Advertisement

அத்தியாயம் 13 

மலர்ப் படுக்கை கூட

மரண மேடை தான்

நீயில்லாமல் போனால்!!!

பார்க்குக்கு வரச் சொன்ன பரணியை யமுனா கோபமாக பேச அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் நிதானமாக எழுந்து அவளை நெருங்கிய பரணி அவள் பேச்சில் சிறிதும் பாதிக்கப் படாதவனாக ஒரு விரல் நீட்டி அவள் கன்னத்தில் தொட்டு “இது என்னது டி?”, என்று கேட்டான்.

திகைப்பாக அவனைப் பார்த்தவள் அவன் தொட்ட இடத்தில் கை வைத்துப் பார்த்தாள். அங்கே ஒரு பரு இருந்தது.

தன்னுடைய கோபத்தை மறந்து அவன் செய்கையில் தடுமாறி “ப்ச், பரு வந்திருக்கு. இது கூட தெரியலையா? சரி என்னை எதுக்கு வரச் சொன்னீங்க? சீக்கிரம் சொல்லுங்க. நான் போகணும்”, என்றாள்.

“முதல்ல இங்க வா. உக்காரு. எதுக்கு இவ்வளவு அவசரம்?”, என்று சொல்லி அவள் கை பற்றி அங்கிருந்த பெஞ்சில் அவளை அமர வைத்தவன் சற்று தள்ளி அவனும் அமர்ந்து கொண்டான்.

“சொல்லுங்க”, என்று சொல்லி அவள் அவன் முகம் பார்க்க “முதல்ல நீ சொல்லு. இது எதுக்கு வந்திருக்கு? நேத்து ஈவீனிங்க் உன் முகத்துல இது இல்லையே?”, என்று கேட்டான்.

“இப்படி கேட்டா என்ன சொல்ல? வெயிட் வெயிட்.. நேத்து நீங்க எப்ப என்னைப் பாத்தீங்க?”

“நீ கோவிலுக்கு வந்தப்ப பாத்தேன்”

“நீங்க கோவிலுக்கு வந்தீங்களா?”

“ஆமா நீ வெள்ளி செவ்வாய் கோவிலுக்கு வரது தான் தெரியுமே? அதான் உன்னைப் பாக்க வந்தேன்”

“அப்ப ஏன் என் கிட்ட பேசலை”

“அங்க வச்சு பேசிருந்தா எதுக்கு என்னை தொல்லை பண்ணுறீங்கன்னு தைய தக்கான்னு குதிச்சிருப்ப. எதுக்கு வந்தீங்கன்னு கேப்ப? எதுக்கு உன்னைக் கஷ்டப் படுத்தணும்னு நினைச்சேன்? அது மட்டும் இல்லாம இன்னொரு முக்கியமான வேலை இருந்தது. அதான் வந்து பேசலை“

“என்னைப் பாக்க வந்துட்டு அப்படி என்ன முக்கியமான வேலை?”, என்று கேட்டவளின் குரலில் இருந்த உரிமைக் கோபம் அவனுக்கு அவ்வளவு பிடித்திருந்தது.

“வேற ஒண்ணும் இல்லை. உன்னை சைட் அடிக்கிற வேலை தான்”, என்று அவன் சிரிக்காமல் சொல்ல “என்னது?”, என்று அதிர்ச்சியாக கேட்டாள்.

“எதுக்கு இப்படி முழிக்கிற? உன் முன்னாடி வந்து நின்னா உன் கண்ணுல மட்டும் தான் என் பார்வை இருக்கும். வேற எங்கயும் ரசிக்க முடியாது. நேத்து உன்னை முழுசா ரசிக்கணும் போல இருந்தது. அதான் ஒதுங்கி இருந்தேன்”, என்று சொல்ல அவள் முகம் சிவந்து போனது .

