Advertisement

அத்தியாயம் 12 

பேசும் மொழிகள் புரியாவிடினும்

விழியின் மொழிகள் புரியத்

தான் செய்யும் காதலில்!!!

அறைக்குள் சென்று விழுந்த யமுனா ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்தாள். அவளால் கண்ணீரை நிறுத்தவே முடிய வில்லை. எப்படி முடியும்? அவள் சின்னஞ்சிறு இதயத்தில் அப்படி ஒரு வலி இருக்கும் போது அவளால் எப்படி அழாமல் இருக்க முடியும்?

இது எதுவுமே அவள் திட்டமிட்டது இல்லை. பரணியை சந்திக்க வைத்தது விதி. அவள் மனதுக்குள் கள்ளமும் காதலும் நுழைந்ததும் அவளை அறியாமலே தான். ஆனால் அந்த காதல் எதிர்காலமே இல்லாத இருண்ட காலமானதை தான் அவளால் தாங்க முடிய வில்லை.

அவளுடைய மனதுக்கு பிடித்தவனாகட்டும், அவனுடைய குடும்பமாகட்டும் கேவலமாக அவமானப் பட்டுச் சென்றிருக்கிறார்கள். இது அவளால் அல்லவா? கண்ணீர் விட்டு அழுது கரைந்தவளுக்கு சிறிது நேரத்தில் கண்ணீர் நின்று விட்டது. ஆனால் வாழ்க்கை இனி அவ்வளவு தான் என்று மனம் மட்டும் விரக்தி அடைந்து தெளிந்தது.

வாழ்க்கையில் இனி வெறுமை தான் என்பதில் தெளிவாகி விட்டாள். அதே நேரம் வீட்டில் நடந்ததை மனைவியிடம் புலம்பிக் கொண்டிருந்தான் வினோத்.

“யமுனா நல்லவங்க, அவளுக்கு நல்லது தான் நடக்கும். கொஞ்சம் பொறுமையா இருங்க. அவங்க கண்டிப்பா ஒண்ணு சேருவாங்க. நீங்க முதல்ல பரணி அண்ணா கிட்ட பேசுங்க. அவர் யமுனாவை தப்பா நினைச்சா அப்புறம் அவங்க ஒண்ணு சேரவே முடியாது. யமுனா பேசினதும் அவ மனசும் பரணி அண்ணாவுக்கு தெரிஞ்சே ஆகணும்”, என்று தாரணி சொன்னதும் சரி என்று சொல்லி போனை வைத்தான்.

பின் பரணியை அழைத்தான். ரிங் போய்க்கொண்டே இருந்தது. வினோத்தின் மனதில் யமுனாவின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஓடிக் கொண்டிருந்தது. அதை அப்படியே அவனிடம் சொல்ல வேண்டும் என்ற அவசரம் அவனுக்கு.

காரில் சென்று கொண்டிருந்த பரணி வினோத்தின் போனை எடுக்க வில்லை. பரணி போன் எடுக்காதது வினோத்துக்கு பதட்டத்தைக் கொடுத்தது.

தங்கள் குடும்பத்தையும் யமுனாவையும் வெறுத்து விட்டானா என்று பயந்து போனான். ஆனால் வீட்டுக்கு சென்ற பரணி வேறு யாரிடமும் எதுவும் பேசாமல் தனதறைக்குச் சென்று வினோத்தை அழைத்தான்.

அதை எடுத்த வினோத் “மாப்பிள்ளை”, என்று அவ்வளவு பாசமாக அழைத்தான். அதைக் கேட்டு திகைத்து தன்னுடைய காதில் இருந்த போனை எடுத்த பரணி எண்ணை சரி பார்த்தான்.

அது வினோத் எண் தான், கேட்டதும் வினோத் குரல் தான். ஆனால் இந்த அழைப்பு எப்படி என்று அவனுக்கு குழப்பாக இருந்தது.

“ஹலோ, மாப்பிள்ளை லைன்ல இருக்கீங்களா? ஹலோ ஹலோ”, என்று வினோத் சொல்ல பரணிக்கு என்ன சொல்ல என்று தெரிய வில்லை. மற்ற நேரமாக இருந்திருந்தால் அந்த அழைப்பில் உச்சி குளிர்ந்திருப்பான். இப்போது என்ன நினைப்பதாம்?

“சொல்லுங்க வினோத்”, என்று மட்டும் சொன்னான்.

அடுத்த நொடி அவர்கள் சென்றதில் இருந்து வீட்டில் நடந்ததை புட்டு புட்டு வைக்க பரணியின் முகம் தாமரை போல மலர்ந்து போனது.

“நீங்க நிஜமாவா சொல்றீங்க? யமுனா இப்படி எல்லாம்  பேசினாளா? அதுவும் என்னை விரும்புறேன்னு சொன்னாளா?”, என்று ஆனந்த அதிர்வாக கேட்டான்.

