Advertisement

வேறு யாரோ பெண் பார்க்க வருகிறார்கள் என்று எண்ணி பட்டு புடவை நகை என யமுனாவை அணியச் சொல்லி இருந்தாள் காவேரி. முழு அலங்காரத்தில் அறைக்குள் அமர்ந்திருந்த யமுனாவுக்கு வெளிய நடப்பது அப்பட்டமாக கேட்க அவள் மனம் ஊமையாக அழுதது. தன்னுடைய வீட்டைப் பற்றி எல்லாம் தெரிந்தும் அவர்களை வர வைத்தது தவறு என்று புரிந்தது.

நேரடியாக விசயத்துக்கு வர வேண்டும் என்று எண்ணி சரவணப் பெருமாள் தான் பேச்சை ஆரம்பித்தார். “நான் யாருன்னு உங்களுக்கே தெரியும். அதனால எனக்கு அறிமுகம் தேவை இல்லை. இவ என்னோட மனைவி கௌரி. அப்புறம் இது என் மூத்த மகன் விஷ்ணு. அவனுக்கு கல்யாணம் ஆகி ஒரு ஆண் குழந்தை இருக்கு. அப்புறம் பரணி என்னோட ரெண்டாவது மகன். அவனை உங்களுக்கே தெரியும். அப்புறம் இவ கடைக்குட்டி நிஷா. இவளுக்கும் மாப்பிள்ளை பாக்குறோம். நாங்க வந்த விஷயம் உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன். எங்க பரணிக்கு உங்க பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு. யமுனாவும் நிஷா மாதிரி இப்ப தான் படிச்சு முடிச்சிருக்கா. அவளுக்கு மேல படிக்க ஆசைன்னு தம்பி சொல்லுச்சு. படிக்கணும்னா படிக்கட்டும். பரணிக்கும் அதிக வயசு ஆகிடலை. ஒரு ரெண்டு மூணு வருஷம் கழிச்சு கல்யாணம் வச்சிக்கலாம். இல்லை உடனே கல்யாணம் வைக்கணும்னாலும் எங்களுக்கு சம்மதம் தான். நீங்க என்ன சொல்றீங்க? உங்களுக்கு சம்மதமா? நாங்க எங்க மருமகளைப் பாக்கலாமா?”, என்று தன்மையாக தான் பேசினார்.

அதுவரை அமைதியாக இருந்த தாமோதரன் “முதல்ல நீங்க என்னை மன்னிக்கணும். நேத்து என் மகன் அவன் பிரண்டு யாரோ பொண்ணு பாக்க வரதா தான் சொன்னான். அது உங்க குடும்பமா இருக்கும்னு நான் எதிர் பாக்கலை”, என்றார்.

“வினோத் தம்பி சர்பிரைசா இருக்கணும்னு அப்படிச் சொல்லிருக்கும்”, என்று சரவணப் பெருமாள் சொல்ல “நீங்க வேற அங்கிள், நீங்க தான் வறீங்கன்னு சொன்னா வரவே விட்டுருக்க மாட்டாங்க. அதான் சொல்லலை”, என்று மனதில் எண்ணிக் கொண்டான் வினோத்.

“மத்த விவரம் எல்லாம் அப்புறம் பேசலாமே? எனக்கு என்  மருமகளைப் பாக்கணும்”, என்றாள் கௌரி.

“யமுனா எங்க இருக்கா ஆண்டி? நான் போய்க் கூட்டிட்டு வரேன்”, என்றாள் நிஷா.

“என்ன வர போகுதோ?”, என்று எண்ணமிட்ட படி பரணியும் முகுந்தனும் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தார்கள்.

“ஒரு நிமிஷம் இரு மா. பெரியவங்க பேசிட்டு இருக்கோம்ல? அதுக்குள்ள யமுனாவைப் பாக்கணும்னு என்ன அவசியம்?”, என்று பட்டென்று தாமோதரன் கேட்க நிஷாவுக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது.

அவளுக்கு மட்டும் அல்ல. அனைவருக்குமே ஒரு மாதிரி தான் இருந்தது. உள்ளே இருந்த யமுனாவோ வெளியே நடப்பதை தாங்க முடியாமல் கண்களை இறுக மூடிக் கொண்டாள். மூடிய கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது.

“மன்னிச்சிருங்க, யமுனாவும் நிஷாவும் ஃபிரண்ட். அதான் ஆசையா பாக்க கிளம்பிட்டா”, என்று சரவணப் பெருமாள் சொல்ல “இந்த யமுனாவுக்கு அறிவு இல்லை. யாரு கூட பிரண்டா இருக்கணும்னு அறிவு கூட இல்லாம இருக்கா”, என்று தாமோதரன் சொல்ல அனைவரின் சந்தோஷமும் அந்த நிமிடமே மறைந்து போனது.

