Advertisement

இருவரின் தோள்கள் மட்டும் ஒட்டிக் கொண்டது. அது மட்டும் இல்லாமல் அவளது கரத்தை எடுத்து தன்னுடைய கரங்களுக்குள் பொதிந்து கொண்டான். அதற்கே அவள் மனம் சிறகடித்து பறந்தது. தன்னிடம் வந்து சேர்ந்த நிம்மதி வந்தது அவளுக்கு.

தன்னுடைய தொடுகை அவளுக்கு நிம்மதியைத் தரும் என்று ஏற்கனவே உணர்ந்தவன் இப்போதும் அவளை ஒட்டிய படியே இருந்தான். தோள்கள் உரச அமர்ந்திருந்தாலும் அவன் முகம் வேறு பக்கமாகதான் இருந்தது. இந்த அருகாமையே போதும் போல இருந்தது. ஆனால் அவள் மனது அலைபாய்ந்தது. முதல் முறை அவன் நெஞ்சில் சாய்ந்த அந்த நொடி அவள் மண்டைக்குள் எழுந்து அவளை படுத்தி எடுத்தது. அது மட்டுமில்லாமல் அன்று அனைவரும் கிளம்பியதும் அவன் அவள் சாப்பிட்டு வைத்திருந்த ஐஸ்கிரிமை எடுத்து சாப்பிட்ட நிகழ்வும் நினைவில் வந்து அவளை சலனப் படுத்தியது. அந்த சலனத்தை விரட்ட சத்தத்தால் தான் முடியும் என்று எண்ணி அவனிடம் பேச முடிவெடுத்தாள்.

“நான் ஒண்ணு கேக்கவா?”, என்று கேட்டாள் யமுனா.

“சொல்லு டி”

“அன்னைக்கு ஒன்னாம் தேதில இருந்து ஆபீஸ் வரச் சொன்னீங்க தானே? ஆனா நான் கால் பண்ணிக் கேட்டதுக்கு எதுக்கு வர வேண்டாம் வேலை இல்லைன்னு சொன்னீங்க? எங்க அப்பா என்னை நக்கலா ஒரு பார்வை பார்த்தார் தெரியுமா? நானா உங்க கிட்ட வேலை கேட்டேன்? நீங்க தானே வேலைக்கு வரச் சொன்னீங்க?”, என்று கேட்டவளின் குரலில் சிறிது சூடு இருந்தது.

“முதல்ல உன்னை வேலைக்கு வர வைக்கணும்னு தான் டி நினைச்சேன். ஆனா முன்னாடி உனக்கு அப்ளை பண்ணினதுக்கு எக்ஸாம் டேட் போட்டிருந்தாங்க. கால் டிக்கட் வரப் போகுதுன்னு மெயில் வந்தது”

“யார் மெயிலுக்கு”

“உன் மெயிலுக்கு தான்”

“என்னது? அதை எப்படி நீங்க பாத்தீங்க? என் பாஸ்வேர்ட் எப்படி உங்களுக்கு தெரியும்? அண்ணா தான் சொன்னனா?”

“ஆமா டி, சரி கதையைக் கேளு. மெயில் வந்ததும் சரி பிள்ளையை எக்ஸாம் வரைக்கும் படிக்க வைப்போம்னு யோசிச்சு தான் வேலைக்கு வர வேண்டாம்னு சொன்னேன். இத்தனை நாள் எல்லார் கிட்டயும் இந்த புக் டீட்டேயில்ஸ் கேட்டு டெல்லில இருந்து இந்த புக் எல்லாம் வர தான் இத்தனை நாள் ஆகிருச்சு”, என்று சொல்ல அவளுக்கு அவனை அப்படியே அள்ளி அணைக்க வேண்டும் போல இருந்தது. யார் செய்வாங்களாம் இப்படி? இந்த அன்புக்கு தான் தகுதி ஆனவள் தானா? என்ற கேள்வி எப்போதும் போல இப்போதும் எழுந்தது.

அவள் அமைதியானதும் அவனும் அமைதியாக இருந்தான். அந்த அமைதி இருவர் மனதையும் சலனப் படுத்தியது. தலை குனிந்திருந்த அவளை பார்வையிட்டான். அவன் பார்வை அங்குலம் அங்குலமாக அவளை அலசியது. இதற்கு மேல் ஒட்டிக் கொண்டு அமர்ந்திருப்பது சரியல்ல என்று இருவருக்குமே தோன்றியது.

“சரி பேபி, எனக்கு வேலை இருக்கு. நீ கிளம்பு”, என்று சொல்லி எழுந்து கொண்டான். அவளும் அரை மனதாக எழுந்து நிற்க பட்டென்று அவளை தன்னை நோக்கி இழுத்தவன் அவளது பருவின் மீது தன்னுடைய முத்ததைப் பதித்து விட்டு காரை நோக்கிச் சென்று விட்டான்.