“சத்தியமான உண்மை மாப்பிள்ளை. அவளே சொன்னா. அவ தெளிவா இருக்கா. கண்டிப்பா அவ உங்களை விட்டுக் கொடுக்க மாட்டா. ஆனா அம்மா அப்பா என்ன மிரட்டினாங்கன்னு தெரியலை. நீங்க கொஞ்சம் பொறுமையா இருங்க. அவ கிட்ட ஆர அமர விசாரிக்கலாம். அப்புறம்… நானே உரிமை எடுத்துக்கிட்டு மாப்பிள்ளைன்னு சொல்லிட்டேன். அது கூட யமுனா உசுப்பேத்தினதுனால தான். அதுல உங்களுக்கு வருத்தம் இல்லையே?”

“வருத்தமா? நான் அவ்வளவு சந்தோஷமா இருக்கேன் மச்சான்”, என்று அவன் சொல்ல இப்போது வினோத் முகம் மலர்ந்தது.  இருவருக்கும் இடையே நட்பும் உறவும் இன்னும் இறுகியது போலவே தோன்றியது.

“சரி மச்சான், நாளைக்கு ஆஃபிஸ்ல பாப்போம். அப்புறம் வீட்ல என்ன நடக்குது? என் பொண்டாட்டி என்ன செய்யுறா எல்லாம் எனக்கு அப்டேட் பண்ணுங்க”

“பொண்டாட்டியா? ஹா ஹா நீங்க நடந்துங்க மாப்பிள்ளை”, என்று சிரித்த வினோத் “அதை விட எனக்கு வேற என்ன வேலை இருக்கு? அப்புறம் அவளை வீட்ல இருக்க விடக் கூடாது. எங்க அம்மா என்ன பண்ணுவாங்கன்னு தெரியாது”, என்றான்..

“இனி யமுனா என்னோட பொண்டாட்டி மச்சான். அவ என்ன பண்ணணும்னு நான் தான் முடிவு பண்ணனும். அவளுக்கான பிளானை நான் போட்டுக்குறேன். நீங்க வரப் போற என் மாப்பிள்ளையை நினைச்சு சந்தோஷமா இருங்க. தங்கச்சியைப் போய்ப் பாருங்க”, என்று சொல்லி போனை வைத்தான்.

போனை வைத்து விட்டு வினோத் திரும்பி பார்த்த போது அங்கே அறை வாசலில் சாய்ந்து கைகளைக் கட்டிக் கொண்டு நின்றிருந்தாள் யமுனா. தங்கையைக் கண்டு ஜெர்க் ஆனாலும் “வா மா”, என்றான்.

“என்ன ஒரே கொஞ்சலா இருக்கு? யார் கிட்ட பேசின?”, என்று தெரிந்து கொண்டே தான் கேட்டாள்.

“வேற யார் கிட்ட பேசுவேன், பரணி மாப்பிள்ளைக் கிட்ட தான். என்னமோ சொன்ன என்னால மாப்பிள்ளைன்னு கூப்பிட முடியுமான்னு? நான் மாப்பிள்ளைன்னு கூப்பிட அவர் மச்சான்னு கூப்பிட …. நான் அவ்வளவு சந்தோஸமா இருக்கேன் யமுனா”

“எதுக்குண்ணா இப்படி எல்லாம்? நடக்காதுன்னு தெரிஞ்சா விலகிப் போய்றனும் அண்ணா”

“நடக்கும் மா, எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு”

“உன் நம்பிக்கையை உன் மனசோட வச்சிக்கோ. அவர் கிட்ட ஆசை வார்த்தை சொல்லி ஏமாத்தாத. ஏற்கனவே காயப் பட்டு போயிருக்காங்க. மொத்தமா அவர் மனசைக் கொல்ல வேண்டாம். நாம விலகி போறது தான் அவருக்கு நல்லது. எனக்கு வீட்ல இருந்தா பைத்தியம் பிடிச்சிரும். எனக்கு ஏதாவது வேலைக்கு ஏற்பாடு பண்ணு”, என்று சொல்லி விட்டுச் சென்றாள்.

உடனே போனை எடுத்து பரணியை அழைத்த வினோத் தங்கை பேசியது அனைத்தையும் சொன்னான். தனக்காக பார்க்கும் அவள் காதல் புரிந்த பரணி சிறு சிரிப்புடன் “வேலை விஷயம் நான் பாத்துக்குறேன் மச்சான்”, என்று சொல்லி போனை வைத்தான்.

அடுத்த நாளே வினோத் மூலம் யமுனா கோவிலுக்கு சென்றது தெரிந்து அவள் முன்பு போய் நின்றான் பரணி. அவனைக் கண்டதும் ஒரு நொடி மலர்ந்த அவள் முகம் அடுத்த நொடி இறுகிப் போனது. அதை எல்லாம் அவன் கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.

அவள் அவனை கண்டு கொள்ளாமல் இரண்டு அடி எடுத்து வைக்க “என்ன மேடம் பாத்தும் பாக்காதது போல போறீங்க?”, என்று கேட்ட படி அவளுடன் நடந்தான்.

