Advertisement

அத்தியாயம் 11 

எந்தன் இதயத்தில்

நங்கூரமிடுகிறது

உந்தன் நினைவுகள்!!!

சரவணப் பெருமாள் கொடுத்த தைரியத்தில் “கல்யாணம் ஒரு ரெண்டு மூணு வருஷம் கழிச்சு பண்ணிக்கிறேன் பா. ஆனா இப்ப அவங்க வீட்ல பேசி முடிவு பண்ணனும்”, என்றான் பரணி.

“சரி டா, பேசிறலாம். பொண்ணு யாருன்னு சொல்லு”, என்று  சரவணப் பெருமாள் கேட்க “ஆமாண்ணா, எனக்கும் அது யாருன்னு தெரிஞ்சிக்க ஆசையா இருக்கு? உன்னையும் ஒரு பொண்ணு மயக்கிருக்காளே? அந்த பொண்ணு லக்கி தான். யாருன்னு சொல்லு”, என்று கேட்டாள் நிஷா.

“எல்லாம் உனக்கு தெரிஞ்சவங்க தான் நிஷா”

“எனக்கு தெரிஞ்சவங்களா? அது யாரு?”

“யமுனா”, என்று சொல்ல அதிர்ச்சியாக விழித்தாள் நிஷா.

“யமுனாவா? அண்ணா நிஜமாவா? யமுனாவையா உனக்கு பிடிச்சிருக்கு? எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குண்ணா. அவளைக் கட்டிக்க நீ தான் ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்”, என்று ஆர்பரித்தாள் நிஷா.

“ஏய் சும்மா இரு டி. நாங்க இன்னும் மருமகளைப் பாக்கலை? அதுக்குள்ள இந்தா குதி குதிக்கிற? நானும் பாக்கணும். ஏதாவது போட்டோ காட்டு டீ”, என்றாள் கௌரி.

“வேணாம் மா. நீங்க, அப்பா, அண்ணா மூணு பேரும் நேர்லே அவளைப் பாத்துக்கோங்க. நாளைக்கு போகலாமா பா? ஆனா அவங்க வீட்ல என்ன சொல்லுவாங்கன்னு தெரியலை”, என்று சொன்னான் பரணி.

“போகலாம் டா. நல்ல காரியத்தை எல்லாம் தள்ளி போடக் கூடாது.  நாளைக்கே பேசி முடிச்சிறலாம். அவங்க வீட்ல என்ன சொல்லிறப் போறாங்க. ராஜா மாதிரி இருக்குற என் பையனுக்கு பொண்ணைக் கொடுக்க கசக்குதாக்கும்? ஆனா இப்ப பேசி மட்டும்  வச்சிட்டு நிஷாவுக்கு நல்ல வரனா பாத்து முடிச்சிட்டு உங்க கல்யாணம் வச்சிக்கலாம்”, என்றார் சரவணப் பெருமாள். அவர் நினைப்பதெல்லாம் நடந்து விடுமா என்ன?

“அவங்க குடும்பம் பத்தி சொல்லு பரணி”, என்றான் விஷ்ணு.

“அவ பேர் யமுனா அண்ணா. அவங்க அப்பா தாசில்தார், நம்ம நிஷாவோட பிரண்டு. அவளுக்கு ஒரு அண்ணன் அக்கா உண்டு. ரெண்டு பேருக்குமே கல்யாணம் முடிஞ்சிட்டு. அவ அண்ணன் நம்ம ஜி.எம் வினோத் தான். யமுனாவோட அண்ணா அப்படிங்குறதுனால அவருக்கு அந்த போஸ்ட் கொடுக்கலைண்ணா. உண்மையிலே அந்த வேலைக்கு அவர் தகுதியானவர் தான்”

“இதை நீ சொல்லனுமா டா? எனக்கு உன்னைப் பத்தி தெரியும். நான் உன் அண்ணிக்கு தகவல் சொல்லிட்டு வரேன்”, என்று சொல்லி விட்டுச் சென்றான் விஷ்ணு.

“இவன் எப்ப டா மருமக கிட்ட பேசன்னு இருப்பான் போல?”, என்று சிரித்த கௌரி “என்னங்க, நாம நாளைக்கே அவங்க வீட்டுக்கு போவோமா? போகும் போது என்ன கொண்டு போகணும்? என்ன வாங்கணும்?”, என்று கேட்டாள்.

“போகலாம்”, என்று சரவணப் பெருமாள் சொன்னதும் “நாளைக்கு ஈவினிங் போகலாம் மா. அப்புறம் இப்போதைக்கு ஒண்ணும் வாங்க வேண்டாம். சும்மா பேசிட்டு வருவோம்”, என்றான் பரணி. அனைவரும் சரி என்றார்கள். நிஷா யமுனாவை போனில் அழைத்து கிண்டல் செய்தாள். யமுனாவும் சிவந்த முகத்துடன் “அப்படி எல்லாம் இல்லை டி”, என்று சமாளித்துக் கொண்டிருந்தாள். நிஷா பரணியின் தங்கையாக இல்லாமல் போயிருந்தால் அவளிடம் மனதில் இருக்கும் எல்லாவற்றையும் சொல்லியிருப்பாள்.

