Advertisement

“அது எதுக்கு வேஸ்ட்டா? ஒரு டிகிரியை நல்ல படியா படிச்சு முடிச்சிட்டல்ல? வர ஒன்னாம் தேதில இருந்து நம்ம கம்பெனிக்கு வேலைக்கு வா. அப்படியே இந்த டிகிரியையும் கரஸ்ல முடி”, என்று சொல்ல அவள் நே என்று விழித்தாள். இவனை விட்டு பிரிய வேண்டும் என்று நினைத்தால் இவன் என்னடா வென்றால் இவனுடைய அலுவலகத்துக்கு வேலைக்கு வரச் சொல்கிறான் என்று எண்ணினாள்.

“வேலையா? என்ன வேலை? அதுவும் உன் கம்பெனிக்கா? என் பொண்ணு அங்க எல்லாம் வர மாட்டா”, என்று தாமோதரன் சொல்ல அவர் பேச்சைக் இருவரும் கேட்டால் தானே?

“இங்க பாரு யமுனா, என்னை பிடிக்கலைன்னு சொல்லிட்ட? அதுக்கு மேல நமக்குள்ள ஒண்ணும் இல்ல. நான் இப்ப கூப்பிடுறது வேலைக்கு தான். அதுவும் உன்  பியூச்சர்க்காக தான். ஒழுங்கா வந்து டிரைனிங்க் எடுத்துக்கோ. சொல்ல வேண்டியதைச் சொல்லிட்டேன். அப்புறம் உன் விருப்பம்”, என்று சொல்லி விட்டு வாசலில் இருந்தே சென்று விட்டான்.

“என்ன யமுனா இதெல்லாம்? அவன் தான் லூசு மாதிரி பேசுறான்னா நீயும் பதில் சொல்லிட்டு இருக்க? அதெல்லாம் வேலைக்கு போகத் தேவையில்லை”, என்று தாமோதரன் சொல்ல எரிச்சலுடன் அவரைப் பார்த்தவள் “முதல்ல இது என்னப்பா பழக்கம்? வீட்டுக்கு வந்தவங்க எதிரியே ஆனாலும் உள்ள கூப்பிட்டு உக்கார வச்சு உபசரிக்கிறது தான் பழக்கம், இப்படி வாசலோட அனுப்புறது இல்லை”, என்று சொன்னாள்.

“ப்ச், நான் என்ன சொல்றேன். நீ என்ன பேசுற?”

“நான் வேலைக்கு போகத் தான் போறேன்”

“யமுனா”

“கத்தாதீங்க. உங்களால முடிஞ்சா வேற வேலைக்கு ஏற்பாடு பண்ணுங்க. நான் இங்க போகாம இருக்கேன். நீங்க வேற வேலைக்கு ஏற்பாடு பண்ணுற வரைக்கும் போகத் தான் செய்வேன். ஏன்னா என்னோட வாழ்க்கை இனி எப்படி இருக்கும்னு தெரியலை. அதனால எனக்கு ஒரு வேலை முக்கியம். நான் போகத் தான் போறேன்”, என்று சொல்ல அவளை எரிச்சலுடன் பார்த்தார் தாமோதரன்.

அவள் வேலைக்கு போக சம்மதித்தது அவனை கூடவே இருந்து பார்ப்பதற்கு என்ற உண்மை அவளுக்கு மட்டுமே தெரியும். அவள் வேலைக்குச் செல்ல உறுதியாக இருக்க, ஒன்னாம் தேதி ஆவதற்கு இன்னும் பதினான்கு நாட்கள் இருந்த நிலையில் அதற்குள் இவளுக்கு வேறு வேலை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொண்டார் தாமோதரன்.

ஆனால் ஒன்றாம் தேதி வரை அவரால் அவளுக்கு எந்த வேலையும் ஏற்பாடு செய்ய முடிய வில்லை. ஆடிட்டரின் அவசியம் பெரிய பெரிய கம்பெனிகளுக்கு தான். வெறும் டிகிரி மட்டும் வைத்துக் கொண்டு அவளை எந்த வேலைக்கு எடுப்பார்களாம்.