திகைத்து விழித்தவளுக்கு முகம் எல்லாம் சிவந்து விட்டது. அதே இடத்தில் அமர்ந்தாள். பன்னிரெண்டு மணி அடிக்கவும் நடப்புக்கு வந்தவள் அவன் காரைத் தேடினாள். காருக்குள் அமர்ந்து அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான். தான் செல்லாமல் அவன் செல்லமாட்டான் என்று புரிந்து எழுந்து நடந்தாள்.

அவள் கார் அருகே வந்ததும் அவன் கண்ணாடியை இறக்க சிறு வெட்கத்துடன் அவனைப் பார்த்தாள். அவன் கொடுத்த முத்தம் அவள் நெஞ்சில் இனித்தது. அவளுக்கு கோபம் இல்லாததே அவனுக்கு பெரியது என்றால் அவள் கன்னச் சிவப்பு அவனை பெரிதும் இம்ஸைப் படுத்தியது. “எனக்கு உன்னைக் காருக்குள்ள இழுத்து போட்டுட்டு போகணும் போல இருக்கு பேபி. பிளீஸ் சீக்கிரம் இங்க இருந்து போய்ரு”, என்று  அவன் முணுமுணுக்க அவள் முகம் மேலும் சிவந்தது. சிறு தலையசைப்போடு வீடு நோக்கி நடந்தாள். அவள் அவளுடைய தெருவுக்குள் திரும்பியதும் காரை எடுத்துச் சென்றான்.

புத்தகத்துடன் வீட்டுக்கு வந்த மகளைக் கண்ட காவேரி முறைத்தாளே தவிர வேறு ஒன்றும் கேட்க வில்லை. “நல்லதா போச்சு, அம்மா பேசலை. அப்படி பேசிருந்தா இப்ப இருக்குற சந்தோஷமான மனநிலை போயிருக்கும்”, என்று எண்ணிக் கொண்டு தன்னுடைய அறைக்கு வந்தவள் அவனை தான் அழைத்தாள்.

“சொல்லு பேபி, வீட்டுக்கு போய்ட்டியா?”

“ஆமா, நீங்க கிளம்பிட்டீங்களா?”

“ம்ம் ஆபீஸ் போயிட்டு இருக்கேன்”

“சரி பாத்து போங்க”

“ம்ம், அப்புறம் யமுனா ஒரு விஷயம்”

“சொல்லுங்க”

“இனி இந்த டிரஸ் போடாத”, என்று சொன்னவன் போனை வைத்து விட்டான்.

குழப்பமாக தன்னைப் பார்த்தாள். ஆனால் அவளுக்கு எந்த வித்தியாசமும் தெரிய வில்லை. “எதுக்காக அப்படிச் சொன்னான்? ஒரு வேளை இந்த டிரஸ்ல அவனை ஓவரா டிஸ்டர்ப் பண்ணிருப்பேனோ? ஆனா நான் எப்படி போய் நின்னாலும் அவன் ரசிக்க தான் செய்வான். இப்படி இது போடாதேன்னு சொல்ல மாட்டானே?”, என்று எண்ணிக் கொண்டு “எதுக்கு இப்படிச் சொன்னீங்க?”, என்று அவனுக்கு மெஸ்ஸேஜ் அனுப்பி வைத்தாள்.

அதை படித்துப் பார்த்தவன் வெட்கப்படும் பொம்மையை அனுப்பி வைத்தான். கடவுளே பைத்தியம் பிடிக்க வைக்கிறானே என்று அவள் திகைத்து விழிக்கும் போதே ரிக்ஷா மாமா படத்தில் இருக்கும் பாத்துட்டான் பாத்துட்டான் என்ற வீடியோ கிளிப்பை அனுப்பி இருந்தான்.

“என்ன இப்படி வருது? இவன் என்ன பாத்தானு தெரியலையே? சட்டை பட்டனும் மேல வரைக்கும் இருக்கு. ஷாலும் போட்டிருக்கேன். அப்புறம் என்ன?”, என்று எண்ணியவள் அந்த உடையை திருப்பி திருப்பி பார்த்தாள். அப்போது தான் அவள் கண்ணில் விழுந்தது அவளது சட்டையில் இடையை ஒட்டி இருந்த கிழிசல். அதை அவள் இப்போது தான் பார்க்கிறாள். அந்த கிழிசல் வழியாக அவளுக்கே அவளது இடை பளீரென்று தெரிய நிச்சயம் அவனும் இதைப் பார்த்திருப்பான் என்று தெரிந்தது. சட்டென்று வெட்கமும் திகைப்பும் எழுந்து மொத்தமாக சிவந்து போனாள் யமுனா.

