Advertisement

சரவணப் பெருமாள் அவளை கனிவாக பார்த்தார். கௌரிக்கு அவளை மிகவும் பிடித்து விட்டது. நிஷாவுக்கோ சொல்லவே வேண்டாம். தனது தோழியே அண்ணியாக வரப் போகும் சந்தோஷம் அவளுக்கு.

பரணிக்கு இந்த பெண் பொருத்தமா இருப்பாள் என்பது விஷ்ணுவின் எண்ணம். அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவளின் பார்வை வட்டத்தில் கடைசியாக விழுந்தார்கள் பரணியும் முகுந்தனும். பரணியைப் பார்த்த படி அப்படியே நின்றிருந்தாள்.

“சொல்லு மா, உங்க அப்பாவுக்கு இந்த சம்பத்தத்துல விருப்பம், இல்லை. இப்ப உன் மனசுல உள்ளதைச் சொல்லு. உனக்கு என் பையனைப் பிடிச்சிருக்கா? நீ யாருக்கும் பயப்பட வேண்டாம்”, என்றார் சரவணப் பெருமாள்.

அவள் கண்கள் பரணியை தான் பார்த்தது. அதில் இருந்த காதலும் எதிர் பார்ப்பும் அவளை அலைகளித்தது. அவன் பார்வை அவளிடம் இறைஞ்சியது. அதை அவளால் தாங்கவே முடிய வில்லை. அவனுக்கு உதவ முடியாத பரிதவிப்போடு அவன் பார்வையை எதிர்க் கொண்டாள் யமுனா.

பலரின் கஷ்டங்களையும் காயங்களையும் தீர்த்து வைப்பவனுக்கு காயத்தையும் வலியையும் அவள் பரிசளிக்கப் போகிறாளே? இந்த விதியை என்னவென்று சொல்வது?

“பிடிச்சிருக்குன்னு சொல்லு யமுனா. உன் அண்ணன் நான் இருக்கேன். யாருக்கும் பயப்பட வேண்டாம்”, என்றான் வினோத்.

“எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை”, என்று தெளிவாக சொன்னாள் யமுனா. தாமோதரன் மற்றும் காவேரி முகம் மலர்ந்தது என்றால் மற்ற அனைவரின் முகமும் இறுகியது.

“யமுனா”, என்று கத்தினான் வினோத்.

ஒரு நொடி ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டவள் சரவணப் பெருமாளை நேருக்கு நேர் பார்த்து “என்னைப் பொறுத்த வரைக்கும் அரசியல் ஒரு சாக்கடை மாதிரி. அதுல இருக்குறவங்க எனக்கு வேண்டாம். எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை. உங்க பையனும் எனக்கு வேண்டாம். நீங்க எல்லாரும் போகலாம்”, என்று இறுக்கத்துடன் சொன்னாள்.

அனைவரும் அதிர்ந்து பார்க்க சரவணப் பெருமாளுக்கோ அவள் பேச்சைக் கேட்டு சுள்ளென்று கோபம் வந்தது.

“இதுக்கு மேல மானம் கெட்டுப் போய் இருக்கணுமா? எந்திரிங்க எல்லாரும்”, என்று சரவணப் பெருமாள் சொன்னதும் அனைவரும் எழுந்து கொண்டார்கள். பரணியும் எழுந்து கொண்டான். அவனுக்கு அவள் தேவை தான். அதற்காக குடும்ப மானம், அப்பாவின் கவுரவம் அதுவும் முக்கியம் இல்லையா? அவளை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்தான். அவளோ அவனை நிமிர்ந்து பார்க்கவே இல்லை. உடனே வெளியே சென்று விட்டான். அவன் பின்னால் கௌரி, முகுந்தன், விஷ்ணு மூவரும் சென்றார்கள்.

“கடைசில நீயும் சுயநலவாதின்னு நிரூபிச்சிட்டல்ல? உங்க குடும்ப பிரச்சனையை சரி செய்ய இந்த அரசியல்வாதி குடும்பம் வேணும். உங்க அக்கா வாழ்க்கை சரி செய்ய என்னோட நட்பு வேணும். உன் அண்ணா வாழ்க்கையை சரி செய்ய என்னோட அண்ணன் வேணும். ஆனா கல்யாணம் பண்ண கேட்டு வந்தா எங்க குடும்பம் சாக்கடைன்னு சொல்லுவியா? உன்னோட நட்பையா நான் பெருசா நினைச்சேன்?”, என்று கேட்டு விட்டு சென்றாள் நிஷா.

அவர்கள் சென்றதும் இடிந்து போய் சோபாவில் அமர்ந்தான் வினோத். யானை தன்னுடைய தலையில் தானே மண்ணை அள்ளி போட்டுக் கொள்வது போல செய்த தங்கையை அவனால் மன்னிக்கவே முடிய வில்லை. அவ்வளவு கோபம் வந்தது அவனுக்கு.