தாமோதரன் “உன் தங்கச்சிக்கு எங்கயாவது வேலைக்கு ஏற்பாடு பண்ணு டா”, என்று வினோத்திடம் சொல்ல “அவ என் பேச்சு கேக்குறது இல்லை. அதனால அவளுக்கு உதவ என்னால முடியாது. அதுவும் நீங்க சொன்னா சத்தியமா செய்ய மாட்டேன்”, என்று சொல்லி விட்டுச் சென்றான். அவனை எரிச்சலுடன் பார்த்தார்.

நாளை தான் ஒன்றாம் தேதி என்ற நிலையில் முந்தைய நாள் இரவு பரணியை அழைத்தாள் யமுனா.

சிறு சிரிப்புடன் போனை எடுத்தவன் அமைதியாக இருந்தான். யமுனா ‘ஹலோ’ என்றதும் “சொல்லு பேபி”, என்று உருக்கமாக ஒலித்தது அவன்  குரல்.

அந்த குரலிலும் அதில் வழிந்த காதலிலும் அவள் தவிப்பு இன்னும் அதிகம் தான் “இவன் கொஞ்சம் சாதாரணமா பேசக் கூடாதா?”,  என்று எண்ணிக் கொண்டு “ஒன்னாம் தேதி வேலைக்கு வரச் சொன்னீங்க? நாளைக்கு வரவா? எப்ப வரணும்?”, என்று சிறு ஆர்வத்துடன் கேட்டாள்.

“நல்லதா போச்சு கால் பண்ணின யமுனா. நானே சொல்லணும்னு நினைச்சேன். மறந்துட்டேன். நீ நாளைக்கு வர வேண்டாம்”

“அப்படின்னா நாளான்னைக்கு வரவா?”

“வேண்டாம் வேண்டாம்”

“ஏன்?”

“இங்க உனக்கு வேலை இல்லை யமுனா, உனக்கு எந்த வேகன்சியும் இல்லை”, என்று சொல்ல அவளுக்கு ஒரு மாதிரி இருந்தது.

“ஓ, டிரைனிங்க் கொடுப்பீங்கன்னு சொன்னீங்க?”

“அது வேற ஆளுக்கு கொடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். சரி எனக்கு வேலை இருக்கு. வைக்கட்டுமா பேபி?”, என்று சொல்லி போனை வைத்தவனுக்கு சிரிப்பாக வந்தது. இப்போது யமுனா முகம் கோபத்தில் எப்படி சிவந்திருக்கும் என்று எண்ணி சிரித்த படியே வேலையைப் பார்த்தான்.

உண்மையிலே யமுனா கடுப்புடன் தான் இருந்தாள். அவள் வேலை இல்லை என்று சொன்னது, அவனது பேச்சில் இருக்கும் அன்னியத்தன்மை அவளை அதிகம் பாதித்தது. கடுப்புடனே அந்த இரவைக் கழித்தாள்.

அடுத்த நாள் காலை “என்ன வேலைக்கு கிளம்பாம இருக்க?”, என்று கேட்டான் தாமோதரன்.

“அங்க வேகன்சி இல்லையாம். வேலை இல்லைன்னு சொல்லிட்டாங்க”

“அப்பாடி, இப்ப தான் எனக்கு நிம்மதியா இருக்கு. அப்புறம் இன்னொன்னையும் புரிஞ்சிக்கோ. பணக்காரங்க பேச்சு இப்படி தான் இருக்கும். அவன் தானே உன்னை வரச் சொன்னான். ஆனா எப்படி கழட்டி விட்டுட்டான் பாத்தியா? இனிமேலாவது திமிரை குறைச்சிட்டு எங்க பேச்சைக் கேக்கப் பாரு”, என்று சொல்லி விட்டுச் சென்றார். அந்த எரிச்சலும் பரணி மீது தான் திரும்பியது. அதை அவனிடம் காட்ட முடியாமல் “எனக்கு எந்த நல்லதும் நடக்காதா?”, என்று எண்ணி ஏங்கி ஏங்கி அழுதாள்.

