Advertisement

“பேபி”, என்று மென்மையாக அழைக்க பாவமாக அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“இந்த கண்ணீர் எனக்கானது தானே?”, என்று அவன் கேட்க அவள் மௌனமாக தலை குனிந்தாள்.

“உனக்கு என்னைப் பிடிக்கும் தானே டி? அப்புறம் ஏன் இப்படி கலங்கணும்? பிளீஸ் வா, கல்யாணம் பண்ணிக்கலாம். உங்க அப்பா அம்மாவுக்கு ஒரு ஏழை மாப்பிள்ளை தான் வேணும்னா சொல்லு. நான் என் பேர்ல இருக்குறதை எல்லாம் வேண்டாம்னு எழுதிக் கொடுத்துட்டு வீட்டோட மாப்பிள்ளையா வரேன். உங்க அப்பா அம்மாவே எனக்கு சோறு போடட்டும். இல்லை கவர்ன்மெண்ட் மாப்பிள்ளை வேணும்னா சொல்லு நான் கவர்ன்மெண்ட் வேலைக்கு ஏற்பாடு பண்ணுறேன். ஆனா ஜாதியை எப்படி மாத்துறது? நீ எனக்கு வேணும் பேபி. அதுக்கு நான் என்ன பண்ணனும்?”

அவன் காதலில் உள்ளுக்குள் உருகியவள் “நடந்து முடிஞ்சதைப் பேச வேண்டாம். முடிஞ்சது முடிஞ்சதாவே இருக்கட்டும். நீங்க உங்க அப்பா பாக்குற பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கோங்க”, என்றாள்.

மாற்றி மாற்றி பேசும் அவளை தீர்க்கமாக பார்த்தவன் “இது தான் உன் முடிவா?”, என்று கேட்டான்.

“ஆமா”

“சரி நான் வரேன். இனி பேசி ஒரு பயனும் இல்லை”, என்று சொல்லி அவன் திரும்பி நடக்க “ஒரு நிமிஷம்”, என்று அழைத்தாள்.

“என்ன டி?”

“இனி நீங்க என்னை தொந்தரவு பண்ணக் கூடாது. என் கண்ணு முன்னாடியே வரக் கூடாது. எனக்கு அது பிடிக்கலை”, என்று அவனிடம் சொன்னவள் மனதுக்குள் “நீங்க இப்படி என் கிட்ட கெஞ்சுறது எனக்கு ரொம்ப வலிக்குது”, என்று சொல்லிக் கொண்டாள்.

“சரி வேற என்ன செய்யணும், செய்யக் கூடாதுன்னு லிஸ்ட் கொடுத்துருங்க மேடம்”, என்று அவன் நக்கலாக சொல்ல “இப்படி உரிமையா பேசக் கூடாது”, என்று சிறு முகச் சிவப்புடன் சொல்ல “எப்படி?”, என்று ஆர்வமாக கேட்டான்.

“அதான் பேபின்னு சொல்றது… டின்னு சொல்றது.. இது எல்லாம் வேண்டாம்”, என்று சொல்ல அவன் கண்கள் மின்னியது. அவன் சொல்லும் இந்த வார்த்தைகள் எல்லாம் அவள் மனதை சலனப் படுத்துகிறது என்று புரிந்து கொண்டான்.

“இப்ப என்ன நான் உன்னை தொல்லை செய்யக் கூடாது அதானே?”, என்று அவன் கேட்க அவன் கேள்வி கஷ்டமாக இருந்தாலும் ஆம் என்று தலையசைத்தாள்.

“சரி நான் உன்னை எந்த விதத்துலயும் தொல்லை செய்ய மாட்டேன். எதனால் என் காதலை மறுத்தேன்னும் கேக்க மாட்டேன். எதுக்காக என்னைப் பிடிக்கலைன்னு சொன்னேன்னும் கேக்க மாட்டேன். இப்ப சந்தோஷம் தானே? ஆனா ஒரு விஷயம். என்னால உன்னை உரிமையா தான் பேச முடியும்? அதை மாத்திக்கிறது கஷ்டம். ஏன்னா நீ என்னோட பொண்டாட்டி. அதை என்னால மாத்திக்க முடியாது. நீ லவ் பண்ணு பண்ணாம போ, கல்யாணம் பண்ணு பண்ணாம போ. ஆனா என் மனசு மாறாது. ஆனா தேவையில்லாம உன்னைப் பாக்க வர மாட்டேன். இங்க பாரு பேபி என்னோட காதல் எப்பவும் உனக்கு சந்தோஷத்தை மட்டும் தான் தரும். உன்னைக் காயப் படுத்தினா அது காதலே கிடையாது. இன்னைல இருந்து நாம பிரண்ட்ஸ் சரியா?”, என்று சொல்லி கரம் நீட்டினான்.