“கொஞ்சம் நேரடியா பேசலாமே? நாங்க இது வரை எங்க பையன் ஆசைக்கு குறுக்கே நின்னது இல்லை. எங்களுக்கு இந்த கல்யாணம் நடக்கணும்னு ஆசை இருக்கு. நீங்க என்ன சொல்றீங்க?”, என்று கேட்டார் சரவணப் பெருமாள்,

“நீங்க நேரடியா பேசச் சொன்னதுனால பேசுறேன். எனக்கு இந்த சம்பந்தத்துல விருப்பம் இல்லை. நீங்க போகலாம்”, என்று தாமோதரன் சொல்ல உள்ளே இருந்த யமுனா “முடிந்தது, எல்லாம் முடிந்தது. இனி ஒன்றுமே இல்லை”, என்று விரக்தியாக எண்ணிக் கொண்டாள்.

“ஏன்னு தெரிஞ்சிக்கலாமா? எங்க பையனுக்கு என்ன குறைச்சல்? படிப்பு இருக்கு, அந்தஸ்து இருக்கு. பேரும் புகழும் இருக்கு. வேற என்ன வேணும்? ஏன் இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்றீங்க?”, என்று கேட்டார் சரவணப் பெருமாள்.

“அதுக்கு பல காரணம் இருக்கு. முதல்ல உங்களோட பணம். அதுவே எங்களுக்கு பயத்தை தான் கொடுக்குது. அப்புறம் நீங்க ஒரு அரசியல்வாதி. அரசியல்ல இருக்குறவங்க எல்லாம் பொய்க் கோழிகள் அப்படிங்ககுறது என்னோட எண்ணம். மூணாவது நீங்க வேற, நாங்க வேற. சீர்திருத்த கல்யாணம் பண்ண எல்லாம் எங்களுக்கு விருப்பம் இல்லை. சாதாரணமாக ஒரு டிகிரி படிச்சு, கவர்ன்மெண்ட் வேலையோ இல்ல வேற ஏதோ ஒரு நல்ல வேலையோ பாக்குற ஒரு மிடில்கிளாஸ்ல இருக்குற பையனுக்கு தான் எங்க பொண்ணைக் கொடுப்போம். அதுவும் எங்க இனத்துல தான்”, என்று தாமோதரன் சொல்ல “அப்பா”, என்று கடுமையாக அழைத்தான் வினோத்.

“என்ன டா அப்பா? உங்க அம்மா முன்னாடியே சொன்னா, இந்த மாதிரி பட்டவங்க சவகாசம் வச்சா இப்படி தான் நடக்கும்னு. என்னமோ இந்த பையன் உதவி செஞ்சானு அவ்வளவு பீத்தின. அந்த உதவிக்கு பின்னாடி எப்படி ஒரு சுயநலம் இருக்கு பாத்தியா?”

“சார், நீங்க சொல்றது எல்லாம் புரியுது. ஆனா என் மகன் விரும்புறான். இப்பவும் பழமை பேசிட்டு திரியனுமா? பிள்ளைங்க சந்தோஷம் முக்கியம் இல்லையா?”, என்று கேட்டார் சரவணப் பெருமாள்.

“அது உங்க பிரச்சனை, எங்க பொண்ணுக்கு என்ன செய்யணும்னு நாங்க முடிவு செஞ்சிக்கிறோம். அவ எங்க பேச்சை தான் கேப்பா. அதே மாதிரி இது சரி வராதுன்னு உங்க பையனுக்கு புரிய வைங்க”

“இல்லை பா, யமுனாவுக்கு பரணி சாரைப் பிடிக்கும். அவ உங்க பேச்சைக் கேக்க மாட்டா. அவ இந்த கல்யாணத்துக்கு சம்மதிப்பா”, என்று வினோத் சொல்ல “யமுனாவைக் கூட்டிட்டு வா காவேரி”, என்று சொன்னவர் கண்களால் அவளிடம் ஏதோ சொன்னார். அதை புரிந்து கொண்டவள் மகளைத் தேடிச் சென்றாள்.

வெளியே நடக்கும் பேச்சு வார்த்தையைக் கேட்டு கனவுகள் கலைந்து கண்ணீருடன் இடிந்து போய் அமர்ந்திருந்தாள் யமுனா.

வினோத்தின் பேச்சிலே யமுனாவின் மனதை தெரிந்து கொண்ட காவேரி இப்போது மகளின் கண்ணீரில் தெள்ளத் தெளிவாக புரிந்து கொண்டாள். தனக்கு எதிரே வந்து நின்ற காவேரியை கண்ணீருடன் நிமிர்ந்து பார்த்தாள் யமுனா.

“ஆக நீயும் அவனைக் காதலிக்கிற அப்படி தானே?”, என்று முறைப்புடன் கேட்டாள்.

“அம்மா’, என்று அவள் தயங்க “வெறும் காதல் மட்டும் தானா? இல்லை வேற எதுவுமா? உன் அண்ணன் காரன் தான் உனக்கு மாமா வேலை பாத்தானா?”, என்று கேட்க “அம்மா”, என்று அதிர்வாக அழைத்தாள். காவேரி இப்படி பேசுவாள் என்று யமுனா கற்பனை கூட செய்தது இல்லை.