அனைவரும் அமைதியாக இருக்க “இங்க பாரு டி, இப்ப மாதிரியே உனக்கு நாங்க வேற மாப்பிள்ளை பாத்து கட்டி வைக்கிற வரைக்கும் வாயை மூடிட்டு நாங்க சொல்றதை கேட்டு இருக்கணும். இன்னும் எவனாவது உன்னை பொண்ணு கேட்டு வந்தான் எங்க இன்னொரு முகத்தை நீ பாக்க வேண்டியது இருக்கும்”, என்றாள் காவேரி.

“இல்லை காவேரி, இன்னும் பொறுமையா இருக்க முடியாது. இவ என்னோட பொண்ணே கிடையாது. என் பொண்ணா இருந்தா எவனையோ பாத்து பல்லைக் காமிச்சிருப்பாளா? அப்படி இவ அடங்கி ஒதுங்கி இருந்தா இப்படி ஒரு குடும்பம் பொண்ணு கேட்டு உள்ள வருமா? இவளை இனி நம்ப கூடாது. என்னோட பிரண்டோட பையனுக்கு இவளைக் கேட்டுட்டு இருந்தான். நான் நாளைக்கே அவங்களை பொண்ணு பாக்க வரச் சொல்லப் போறேன்”, என்று தாமோதரன் சொல்ல வினோத் அதிர்ந்து போய் பார்த்தான்.

நிலைமை கைமீறி போய் விட்டது புரிந்தது. அப்படி என்றால் பரணியின் வாழ்க்கை என்ன ஆகும் என்று அவன் மனம் அலறியது. எரிச்சலுடன் தங்கையைப் பார்த்தான். அவளோ தாமோதரனையும் காவேரியையும் முறைத்துப் பார்த்தாள். வினோத் குழப்பமாக அமைதி காத்தான்.

“என்ன டி முறைக்கிற? நான் சொல்றது தான் நடக்கும். நாளைக்கு சேகர் பையன் பொண்ணு பாக்க வருவான். அவன் கூட தான் உனக்கு கல்யாணம்”, என்று மகளிடம் சொன்னார் தாமோதரன்.

“அதுக்கு நான் உயிரோட இருக்கணுமே பா?”, என்று அவ்வளவு நக்கலாக கேட்டாள் யமுனா. வினோத் கண்கள் ஒளிர்ந்தது.

“என்ன டி திமிரா? அப்பாவையே எதிர்த்து பேசுவியா?”, என்று கேட்டாள் காவேரி.

“இங்க பாரு மா, நீ சொன்னதை நான் செஞ்சிட்டேன். அதோட என்னை விட்டுறனும், அவனை மாப்பிள்ளையா கொண்டு வரேன், இவனை மாப்பிள்ளையா கொண்டு வரேன்னு சொன்னா இந்த யமுனா இந்த உலகத்துல இருக்க மாட்டா”, என்று சொன்னவளின் குரலில் அவ்வளவு தீவிரம்.

“என்ன டி நாடகம் ஆடுறியா?”, என்று கேட்டார் தாமோதரன்.

“நான் நாடகம் ஆடலைப்பா. நடக்கப் போறதைச் சொன்னேன். பரணி கிட்ட இது வரைக்கும் அவங்களைப் பிடிச்சிருக்குன்னோ அவங்களை காதலிக்கிறேன்னோ நான் இது வரை சொன்னது இல்லை. ஆனா இப்ப சொல்றேன். நான் பரணியை காதலிக்கிறேன். அவங்களை மட்டும் தான் என்னால காதலிக்க முடியும். கல்யாணம் பண்ணினா தானே என்னை தடுப்பீங்க? காதலிச்சா உங்களால எப்படி தடுக்க முடியும்? இந்த ஜென்மத்துல அவர் மட்டும் தான் என்னோட வாழ்க்கை. வேற யாருக்கும் இந்த யமுனா சொந்தமாக மாட்டா. என் சம்மதம் இல்லாம நீங்க வேற முயற்சி செஞ்சா அதுக்கு இந்த யமுனா இல்லாமலே போயிருவா. நீங்க அடங்கி இருக்குற வரைக்கும் தான் நானும் அடங்கி இருப்பேன். நீங்க எனக்கு விருப்பம் இல்லாதது செஞ்சா அது தான் நான் உயிரோட இருக்குற கடைசி நாள்”,  என்று தெளிவுடன் சொன்னவளை வியப்பாக பார்த்தான் வினோத்.

தன்னுடைய பெற்றவர்கள் மிரட்டியதால் தான் யமுனா அப்படி சொல்லி இருக்கிறாள் என்று அவனுக்கு புரிந்தது. பெரிய பாரம் இறங்கிய மனதுடன் “இவங்க உன்னை மிரட்டினாங்களா யமுனா? அதனால தான் நீ பரணி சாரைப் பிடிக்கலைன்னு சொன்னியா? என்னன்னு மிரட்டினாங்க? செத்துப் போவோம்னு மிரட்டினாங்களா? செத்தா சாகட்டும் யமுனா. பெத்த மக சந்தோசத்தைக் கெடுக்குறவங்க இருந்தா என்ன செத்தா என்ன?”, என்று கேட்டான் வினோத்.