வெகு நேரம் தயக்கத்துக்கு பிறகு அவள் கரம் கொடுக்க வரும் போது அவன் தன்னுடைய கரத்தை மடக்கிக் கொண்டான். அவள் கேள்வியாகப் பார்க்க “என் கூட கை கோர்க்க உனக்கு சங்கடமா இருக்கப் போய் தானே இவ்வளவு நேரம் கை கொடுக்க யோசிச்ச? அப்புறம் எப்படி நான் அதை உன்னைச் செய்ய விடுவேன்? அதான் சொன்னேனே? என்னால உன்னைக் காயப் படுத்த முடியாதுன்னு. நிம்மதியா வீட்டுக்கு போ”, என்று சொல்ல வேதனையுடன் அவனைப் பார்த்தாள்.

அவன் காதல் அவளை தொல்லை செய்யாது தான். அவன் காதல் அவளை காயப் படுத்தாது தான். ஆனால் அவன் மீதான அவளின் காதல் அனுதினமும் அவளை தொல்லை செய்து அவளை காயப் படுத்துகிறதே? அதற்கு என்ன செய்வாளாம்?

அவள் அவனைத் திருப்பி திரும்பி பார்த்த படி செல்வதைக் கண்டவனுக்கு முகத்தில் வேதனை படர்ந்தது. தன்னை விட அவள் அதிகம் காயப் படுவாள் என்று புரிந்தது அவனுக்கு.

பரணி வீட்டுக்கு வந்ததும் அவனைப் பிடித்துக் கொண்ட சரவணப் பெருமாள் “எங்க டா போயிட்டு வர?”, என்று கேட்டார்.

“அப்பா அது…”

“அந்த பொண்ணைத் தானே பாத்துட்டு வர?”

“ஆமா பா”

“நடக்காதுன்னு தெரிஞ்சும் அதுக்காக நாம முயற்சி செய்யக் கூடாது கண்ணா”

“அடி மேல் அடி அடிச்சா அம்மியும் நகருமே பா?”, என்று அவன் சொல்ல தந்தை மகன் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த கௌரி “என்னங்க, கண்டிப்பா அவனால யமுனாவை மறக்க முடியாது. அவனை அவன் போக்குல விடுங்க”, என்றாள்.

“தேங்க்ஸ் மா”, என்று சொல்லி விட்டு பரணி அவனது அறைக்குச் சென்று விட்டான். அவன் சென்ற பின்னர் “யமுனாவுக்கு கால் பண்ணுங்க”, என்றாள் கௌரி.

அவர் அவளை வியப்பாக பார்க்க “நம்ம மகனுக்காக நாம இறங்கிப் போறதுல தப்பு இல்லைங்க”, என்றாள்.

உடனே நிஷாவிடம் இருந்து யமுனா எண்ணை வாங்கி அவளை அழைத்தார். யாரோ என்று எண்ணி தான் யமுனா போனை எடுத்தாள்.

“ஹலோ யாருங்க?”, என்று யமுனா கேட்க “நான் பரணி அப்பா பேசுறேன் மா”, என்றார்.

“சார்”, என்று அதிர்வாக அழைக்க “கொஞ்சம் பேசணும் மா. இப்ப பேசலாமா?”, என்று கேட்டார்.

“சொல்லுங்க சார்”

“என்ன மா முடிவு பண்ணிருக்க?”

“முதல்ல நீங்க என்னை மன்னிக்கணும் சார். என்னோட பேச்சு ரொம்ப அதிகம்னு எனக்கே தெரியும். ஆனா எனக்கு வேற வழி தெரியலை”

“அதை விடு மா. நான் எதுவும் நினைக்கலை. ஆனா என் மகன் வாழ்க்கைக்கு ஒரு தீர்வு வேணும். அவனை என்னால அப்படியே விட முடியாது”

“புரியுது சார். ஆனா என்னால ஒண்ணுமே பண்ண முடியாது”

“நீயும் அவனை விரும்புற தானே?”, என்று அவர் கேட்க அவள் பதிலே சொல்ல வில்லை.