நாளை அவர்கள் வீட்டுக்கு வருவதைப் பற்றி வினோத்துக்கு தகவல் சொல்லி விட்டான் பரணி. வினோத்தும் குடும்பத்தில் இருந்த அனைவரையும் அழைத்து “நாளைக்கு என்னோட ஃபிரண்ட் ஒருத்தர் யமுனாவை பொண்ணு பாக்க வராங்க”, என்று சொன்னான்.

தாமோதரன் மற்றும் காவேரி இருவரும் சந்தோஷமாக புன்னகைத்து “மாப்பிள்ளை என்ன பண்ணுறார்? என்ன படிச்சிருக்கார்? எந்த ஊர்?”, என்று விசாரிக்க “எல்லாம் நேர்ல தெரிஞ்சிக்கோங்க”, என்று சொல்லி தப்பித்தான். அவன் அப்படிச் சொன்னதும் தான் பெரியவர்களுக்கு குழப்பம் வந்தது. ஆனால் அவர்கள் என்ன கேட்டும் மாப்பிளை யார் என்று வினோத் மூச்சு விட வில்லை.

மனைவியிடம் மட்டும் போனில் விவரம் சொன்னான். தாரணி அவளுடைய அம்மா வீட்டில் இருந்தாள். அவளுக்கும் சந்தோஷம் தான் என்றாலும் காவேரி மற்றும் தாமோதரனை எண்ணி கொஞ்சம் கலக்கமாக தான் இருந்தது. யமுனா நிலையோ சொல்லவே வேண்டாம். அமைதியாகிப் போனாள். நாளை என்ன நடக்கும் என்று எண்ணி இப்போதே அவள் அடி வயிற்றில் ரயில் ஓடியது. ஆனாலும் உள்ளுக்குள் சிறு எதிர்பார்ப்பு, அது தரப் போகும் பெரிய சந்தோஷம் என கலவையான உணர்வுகள் அவளுக்குள் எழுந்தது.

தங்கையிடம் நாளை நடக்கப் போகும் நிகழ்வுகளுக்கு தைரியம் சொல்லலாம் என்று எண்ணி அவள் அறைக் கதவை எட்டிப் பார்த்த வினோத் சிறு சிரிப்புடன் அங்கிருந்து நகர்ந்து விட்டான்.

இதழ்களில் சிறு சிரிப்பும், கண்களில் மையலும் என அவன் வந்ததைக் கூட உணராமல் கனவில் சஞ்சரித்துக் கொண்டிருந்த தங்கையை அவனால் எப்படி தொந்தரவு செய்ய முடியும்? எல்லாம் நல்ல படியாக நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டான்.

மனித மனது விந்தையானது அல்லவா? சில நேரம் நல்லது நடக்காது என்று உறுதியாக தெரிந்தாலும், நல்லது நடக்க வேண்டும் என்று எதிர் பார்க்குமே? அது தான் வினோத்தின் நிலையும்.

யமுனாவோ பரணியுடன் தனியுலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள். அவளது மனக்கண்ணில் ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவான தோற்றத்தில், மாநிறத்தில் தோன்றினான் அவளின் நாயகன் பரணி.

அடுத்த நாள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக விடிந்தது. காலை வீட்டில் இருந்து கிளம்பும் போதே பரணிக்கு டென்ஷன் அதிகரித்து விட்டது. யமுனா வீட்டில் என்ன நடக்கும் என்று?

சரவணப் பெருமாள் யமுனாவை மகனுக்காக பெண் கேப்பார், அவர்கள் மறுப்பார்கள். அடுத்து என்ன ஆகும்? அவர்கள் மறுத்ததும் வந்து விட வேண்டுமா? வேறு என்ன செய்ய முடியும்? யமுனா என் பக்கம் ஏதாவது பேசுவாளா? முதலில் அவளை பேச விடுவார்களா? பேச விட்டாலும் என்னைப் பிடித்திருக்கிறது என்று சொல்வாளா? அப்படிச் சொல்ல வில்லை என்றால் அவள் தனக்கு இல்லையா? அவளை வேறு ஒருவனுக்கு திருமணம் செய்து கொடுத்து விடுவார்களா என்று அவன் மனம் அலைபாய்ந்தது.

வெகு நேரம் அதைப் பற்றி யோசித்த படியே காரை ஓட்டினான். வேறு எதுவுமே அவன் மனதில் இல்லை. யமுனா யமுனா யமுனா மட்டுமே அவனை ஆக்ரமித்திருந்தாள்.