ஆனால் சரியாக ஒரு வாரம் கழித்து அவளை அழைத்தான் பரணி. அவன் அழைப்பது தெரிந்தும் செல்லக் கோபத்துடன் அதை எடுக்காமல் இருந்தாள். இரண்டு முறை விட்டு மூன்றாம் முறை அவன் அழைக்கும் போது அதற்கு மேல் கட்டுப் படுத்த முடியாமல் எடுத்தவள் அமைதியாக இருந்தாள்.

அவள் கோபம் புரிந்தவன் எழுந்த சிரிப்பை மறைத்துக் கொண்டு “என்ன பேபி பண்ணுற?”, என்று கேட்டான்.

“நான் என்ன செஞ்சா உங்களுக்கு என்ன?”

“அதானே, அதை தெரிஞ்சு நான் என்ன பண்ணப் போறேன்?”, என்று அவன் கேட்க அவள் கடுப்பு கூடியது.

“இப்ப எதுக்கு கால் பண்ணுனீங்க? எனக்கு வேலை இருக்கு”

“நீ வீட்ல இருக்கியான்னு கேக்க தான் கால் பண்ணினேன் பேபி”

“வீட்ல இல்லாம காட்டுலயா இருப்பாங்க?”

“இல்லை, ஒரு வேளை வேலைக்கு போயிருப்பியோன்னு நினைச்சேன்”

“அது ஒரு லூசு வேலை தறேன்னு சொல்லி ஏமாத்திருச்சு. அதனால இப்ப எந்த வேலையும் இல்லாம வெட்டியா தான் இருக்கேன்”, என்று சொன்னவள் பேசிய பிறகு தான் கொஞ்சம் அதிகமாக பேசி விட்டோமோ என்று எண்ணிக் கொண்டாள்.

“ஹா ஹா”, என்று சிரித்த பரணி “சரி நான் வீட்டுக்கு வரேன். நேர்ல வந்து பேசிக்கலாம்”, என்றான்.

“என்னது வீட்டுக்கா? அது எதுக்கு? அதெல்லாம் வேண்டாம்”, என்று படபடத்தாள்.

“உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும். நான் வரேன்”

“நீங்க வரக் கூடாது. எத்தனை தடவை வீட்டுக்கு வந்து அசிங்கப் படுவீங்க? நீங்க வரக் கூடாது”

“எனக்கு உன் கிட்ட பேசணும்”

“போன்லே சொல்லுங்க. வீட்டுக்கு வர வேண்டாம்”

“போன்ல பேச முடியாது. உங்க வீட்டுப் பக்கத்துல இருக்குற பார்க்ல வெயிட் பண்ணுறேன். வா”, என்றான்.

“அங்கயா? நானா?”, என்று தயக்கத்துடன் வந்தது அவள் குரல்.

“என்னோட பெட் ரூமுக்கு ஒண்ணும் உன்னைக் கூப்பிடலை. எல்லாரும் வந்து போற பார்க்குக்கு தான் கூப்பிடுறேன். வர முடியுமா முடியாதா?”, கடுப்புடன் கேட்டான்.

“கோபப் படாதீங்க. என்ன விசயம்னு சொல்லுங்க. நான் வீட்ல சொல்லிட்டு வரணும்”

“என்ன வேணும்னாலும் சொல்லிட்டு வா. இதை நேர்ல தான் பேசணும்”, என்று சொல்லி போனை வைத்தான்.

ஒரு நொடி போனைப் பார்த்தவள் பின் கண்ணாடியில் தன்னைப் பார்த்தாள்.

ஆண்கள் போடும் சட்டை போல ஒன்றையும் முழு நீளப் பாவாடையும் போட்டிருந்தாள். பார்க்க நன்றாக தான் இருப்பது போல அவளுக்கு பட்டது. அவசரமாக கபோர்டைத் திறந்து அதற்கு ஏற்றார்போல இருந்த ஒரு துப்பட்டாவை எடுத்து மேலே போட்டுக் கொண்டு தன்னுடைய போனை கையில் எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள். காவேரி மாவு அரைத்துக் கொண்டிருந்தாள்.