“பதில் சொல்லாம தப்பிக்கிற வித்தை தெரிஞ்சு வச்சிருக்க. உன்னை என் மகனுக்கு மட்டும் இல்லை மா, எங்க எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு. நீ வீட்டை விட்டு மட்டும் வா மா. மத்தது எல்லாம் நாங்க பாத்துக்குறோம். உங்க கல்யாணம் முடிஞ்சு கொஞ்ச நாள்ல உங்க அம்மா அப்பா மனசு மாறிருவாங்க. நான் ஒரு பதவியில இருக்குற அரசியல்வாதி. என்னால உனக்கு பாதுகாப்பு கொடுக்க முடியும். என் மகன் உன்னை நல்லா பாத்துக்குவான். ஆனா அதுக்கு நீ வீட்டை விட்டு வரணும் மா”

“நான் வந்தா உங்களோட அரசியல் வாழ்க்கைல கருப்பு புள்ளி விழும் சார்”, என்று மனதில் எண்ணிக் கொண்டு “என்னை மன்னிச்சிருங்க சார். என்னால வர முடியாது”, என்றாள்.

“அப்படின்னா என் மகன் வாழ்க்கையை விட்டு போயிரு. உன்னோட சுயநலத்துக்காக அவன் வாழ்க்கையை கெடுத்துறாத”, என்று சொல்லி விட்டு அவளுடைய பதிலைக் கூட எதிர் பார்க்காமல் போனை வைத்து விட்டார்.

அவளும் அவனை விட்டுச் செல்வது தான் நல்லது என்று நினைத்தாள். அடுத்து என்ன செயலாம் என்று தீவிரமாக யோசித்தாள். வினோத் இந்த ஊரில் வேலை பார்த்தாலும் பரணியைப் பார்க்க நேரிடும். அதனால் இந்த மதுரையை விட்டுச் செல்ல வேண்டும் என்றும் வேறு ஏதாவது ஊரில் உயர்கல்வி படிக்க வேண்டும் என்று முடிவெடுத்தாள்.

ஆனால் அடுத்த நான்கு நாட்கள் கழித்து அவளுடைய வீட்டுக்கே வந்து நின்றான் பரணி. அவனைக் கண்ட தாமோதரன் “என்ன? என்ன விஷயம்? அதான் அன்னைக்கே எல்லாம் பேசியாச்சே?”, என்று எரிச்சலுடன் கேட்டார். அதுவும் அவனை வாசலில் நிற்க வைத்தே.

“நான் யமுனாவைப் பாக்கணும்”, என்று தயக்கமில்லாமல் சொன்னான் பரணி. அவனுடையவளைப் பார்க்க அவனுக்கு எதுக்கு தயக்கமாம்? குடும்பத்துடன் வந்த போதே அவன் ஏதாவது பேசியிருப்பான். ஆனால் தான் அழைத்து வந்த தன்னுடைய குடும்பத்தினருக்கு எந்த கெட்ட பெயரும் வரக் கூடாது என்று தான் கிளம்பினான். இன்று அப்படி இல்லையே? என்ன வேண்டும் என்றாலும் பேசிக் கொள் என்பது போல நின்றான்.

“உங்களை மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் வெக்கம் மானமே கிடையாதா?”, என்று தாமோதரன் கேட்கும் போது தான் அங்கே வந்தாள் யமுனா.

அவளுக்கு அவன் படும் அவமானத்தை எண்ணி வேதனையாக இருந்தது. சிறு கோபமும் வந்தது. “நான் என்ன அவ்வளவு பெரிய ஆளா? எதுக்காக என்னைப் பாக்க வந்து இப்படி அசிங்கப் படணும்?”, என்று எண்ணியவள் அவன் அருகே சென்று “இங்க எதுக்கு வந்தீங்க?”, என்று கோபமாக கேட்டாள்.

அதைக் கேட்டு தாமோதரன் மனம் திருப்தி அடைந்தது. அவள் தன் மீது இருக்கும் அக்கறையில் தான் அப்படிக் கேட்கிறாள் என்று புரிந்த பரணியின் மனமும் திருப்தி அடைந்தது. “உனக்காக ஏ.ஆர்.எஸ் காலேஜ்ல எம்.பி.ஏக்கு அட்மிசன் வாங்கிருக்கேன். இந்தா ஃபார்ம். இதுல சைன் பண்ணு. பார்ட் டைம் கிளாஸ் தான். சாயங்காலம் நாலு மணில இருந்து ஆறு மணி வரைக்கும் கிளாஸ் அட்டண்ட் பண்ணு”, என்றான்.

“என் பொண்ணை படிக்க வைக்க நீ யாரு? அது எங்களுக்கு தெரியாதா?”, என்று தாமோதரன் கத்த அவரை கண்டு கொள்ளாமல் அவன் அவளைப் பார்த்தான்.

“நான் படிக்க தான் போறேன். ஆனா கரஸ்ல இல்லை. ஃபுல் டைமாவே படிக்கப் போறேன்”, என்றாள் யமுனா.

Advertisement