எடுத்துக்குறேன்ல?”, என்று கலக்கமாக கேட்டாள்.

“அதுக்கான உரிமை உனக்கு தான் இருக்கு பேபி. சரி வா உக்காரு. என்ன சாப்பிடுற?”

“ஒண்ணும் வேணாம், எனக்கு ரொம்ப படபடப்பா இருக்கு. இவ்வளவு பெரிய ஆஃபிஸ்ல என்னால வேலை பாக்க முடியுமா?”

“உன்னால கண்டிப்பா முடியும் பேபி”

“சரி எனக்கு என்ன வேலை? நான் எங்க போகணும்?”

“உடனே வேலையைப் பாக்கப் போகனுமா? கொஞ்ச நேரம் என் கிட்ட பேசக் கூடாதா பேபி?”

“பிளீஸ், இப்ப பேசுற மாதிரி என் மனநிலை இல்லை. எனக்குள்ள இருக்குற குற்ற உணர்ச்சியை இன்னும் அதிகப் படுத்தாதீங்க”, என்று சொல்ல உடனே அவளை முறைத்து விட்டு ஆடிட்டர் வரதராஜனை அழைத்தான். சிறிது நேரத்தில் அறுபது வயது மதிக்க தக்க ஒரு மனிதர் உள்ளே வந்தார்.

அவரைக் கண்டு சிரித்த பரணி “உக்காருங்க வரதன் சார்”, என்று சொன்னதும் யமுனா அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தார். அவர் யமுனாவைப் பார்க்க அவள் வணக்கம் என்னும் விதமாய் புன்னகைத்தாள். அவரும் வரவேற்பாக சிரித்தார்.

“வரதன் சார், இவங்க பேர் யமுனா. இன்னைல இருந்து நீங்க தான் இவங்களை டிரெயின் பண்ணப் போறீங்க?”, என்றான்.

அவனை வியப்பாக பார்த்தார் வரதராஜன். ஆடிட்டர் வேலை என்பது சாதாரணமானது இல்லையே? அதுவும் பரணி குருப் ஆப் கம்பெனிஸ் என்பது பெரிய சாம்ராஜியம். அதை இந்த சின்ன பெண்ணால் எப்படி நிர்வகிக்க முடியும் என்று வியப்பாக இருந்தது. அவர் பார்வை புரிந்தவன் “யமுனாவால் முடியும் சார். உங்களுக்கு தெரிஞ்ச நெழிவு சுழிவுகளை சொல்லிக் கொடுங்க. புராப்பரா டிரெயினிங்க் கொடுங்க. இனி இவங்க தான் பரணி குருப் ஆப் கம்பெனிசின் பெர்மனண்ட் ஆடிட்டர்”, என்று சொல்ல அவர் சரி என்று கேட்டுக் கொண்டார்.

“சார் கூட போ யமுனா. என்ன டவுட்னாலும் கேளு”, என்று சொல்லி அனுப்பி வைத்தான். இருவரும் சென்றதும் தன்னுடைய போனை எடுத்தவன் “யமுனா தான் இந்த சாம்ராஜியத்தோட வருங்கால ராணி. அதனால கொஞ்சம் கேர் எடுத்துக்கோங்க வரதன் சார். ஆனா அவ கிட்ட காட்டிக்காதீங்க”, என்று மெஸ்ஸேஜ் அனுப்பி வைத்தான். சீட்டில் அமரும் முன் அதைப் பார்த்தவர் சிறு புன்னகையுடன் அவளைப் பார்த்தார்.

“என்ன சார் அப்படிப் பாக்குறீங்க?”, என்று கேட்டாள் யமுனா. அவரது ஆராயும் பார்வை அவளுக்கு குழப்பத்தை தந்தது.

“ஒண்ணும் இல்லை மா, உக்காருங்க. இன்னைக்கு பேசிக்ஸ் பாப்போம்”, என்று ஆரம்பித்து அவர் ஆடிட்டர் எக்ஸாம் பத்தி சொல்ல “நேத்து தான் சார் அந்த எக்ஸாம் எழுதி முடிச்சேன். பரணி சார் தான் ஸ்பெஷல் டிரெயினிங்க் எடுக்க ஏற்பாடு செஞ்சாங்க”, என்றாள்.