தாமோதரன் மற்றும் காவேரி இருவரும் அவனை முறைத்துப் பார்க்க யமுனாவோ அமைதியாக இருந்தாள். “சொல்லு யமுனா, என்ன சொல்லி மிரட்டினாங்க. என்ன மிரட்டி இருந்தாலும் நீ அதுக்கு பயப்படலாமா? நான் உன் கல்யாணத்தை நடத்துறேன் டா. பரணி சார் குடும்பம் உன்னை நல்லா பாத்துக்கும். இந்த அண்ணன் சொல்றதைக் கேளு மா. நான் இப்பவே அவங்க கிட்ட பேசுறேன் மா. இவங்க பண்ணின தப்புக்கு நான் அவங்க கால்ல விழுந்து உனக்காக பேசுறேன் யமுனா”, என்றான்.

“வேண்டாம் அண்ணா. யாரும் யாருக்காகவும் பேச வேண்டாம். முடிஞ்சது முடிஞ்சதாவே இருக்கட்டும்”

“பைத்தியமா நீ? எதுவுமே முடியலை. நீயும் பரணி சாரும் வாழ வேண்டியவங்க”

“இல்லைண்ணா, நான் முதல்லே இது சரி வராதுன்னு சொன்னேன். அவங்க வேற லெவல். நாம அப்படி இல்லை”

“அப்படி இல்லை மா”

“அப்படி தான் அண்ணா. நீ இவ்வளவு சொல்றியே? உன்னால பரணியை உரிமையா மாப்பிள்ளைன்னு சொல்ல முடியுமா? இல்லை தானே? உறவுல கூட நாம அவங்க கிட்ட போக முடியாது. ஆனா என் மனசுல அவர் தான் இருக்கார். அதை யாராலும் மாத்த முடியாது. இத்தனை வருஷம் வளர்த்த அம்மா அப்பாவுக்கு சந்தோசத்தைக் கொடுத்துட்டேங்குற திருப்தி எனக்கு இருக்கு. அது போதும். என் கல்யாண பேச்சை இன்னையோட விட்டுருங்க. யாராவது பொண்ணு கேட்டு வந்தா கண்டிப்பா அசிங்கப் படுத்தி தான் அனுப்புவேன்”, என்று சொல்லி விட்டு அறைக்குள் சென்று விட்டாள்.

“இப்ப நிம்மதியா? ஒரு சின்னப் பொண்ணோட மனசைக் கொன்னுட்டீங்கல்ல? ஜாதி ஜாதின்னுட்டு…. உங்க மூத்த பொண்ணு பிரச்சனையை உங்க ஜாதிக்காரனா சரி செஞ்சான்? வீட்டு பிரச்சனை வெளிய தெரிஞ்சா கேவலம்னு கமுக்கமா தானே இருந்தீங்க? உங்க ஜாதிக்காரனுங்க கிட்ட என் மூத்த மாப்பிள்ளை என் மகளை கொடுமை செய்யுறான்னு சொல்லி நியாயம் கேக்க கூட்டிட்டு போயிருக்க வேண்டியது தானே? அப்படிக் கூப்பிட்டா காரித் துப்பிருப்பான் இல்ல. அப்புறம் எனக்கு உங்க ஜாதிக்காரனா வேலை வாங்கிக் கொடுத்தான்? நீங்க இவ்வளவு ஜாதி வெறி புடிச்சு இருப்பீங்கன்னு நான் எதிர் பாக்கவே இல்லை. நானோ காயத்ரியோ லவ் பண்ணிருந்தா அப்பவே உங்க சுயரூபம் வெளிய தெரிஞ்சிருக்கும். ஆனா யமுனா விசயத்துல உங்க உண்மையான முகத்தைப் பாத்துட்டேன். இனி நீங்க யாரோ நான் யாரோ? என் தங்கச்சி கல்யாணம் முடியுற வரைக்கும் தான் நான் இந்த வீட்ல இருப்பேன். அதுவும் பரணி சார் கூட தான் அவ கல்யாணம் நடக்கும். நான் நடத்தி வைப்பேன்”, என்று சொன்னவன் இருவரையும் முறைத்து விட்டு அறைக்குள் சென்று விட்டான்.

“என்னங்க ரெண்டும் இப்படி பேசிட்டு போகுது?”, என்று கேட்டாள் காவேரி.

“இளம் ரத்தம்ல? அப்படி தான் இருக்கும். ஆனா நீ யமுனாவை எப்படி ஆப் பண்ணின?”, என்று அவர் கேட்க காவேரி நடந்ததைச் சொன்னாள்.

“நல்ல விஷயம் பண்ணின? இல்லைனா என்ன ஆகிருக்கும்?”

“சீக்கிரம் யமுனா கல்யாணத்தை முடிக்கணுங்க”

“இல்லை காவேரி, கொஞ்சம் பிரச்சனையோட சூடு குறையட்டும்”

“யமுனா அவன் பக்கம் போய்ட்டான்னா?”

“போகாத படி குத்திக்கிட்டே இரு. கண்டிப்பா யமுனா பயப்படுவா”, என்றார் தாமோதரன்.

காரிகை வருவாள்….

Advertisement