உடனே அவளிடம் திருமணம் பற்றி பேசியது தவறோ? அவளிடம் காதலைச் சொல்லி விட்டு திரும்பி இருக்க வேண்டும். அவர்கள் வீட்டில் திருமணம் பற்றி பேசும் வரை காதலித்திருக்க வேண்டும். யமுனா காதலிக்க வில்லை என்றாலும் அவளை காதலிக்க வைத்திருக்க வேண்டும் என்று எண்ணினான்.

அவளது பெற்றோர்கள் சொன்னால் அவளை விட்டுக் கொடுத்து விட வேண்டுமா? அவனோ, அவன் குடும்பமோ நினைத்தால் அடுத்த ஒரு மணி நேரத்தில் அவள் வீடு புகுந்து அவளை தூக்கி வந்து அவள் கழுத்தில் தாலியைக் கட்டி அவளை மனைவியாக்கி விட முடியும். ஆனால் அவளுக்காக பொறுமையாக இருந்தான். அவளால் அவனின் வேகத்தை தாங்க முடியாது. அவளுக்காக தான் இத்தனை நாள் காத்திருந்தான். நேற்றும் காதலைச் சொல்ல தான் வந்தான். ஆனால் திருமணம் வரை பேசியாயிற்று. பரணியின் கார் அந்த தெருவில் நுழைந்து யமுனா வீட்டு முன்பு நின்றது.

“அவங்க வந்துட்டாங்க”, என்ற படி வெளியே வந்தான் வினோத். தாமோதரன் மற்றும் காவேரியும் வெளியே வந்தார்கள். வந்தவர்கள் வெளியே நின்ற குடும்பத்தைக் கண்டு அதிர்ந்து திகைத்து தான் போனார்கள்.

“வாங்க சார், வாங்க மா, வாங்க பரணி சார், வங்க விஷ்ணு சார், வா மா நிஷா? வாங்க முகுந்தன்”, என்று வினோத் வரவேற்றுக் கொண்டிருக்க “என்னங்க இது, இந்த குடும்பம் வந்திருக்கு?”, என்று கணவனின் காதைக் கடித்தாள் காவேரி.

“அதானே? நினைச்சேன். இப்படி எல்லாம் நடக்கும்னு. இவங்களுக்கு எப்படி டி நம்ம பொண்ணைக் கொடுக்குறது? கண்டிப்பா முடியாது”

“எனக்கும் அது தோணலைங்க. ஆனா உங்க மகன் இப்படி குதிக்கிறானே? யமுனாவும் சரின்னு சொல்லிருவாளோ?”

“இங்க பாரு காவேரி, என்ன நடந்தாலும் இந்த சம்பந்தம் முடியக் கூடாது. யமுனாவை வெளியவே விடாதே உள்ளயே இருத்தி வை. நாம பேசுற பேச்சில நம்ம பொண்ணு வேண்டாம்னு சொல்லி அவங்களே போகணும். இவங்களுக்கு பொண்ணைக் கொடுத்தா நம்ம சொந்தங்கள் நம்மளை கேவலப் படுத்துவாங்க. இவங்க எல்லாம் பழி பாவத்துக்கு அஞ்சாதவங்க”, என்றார் தாமோதரன்.

“சரிங்க, யமுனாவை நான் பாத்துக்குறேன்”, என்று சொன்ன காவேரி அவர்களைப் பார்த்தாள்.

சரவணப் பெருமாளும் கௌரியும் வணக்கம் என்று யமுனாவின் பெற்றோர்களைப் பார்த்து கை குவிக்க வேண்டா வெறுப்பாக “வாங்க”, என்று சொன்னார் தாமோதரன். காவேரியும் வாங்க என்று சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டாள். கௌரிக்கு ஒரு மாதிரி இருந்தது.

கணவரைத் திரும்பிப் பார்த்தாள். பொறுமையா இரு என்னும் விதமாய் கண்ணைக் காட்டியவர் உள்ளே சென்றார். மற்றவர்களும் உள்ளே சென்றார்கள்.

வினோத் அனைவரையும் அமர வைக்க “அம்மா டீ எடுத்துட்டு வாங்க”, என்றான் வினோத்.

ஏற்கனவே காவேரி டீ போட்டு வைத்திருந்தாள். ஆனால் வருவது இவர்கள் என்று தெரியாதே. அதனால் “டீ போட பால் இல்லை வினோத், வேணும்னா கருப்பு காப்பி போடவா?”, என்று நக்கலாக கேட்டாள் காவேரி. அவள் அப்படிச் சொன்னதும் அனைவரின் முகமும் கருத்துப் போனது. வினோத்துக்கோ தலை தொங்கி விட்டது. இந்த நிலைமையில் என்ன சொல்ல முடியும் அவனால்?

Advertisement