அவள் சிவந்த முகத்தை ரசனையாக பார்த்தவன் “சரி சொல்லு, இந்த பரு எதுக்கு வந்திருக்கு? அது என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது?”, என்று மீண்டும் அதே கேள்விக்கு வந்தான்.

“சொல்லாமல் விட மாட்டான்”, என்று புரிய “எனக்கு நாளைக்கு பீரியட்ஸ் டேட். அதனால வந்திருக்கும்”, என்று அவன் முகம் பார்க்காமல் சொன்னாள்.

“ஓ”, என்று சொன்னவன் வேறு எதுவும் கேட்க வில்லை. அவளும் அதைப் பற்றி பேசியதால் அமைதியாக இருந்தாள். அந்த நேரம் அந்த மௌனம் கூட அழகானதாக தான் இருந்தது.

அருகில் இருந்த சர்ச்சில் பதினொரு மணிக்கான பெல் அடிக்கவும் அதில் கலைந்தவள் “சரி எதுக்கு வரச் சொன்னீங்க. சொல்லுங்க. நான் சீக்கிரம் போகணும். வரும் போதே அம்மா ரொம்ப திட்டிட்டாங்க”, என்றாள்.

“என்ன சொன்னாங்க?”

அதை அவனிடம் சொல்ல மனதற்று “ஒண்ணும் இல்லை”, என்று சொல்லும் போதே அவள் கண்கள் கலங்கி விட்டது.

அவன் விரல் நீண்டு அவள் கண்ணீரைத் துடைத்து விட்டது. அதில் நடப்புக்கு வந்தவள் அவன் கையை விலக்கி விட்டு “சொல்லுங்க”, என்றாள்.

“இந்தா”, என்று சொல்லி ஒரு ஆபிஸ் கவரை அவளிடம் நீட்டினான்

“என்ன இது?”, என்று கேள்வியாக அதை வாங்கினாள்.

“பிரிச்சு பாரு”, என்று சொன்னதும் குழப்பத்துடன் அதை பிரிக்க ஆரம்பித்தாள். அவள் மனமோ “என்னவா இருக்கும்? ஒரு வேளை ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிறதுக்கு எதுவும் கொண்டு வந்துட்டானோ?”, என்று அவள் மனம் எண்ணியது.

ஆனால் அது ஒரு கால் டிக்கட். ஆடிட்டர்க்காக இந்தியா அளவில் நடத்தப் படும் தேர்வுக்கான கால் டிக்கட் தான் அது. அந்த பரிட்சையில் அவள் பாஸ் ஆகி விட்டால் பெரிய பெரிய கம்பெனிகளில் அவளுக்கு வேலை கிடைக்கும். அவளும் ஒரு ஆடிட்டர் ஆகி விடுவாள். அந்த தேர்வைப் பற்றிய விவரம் எல்லாம் அவளுக்கு தெரிந்தது தான். ஆனால் அந்த பரிட்சையில் பாஸ் ஆவது எல்லாம் கனவில் கூட நினைக்க முடியாத விஷயம். சிவில் சர்வீஸ் தேர்வை விட கடினமாக இருக்கும்.

ஏற்கனவே சிறு சிறு கம்பெனிகளில் வேலை பார்க்கும் பெரிய ஆட்கள் கூட அதற்கு விண்ணப்பிப்பார்கள். எந்த வித முன்னனுபவமும் இல்லாமல் அதை எதற்கு எழுத வேண்டும் என்று எண்ணி தான் யமுனா அதற்கு விண்ணப்பிக்க வில்லை. ஆனால் கண் முன்னால் தேர்வுக்கான அழைப்பு இருக்கவும் “என்ன இது?”, என்று கேட்டாள்.

“என்னன்னு உனக்கு தெரியலையா பேபி?”

“ஐயோ, அது தெரியுது. ஆனா எதுக்கு இதெல்லாம்? இந்த எக்ஸாம் எல்லாம் பாஸ் ஆகுறது கஷ்டம்?”