பரணியின் பிளான் தெளிவாக புரிந்தது. யமுனாவை உண்மையிலே இந்த சாம்ராஜியத்தின் ராணியாக மாற்றும் வேலையை அவன் ஏற்கனவே ஆரம்பித்து விட்டான் என்று புரிந்தது. அவரும் தனக்கு தெரிந்த வேலைகளை ஆதியோடு அந்தமாக சொல்லிக் கொடுத்தார்.

யமுனாவுக்கு சொல்லிக் கொடுக்க அவருக்கு ஈசியாகவும் இருந்தது. எளிதாக அனைத்தையும் கற்றுக் கொண்டாள். இன்னும் மூன்று மாதங்களுக்கு பிறகு அவர் வேலையை விட்டுவிட்டு பாரினில் சென்று மகனுடன் செட்டில் ஆகப் போகிறார் என்று தெரிந்து யமுனாவும் தீவிரமாக வேலைகளை கற்க ஆரம்பித்தாள். அது அவளுக்கு பிடிக்கவும் செய்தது.

அடுத்த மூன்று மாதத்தில் பரணியின் அலுவலகத்தில் யமுனாவுக்கான டிரைனிங்க் தீவிரமாக நடந்தது. வரதன் சாரும் அவளை வாழ்த்தி விட்டு வேலையை விட்டுச் சென்றார். இதற்கிடையில் இன்னும் இரண்டு நல்ல விஷயங்கள் நடந்தது. ஒன்று காயத்ரி கர்ப்பமாக இருக்கும் தகவல் வந்தது. அதை தெரிந்து அனைவரும் சந்தோஷப் பட்டார்கள்.

வினோத் மற்றும் யமுனா இருவரும் அதை பரணியிடம் சொல்லி “காயத்ரி அவ புருசனோட சந்தோசாமா வாழுறதுக்கு காரணம் நீங்க தான் சார்”, என்று நன்றி தெரிவித்தார்கள்.

அடுத்த நல்ல விஷயம் நிஷாவுக்கு நல்ல வரன் அமைந்தது. நிஷா ஆசைப் பட்ட படி லண்டனில் செட்டில் ஆகப் போகும் நல்ல வாழ்க்கை அவளை தேடி வந்தது.

இந்த விஷயத்தை நிஷா யமுனாவிடம் சொல்ல வில்லை. அன்று அவர்கள் வீட்டுக்கு சென்ற போது பேசியதை தவிர அடுத்து நிஷா யமுனாவிடம் பேசவே இல்லை. அண்ணனை தவிக்க விடுகிறாளே என்று கோபம்.

ஆனால் நிச்சய விஷயத்தை பரணி தான் யமுனாவுக்கு சொன்னான். “ரொம்ப சந்தோஷம் சார், நான் வாழ்த்து சொன்னேன்னு சொல்லுங்க”, என்று ஒரு மாதிரி குரலில் சொன்னாள் யமுனா.

“ஏன் நான் சொல்லணும்? நீயே உன் பிரண்டுக்கு சொல்ல வேண்டியது தானே?”

“அவ என் கிட்ட பேச மாட்டா”

“இது என்ன புதுக்கதை?”

“அதை விடுங்க. உண்மையிலே எனக்கு சந்தோஷமா இருக்கு. சரி எனக்கு வேலை இருக்கு, நான் கிளம்புறேன்”, என்று சொல்லி விட்டாள்.

உடனே தங்கையை அழைத்தவன் என்னவென்று விசாரிக்க நிஷா அவளுடைய மனதில் இருப்பதைச் சொன்னாள். உடனே தங்கையைக் கடிந்து கொண்டு யமுனாவைப் பற்றி பேசினான். “எனக்கும் யமுனாவுக்கும் இடையில உங்க நட்பு வரக் கூடாது நிஷா. என் காதலை எப்படி காப்பாத்திக்கணும்னு எனக்கு தெரியும். நீ அவ கிட்ட பேசு நிஷா”, என்றான்.

அடுத்த அரை மணி நேரத்தில் நிஷாவே யமுனாவை அழைத்து பேசினாள். அவளை தவறாக நினைத்ததற்கு மன்னிப்பும் கேட்டாள். யமுனாவுக்கும் நிஷா பேசியது சந்தோசமே. இது பரணியின் வேலை என்றும் புரிந்தது .

காரிகை வருவாள்…..

Advertisement