அவள் செய்கை அவளுக்கே தவறாக தான் பட்டது. அவனுடைய அப்பாயின்மெண்ட்க்காக எத்தனையோ பேர் காத்திருக்க அவள் எவ்வளவு எளிதாக அவனை உதாசீனப் படுத்தி விட்டாள். அதுவும் அவள் கேட்டுக் கொண்டதற்காக அவன் செய்த நன்றிகள் எவ்வளவு? அப்படிப் பட்டவனிடம் முகம் திருப்பிச் செல்கிறாளே? அவளும் நன்றி கெட்டவளாக மாறி விட்டாளா?

அதனால் நின்று அவனை நிமிர்ந்து பார்த்தவள் “சாரி”, என்றாள்.

“இது எதுக்கு?”

“நேத்து நான் உங்களை கஷ்டப் படுத்தினதுக்கு. அப்புறம் இப்ப உதாசீனப் படுத்தினதுக்கு”

“நேத்து நீ பேசினதை தப்புன்னு உணர்ந்தா என்னோட காதலை ஏத்துக்கணும். அதை செய்ய முடியுமா உன்னால?”

“இல்லை, முடியாது”

“அப்படின்னா நீ நேத்து நடந்துக்கிட்டதுக்கு சாரி கேக்க வேண்டாம் பேபி. இப்ப நடந்துக்கிட்டதுக்கு கேட்ட சாரியை வேணும்னா நான் ஏத்துக்குறேன்”, என்று சிரித்தான்.

அவனுடைய பேபி என்ற அழைப்பு அவள் மனதைக் கசக்கியது. அவனை வியப்பாக வேதனையாக பார்த்தவள் “என் மேல உங்களுக்கு கோபமே வராதா?”, என்று கேட்டாள். அவளை தீர்க்கமாக பார்த்தவன் “உயிர் மேல உடல் கோபப் பட முடியாது பேபி. அப்படி கோபப் பட்டா அன்னைக்கு அந்த உயிரும் உடலும் தனித் தனியா ஆகிருச்சுன்னு அர்த்தம்”, என்று சொல்ல அவனை நே என்று பார்த்தாள்.

அவள் பார்வையில் வந்த சிரிப்பை அடக்கியவன் “கொஞ்சம் கவிதையா பேசிறக் கூடாதே? என்ன புரியலையா?”, என்று கேட்டான்.

“ஆம்”, என்னும் விதமாய் தலையசைத்தாள்.

“உன் மேல நான் கோபப் பட்டா அன்னைக்கு நான் செத்துருப்பேன்னு அர்த்தம்”, என்று சொல்ல பட்டென்று அவள் கரம் நீண்டு அவன் உதடுகளை மூடியது. அவன் வியப்பாக அவளைப் பார்க்க அவளோ வெகுவாக கலங்கி விட்டாள். தன்னுடைய கரத்தை இழுத்துக் கொண்டவள் “பிளீஸ் இப்படி பேசாதீங்க”, என்று கண்ணீருடன் சொல்ல “ப்ச், இப்ப எதுக்கு டி அழுற?”, என்று கேட்டான்.

“ஒண்ணும் இல்லை. சரி இப்ப எதுக்கு என்னைப் பாக்க வந்தீங்க?”

“என்னை தயவு செஞ்சு காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கோன்னு கேக்க வரலை. நீ வேண்டாம்னு சொன்ன பிறகு உன்னை தொந்தரவு பண்ணுவேனா?”, என்று அவன் கேட்டதும் அவளுக்கு சப்பென்று போனது.

“நான் வேண்டாம்னு சொன்னதும் இது தான் சாக்குன்னு என்னை வேண்டாம்னு சொல்லிருவானா?”, என்று உள்ளுக்குள் பொருமினாள். அதில் கோபம் லேசாக அவள் முகத்தில் வெளிப்பட அவனுக்கோ ஜில்லென்று இருந்தது.

“அதான், உங்களுக்கே தெரியுதுல்ல? அப்புறம் எதுக்கு வந்தீங்க?”, என்று சுள்ளென்று கேட்டாள்.

“இல்லை, வேண்டாம்னு நீ சொன்னதை கன்பார்ம் பண்ண தான் வந்தேன். ஏன்னா எங்க அப்பா எனக்கு வேற பொண்ணு பாக்கணும்னு சொல்லிட்டார். நானும் சரின்னு சொன்ன பிறகு நீ மனசு மாறி வந்தா என்ன பண்ணுறது? அதான் உறுதியா கேட்டுட்டு போகலாம்னு வந்தேன்”, என்று சொல்ல அவள் கண்கள் கலங்கி விட்டது.

“கண்டிப்பா திரும்பி வர மாட்டேன். நான் உங்க வாழ்க்கைல இல்லை. நீங்க தாராளமா உங்க அப்பா பாக்குற பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கோங்க”, என்று சொல்லும் போதே அவள் கண்கள் கண்ணீர் மழையை பொழிந்தது.

Advertisement