“உன்னை யாரு பாஸ் பண்ண சொன்னா? சும்மா எழுதிப் பாரு”, என்று அவன் சொல்ல அவனை வியப்பாக பார்த்தாள்.

“என்ன எழுதுறியா?”, என்று அவன் கேட்க இது தேவையா என்ற எண்ணம் வந்தாலும் “ஹிம்”, என்று முணுமுணுத்தாள்.

“குட், இது நல்ல பிள்ளைக்கு அழகு”

“ஆமா எப்படி கால் டிக்கட் வந்துச்சு? நான் இந்த எக்ஸாம்க்கு அப்ளை பண்ணவே இல்லையே?”, என்று அவள் கேட்க “நான் எதுக்கு இருக்கேன்? நான் தான் பண்னினேன்”, அசராமல் சொன்னான்.

“என்னது நீங்களா? நிக்க நேரம் இல்லாம இருக்குற நீங்க எனக்கு எக்ஸாம்க்காக அப்ளை பண்ணுனீங்களா?”

“உனக்காக எல்லாம் பண்ணுவேன் பேபி”

“என்னோட கையெழுத்து எல்லாம்?”

“நானே போட்டேன்”

“நீங்களா?”

“ஏன் போடக் கூடாதா?”

“நான் அப்படிச் சொன்னேனா? சரி என் மார்க் சீட் எல்லாம் உங்களுக்கு தேவையா இருந்துருக்கணுமே?”

“மச்சானை எடுத்து தரச் சொன்னேன்”

“ஏன் இப்படி அண்ணா கிட்ட கேட்டு நீங்க கஷ்டப் படணும்? என் கிட்ட அப்ளை பண்ணுன்னு சொல்லிருந்தா நானே பண்ணிருப்பேன்ல?”

“இப்ப நீங்களா பண்ணுனீங்கன்னு கண்ணை விரிச்சு கேட்டல்ல? அதைப் பாக்க தான் நான் பண்னினேன்”, என்று பரணி சொல்ல பேச்சிழந்து அவனைப் பார்த்தாள். அவனுடைய காதலின் முன் அவளுக்கு வேறு எதுவுமே பெரிதாக தெரிய வில்லை.

இப்படி பட்டவனின் காதலை போய் ரூம் போடும் அளவுக்கு பேசும் அம்மாவை எண்ணி மனம் பாரம் ஆனது.

“ஏன் பரணி இப்படி பண்ணுறீங்க? எனக்கு ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கு. நாளுக்கு நாள் என்னோட நிம்மதி குறைஞ்சிக்கிட்டே வருது. என்னால, என் குடும்பத்தால நீங்க காயப் பட்டு நிக்குறதைப் பாத்து எனக்கு ரொம்ப வேதனையா இருக்கு”, என்று சொல்லும் போதே அவள் கண்கள் கலங்கியது. அவள் பேசியது கஷ்டமாக இருந்தாலும் அவள் பரணி என்று அழைத்தது அவனுக்கு சந்தோசத்தைக் கொடுத்தது.

“விடு டி. எனக்கு ஒண்ணும் கஷ்டமா தெரியலை. ஆனா நீ என்னை விட்டுருங்கன்னு சொல்லும் போது தான் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. எங்கயாவது பொண்டாட்டியை புருஷன் விட்டுக் கொடுப்பானா டி? உனக்காகவே கூட என்னால உன்னை விட்டுக் கொடுக்க முடியாது பேபி. அதே மாதிரி நீயும் என்னை விட்டுட மாட்ட. நீ எனக்காக இருப்பன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. அந்த நிம்மதி போதும். கல்யாணம் பண்ணினா தானே பிரச்சனை? நாம காதலிச்சிட்டே இருப்போம். இது எல்லாம் எனக்காக நீ இருக்குற வரைக்கும் தான்.  நீ இல்லாம போனா… நான் என்ன ஆவேன்னு எனக்கு தெரியலை”