அன்னையை எப்படி சமாளிக்க என்று சட்டென்று ஒரு தவிப்பு வந்தது. காவேரி அவளை கேள்வியாக பார்க்க “பக்கத்துல இருக்குற பார்க் வரை போயிட்டு வரேன் மா”, என்றாள்.

“பார்க்கா இந்த நேரத்துலயா? அங்க எதுக்கு?”

“பரணி கால் பண்ணினாங்க மா. ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்னு கூப்பிட்டாங்க. நான் போயிட்டு வரேன்”

“எவ்வளவு தைரியம் இருந்தா அதை என் கிட்டயே சொல்லுவ?”

“என்ன விசயம்னு கேட்டுட்டு வந்துருவேன். நான் போறேன். பிளீஸ் போயிட்டு வரேன்”

“நான் இப்ப போகக் கூடாதுன்னு சொன்னா போகாம இருந்துருவியா?”, என்று நக்கலாக கேட்க அது எப்படி முடியும்? அவளால் பரணியை ஒரு போதும் ஏமாற்ற முடியாதே. அவள் அமைதியாக இருக்க “என்ன முடியாது தானே? எங்களோட பேச்சைக் கேக்கும் பொண்ணு எப்பவோ செத்துப் போயிட்டா. இனி நீ எங்க போற? யார் கூட போற? எதுவுமே எங்களுக்கு சொல்லணும்னு அவசியம் இல்லை. அவன் ஏதாவது ஹோட்டல்ல ரூம் போட்டுட்டு உன்னைக் கூப்பிட்டா கூட நீ போய்கிட்டே இருக்கலாம். ஆனா அவன் பொண்டாட்டியா ஆவணும்னு கனவு கண்டா எங்க வேலையைக் காட்ட வேண்டியது இருக்கும்”, என்று சொல்ல அவள் கண்கள் அதிர்ச்சியில் விரிந்து பின் கலங்கியது.

கலங்கிய கண்களுடன் கிளம்பி விட்டாள். “இவ்வளவு கேவலமா பேசுறேன்? அப்படியும் போறா பாரு. நான் பேசினதுக்காகவாது போக மாட்டேன்னு சொல்றாளா? என்ன சொல்லி இப்படி மயக்கி வச்சிருக்கானோ? இது எங்க போய் முடியப் போகுதோ?”, என்று எண்ணிக் கொண்டாள் காவேரி.

வாசலில் கிடந்த செருப்பை மாட்டிக் கொண்டு தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள் யமுனா. இப்போது அவள் கண்கள் கலங்கி இருக்க வில்லை. தெருவில் போகும் போது அழுதால் அனைவரின் கண்களும் அவளை நோக்குமே அதனால் அடக்கி கொண்டாள். ஆனால் அழுகையை அடக்குவது, அன்னையின் பேச்சு, காரணமே சொல்லாமல் வரச் சொன்ன பரணியின் பேச்சு என அனைத்தும் சேர்ந்து அவள் எரிச்சலை இன்னும் அதிகப் படுத்தியது.

அதே எரிச்சலுடன் அவன் முன்பு போய் நின்றாள். மணி காலை பதினொன்று என்பதால் சுற்றி வெயில் அடித்தாலும் பார்க்கில் இருந்த மரங்களால் அவன் அமர்ந்திருந்த இடம் குளிர்ச்சியாக இருந்தது.

கோபத்துடன் அவன் முன்பு நின்றவள் “உங்க மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கீங்க? உங்க இஷ்டத்துக்கு என்னை ஆட்டி வைக்க நினைக்கிறீங்களா? நான் என்ன நீங்க வச்ச ஆளா? பணக்காரங்கன்னா என்ன வேணும்னாலும் செய்வீங்களா? எனக்கு கால் பண்ணாதீங்க,. என்னை விட்டுருங்கன்னு எத்தனை தடவை சொல்லிட்டேன்?”, என்று பட்டாசாக பொரிந்தாள்.

காரிகை வருவாள்…..

Advertisement