“என்ன பாத்துட்டியா? என்னைக் கொல்ற டி. மிஸ் யு பேட்லி”, என்று தாபத்துடன் அவனிடம் இருந்து மேஸ்ஸேஜ் வந்தது. உதடு கடித்து தன்னுடைய உணர்வுகளை அடக்கினாள். கூடவே அவளது கண்கள் கண்ணாடி வழியாக அந்த பருவை பார்வை இட்டது. அவன் ரசித்த இந்த பரு இன்னும் மூன்று நாட்களில் போய் விடுமே என்று கவலைப் பட்டாள். அன்றைய நாள் இருவரும் தூங்க வெகு நேரம் ஆனது.

அடுத்து வந்த நாட்கள் யமுனாவுக்கு வேகமாக நகர்ந்தது. ஒரு வழியாக கல்லூரியில் கிளாஸ் அட்டன் பண்ணி வீட்டிலும் நல்ல படியாக படித்து மாலை சுந்தரேசனிடமும் கொச்சிங்க் போனாள். அவனுடைய ஆசைப் படி தேர்வை நல்ல படியாக எழுதினாள். இத்தனை நாட்களில் பரணி அவளைக் காண வரவில்லை என்றாலும் அடிக்கடி அவளுக்கு அழைத்து எப்படி படிக்கிறாள் என்று தெரிந்து கொள்வான். தேர்வுக்கு முந்தைய நாள் அவளை அழைத்து நன்றாக எழுதும் படி வாழ்த்தும் தெரிவித்தான். அவளுக்கு அருகில் இல்லை என்றாலும் பக்கபலமாக இருந்தான்.

தேர்வு முடிந்த அடுத்த நாளே பரணி அவளை காண கோவிலுக்கு வந்தான். “எக்ஸாம் எப்படி பண்ணின?”, என்று தான் முதலில் கேட்டான்.

“நல்ல பண்ணிருக்கேன். ஆனா பயமா இருக்கு”, என்றாள். முதலில் அவளால் நிச்சயம் அதில் பாஸ் பண்ண முடியாது என்ற உறுதியில் இருந்தாள். ஆனால் அவன் தனக்காக ஸ்பெஷல் கிளாஸ் ஏற்பாடு செய்தது, புத்தகம் வாங்கிக் கொடுத்தது, அவள் படிப்பை பற்றி அக்கறையாக விசாரித்தது என அனைத்தும் சேர்ந்து அவனுக்காகவாது பாஸ் பண்ண வேண்டும் என்ற எண்ணத்தைக் கொடுத்திருந்தது. உண்மையிலே பாஸ் ஆகி விடுவோமா என்று பயந்து தான் போனாள்.

“ரிசல்ட் எப்படி வேணும்னாலும் இருக்கட்டும் பேபி. அதை விடு. அப்புறம் இந்தா”, என்று சொல்லி அவனது கார்டை அவளுக்கு கொடுத்தான்.

“உங்க கார்ட் எதுக்கு?”

“நாளைக்கு ஆபிஸ்க்கு வா. இந்த கார்ட் காமிச்சா நேரடியா என்னைப் பாக்க விட்டுருவாங்க. அதுக்கு தான்”

“ஏன் கார்டை காமிச்சு தான் உங்களைப் பாக்க வரணுமா? வெளிய இருந்து ஒரு கால் பண்ணினா என்னைக் கூப்பிட வர மாட்டீங்களா?”, என்று செல்ல சிணுங்களுடன் வந்தது அவள் குரல்.

“வரலாம் தான். ஆனா அப்படி வர முடியாத சூழ்நிலையும் வரலாம் பேபி. நீ வர நேரம் நான் மீட்டிங்ல இருந்தா போனை எடுக்க மாட்டேன். அப்ப நீ வெளியவே நிப்பியா? இந்த கார்ட் இருந்தா எந்த பிரச்சனையும் இல்லை தானே?”

“அதுவும் சரி தான். ஆனா உங்க ஆஃபிஸ்ல எனக்கு தான் வேலை இல்லையே? வேகன்சியும் இல்லையே? அப்படி தானே சொன்னீங்க?”

“உனக்கு இன்னும் அந்த கோபம் போகலையா? அது நீ படிக்கணும்னு தான் அப்படி சொன்னேன். நீ வேலைக்கு வந்தா உனக்காக நான் ஒரு கம்பெனியவே ஆரம்பிப்பேன் டி.  நீ எப்ப தான் என்னை புரிஞ்சிக்கப் போறியோ?”

“நான் காலேஜ் போகணுமே?”

“நாளைக்கு காலேஜ்க்கு லீவ் போடு. நாளான்னைல இருந்து நீ காலைல காலேஜ் முடிச்சிட்டு ஆபீஸ் வந்தா போதும். சரி நாளைக்கு வருவ தானே?”

“நாளைக்கே வரணுமா? ஒரு ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்துக்கவா? படிச்சு படிச்சு உண்மையிலே களைச்சிட்டேன்”

“அந்த ரெஸ்ட்டை ஆஃபிஸ்க்கு வந்து எடு. யாரும் உன்னை ஒண்ணும் சொல்லப் போறது இல்லை”, என்று சொல்ல சரி என்று தலையசைத்தாள்.

Advertisement