“எனக்கு தெரியும் பரணி. கொஞ்சமே கொஞ்சம் காதல் வச்ச எனக்கே உங்களை பிரியுறது கஷ்டமா இருக்குன்னா மொத்த காதலையும் என் மேல கொட்டுற உங்களுக்கு எப்படி இருக்கும்னு என்னால புரிஞ்சிக்க முடியுது. நான் இல்லைன்னா நீங்க ஒண்ணும் இல்லாம போயிருவீங்க? அதனால் தான் சாவு எனக்கு நிம்மதின்னு தெரிஞ்சும் அதை நான் தேர்ந்தெடுக்காம இருக்கேன்”, என்று மனதில் எண்ணிக் கொண்டாள். அதை அவனிடம் சொல்ல வில்லை.

“சரி இந்தா, இதையும் கொடுக்கத் தான் வந்தேன். எக்ஸாம்க்கு படிக்க புத்தகம்”, என்று சொல்லி நீட்டினான் பரணி.

“இந்த புக் விலை அதிகம் தானே?”

“உனக்கு முன்னாடி இது பெரிய விலையா? அப்புறம் இன்னொரு விஷயம்”

“என்ன?”

“நாளைக்கு உனக்கு காலேஜ் ஆரம்பிக்குது? மார்னிங் கிளாஸ்ல சேர். அப்புறம் சாயங்காலம் அஞ்சு மணில இருந்து ஏழு மணி வரை நம்ம உனக்கு ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு. நான் அட்ரஸ் தரேன். நீ அட்டண்ட் பண்ணனும்”

“என்ன கிளாஸ்?”

“நீ இந்த எக்ஸாம் பாஸ் பண்ணனும்ல?”

“அதுக்கு?”

“அதுக்கு ஆடிட்டர் சுந்தரேசன் கிளாஸ் எடுப்பார். உனக்கு மட்டும், அவர் வீட்ல வச்சு”

“வாட்? அவரா? அவர் பெரிய ஆடிட்டர். இந்த பரிட்சையிலே முதல் மார்க் வாங்கியவர். அந்த ரெக்கார்டை யாரும் முறியடிக்கலை. அவரா எனக்கு சொல்லிக் கொடுக்கப் போறார்? இதெல்லாம் எனக்காகவா பரணி?”

“இல்லைன்னு சொல்ல மாட்டேன் பேபி. சரி நாளைக்கு பாக்கலாம். கிளம்பு”, என்று சொல்ல அவள் முகம் கூம்பி போனது. அதைக் கண்டு அவன் முகம் மலர்ந்தது.

“என்ன டி சோகமாகிட்ட?”

“என்னை விரட்டுறதுலே குறியா இருக்கீங்க?”, என்று சிணுங்கினாள்.

“நீ தானே போகணும்னு சொன்ன?”, என்று அவன் கேட்க அவள் பதிலே சொல்ல வில்லை.

சீக்கிரம் வீட்டுக்கு போக வேண்டும் என்று அவள் சொன்னாள் தான். ஆனால் இப்போது முடிய வில்லையே? அவனுடனே செல்ல அவள் மனம் பரபரத்தது. அவன் கையைப் பற்றிக் கொண்டு அவன் தோளில் சாய்ந்து கொண்டு காலம் முழுக்க இருந்திட அவள் மனது பேராசை கொண்டது. ஆனால் முடியாதே.

அவள் மன உணர்வுகள் அவனுக்கு தெள்ளத் தெளிவாக புரிந்தது. தான் வெளிப்படையாக காதலைக் கொட்டினாலும் அதற்கு நிகரான காதலை அவள் மனதுக்குள் நிறைத்திருக்கிறாள் என்று தெரிந்து தானே அவளை விட முடியாமல் தவிக்கிறான். அவள் என்ன நினைத்தாலும் பரவாயில்லை என்று எண்ணி சட்டென்று நகர்ந்து அவளை ஒட்டிய படி அமர்ந்து கொண்டான்.

Advertisement