“சீ, என்னை அப்படிக் கூப்பிடாதே? பத்தொன்பது வயசு தானே டி ஆகுது? அதுக்குள்ள ஆம்பளை வேணும்னு தோனுதா? ஏன் உங்க அக்காவுக்கு மாதிரி உனக்கு நாங்க பண்ணி வைக்க மாட்டோமா?”

“மா அவங்க குடும்பம் நல்ல குடும்பம் மா. அதுவும் பரணி ரொம்ப நல்லவங்க”

“என்னமோ கட்டின புருஷன் மாதிரி அவனுக்கு பரிஞ்சு பேசுற? ஒரு வேளை புருஷன் தானா?”

“அம்மா”

“அப்படிக் கூப்பிடாதேன்னு சொன்னேன். இங்க பாரு. இப்ப நீ என் கூட வெளிய வர. வந்து அந்த பையனைப் பிடிக்கலைன்னு சொல்ற. அப்படி இல்லைன்னா…”

“அம்மா எனக்கு அவரைப் பிடிக்கும் மா”

“நான் சொல்றதை மட்டும் கேளு. இப்ப வெளிய வந்து அவனைப் பிடிக்கலைனு சொல்லணும். அப்படி இல்லைன்னா சந்தோஷமா அவன் கூட போயிரு. ஆனா எங்களை அவமானப் படுத்தின உன்னை நிம்மதியா வாழ விட மாட்டோம். நீ ஒரு சாதாரண பையன் கூட போனா அது பெரிய விஷயம் இல்லை. ஆனா நீ இந்த பையன் கூட போனா விஷயம் ரொம்ப பெருசா ஆகும்”

“அம்மா”

“நீ அவங்க வீட்டுக்கு போனா உன்னால அவங்களுக்கும் பிரச்சனை தான். பிரச்சனையை நாங்க வர வைப்போம். மினிஷ்டர் பையன் என் பொண்ணை மிரட்டி கூட்டிட்டு போய்ட்டான்னு கலெக்டர் ஆஃபிஸ்ல மனு கொடுப்போம். எங்க கம்ப்லைண்ட் ஒண்ணு போதும் அந்த ஆளோட அரசியல் வாழ்க்கைக்கு சமாதி கட்ட. நீ விருப்ப பட்டு தான் போனேன்னு சொல்றதுக்குள்ள நாங்க அவங்க குடும்ப மானத்தை சந்தி சிரிக்க வச்சிருவோம். காலம் முழுக்க உன்னால அந்த குடும்பத்துக்கு கெட்ட பேர் தான்”

“அம்மா நீயா மா இப்படி பேசுற?”

“நான் பேசாம வேற யார் பேசுவா? லவ் பண்ணுறியா தாயி, வா வா அவனையே கட்டி வைக்கிறேன்னு சொல்லுவேன்னு எதிர் பாத்தியா? எவனோ ஒருத்தனுக்கு கட்டி வச்சு நம்ம சாதி சனம் முன்னாடி கேவலப் படச் சொல்றியா? நம்மளை விட கொஞ்சம் நல்ல பதவில இருக்குற உன் அக்கா புருசனே நம்மளை ஒண்ணும் இல்லாதவங்க மாதிரி பாக்குறான். இவன் எவ்வளவு பணக்காரன், நம்மளை எல்லாம் மதிப்பானா?”

“பரணி அப்படி கிடையாது மா“

“பெத்த பொண்ணுன்னு பாக்க மாட்டேன். கேக்க கூடாத கேள்வியை எல்லாம் என்னை கேக்க வைக்காத. ஒழுங்கா வந்து அவங்களை விரட்டி விடு. நான் சொன்னது எல்லாம் நினைவு இருக்கட்டும். இப்ப நீ அவங்களை போக சொல்லலை, இன்னைக்கு நைட்டுக்குள்ள அவங்க குடும்ப மானம் உன்னால கப்பல் ஏறும்”, என்று சொல்லி விட்டு முன்னே சொல்ல கலங்கிய மனதுடன் வெளியே வந்தாள்.

அனைவரும் அவள் முகத்தையே பார்க்க அனைவருக்குமே தெரிந்தது யமுனா அழுதிருக்கிறாள் என்று. “அம்மா யமுனாவை என்ன சொன்ன? அவ ஏன் அழுதுருக்கா?”, என்று கோபப் பட்டான் வினோத்.

“நான் ஒண்ணும் சொல்லலை. அவ ஏன் அழுதானு அவ கிட்டயே கேளு”

“யமுனா அம்மா எதுவும் உன்னைத் திட்டினாங்களா?”, என்று வினோத் கேட்க “இல்லை”, என்னும் விதமாய் தலையசைத்தாள்.

“சரி அதை விடு, பரணி சாருக்கு உன்னைப் பொண்ணு கேட்டு வந்திருக்காங்க. இப்ப உன் விருப்பம் தான் முக்கியம். உனக்கு இந்த கல்யாணம் ஓகே தானே? சரின்னு சொல்லு யமுனா. மத்தது எல்லாம் நான் பாத்துக்குறேன்”, என்று வினோத் சொன்னதும் அனைவரையும் நிமிர்ந்து பார்த்தாள்.

Advertisement